Advertisement

பாதை மாறும் போதை! மருத்துவமனைகளில் மயக்க மருந்துகள் மாயம்: நள்ளிரவில் நுழைந்து இளைஞர்கள் அட்டகாசம்

கோவையிலுள்ள அரசு, தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் மயக்க மருந்து திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன; நள்ளிரவில் போதை ஆசாமிகளின் துணிகரத்தால் மருத்துவமனை நிர்வாகத்தினரும், பொதுமக்களும் பீதியடைந்துள்ளனர்.கோவையின் வளர்ச்சியில் மருத்துவத் துறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்குள்ள அரசு மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில், அதிநவீன வசதிகளுடன் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இதனால், மருத்துவ சுற்றுலாவில், சென்னைக்கு அடுத்தபடியாக கோவை இடம்பெற்றுள்ளது.
இத்தகைய சிறப்புகளுடன் வளர்ச்சி பெற்று வரும் கோவை மருத்துவமனைகளில், சமீப காலமாக ஓர் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, பிரசவத்துக்கு பிரத்யேக சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில், மயக்க மருந்து திருடுவது அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கடந்த வாரத்தில், கோவை அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்குகளில் உள்ள மருந்துகள், தொடர்ந்து திருடு போவதாக டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களால் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். குறிப்பாக இரவு நேரங்களில் மயக்க மருந்துகள் திருடப்படுவதாக தெரிவித்திருந்தனர்.
இதேபோல் அரசு, தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களை குறிவைத்து போதை ஆசாமிகள் மயக்க மருந்துகளை திருடி வருகின்றனர். இதனால், மருத்துவமனை நிர்வாகத்தினர், நோயாளிகள், பொதுமக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர் கூறியதாவது:பிரசவ நேரத்தில் பெண்களுக்கு, 'போர்ட்வின்' என்ற மயக்க மருந்து, முதுகு பகுதியில் செலுத்தப்படும். போதைக்கு அடிமையான ஆசாமிகள் தற்போது இந்த மருந்துகளை தான் குறிவைத்து திருடி வருகின்றனர்.இதை பயன்படுத்துவதால், ஒரு நாள் முழுவதும் போதை நிலைத்து இருப்பதாக கூறுகின்றனர். தொடர்ந்து இந்த மருந்துகளை பயன்படுத்தினால், மலட்டுத் தன்மையில் இருந்து உயிரிழப்பு ஏற்படும் வரை அபாயங்கள் உள்ளன.
இதுவரை கோவையில் மட்டும், 50க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இந்த மருந்து திருடப்பட்டுள்ளது. சில இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்களில் திருடர்களின் உருவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றை ஆய்வு செய்ததில், 18 முதல், 22 வயதுடைய நபர்கள் இத்திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.இந்த மருந்தை திருடுபவர்களால், பிரசவ வார்டில் இருக்கும் பெண்கள், பச்சிளம் குழந்தைகளுக்கு அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என, அச்சம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
கோவையில், கல்லுாரி மாணவர்களைகுறிவைத்து, கஞ்சா விற்பனையும்செய்யப்பட்டு வருகிறது. விற்பனையில் கல்லுாரி மாணவர்களே ஈடுபட்டும் வருகின்றனர். உதாரணமாக, நேற்று முன்தினம்,அவிநாசி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம், விற்பனைக்காக கஞ்சா கடத்திய தனியார் கல்லுாரி மாணவர்கள் மூன்று பேர் பிடிபட்டனர்.இந்நிலையில், மருந்துக்கு பயன்படுத்தும் போதை மருந்து திருட்டிலும் இளைஞர்கள் ஈடுபட்டிருப்பது பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சமூகத்தையும் சக மனிதர்களையும் பற்றி சிந்தித்து, நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டிய இளைஞர்கள், உயிரைக் குடிக்கும் போதைக்கு அடிமையாகி, போதை பொருள் கடத்தல், விற்பனை மற்றும் திருட்டில் ஈடுபடுவது, நாட்டின் வளர்ச்சியை சிதைத்து, பண்பாட்டு சீரழிவுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதை விரைந்து களைய வேண்டியது அவசர அவசியம்.
புகார் எதுவும் வரவில்லை!
மாநகர சட்டம் - ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் லட்சுமியிடம் கேட்டபோது, ''மருத்துவமனை தரப்புகளில் இருந்து இதுபோன்ற புகார்கள் எதுவும் போலீசாருக்கு வருவதில்லை. இருந்தாலும் மயக்க மருந்து திருட்டு குறித்து விசாரித்து, மேலும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.-நமது நிருபர்-

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    இந்த மாதிரி போதைமருந்து மருத்துவமனைகளில் எந்த இடத்தில இருக்கிறது என்று இந்த கயவர்களுக்கு சொன்ன ஈனப்பிறவிகளை தண்டிக்க வேண்டும்

Advertisement