Advertisement

சுத்தமான சுவாசம் அவசியம் : இன்று உலக ஆஸ்துமா தினம்

அலர்ஜியின் காரணமாக சுவாச வழியில் ஏற்படும் ஒவ்வாமையே ஆஸ்துமா நோய். சுற்றுச்சூழல் பாதிப்பாலும் இந்நோய் அதிகரிக்கிறது. உலகில் 10 கோடி பேர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் 100 பேரில் 3 பேருக்கு இந்நோய் பாதிப்பு உள்ளது. குளிர்காலத்தில் இதன் தாக்கம் இருமடங்காக அதிகரிக்கும் என கண்டறிந்துஉள்ளனர். பத்து சதவீத குழந்தைகளுக்கு இந்நோய் பாதிப்பு உள்ளது. மூச்சுக்குழல் பாதையில் உள்ள மூச்சு குழாய் சுருங்கி சுவாசிக்க சிரமப்படுத்தும். உடல் ஏற்காத உணவுகள்,துாய்மையற்ற காற்று, புகை செல்வதன் மூலம் மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுத்தும்.ஆண்டு தோறும் மே முதல் செவ்வாய் அன்று ஆஸ்துமா தினம் கடைபிடிக்கப்படும். ஆஸ்துமாவை கட்டுப்படுத்தலாம் என்பதே இந்த ஆண்டின் கருப்பொருள். இதற்கு முற்றிலும் தீர்வு இல்லாவிட்டாலும் கட்டுப்படுத்தலாம். சுவாச குழாய்களின் உட்சுவர் வீக்கம் கண்டிருக்கும். இந்த சுவாச, மூச்சு குழாய்களில் புகை, துாசி சென்றால் பாதிப்பு ஏற்படுத்தும். சுவாசக்குழாய்களுக்கு எதிரிடையாக செயல்படும் போது சுவாசக்குழாயின் உள்சுற்றளவு குறைந்து, மிக குறைந்த காற்றே நுரையீரலின் காற்று பரிமாணம் நடக்குமிடத்திற்கு செல்லும். சுவாச குழாய்கள் சுருங்குவதால் அதன் வழியே காற்று செல்லும்போது சத்தம் கேட்கும். உடலில் உள்ள திசுக்களுக்கு செல்லும் பிராண வாயுவின் அளவு குறைகிறது. இதன் விளைவாக மிகுந்த சிரமத்துடன் மூச்சுவிடுதல்,இருமல், மார்பு பகுதி இறுக்கமாதல், சுவாச கோளாறு உண்டாகிறது. இவை இரவு, அதிகாலையில் அதிகம் இருக்கும். இவ்வியாதியை குணப்படுத்த முடியாது.தொடர் சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டில் மட்டுமே வைத்து சுறுசுறுப்புடன் வாழலாம்.இந்நோய் பாதிப்பு கடுமையாக இருக்கும் போது சுவாச குழாய்களில் அதிக அடைப்பு ஏற்பட்டு, உடலில் முக்கிய உறுப்பான மூளை, ஈரல், சிறுநீரகத்திற்கு போதிய பிராண வாயு கிடைப்பது இல்லை. இச்சந்தர்ப்பத்தில் அவசர மருத்துவ உதவி தேவை.சளி, இருமல் எளிதில் அலர்ஜியால் பாதிக்கப்படுவோர், பெற்றோருக்குஆஸ்துமா பாதிப்பு இருந்தவர்கள், சிறுவயதில் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டோருக்கு இந்நோய் வரும். வைரஸ் கிருமியால் பாதிக்கும் போதும், புகை பிடிப்பதாலும் ஆஸ்துமா ஏற்படும். இதுதவிர ஒவ்வாமை, பரம்பரைதன்மையால் இவை வரலாம். நுரையீரல், மூக்கு, தொண்டையில்நோய்தொற்று ஆஸ்துமாவை துாண்டும். சளி, தும்மல், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, வறட்டு இருமலுக்கு சிகிச்சை எடுக்காவிடில் ஆஸ்துமா வரக்கூடும். நுரையீரலில் உள்ள மூச்சுக்குழல் தசைகளின் நரம்பு முனைகளை துாண்டுகின்றன. இதன் விளைவால் மூச்சுக்குழல் மென்தசைகள் சுருங்கி, சவ்வு வீங்கி மூச்சு பாதையும் சுருங்குகிறது. அப்போது மூச்சுக்குழலில் திரவம் சுரந்து மூச்சுப்பாதையை அடைத்து, மூச்சு விட சிரமம் தரும். சிகிச்சை மற்றும் ஒவ்வாமை விலகிய பின் இப்பிரச்னை குறையும். ரத்த பரிசோதனை, மார்பகத்தில் எக்ஸ்ரே, ஈ.சி.ஜி., எக்கோ எடுப்பதுடன் 'ஸ்பைரோமெட்ரி' பரிசோதனை மூச்சுகுழலின் சுருக்க அளவு, காற்றை சுவாசிக்கும் அளவை காண்பிக்கும். செல்லப்பிராணிகள் அல்லது ஆஸ்பிரின் போன்று துாண்டும் பொருட்களை அறிந்து அவற்றை தவிர்ப்பது தான் சிறந்த சிகிச்சை.
இரு வழிகள் : ஆஸ்துமாவை இரு வழிகளில் கட்டுப்படுத்தலாம். காற்று குழாயில் ஏற்படும் பாதிப்பை கட்டுப்பாட்டில் வைத்து இருமல் மற்றும் மூச்சிரைப்பு வராமல் தடுக்க வேண்டும். இருமல் மற்றும் மூச் சிரைப்பு இருக்கும் போது மட்டுமே நிவாரண மருந்து உபயோகிக்கவும். ஆஸ்துமாவை துாண்டும் பார்த்தீனிய களை, செடிகளில் இருந்து எழும்பும் மகரந்த துாளுடன் வரும் நச்சுப்பொருளால் ஆஸ்துமா மட்டுமல்ல, எக்ஸிமோ, தோல் வியாதி உண்டாகும். டில்லியில் உள்ள ஆஸ்துமா நோயாளிகளில் 30 சதவீதம் பேர் களை செடியில் வெளியான மகரந்ததுாளை நுகர்ந்ததால் ஏற்பட்டது. பெங்களூருவில் பார்த்தீனியம் செடி அதிகம் காணப்படுகிறது. இந்நோய் பாதித்தவர்கள் அலர்ஜி ஏற்படுத்தும் பொருளை தவிர்க்கவும். துாய்மையான காற்றை சுவாசித்து, தண்ணீரை காய்ச்சி குடிக்கவும். இவர்கள் பருத்தி ஆடையை தவிர்க்கவும்.படுக்கை அறை சுத்தம்படுக்கை அறையில் உள்ள தலையணை, போர்வைகளில் அலர்ஜி ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் இருக்கலாம். அடிக்கடி நன்றாக அலசி, துவைத்து காயப்போட்டு உபயோகிக்கவும்.
சுத்தமான சுற்றுப்புறம்: வாக்குவம் கிளீனர் கொண்டோ அல்லது துாசியை நீக்கும் பொருளை கொண்டோ நன்றாக வீட்டை சுத்தம் செய்வது அவசியம். இதனால், துாசி, அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களை வெளியேற்றலாம். நாய், பூனைகளால் அலர்ஜி ஏற்படலாம். வீட்டில் புகைப்பதை தவிர்க்கவும். பிறந்த குழந்தைகள் தொடர்ந்து 6 மாதம் தாய்ப்பால் குடித்தால், ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பு குறைவு.
உடற்பயிற்சி அவசியம் : மருந்தில்லா சிகிச்சையில் உடற்பயிற்சியும் ஒன்று. உடற்பயிற்சியில்லை என்றால் உடல் திறன், நுரையீரல் செயல்பாடு குறைந்துஆஸ்துமா சார்ந்த பிரச்னை அதிகரிக்கிறது. ஆஸ்துமா இருப்போருக்கு உடற்பயிற்சி அவசியம். அதேநேரம் டாக்டரின் ஆலோசனை பெற்று உடற்பயிற்சி செய்ய வேண்டும். பிசியோதெரபிஸ்ட்களின் கண்காணிப்பில் வாழ்க்கை முறைக்கு ஒத்துவரும் உடற்பயிற்சியை துவக்கலாம். வாரம் 150 நிமிடம் துரிதநடை, சைக்கிள் ஓட்டுதல், டிரெட்மில் பயிற்சி, நீச்சல் பயிற்சி செய்யலாம். மேலும் நடைபயிற்சி, யோகா, நடனம், கிரிக்கெட், டென்னிஸ், ஜிம்மில் உடற்பயிற்சி கருவிகளை கொண்டு தசைகளை வலுப்படுத்தும் பயிற்சி செய்யலாம். இதற்கு முன் தசைகளை தயார்படுத்தும் 'ஸ்டிரெட்சிங்' பயிற்சி சில நிமிடம் எடுக்கவும். துாசி, மகரந்த துகள்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தினால், திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்யாதீர்கள். முடிந்தவரை உட்காரும் நேரத்தை குறைத்து, உடலை தொடர்ந்து இயக்கத்தில் வைத்துஇருக்கவும். 30 நிமிடத்திற்கு ஒரு முறை இருக்கையை விட்டு எழுந்து 3 நிமிடம் நடந்து செல்வது நன்று.ஆஸ்துமாவிற்கு தீர்வுகாண டாக்டர்அறிவுரைப்படி 'இன்ஹேலர் தெரபி' மற்றும் மாத்திரை எடுக்கவும். சுத்தமாக இருப்பது அவசியம். சூடான உணவை மட்டுமே எடுக்கவும். குளிர்பானத்தை தவிர்க்கவும். அடிக்கடி உடல் நிலையை பரிசோதித்து, டாக்டரின் ஆலோசனையை பின்பற்றவும்.
தடுக்கும் முறை : தலையணை, பெட்ஷீட்டை அடிக்கடி மாற்றி, படுக்கை அறையை சுத்தமாக வைக்கவும். வீட்டிற்குள் துாசி படியக்கூடாது. ஏ.சி., அளவை சீராக வைக்கவும். வீட்டில் கரப்பான், மூட்டை பூச்சிகள் வரக்கூடாது. டூவீலரில் செல்லும் போது ெஹல்மெட் மற்றும் முகஉறை அணிந்து செல்லவும். தொழிற்சாலை, வேலைபார்க்கும் இடத்தில் துாசி அதிகம் தென்பட்டால், முகஉறை அணியவும். சிகரெட் பிடிப்பதோ, பிடிப்பவர்கள் அருகில் நிற்பதோ கூடாது. செல்லப்பிராணிகளை முடிந்தவரை தனி அறையில் தங்க வைக்கவும்.ஆண்டுக்கு ஒரு முறை சுவாச பரிசோதனை செய்யவும். இம் முன்னெச்சரிக்கைகளை கடைபிடித்தால் ஆஸ்துமாவை தடுக்கலாம். டாக்டர் தரும் மருந்துகளை எடுத்து, தொடர் மூச்சு பயிற்சிசெய்வதின் மூலம் நுரையீரலின் ஆரோக்கிய செயல்பாட்டை மேம்படுத்தலாம்.
-டாக்டர். எம்.பழனியப்பன்நுரையீரல் நிபுணர்மதுரை, 94425 24147

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement