Advertisement

எங்கே போனது தமிழரின் நாகரிகம்?

நம் தமிழரின் பண்புகளில் மிகவும் சிறந்தது, விருந்தோம்பல்! வீட்டிற்கு யார் வந்தாலும், அவர்களை நன்கு கவனிப்பது தான் நம் பண்பாடு. முகம் தெரியாத வழிப்போக்கர், தங்கள் ஊருக்கு வந்தால் கூட, இரவுப் பொழுதில், படுத்து உறங்கி இளைப்பாற வேண்டும் என்பதற்காக தான், வீடுகளில் திண்ணை கட்டினர், நம் முன்னோர்.

நம் மக்களின் இந்த குணத்தை, உலகத்திற்கே தெரிவிக்க வேண்டும் என்பதற்காகத் தான், 'திருக்குறள்' தந்த வள்ளுவ பெருந்தகையனார், 'விருந்தோம்பல்' என, தனி ஒரு அதிகாரத்தையே ஒதுக்கியுள்ளார்.கணவனை பிரிந்து வாழ்ந்த போது, தன் வீட்டிற்கு விருந்தினர்கள் வராததால் கவலை அடைந்தாள், தமிழ் தலைவி கண்ணகி. தலைவனோடு ஊடல் கொண்டிருந்தாள், நம் சங்க கால தலைவி வேறொருத்தி. அப்போது வீட்டிற்கு விருந்தினர் வர, ஊடலை மறந்து, தலைவனுடன் சகஜமாக அவள் பேச ஆரம்பித்தாள். அதனால், தினமும் வீட்டிற்கு விருந்தினர்கள் வர வேண்டும் என, ஆசைப்பட்டான், அந்த தலைவன்.
நம் வீட்டிற்கு வந்த ஒரு விருந்தினர் போகும் போது, அடுத்து வரும் விருந்தினரை வரவேற்க, வாசலில் காத்து நிற்பது தான் தமிழர் பண்பாடு.

நான் சிறுமியாக இருந்த போது, எங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்த வண்ணமாக இருப்பர்; வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும்.விருந்தினராக வந்த அத்தை, சித்தி, பெரியம்மா போன்றோர், விருந்துக்கு வந்திருக்கிறோம் என்ற உணர்வில், சுகமாக படுத்து ஓய்வெடுக்காமல், ஒருவர் காய் நறுக்க, இன்னொருவர் அம்மியில் மசாலா அரைக்க, மற்றொருவர் அடுப்பு முன் நின்று சமைக்க, சமையல் செய்த பாத்திரங்களை மற்றவர் தேய்த்து கழுவ என, ஆளுக்கொரு வேலையைப் பார்ப்பர்.

அதனால் எத்தனை விருந்தினர்கள் வந்தாலும், வேலைப்பளு என் அம்மாவிற்கு இருக்காது. என் பாட்டி வீட்டிற்கு, இரவு எந்த நேரம் போனாலும், மண் பானையில் பழைய சோறு ஊறிக் கொண்டிருக்கும்; உரைக்குத்திய தயிரும், ஊறுகாயும் கண்டிப்பாக இருக்கும்.
அடுக்குப்பானையில் நாட்டுக்கோழி முட்டை, கத்திரிக்காய் வற்றல், வெயிலை வீணாக்காமல் போட்டு வைத்த, கூழ் வற்றலும் இருக்கும். முட்டையை அடை சுட்டு, கூழ் வற்றலை வறுத்து, பழைய சோற்றை பிழிந்து வைத்து, அதில் கெட்டித்தயிரை ஊற்றி, ஊறுகாயோடு சாப்பிடும் போது, விருந்து தோற்றுப்போதும்; வயிறு குளிர்ந்து விடும்!இது, என் பாட்டி வீட்டில் மட்டுமல்ல, பெரும்பாலான தமிழர் வீட்டில் நடந்த, இப்போதும் நடக்கும் நிகழ்வு தான். இப்படி, நம் தமிழக மக்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்திருப்பது, விருந்தோம்பல் எனும் உயரிய பண்பு!தமிழ் வியாபாரிகளாக மாறிய, சில, தமிழக அரசியல் கட்சிகளுக்கு, இந்த பண்பு எப்படி தெரியாமல் போனது?


எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என, துடிக்கும் சில அரசியல் கட்சித் தலைவர்களின் சதித்திட்டம் தெரியாமல், உயரிய பண்புகளையும், மாண்புகளையும், தமிழக மக்களும், சில அரசியல் கட்சியினரும், வேண்டுமென்றே புறந்தள்ளி வருகின்றனரா? ஆம். தமிழகத்திற்கு சமீபத்தில் வந்த, பிரதமர் மோடிக்கு, நம் அரசியல் கட்சியினர் சிலர், கறுப்புக்கொடி காட்டியதைத் தான் சொல்கிறேன்!எங்கே போனது, நம் தமிழ் பண்பு... பழந்தமிழர் பெருமை பேசி, இப்போதும் கட்சியையும், வயிற்றையும் வளர்க்கும் சில, தமிழக கட்சிகள், மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டிய விதம், மிகவும் தவறு. தமிழர்களுக்கு இழுக்கு, கறுப்புக்கொடி.

நம் மாநிலத்திற்கு, நம் நாட்டின் பிரதமர் வரும் போது, மகிழ்ச்சியுடன் ஆரவாரமாக வரவேற்பு கொடுக்க வேண்டிய நாம், என்ன செய்தோம்... கறுப்புக்கொடி காட்டி, 'கோ பேக் மோடி' என, வாசகங்களை கையில் பிடித்த படி, வானில் கறுப்பு பலுான்களையும் பறக்க விட்டு... நம்மை தேடி வந்தவரை, அவமரியாதை செய்து விட்டோம்.'எங்கள் மாநிலத்திற்கு வராதீர்... திரும்பிப் போங்கள்' என்றல்லவா சொல்லி விட்டோம்; இது முறையா... இது தான் தமிழர் பண்பாடா?
'தமிழகத்திற்கு காவிரி நீரை பெற்றுத் தர முயற்சிக்காத பிரதமர் மோடியை கண்டிக்கும் விதத்தில் இவ்வாறு செய்தோம்' என கூறும், உதவாத காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தின் உயிர்நாடியான, விருந்தோம்பல் பண்பை மறந்து, நீங்கள் செய்த காரியம், மிகவும் அவமரியாதையானதே!


நல்ல நோக்கத்தோடு நம் மாநிலத்திற்கு வந்தவருக்கு, கறுப்புக்கொடி காட்டினால் என்ன அர்த்தம்... எங்கே போனது நம் பண்பாடு?காவிரி வாரியம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை பிரதமர் மோடி விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம், நம் மாநில அரசியல்வாதிகளுக்கு உண்மையிலேயே இருந்திருந்தால், என்ன செய்திருக்க வேண்டும்...
தமிழகம் வந்த பிரதமருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு கொடுத்து, கோரிக்கை மனுவை, விழா மேடையில் அவரிடம் கொடுத்திருக்க வேண்டும். அப்போது, 'இதை நீங்கள் நிறைவேற்றியே தீர வேண்டும்; அதற்கான உறுதிமொழியைத் தாருங்கள்' என, பொதுமக்கள் முன், பிரதமரிடம் உறுதி கேட்டிருக்க வேண்டும்.


அப்படி செய்திருந்தால், நிச்சயம் அவர் மறுத்திருக்கவும் மாட்டார். ஆனால், நம் கட்சித் தலைவர்கள் என்ன செய்தனர்... நம்மைத் தேடி வந்த பிரதமரை, 'வராதே, திரும்பிப் போ!' என, எந்தெந்த வகையில் எல்லாம், அவமதிக்க முடியுமோ, அந்த வகையில் அவமதித்தனர்.
'இந்தியா' என்ற மாபெரும் நாட்டின் தலைவர் என்ற மரியாதை கூட, இவர்களுக்கு தெரியாமல் போனதே!
பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்ற எண்ணம் கொண்ட பிரதமர் மோடி, இந்த எதிர்ப்பு குறித்து, ஒரு வாார்த்தை கூட பேசாமல், சென்னை அருகே உள்ள, காஞ்சிபுரம் மாவட்டம், திருவிடந்தையில் ராணுவ கண்காட்சியை திறந்து, அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்து, பல நிகழ்ச்சிகளில், உற்சாகமாக பங்கேற்று, டில்லி திரும்பினார்.
அன்று அவர், உண்ணாநோன்பு இருந்தார். காலை முதல் மாலை வரை, எதுவும் சாப்பிடாமல், தமிழகத்தில் தன் நேரத்தை செலவிட்ட அவர், அவமரியாதையை சுமந்த படி, அமைதியாக டில்லி திரும்பினார்.


மோடிக்கு கறுப்புக்கொடி காட்டிய, தி.மு.க., தலைமையிலான அனைத்து கட்சித் தலைவர்கள், அவரை அவமரியாதை செய்த பின், சந்திக்க நேரம் கேட்டு, அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். இவர்களை என்ன சொல்ல...மக்களே, ஒன்று புரிந்து கொள்ளுங்கள்... இந்தியா, மாநிலங்களின் கூட்டாட்சி தத்துவத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் நாடு. மாநிலங்களின் நரம்புகள் உறுதியாய் இருந்தால் தான், நம் தேசத்தின் கொடி, பட்டொளி வீசி பறக்கும். நரம்புகள் பாதிக்கப்பட்டால் உறுப்புகள் செயல் இழந்து போய் விடும்.
பாரத நாட்டின் கால்களாய் இருந்து, நாட்டை தாங்கிப் பிடிக்கும் தமிழகத்தின் நரம்புகளை, செயல் இழக்க வைக்கும் வகையில் இருக்கிறது, தி.மு.க., உட்பட சில அரசியல் கட்சிகளின்
போராட்டம்.


போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும், அத்தி பூத்தாற் போல இருந்த நம் மாநிலத்தில், குக்கிராமங்களில் கூட இன்று, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என, இயல்பு வாழ்க்கை சீரழிந்து, இன்னொரு காஷ்மீராக மாறிக் கொண்டு இருக்கிறது.இங்கு தொழில் துவங்க நினைத்த பலர், இங்குள்ள சூழ்நிலையைப் பார்த்து, மிரண்டு, தங்கள் எண்ணங்களை மாற்றி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவுக்கு சென்று விட்டனர்.காவிரிக்காக, தமிழ் மக்களை போராட வேண்டாம் என, சொல்லவில்லை. அன்று, ஜல்லிக்கட்டுக்கு போராடியதை போல, நேர்மையான போராட்டமாக இருக்கட்டும். ஆற்று மணலை அள்ளி, நதியை மலடாக மாற்றுபவனுக்கு, 'ஆற்றுக்கு மணல் அள்ள வராதே; கோ பேக்' என, சொல்லுங்கள்.சாராய ஆலைகளை துவக்கி, தமிழ் இளைஞர்களை சீரழிப்பவன், ஊருக்குள் வந்தால், அவனுக்கு, கோ பேக் சொல்லுங்கள். 'உன்னால் தான் எத்தனையோ குடும்பங்கள் அழிந்துக் கொண்டிருக்கின்றன' என, கறுப்புக்கொடி காட்டுங்கள்.


அருமையாக சிந்தித்து, அற்புதமாக செயலாற்றிய, தமிழ் இளைஞர்களை, மூளை சலவை செய்து, பதாதை துாக்க வைத்த, தமிழ் வியாபாரிகளை பார்த்தால், கோ பேக் சொல்லுங்கள்.
பிரதமர் பதவி என்பது, சாதாரணமானது அல்ல. கடிகார முட்கள் போல, 24 மணி நேரமும், ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டே இருக்கக் கூடிய பொறுப்பு; முள் கிரீடத்தை தலையில் அணிந்திருப்பது போன்றது.நான்கு பேர் இருக்கும் வீட்டில், காலையில் என்ன பலகாரம் செய்வது என்பதே அந்த வீட்டின் தாய்க்கு, பெரிய பிரச்னையாக இருக்கும்.
ஏனென்றால், ஒருத்தர் இட்லி வேண்டும் என்பார்; இன்னொருவர் தோசை வேண்டும் என்பார்; மற்றொருவரோ பூரி வேண்டும் என்பார்; இன்னொருவருக்கு சப்பாத்தி தேவைப்படும்.
சரி, யாருக்கும் பிரச்னை இல்லாமல், இட்லி பண்ணலாம் என, முடிவெடுத்தால், சட்னியில் பிரச்னை ஏற்படும். ஒருவர், தேங்காய் சட்னி கேட்பார்; இன்னொருவர், தக்காளி சட்னி கேட்பார்; மற்றொருவர் இட்லி பொடி கேட்பார்!

ஒரு சின்ன குடும்பத்தில் உள்ள நபர்களை திருப்திப்படுத்துவதே கடினம் என்ற நிலையில், கோடிக்கணக்கான மக்கள் உள்ள இந்த நாட்டில், அனைவரின் விருப்பத்தையும் நிறைவேற்றுவது, ஒரு பிரதமருக்கு கடினமான விஷயம்.'கல் தோன்றி, மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்தக்குடி' என, பெருமையாக சொல்லிக் கொள்ளும் நம் நாகரிகம், சில கட்சிகளின் சூழ்ச்சியால், கறுப்புக்கொடி, கறுப்பு பலுான்களால் உடைபட்டு போக வேண்டுமா?வெண்ணிப்பரந்தலை வென்றவனும், கங்கையை இங்கே கொண்டு வந்தவனும், இமயத்தில் விற்கொடி ஏற்றியவனும் ஆண்ட இந்த பூமியிலா இத்தனை, 'கோ பேக்' கோஷங்கள்!
இல்லை... அவை, நம் மக்களின் ஆழ்மனதில் இருந்து, தானாக எழுந்த கோஷங்கள் அல்ல; எதையோ எதிர்பார்ப்போரின் துாண்டுதல்கள். துாண்டில்களில் புழுக்களை மாட்டுவது, மீன்களின் பசியை ஆற்றுவதற்கு அல்ல என்பதை தமிழர் அறிவர்.எனவே, புழுக்களைப் பார்த்து ஏமாறும் மீன்களாக மாறாமல், இந்தியத் தாயின் உண்மையான புதல்வராக இருப்போம். எதிரியே என்றாலும், இன்முகத்துடன் சிரித்து, இருகை விரித்து வரவேற்போம்!

இ:மெயில்: selvasundari152gmail.com

-எஸ்.செல்வசுந்தரி
சமூக ஆர்வலர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (14)

 • selvi - essex,யுனைடெட் கிங்டம்

  அருமையான கட்டுரை , எதுனாலும் அன்பா கேட்டாத்தானே கிடைக்கும் . நீ என் வீட்டுக்கு வராதே ஆனா எனக்கு மட்டும் இதெல்லாம் செய்னு சொல்றது என்ன ஞாயம்

 • Theeraa Vidam - Chennai,இந்தியா

  சங்க கால காவியம் என்று போற்றப்படும் சிலப்பதிகாரத்திலேயே சொல்லப்படும் அந்தணர் மாக்கள் குடிகளை ஆரியனெ வெளியே போ என்று குரல் கொடுத்த பெருமை திராவிட கழகங்களுக்கு உண்டு. சாதி வெறிபிடித்த திராவிட அரசியல் தலைகள் வீசும் இருவது ரூபாய் பணம் பொருக்கி அதிலே குட்கா வாங்கியோ டாஸ்மாக்கில பலானது வாங்கியோ குக்கரில் அமுக்குவதே திராவிட நாகரிகமாய் போய்விட்டது. தமிழார் நாகரீகத்தின் பெருமை பற்றி நாம் சரித்திரத்தில் தான் இனி தெரிந்து கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்றால் ஒவ்வொரு கல்லும் உண்மைகளை சொல்லும். திராவிட கழக கைக்கூலிகள் நடவடிக்கைகளில் அது தெரிவது அரிது. அதனால் திராவிட பணபாடு வேறு தமிழ் பண்பாடு வேறு என்பதை புரிந்துகொண்டவர்க்கு இது ஒன்றும் புதிதல்ல.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஒருத்தர் இட்லி வேண்டும் என்பார் இன்னொருவர் தோசை வேண்டும் என்பார் மற்றொருவரோ பூரி வேண்டும் என்பார் இன்னொருவருக்கு சப்பாத்தி தேவைப்படும்// எல்லோருக்கும் பகோடா அல்லது அல்வா குடுத்திரா வேண்டியது தான்.

 • spr - chennai,இந்தியா

  "ஆற்று மணலை அள்ளி, நதியை மலடாக மாற்றுபவனுக்கு, 'ஆற்றுக்கு மணல் அள்ள வராதே கோ பேக்' என, சொல்லுங்கள்.சாராய ஆலைகளை துவக்கி, தமிழ் இளைஞர்களை சீரழிப்பவன், ஊருக்குள் வந்தால், அவனுக்கு, கோ பேக் சொல்லுங்கள். 'உன்னால் தான் எத்தனையோ குடும்பங்கள் அழிந்துக் கொண்டிருக்கின்றன' என, கறுப்புக்கொடி காட்டுங்கள். அருமையாக சிந்தித்து, அற்புதமாக செயலாற்றிய, தமிழ் இளைஞர்களை, மூளை சலவை செய்து, பதாதை துாக்க வைத்த, தமிழ் வியாபாரிகளை பார்த்தால், கோ பேக் சொல்லுங்கள்." இது பாராட்டுக்குரிய கருத்து நான் என் வாழ்க்கையின் இறுதியில் உள்ளேன் ஆனால் எனக்குப் பின் வரும் சந்ததியினர் பொறுப்பில்லாமல், சுயநலவாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு அவர்களுக்காகப் போராடியே வாழ்நாளைக் கழிக்கின்றனர் அவர்களின் வேலைவாய்ப்பை நம் தமிழக தொழிலதிபர்களே, வடமாநில இளைஞர்களுக்கு அளிக்கிறார்கள் சொல்லப்படும் காரணம் "தமிழக தொழிலாளிகளுக்கு பொறுப்பில்லை பிரச்சினை செய்பவர்கள் திறமையில்லை" என்பதே. தமிழன் ஆதரவு என்று பேசிக்கொண்டே அவனுக்கு பிழைக்க வழி தருவதில்லை திரைத்துறை கூட இதற்கு விதிவிலக்கல்ல இன்று போராட்டத்திற்கு ஆளான பல செய்திகள் நேற்று முளைத்ததல்ல குறைந்தது பத்து வருடங்களாவது ஆகியிருக்கும் அன்றெல்லாம் வாய் மூடி மௌனியாக இருந்துவிட்டு, அல்லது அதற்கு ஆதரவளித்துவிட்டு, இன்று அதனை எதிர்த்துப் போராடுவது என்ன நியாயம்? இன்று போராடுவோர் அனைவரும் அந்த பிரச்சினைக்கு ஒரு வகையில் ஆதரவளித்தவர்களே தமிழகத்தின் இளைஞருக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைத்து பொறுப்பானவர்களாக மாற இங்கு பல தொழிற்சாலைகள் தொடங்கப்பட வேண்டும் ஆனால் அதற்கு வகை செய்யும் தலைமை இங்கில்லை

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  அது என்ன கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு? ..கருப்பு என்ற நிறத்தை ஏன் எதிராளியை எதிர்ப்பதற்காக பய்னபடுத்துகிறீர்கள் .. ? கருப்பு தான் எனக்கு புடிச்ச நிறம் என்று தமிழ்நாட்டில் பாட்டும் வந்துவிட்டதே. ...,,,திராவிட கழகத்தார்கள் எப்போதுமே கருப்பு நிறத்தால் தான் உடுப்பு அணிகிறார்கள் . திமுக கொடியில் கருப்பு நிறமே இருக்கிறது. ..இங்கே எல்லாம் ....கருப்பு கொடியை யாரையும் எதிர்பதற்க்காகவோ,துக்கத்தினங்களிl கருப்பு நிறத்தை பயன்படுத்துவதாகவோ தெரியவில்லை. ..நாமெல்லாம் கருப்பு தானே ,அந்த நிறத்துக்கு ஏன் அவமரியாதை கொடுக்க வேண்டும் ?,,,மனிதன் நாகரிகம் பெற்று மாறிக்கொண்டே இருக்கிறான். தமிழன் அரசியல்வாதிகளின் துணையால் மாற அடம்பிடிக்கிறான் ....பாதகம் செய்வோரை கண்டால் காரி உமிழ்ந்து விடு என்றான் பாரதி ....அரசியல்வாதிகளும் தவறு செய்பவர்களே ...சிந்தித்து செயல் பட வேண்டும் ...தமிழர்கள் ...தவறுகளுக்கு துணை போக வேண்டாம் .

 • Indian - salem,இந்தியா

  அருமையான கட்டுரை. சாமர்த்தியமாக சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லி நம் மாநில உரிமைகளை பெற்றுவதை விட்டுவிட்டு வெறுப்பு அரசியலை எதிர் காட்சிகள் கை கொள்கின்றன. வெறுப்பை விதைத்தால் நன்மை கிடைக்குமா? தீர்வை நோக்கி செல்லாமல் சுய நலத்துக்காக இளைஞர்களின் வெறுப்பு உணர்வை தூண்டி பிரச்னையை மேலும் சிக்கலாக்குகிறார்கள்.

 • Saravana - Pollachi,இந்தியா

  மிகச் சிறப்பான கட்டுரை.

 • Saravana - Pollachi,இந்தியா

  மிக சிறப்பான கட்டுரை..

 • Farrington - Madurai ,இந்தியா

  Arumai Sagothari.Tamilan sinthanai ilanthu vittan. Panathukku maratikkiran.

 • Drramasubbu Sethu - madurai,இந்தியா

  தவறான பார்வை. தவறான கருத்து. பிஎம் விருந்தாளியாக வரவில்லை. ஆளுபவராக அதிகாரத்தில் வந்தவர். நேரிலும் மனுவாகவும் கோரிக்கைகள் வைத்தபோது மவுனியாக சென்றவர் தான் மோடி.

 • Ranganathan Muthusamy - Karur,இந்தியா

  மிகச் சிறப்பான கட்டுரை. தம் பெருமையை மறந்து சுயநல சக்திகளின் மாய வலையில் சிக்கி தவிக்கும் தமிழக மக்கள் இதைப் படித்துத் திருந்த வேண்டும்.

 • Ranganathan Muthusamy - Karur,இந்தியா

  மிகச் சிறப்பான கட்டுரை. தம் பெருமையை மறந்து சுயநல சக்திகளின் மாய வலையில் சிக்கி தவிக்கும் தமிழக மக்கள் படித்து திருந்த வேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement