Advertisement

ஸ்டெர்லைட் மூடப்பட வேண்டுமா?

துாத்துக்குடி ஸ்டெர்லைட், தாமிர உருக்கு ஆலைக்கு எதிராக, 'சுற்றுச்சூழலை பாதிக்கும் ஆலை வேண்டாம்' என்ற போராட்டம், அந்த நகரில் நடக்கிறது. இந்த போராட்டங்கள், கடந்த இரண்டு மாதங்களாக தீவிரமாக நடக்கின்றன. எனவே, போராட்டத்தின் பின்னணி, அந்த தொழிற்சாலையின் அவசியம் குறித்து அனைவரும் அறிய வேண்டியது, நியாயம் தானே!

தாமிர உருக்கு மற்றும் சுத்திகரிப்புக்கான, உலகின் முன்னணி தொழிற்சாலைகளில், 10, சீனாவில் உள்ளன. அவற்றில் ஐந்து, அந்நாட்டின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ளன. அந்த ஐந்து ஆலைகளின் மொத்த உற்பத்தி, 32.5 லட்சம் டன்; உலக உற்பத்தியில், 12 சதவீதம்.பிர்லா தொழில் குழுமத்தின் சார்பில், குஜராத்தில் அமைந்துள்ள, 'ஹிண்டால்' தொழிற்சாலை, உலகின் ஆறாவது மிகப்பெரிய தாமிர உருக்கு மற்றும் சுத்திகரிப்பு ஆலை; இதன் உற்பத்தி ஆண்டுக்கு, 5 லட்சம் டன்.சிலி, மெக்சிகோ, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும், தாமிர உருக்கு ஆலைகள் உள்ளன. இவை, உலகின் முதல், 10 ஆலைகளின் வரிசையில் உள்ளன. துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, உலகின், 18வது இடத்தில் உள்ளது.நம் நாட்டு தாமிர சுரங்கங்களில் கிடைக்கும் தாது, உலக அளவில், 0.2 சதவீதம் மட்டுமே; உள்நாட்டு தேவைக்கு இது போதாது. எனவே, வெளிநாடுகளிலிருந்து பெருமளவு இறக்குமதி செய்து, துாய்மைப்படுத்தி, நம் நாட்டு தேவையை பூர்த்தி செய்கிறோம்; வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.

தாமிரப் பொருட்கள், பல்வேறு இயந்திரங்கள் தயாரிப்பு, கட்டுமானத்துறை, எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், உட்கட்டமைப்பு வசதிகள், போக்குவரத்து, போன்ற பல துறைகளுக்கு தேவைப்படுகின்றன.ஸ்டெர்லைட் நிறுவனம், லண்டனை தலைமையகமாக கொண்ட, 'வேதாந்தா' என்ற பெரிய நிறுவனத்தின் ஒரு அங்கம். இதன் உரிமையாளர், அனில் அகர்வால்; இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்; உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவர்.பீஹாரில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, மும்பையில் சிறிய, பழைய இரும்பு கடை வியாபாரம் செய்து, உழைப்பால் உயர்ந்த கிருஷ்ண பக்தர். தன் மறைவுக்கு பின், சொத்தில், 75 சதவீதத்தை, இந்திய மக்கள் பெற வேண்டும் என, உயில் எழுதி வைத்துள்ளார்.தாமிர உருக்கு தொழில் வேண்டாம் என, குஜராத், கோவா, மஹாராஷ்டிரா, கேரளா என, பல மாநிலங்கள், ஸ்டெர்லைட்டிற்கு அனுமதி அளிக்கவில்லை.இந்நிலையில், 1994ல், அப்போதைய முதல்வர், ஜெயலலிதா, தமிழகத்திற்கு தொழில் பெருக்கம், வேலைவாய்ப்பு தேவை என்ற அடிப்படையில், அனுமதி அளித்தார். 1996ல், அப்போதைய முதல்வர் கருணாநிதி, தொழிற்சாலையை துவங்கி வைத்தார்.துவங்கிய நாள் முதல், ஏராளமான புகார்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் இந்த நிறுவனம் ஆளாகியுள்ளது. அவற்றை, பொதுமக்கள் ஆதரவுடனும், சட்டத்தின் துணையுடனும் சமாளித்து வந்தது; இப்போது, சற்று நிலை குலைந்துள்ளது.இந்த ஆலையின் கழிவுகள், நீரோடையில் கலக்கின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்த போது, அந்த பகுதியில் உள்ள, 20க்கும் மேற்பட்ட பிற ஆலைகள் தான், கழிவுகளை நீரோடையில் கலந்தன என்பது, விசாரணையில் தெரிய வந்தது.பிற காரணங்களுக்காக, ஆலையை மூட வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது மற்றும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் தீர்ப்பாய உத்தரவுகளால், இந்த ஆலை, இதுவரை, 85 நாட்கள் மூடப்பட்டது.அதன் பிறகு, தேசிய சுற்றுச்சூழல் தீர்ப்பாயம், 'நீரி' எனப்படும், தேசிய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பின் இறுதி ஆய்வு அறிக்கை மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், மீண்டும் இயங்கியது.

இதனால், தற்போதைய, ஆண்டுக்கு, 4 லட்சம் டன் உற்பத்தியை, 8 லட்சம் டன் உற்பத்திக்கு விரிவுபடுத்த, 3,000 கோடி முதலீட்டில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், 'நிறுவன விரிவாக்கம் நிறுத்தப்பட வேண்டும்; ஆலை மூடப்பட வேண்டும்' என, உள்ளூர் மக்களை, சிலர் தவறாக வழிநடத்தி வருகின்றனர். மக்களும் தீவிரமாக போராடி வருகின்றனர். அதற்காக அவர்கள் கூறும் சில உதாரணங்கள், அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளன. இதனால், போராட்டம், நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.தொழிற்சாலைகள், பெரிய அளவிலான திட்டங்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம் என்பதை, அந்த பகுதி மக்களுக்கு விளக்க வேண்டியது, மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்டெர்லைட்டின் முக்கிய கடமை.ஏனெனில், இந்த நிறுவனத்தால், 10 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 30 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு, இந்த நிறுவனம், 3.5 சதவீதம் கைகொடுக்கிறது.மூன்று ஆண்டுகளாக சிறந்த ஏற்றுமதி, இறக்குமதி விருதை பெற்ற இந்த நிறுவனத்தால், துாத்துக்குடி துறைமுகத்திற்கு அதிக வருமானம் கிடைத்துள்ளது.

இந்த நிறுவனம் மூடப்பட்டால், துாத்துக்குடி, வ.உ.சி., துறைமுகமும், வருமானமில்லாமல் மூடப்படக்கூடிய அபாயம் ஏற்படும்.சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக, 600 கோடி ரூபாய் செலவிட்டுள்ள இந்த நிறுவனத்தை நம்பி, 500 சிறு குறு தொழிற்சாலைகள், துாத்துக்குடி சுற்றுப்புறங்களில் இயங்குகின்றன. துாத்துக்குடியைச் சேர்ந்த, இரண்டரை லட்சம் மக்கள், இந்த ஆலையால் ஏதோ வகையில் பயன் பெறுகின்றனர்.பல விதமான அனுமதி மீறல்கள், இந்த ஆலை நிர்வாகத்தால் செய்யப்படுகின்றன என, தகவல்கள் பரப்பப்படுகின்றன. அவற்றை, சட்டப்படி எதிர்கொள்ளும் அந்த நிறுவனம், நீதிமன்றங்கள், பசுமை தீர்ப்பாயங்கள் அனுமதியின் படி, தொடர்ந்து செயல்படுகிறது.பரப்பப்படுவது தவறான தகவல் என்பதை, பொதுமக்களுக்கு சுட்டிக்காட்ட, இந்த நிறுவனம் தவறி விட்டது. அல்லது சுட்டிக்காட்டிய விதம், அப்பகுதி மக்களுக்கு புரியும் விதத்தில் இல்லை என்பதையும் கூற வேண்டும்.இந்த ஆலையால், புற்றுநோய் அதிகரிக்கிறது என, புகார் கூறப்படுகிறது. ஆனால், புற்றுநோய் குறித்த உலக ஆய்வு நிறுவன அறிக்கை மற்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறையின், 2017 அறிக்கைகளின் படி, உண்மை அவ்வாறு இல்லை.சென்னை, காஞ்சிபுரம், கோவை, கன்னியாகுமாரி, திருவள்ளூர், கடலுார் போன்ற மாவட்டங்களில் தான், புற்றுநோய் அதிகம் உள்ளது. துாத்துக்குடி மாவட்டத்தில், சற்று குறைவாகத் தான் உள்ளது என, அந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன.'இந்த ஆலையால் தான், துாத்துக்குடியில் மழை பொழிவு குறைகிறது' எனவும் கூறப்படுகிறது. ஆனால், 2018 மார்ச், 14ல் வெளியிடப்பட்ட தேசிய வானிலை ஆய்வு அறிக்கையின் படி, துாத்துக்குடி மாவட்டத்தில், 32 சதவீத அதிக மழை பொழிந்துஉள்ளது தெரிய வருகிறது.

இந்த ஆலையால் தான், தாமிரபரணியின் தண்ணீர் அதிகம் செலவாகிறது எனவும் கூறப்படுகிறது. அதுவும் தவறு. ஆறு கடலில் கலக்கும் இடத்தில், 'சிப்காட்' நிர்வாகம் தண்ணீரை எடுத்து, ஆலைக்கு தருகிறது.மேலும், ஆலைக்கு தேவைப்படும், 60 சதவீத தண்ணீர், கடல் நீரை உபயோகமான தண்ணீராக மாற்றித்தரும், தனியார் நிறுவனத்திடம் இருந்தே வாங்கப்படுகிறது.ஸ்டெர்லைட் துவக்க உள்ள புதிய விரிவாக்க ஆலை, சிப்காட் தொழிற்பேட்டையில் அமைக்கப்படவில்லை; குடியிருப்பு பகுதியிலிருந்து, 200 மீட்டர் தொலைவிலேயே அமைக்கப்படுகிறது. இந்த விரிவாக்க திட்டத்திற்கு, சிப்காட் நிறுவனமே இடம் ஒதுக்கியுள்ளது.மேலும், தற்போதுள்ள ஆலையின் மிக அருகிலேயே, இந்நிறுவனத்தின், 5,000 ஊழியர்கள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ளன.


மேலும், விரிவாக்கம் ஏற்படும் போது, அங்கும் ஊழியர்களுக்கான குடியிருப்புகள் தயாராகும் என, ஆலை நிர்வாகம் தெரிவிக்கிறது.இந்த ஆலையில், சல்ப்யூரிக் அமிலம், அனுமதியில்லாமல் தயாரிக்கின்றனர் எனவும், தவறாக புகார் கூறுகின்றனர். ஆனால், 'தகுந்த அனுமதியுடன் தான், சல்ப்யூரிக் டை ஆக்சைடு, அமிலமாக மாற்றப்பட்டு, உரம், மருந்து, சோப்பு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது. 'மேலும், சல்ப்யூரிக் டை ஆக்சைடு வெளியேற்றம், அனுமதிக்கப்பட்ட அளவை விட குறைவாகவே உள்ளது' என, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது;வெளியேற்றத்தை ஒவ்வொரு நொடியும் பதிவு செய்கிறது.நிலைமை இவ்வாறு இருக்க, தொழில் நகரமான துாத்துக்குடியில், இந்த ஆலைக்கு எதிராக ஏன் இவ்வளவு போராட்டங்கள்... இதன் பின்னணியில் யார் என்பதை, பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியது, அரசின் கடமை.'ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டம், சமூக விரோதிகளால் துாண்டப்படுகிறது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, துாத்துக்குடி மாவட்ட கலெக்டர், சமீபத்தில் குறிப்பிட்டது மிக முக்கியமானது.ஆலையில் வேலை செய்வோர், அதை திறக்க வேண்டும் என கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க குடும்பத்துடன் சென்ற போது, அவர்கள் சென்ற பஸ்கள் உடைக்கப்பட்டு, அப்பாவி ஊழியர்களும், குழந்தைகளும் தாக்கப்பட்டனர்.இந்த நிறுவனத்தில் பணி புரிபவர்களுக்கு, வீடு வாடகைக்கு விடக்கூடாது என, பொதுமக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். ஆலையில் உள்ள கோவில்களுக்கு பூஜை செய்யச் செல்லும் அர்ச்சகர்களும் மிரட்டப்படுகின்றனர்.அரசுக்கு எதிரான அமைப்புகள் எவை, அவற்றால் எழுந்துள்ள பிரச்னைகள் என்ன என்பது குறித்து, வேதாந்தா நிறுவனமும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களின் சந்தேகங்களை முழுவதுமாக போக்கி, பொதுமக்கள் ஒத்துழைப்புடன், விரிவாக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது தான், அனைத்து தரப்பினரின் விருப்பம்.இதற்கான வழிமுறைகளை, மாவட்ட நிர்வாகம், அந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள், தொழில் வல்லுனர்களுடன் ஆலோசித்து மேற்கொள்ள வேண்டும்.

சென்னையில், ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் நிறுவனம், சில ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டதும், 3,000 தொழிலாளர் குடும்பங்கள்; பி அண்ட் சி மில் மூடப்பட்ட போது, 4,000 குடும்பங்கள்; நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டதால், 8,000 குடும்பங்கள் சின்னாபின்னமாயின.தமிழகத்தில், புதிய தொழில் முதலீடு இல்லை என்பதும், தற்போதுள்ள தொழிற்சாலைகள், இங்குள்ள குழப்பங்களை கருதி, பிற மாநிலங்களுக்கு செல்கின்றன என்பதும் உண்மையானால், தமிழகம் மிகவும் பாதிப்படையும்.ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு தரும் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் மூடப்பட்டால், மிகப் பெரிய இழப்பு, தமிழகத்திற்கு ஏற்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும்; அதன் தாக்கம், பல ஆண்டுகளுக்கு நீடிக்கும். பிற நாடுகளின் தொழிற்சாலைகளும், இங்கு வர தயக்கம் காட்டும். ஒட்டுமொத்தமாக கடும் பாதிப்பு ஏற்படும்.எனவே, தமிழகத்தின் நலன், துாத்துக்குடி மாவட்ட மக்களின் நலன், சிறு குறு தொழில் முனைவோரின் நலன், ஸ்டெர்லைட் ஆலை தொழிலாளர்களின் நலன் போன்றவற்றை கருதி, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது, அனைத்து தரப்பினரின் பொறுப்பு.சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனும் பொய்யான முகமூடியுடன், போராட்டத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் நடத்தி வரும், தேச விரோத கும்பல்களை ஒடுக்கி, ஆலையை தொடர்ந்து இயங்க செய்ய வேண்டும். இதுவே, தொழில் வளர்ச்சியில் நம்பிக்கையுள்ளவர்களின் வேண்டுகோள்!இ - மெயில்: krusaamgmail.com டாக்டர் ந.ராமசுப்ரமணியன் பொருளாதார நிபுணர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (22)

 • Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ

  ஸ்டெர்லிட் (காப்பர் ஸ்மெல்ட்டேர்) உலகத்திலில் மிகப்பிவும் மோசமான சுற்றுபுற கெடுதலையும் மற்றும் மக்களின் சுகாதாரத்திற்கும் பெரும் கெடுவிளைவிக்கக்கூடியது. அப்படிப்பட்ட தொழிற்சாலை தேவையா? மக்களுக்கும் சுகாதாரத்திற்கும் மற்றும் சுற்றுபுற கெடுதல்களுக்கும் அண்ட் இழப்புகளையும் பொருளாதார மதிப்பீடு செய்தால் ஸ்டெர்லிட் பொருளாதார இழப்புகள் தான் மிகுதியாகவுள்ளது. உலகத்தில் பெரும் கெடுதிகள் விளைவிக்க கூடிய தொழிற்சாலை என காப்பர் ஸ்மெல்ட்டேர் தொழிற்சாலையை தனிமைப்படுத்தியுள்ளது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் காப்பெற் ஸ்மெல்ட்டேர் பாக்டரிகளுக்கு அனுமதி கிடையாது? நாம் ஏன் ஸ்டெர்லிட் மாதிரி வாழ்வாதாரத்துக்கு பெரும் ஆபத்தான தொழிற்ச்சாலைகளை மூடாமல் விட்டுவைத்திருக்கிறோம்? மேலும் திருநெல்வேலி மெடிக்கல் காலேஜ் சமுதாய மருத்துவ பிரிவு நடத்திய ஆராச்சியில் ஸ்டெர்லிட்டால் தான் புற்றுநோய்கள் மற்றும் நோய்களும் பெருவாரியாக பரவியுள்ளது என்று தெரிவித்தவுள்ளது.

 • Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ

  முதலில், ராம் மக்களின் குறைகளை பற்றி சிறிதும் கவலை படாமல் ஸ்டெர்லிட்டுக்கு அனுசரானையாக எழுதியத்தின் நோக்கம் என்ன? மக்களை போராட்டங்களுக்கு தள்ளிய அரசுகளின் பொறுப்பற்ற செயலை கண்டித்திருக்க வேண்டும். அடுத்தது அனைத்து போராட்டங்களிலும் மக்கள் அமைதியான முறையில் தான் நடந்துகொண்டார்கள். போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் அவர்களிடையே எந்த ஒரு சமூக விரோதிகளும் இல்லை. ஆனால் கடைசி நாட்களில் சமூகவிரோத செயல்களில் போலீஸ் தான் ஈடுபட்டார்கள் என்று உறுதியாக சொல்கிறார்கள். அந்த செய்திகளை ராம் ஏன் கண்டுகொள்ளவில்லை? திட்டமிட்ட இருட்டுஅடைப்பு அல்லத ராம்க்கு அதை பற்றி தெரியாமல் எழுதிவுள்ளாரா?

 • Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ

  முதலில், ராம் மக்களின் குறைகளை பற்றி சிறிதும் கவலை படாமல் ஸ்டெர்லிட்டுக்கு அனுசரானையாக எழுதியத்தின் நோக்கம் என்ன? மக்களை போராட்டங்களுக்கு தள்ளிய அரசுகளின் பொறுப்பற்ற செயலை கண்டித்திருக்க வேண்டும். அடுத்தது அனைத்து போராட்டங்களிலும் மக்கள் அமைதியான முறையில் தான் நடந்துகொண்டார்கள். போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் அவர்களிடையே எந்த ஒரு சமூக விரோதிகளும் இல்லை. ஆனால் கடைசி நாட்களில் சமூகவிரோத செயல்களில் போலீஸ் தான் ஈடுபட்டார்கள் என்று உறுதியாக சொல்கிறார்கள். அந்த செய்திகளை ராம் ஏன் கண்டுகொள்ளவில்லை? திட்டமிட்ட இருட்டுஅடைப்பு அல்லத ராம்க்கு அதை பற்றி தெரியாமல் எழுதிவுள்ளாரா?

 • Alex - vadalur,இந்தியா

  மக்கள் தற்பொழுது மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் அங்கே படும் துன்பங்களுக்கு நிரந்தர தீர்வு இருந்தால் உங்கள் அறிவை பயன்படுத்தி அறிவியல் ரீதியில் தீர்வை பகிருங்கள். நீங்களும் சராசரி அரசியல் வாதிகளை போல கருத்தை பகிர்ந்து பிரட்சனையை திசை திருப்ப வேண்டாம்.

 • Ganapathy - Bangalore,இந்தியா

  சில வருடங்களுக்கு முன்பு , எதற்கு ஐயா உச்ச நீதி மன்றம், ஸ்டெர்லிட் நிறுவனத்தை நூறு கோடி அபராதம் கட்ட சொல்லியது .

 • MUTHURAJ - thoothukudi,இந்தியா

  தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லிட்டேன் நச்சுப்புகையைத் சமாளிக்க முடியமால் தான் தொடர் போராட்டத்தில் இறங்கியுள்ளோம். தயவு கூர்ந்து இதற்கு மதச்சாயம் பூச வேண்டாம்.

 • Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா

  ஒரு வருசம் அல்ல பலவருசம் அங்கதன் குப்பையை கொட்டுறோம்

 • Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா

  -அங்கு தான் 25 வருசமா இருக்கிறோம்

 • Kumar - Thoothukudi - Cochin,இந்தியா

  , இந்த ஆலையில் இருந்து வெளிவரும் சல்பூரிக் ஆசிட் போஸ்போரிக் ஆசிடின் நச்சு புகை சுற்று வட்டார மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது, இந்த மாசுபட்ட நச்சு புகையை இவர்கள் வெளியிடுவது இரவில் 11 மணிக்கு மேல்தான், இந்த ஆலையின் ஊழியர்கள் குடியிருப்பு 2004 ம் ஆண்டு வரை ஆலையின் அருகில்தான் இருந்தது, ஆனால் இதன் பாதிப்பினால் ஊழியர் குடியிருப்பு தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் அருகில் மாற்றப்பட்டது. ஆலையின் அருகில் பாதிக்கப்பட்ட கிராம மக்கள்தான் வாழ்கிறார்கள்.

 • raja - Kanchipuram,இந்தியா

  தமிழன் மூளையை என்றோ அடகு வைத்து விட்டான். இங்கு வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக கருத்து கூறுபவர்கள் உணர்ச்சி பிழம்பாகவே உள்ளனர். இது போல் தான் கிராமத்தினர் ஒரு பகுதியினர் மற்றும் ஊழியர்கள் விசாரணை கமிஷன் முன் ஆஜரான போது மிரட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தினர். பொதுவாக ஆலைகள் மக்கள் அதிகம் இல்லாத இடத்தில தான் தொடங்கப்படுகின்றன. பின் சில மக்கள் முதலில் தெரிந்தோ தெரியாமலோ அருகில் குடியேறி பின் சில கட்சி பிரமுகர்களுடன் கூடி போராட்டம் என்ற கோணத்தில் மிரட்டுவது அதன் மூலம் சம்பாதிப்பது என நடைபெறுகிறது. மேலும் நம் உணர்ச்சி பிழம்புகள் அங்கு வேலை செய்வோர் 25 வருடங்களுக்கும் மேலாக எந்த வித உடல் பாதிப்பும் இல்லாமல் இருப்பது இவர்கள் கண்களுக்கு படுவது இல்லை. அரசியல் வாதிகள் சொல்வதை கேட்டு கேட்டு நடக்கும் நம் மக்கள் என்றோ சுயமாக யோசிக்கும் சக்தியை இழந்து விட்டதால் உணர்ச்சி ஒன்றையே கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆலை வந்த பின் தூத்துக்குடி பெருமளவு முன்னேறியுள்ளது என்பதே உண்மை.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  தூத்துக்குடியில் குறைந்தபட்சம் ஓருடஜன் பெரிய தனியார் ரசாயன ஆலைகள் உள்ளன அவற்றை நடத்துவது அங்கு செல்வாக்கு பெற்றுள்ள குறிப்பிட்ட இனத்தார்தான் .தங்களால் ஏற்படும் சூழ்நிலைப்பதிப்பை ஸ்டெர்லைட் ஆலைமீது போட்டு தப்பிக்கப்பார்கிறார்கள் எனத்தோன்றுகிறது . வெளியார் ஆட்கள் நடத்தும் ஆலைகள் மூடப்பட்டால் வேலையில்லாத்திண்டாட்டம் அதிகரித்து அவர்களுக்கு குறைந்த கூலியில் வேலையாட்கள் கிடைப்பரே மேலும் எவ்வளவு முயன்றும் ஸ்டெர்லை உள்ளூர் தாதா அரசியல்வாதிகளுக்கு மாமூல் கொடுக்க மறுக்கிறது பாவாடை சாமிகளுக்கோ தசபாக/ தசாங்க வருவாய் போதவில்லையே

 • Gopi - Kanchipuram,இந்தியா

  மற்ற மாநிலங்களில் இருந்து ஏன் இந்த ஆலை துரத்தப்பட்டது ?.குஜராத், கோவா, மஹாராஷ்டிரா, கேரளா என, பல மாநிலங்கள், ஸ்டெர்லைட்டிற்கு அனுமதி அளிக்கவில்லை காரணம் தெரிவிக்கவும்

 • Mohanram a - dindigul,இந்தியா

  ஸ்டெர்லிட்டிற்காக வக்காலத்து வாங்குபவர்கள் மற்றும் அதனால் பயன் அடைந்தவர்கள் தயவு செய்து தொழிற்சாலை அருகில் குடியேறுங்கள் காலப்போக்கில் அனுபவித்து விட்டு உங்கள் கருத்துக்களை வெளியுலகிற்கு கூறுங்கள்

 • Subramanian Srinivasan - valrokaiya ,இந்தோனேசியா

  மக்கள் புற்று நோய் வந்து சாகட்டும், தோல்வியாதிகளால் அவதிப்படட்டும். வரும் தலைமுறை அங்ககீனமாகப் பிறந்து துன்புறட்டும். ஸ்டெர்லைட்டை முட்டை வேண்டாம் பொருளாதாரம் முடங்கும்.

 • தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா

  குஜராத், மராட்டியம், கோவாவிலிருந்தும்,கர்நாகடத்திலிருந்தும், கேரளத்திலிருந்தும் துரத்தப்பட்டது ஏன் இந்த ஸ்டெர்லைட்?

 • Ashokkumar Jayavel - vridhachalam,இந்தியா

  தூத்துக்குடியில் போய் வாழ்ந்து பார் 'சொம்பு'

 • spr - chennai,இந்தியா

  சிறப்பான கருத்து எல்லா உற்பத்தி அமைப்புக்களிலும் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது அப்படி தவறுகள் நடக்காமல் இருக்க தக்க நடவடிக்கையினை நிர்வாகம் எடுத்திருக்கிறதா என்று கண்காணிப்பதுவும் அப்படி இல்லையேல் தடுக்க நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டுவதும் அரசு அதிகாரிகளின் கடமை அவர்கள் பல ஆதாயங்களால் கவரப்பட்டு தங்கள் கடமையை செய்யாமலிருந்தால், பொதுமக்கள் அவர்களை "பார்த்துக் கொள்வது" அவசியம் இன்று தமிழகத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை அவர்களை மூளைச்சலவை செய்து கண்களின் கைப்பாவையாக வைத்து பிழைப்பு நடத்த பல "தலைவர்கள்" இருக்கிறார்கள் இவர்கள் பிரச்சினை தொடங்கும் முன்பாக எதுவும் செய்வதில்லை பிரச்சினையை தொடங்க வைத்து அதில் குளிர்காய்கிறார்கள் அதைவிட இது போன்ற ஆலைகள் தொடங்கும் காலத்தில் அவை பொட்டல் காட்டில்தான் தொடங்கப்பட்டுள்ளன எனவே பிரச்சினைகள் அறியப்படவில்லை நாளடைவில் மக்கள் அங்கே குடியேற ஆரம்பித்தார்கள் அரசும் "கண்டுகொள்ளவில்லை" பிரச்சினை அன்றே ஆரம்பித்தது

 • modikedi - chennai,இந்தியா

  ஏனையா, மக்களுக்கு எதிராகவே எல்லாம் நினச்சா மக்கள் எப்படி வாழ்வார்கள். கழிவு நீர் குடி தண்ணீரில் கலக்கினால் என்னவாகும் என்பது உங்களுக்கு தெரியாதா ... இப்படி யோக்கியமாக பேசும் நீங்கள் எவனாவது ஒருவன் அந்த ஆலையின் பக்கத்தில் போய் குடும்பத்துடன் ஒரு வருடம் தங்க முடியுமா ...? உங்களால் முடியாது. காரணம் ''தனக்கு வந்தால் ரத்தம் . அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி'' . வாய் கிழிய பேசினால் போதாது. உங்கள் நடத்தையிலும் இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சி எப்பவுமே நாட்டுக்கு தேவைதான் . ஆனால் தமிழகத்தில் நடப்பதோ ? விவசாயத்தை அழிக்கிறீர்கள். ஆற்றுமணலை மணலை கொள்ளையடிகிறீர்கள். காவிரி தண்ணீருக்காக கர்நாடகத்தில் கூப்பாடு போடுகிறீர்கள் . மணல்கொள்ளையை நிறுத்தி ஆறுகளில் தடுப்புசுவர் கட்டினாலே தண்ணீரை சேமிக்கலாம். அதை அரசியல்வாதிகள் பண்ண மாட்டார்கள் . காரணம், மணலை கொள்ளையடிக்க முடியாது. இதை தட்டி கேட்க உங்களை போன்றோரால் முடியாது. கேக்குற மக்களை வதைக்கிறீர்கள். நாய்க்கு கிடைத்த முழு தேங்காய் போல் தானும் தின்னாது அடுத்தவனை தின்னவும் விடாது கதைதான். மக்களுக்காக சிந்தியுங்கள். நாளை அனுபவிக்க போகிறது நமது சந்ததிகளும்ன்னு மனதில் நினைவு வையுங்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement