Advertisement

பாரம்பரியங்களை போற்றுவோம் : இன்று உலக தொன்மைகள் தினம்

ஒரு நாட்டின் வரலாற்றை அறிய உதவும் காலக்கண்ணாடியாக இருப்பவை அந்நாட்டின் கலாசார சின்னங்கள். கல்வெட்டுகள், சிற்பங்கள், நாணயங்கள் ஆகியவை அழகும் பெருமையும் சேர்க்கின்றன. இந்த அழகிய பாரம்பரிய சின்னங்கள்தான் நாட்டின் சரித்திரத்தை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கின்றன. உலகில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு இனமும் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. வேகமாக மாறிவரும் உலகில் பாரம்பரியச் சின்னங்களை பாதுகாப்பதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18ல் உலக தொன்மைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் என்னசெய்யலாம்? : பழங்கால கட்டடங்களின் பெருமைகளை கண்காட்சிகள் அமைத்து விவரிக்கலாம். பள்ளிக் குழந்தைகள் பழங்கால நினைவுச் சின்னங்களை பார்வையிடுமாறு செய்யலாம். பழங்கால கலைகள், பழங்கால விளையாட்டுகள் போன்றவை அடங்கிய போட்டிகளை அவர்களுக்கு நடத்தலாம்.தொன்மை என்பது அறிவியல்பழங்கால வரலாற்றைவெறுமனே தெரிந்து கொள்வதற்காகவோ, பழங்கால பெருமைகளைப் பற்றி பேசுவதற்காகவோ அல்ல தொன்மைகள் தினம். தொன்மைகளில் இருந்து அதாவது பழங்கால கலைகள், பண்பாடு கலாசாரம் ஆகியவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளமாக இருக்கின்றன. ஏனென்றால், தொன்மை என்பது முழுக்க, முழுக்க அறிவியல். ஓர் அறிவியல் சார்ந்த வாழ்க்கை முறையைத்தான், நம் முன்னோர்கள் சடங்குகளாகவும், சம்பிரதாயங்களாகவும் பதிவு செய்திருக்கிறார்கள்.அவற்றை ஆழ்ந்து பார்த்தால் அதிலிருக்கிற அறிவியலைக் கண்டுபிடித்துவிட முடியும். சடங்கு சம்பிரதாயங்களில் மட்டுமல்ல, கலை கட்டடக் கலைகளிலும் அப்படித்தான். பழங்கால கட்டடங்களின் நீள, அகலங்கள், உயரங்கள், அதன் வடிவம், ஒட்டு மொத்த அமைப்பு அனைத்திலும் புதைந்து கிடப்பது அறிவியல் சிந்தனை.உலக விஞ்ஞானத்துக்கு எல்லாம் தலையாயது நமது இந்திய விஞ்ஞானம். இது வெறும் வார்த்தையல்ல, வரலாறு. உலக விஞ்ஞானிகள் எத்தனையோ புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். கடலுக்கு அடியில் நீந்தியிருக்கிறார்கள். வானத்தின் மேலே பறந்திருக்கிறார்கள். பூமியின் ஆழத்தை ஊடுருவிச் சென்று புதையல் தேடியிருக்கிறார்கள். இவையெல்லாம் ஆச்சரியப்பட்டு பெருமூச்சு விடுகிற விஞ்ஞானம்தான்.ஆனாலும், உலக நாடுகள் ஒன்றிணைந்து நம் அறிவியல் சாதனைகளோடு போட்டி போட்டால் கூட இந்தியாவின் சாதனையை சமன் செய்துவிட முடியாது. பாரதத்தின் பழமையான விஞ்ஞானம் என்பது அவ்வளவு பெரியது. உலகில் விஞ்சி நிற்பது இந்திய அறிவியலா? பிற நாடுகளின் அறிவியலா? என்று பட்டிமன்றம் நடத்தினால் பாரத விஞ்ஞானமே என்று பட்டென்று சொல்லிவிடலாம்.
இரும்புத் துாண் : 'டில்லி இரும்புத் துாண்' கேள்விப்பட்டிருக்கிறீர்களா?டில்லிக்கு அருகே மேகரூலி என்ற இடத்தில் இந்த துாண் உள்ளது. 'இந்தியாவின் பொற்காலம்'என்று அழைக்கப்பட்ட குப்தர்கள் காலத்தில், இரண்டாம் சந்திர குப்தரால் 1600 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது. இது வரலாறு. அறிவியல் ஆச்சரியம் என்னவென்றால், வெட்ட வெளியில் வெயிலிலும், மழையிலும் நனைந்து காயும் இந்தத் துாண் துருப்பிடிக்காமல் இருக்கிறது. உலகத்தின் எந்த விஞ்ஞானிகளாலும் இப்படியொரு இரும்புத் துாணை நிறுவ முடியவில்லை. இது ஏன் துருப்பிடிக்கவில்லை என்று கண்டுபிடிக்க உலக விஞ்ஞானிகள் திக்கித் திணறியிருக்கிறார்கள்.காலம், எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும் என்பார்கள். ஆனால் இந்த இரும்புத் துாண் விஷயத்தில் அது கைகூடவில்லை. உலகின் எல்லா பொருட்களையும் அரித்து, சலித்து கொன்று குவிக்கக்கூடிய 'அரிப்பின்' காரணிகளால் இரும்புத்துாணை உரசிக்கூட பார்க்க முடியவில்லை. துருப்பிடிக்காமல் இருக்கும் காரணத்தைக் கண்டறியப் போய், பல பேர் பலவிதமான கதைகளை அள்ளிவிட்டார்கள்.'இந்த இரும்புத்துாண் மனிதனால் நிறுவப்படவே இல்லை. வேற்றுக் கிரகவாசிகள் இந்தியாவுக்கு வந்த போது அவர்கள் தங்களது நினைவாக பூமியில் நிறுவிச் சென்றிருக்கிறார்கள்' என்று கூட கூறினார்கள். இந்திய விஞ்ஞானம், அதுவும் 1600 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி அதி உன்னதமாக இருந்திருக்கிறது பார்த்திருக்கிறீர்களா? 'இப்படியொரு படைப்பை மனிதன் உருவாக்கியிருக்கவே முடியாது' என்பதுதான் உலக விஞ்ஞானிகளின் கருத்து என்றால், உருவாக்கிய இந்தியர்கள் மனிதர்கள் அல்லவே, தெய்வங்கள் தானே!.கண்டறிந்த காரணம் சமீபத்தில் ஒரு வழியாக இதுநாள் வரை இரும்புத்துாண் துருப்பிடிக்காமல் இருப்பதற்கான காரணம் கண்டறியப்பட்டு விட்டது. ஒரே ஒரு காரணம் முக்கியமானது. மிகச் சுத்தமான உலோகம் வெளிப்புறக் காரணிகளால் அரிக்கப்படுவதில்லை. (100 காரட் ) சுத்தமான இரும்பினால் அந்தத் துாண் உருவாக்கப்பட்டிருக்கிறது. சுத்தமான இரும்பினையோ, சுத்தமான வேறு உலோகத்தையோ துரு தொடுவதில்லை. 'அப்படியென்றால் பரிசுத்தமான இரும்பினால் இன்றைக்கும் இன்ஜினியர்கள் அதுபோன்ற துாண்களை நிறுவவேண்டியது தானே' என்றால்,அது அவ்வளவு சுலபமல்ல. அதிசுத்தமான உலோகங்கள் கிடைப்பது கடினம். மேலும் அவை மிக விலை உயர்ந்தவை. அதி சுத்தமான உலோகங்களைக் கொண்டு பொருட்கள் செய்வதும் கடினம். துாய தங்கத்தில் ஆபரணங்கள் செய்ய முடியாதல்லவா.அதனால் துாய இரும்பில் துாண் செய்யும் முயற்சியை நம் பொறியாளர்கள் கைவிட்டு விட்டார்கள். மேலும் பொருட்களோ துாணோ... அவை துருப்பிடிக்காமல் இருக்க பொருட்களின் வெளிப்புறம் சமதளமாக வழவழப்பாக செய்யப்பட்டிருப்பது அவசியம். மேடு பள்ளங்களுடனும், சில வேலைப்பாடுகளுடனும் செய்யப்படும் உலோகப் பொருட்கள் அரிமானத்திற்கு ஆளாகின்றன. மேடு பள்ளங்களில் அல்லது சொரசொரப்பான பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீர்; துருப்பிடிப்பதை துரிதப்படுத்திவிடும். இன்று பொருட்களை வழவழப்பாக செய்வதற்காக பாத்திரங்களின் மேற்புறத்தில் வெள்ளீயம் பூசுகிறார்கள். இவ்வாறு வெள்ளீயம் பூசப்பட்ட பாத்திரங்கள் துருப்பிடிக்காமல் இருக்கும். டில்லி இரும்புத்துாண் துருப்பிடிக்காமல் இருக்க இது போன்ற மேம்போக்கான மேல்பூச்சுகள் எதுவும் பயன்படுத்தவில்லை. அந்த இரும்பு மிக சுத்தமானது. கால வெள்ளத்தையும் தாண்டி நிற்கும் உண்மையைப் போல, பழமை என்பது பெருமை என்பதற்கு இது ஒரு உதாரணம்தான்.இது போன்ற எண்ணற்றவை இருக்கின்றன. பாரம்பரியங்களை போற்றுவோம். புதிய தலைமுறைக்கு எடுத்துக் காட்டுவோம்.
-ஆதலையூர் சூரியகுமார்மாவட்ட ஒருங்கிணைப்பாளர்தொன்மைகள் பாதுகாப்பு மன்றம், மதுரை98654 02603

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement