Advertisement

டீ கடை பெஞ்ச்

ராகு காலத்தில் திறக்கப்பட்ட அரசு அலுவலகம்!''சின்ன மீனை போட்டு, பெரிய மீனை பிடிக்க பார்க்குறாருங்க...'' என, பெஞ்ச் அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.

''யாரு வே அது...'' எனக் கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.

''காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் தேர்தல், சமீபத்துல நடந்துச்சு... இதுல, அ.தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., வாலாஜாபாத் கணேசனை, சங்கத் தலைவரா, போட்டியின்றி தேர்வு செஞ்சிருக்காங்க...

''கட்சி நிர்வாகிகள் சிலர், அவர்கிட்ட போய், 'இந்த சின்னப் பதவி எல்லாம், உங்களுக்கு தேவையா அண்ணே'ன்னு கேட்டிருக்காங்க... அதுக்கு, 'மாநில அளவுல நடக்கப் போற, கூட்டுறவு சங்க தலைவர் பதவியை பிடிக்கணும்னா, இந்த சின்னப் பதவி அவசியம்'ன்னு விளக்கம் சொல்லியிருக்காருங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''தாசில்தாருக்கு எதிரா போர்க்கொடி துாக்கியிருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''எந்த ஊர்ல ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''தஞ்சாவூர் தாசில்தாரா இருக்குறவர், பிரபாகரன்... ரெண்டு வருஷத்துக்கும் மேலா, இந்தப் பதவியில இருக்காரு பா... சாதாரணமா, வருஷத்துக்கு ஒரு முறை, தாசில்தார்களை இடமாறுதல் செஞ்சிடுவாங்க...

''ஆனா, இவர், ஆளுங்கட்சியினர், கலெக்டர் தயவுல, ஒரே இடத்துல நீடிக்குறார்னு, வருவாய் துறையினரே குற்றம் சாட்டுறாங்க பா... இதனால, மத்த அதிகாரிகள் பதவி உயர்வு, இடமாறுதல் பாதிக்கப்படுது...

''இதைக் கண்டிச்சு, கலெக்டர் நடத்துற ஆய்வுக் கூட்டங்களை, வருவாய் துறை ஊழியர்கள் புறக்கணிக்குறாங்க... அதே மாதிரி, தாசில்தார்கிட்ட நிறைய கோப்புகள் தேங்கி கிடக்குறதா, வி.ஏ.ஓ., சங்கத்தினரும், கலெக்டரிடம் புகார் தெரிவிச்சிருக்காங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.

''ராகு காலத்துல, அலுவலகத்தை திறந்துட்டதால பீதியில இருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில, புதிய வருவாய் கோட்டத்தை, முதல்வர் பழனிசாமி, 13ம் தேதி, வெள்ளிக்கிழமை, காலை, 10:00 மணிக்கு சென்னையில இருந்தபடி, வீடியோ கான்பரன்சுல தொடங்கி வச்சார் ஓய்...

''புது கட்டடம் கட்டற வரை, ஆரணி, பி.டி.ஓ., அலுவலகத்துல, ஆர்.டி.ஓ., அலுவலகம் இயங்கும்னு அறிவிச்சிருந்தா... இந்த தற்காலிக அலுவலகத்தை, ஆரணி, அ.தி.மு.க., - எம்.பி., ஏழுமலை திறந்து வைக்க இருந்தார் ஓய்...

''வெள்ளிக் கிழமை, 10:30 - 12:00 ராகு காலம்கறதால, அதுக்கு முன்னாடியே அலுவலகத்தை திறக்கணும்னு, கலெக்டர் கந்தசாமி, 9:30 மணிக்கே வந்து காத்துட்டு இருந்தார் ஓய்...

''ஆனா, எம்.பி.,யோ சாவகாசமா, 11:00 மணிக்கு தான் வந்தார்... வேற வழியில்லாம, ராகு காலத்துலயே அலுவலகத்தை திறந்தாங்க... இதனால, ஜோதிட நம்பிக்கை உள்ள, ஆர்.டி.ஓ., ஊழியர்கள் எல்லாம் பீதியில இருக்கா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.

பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் மவுனமானது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Devanand Louis - Bangalore,இந்தியா

    இதேபோல் நடவடிக்கை வேண்டும் மதுரை திருமங்கலம் \வட்டாச்சியர் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்தில் ,இதேபோல் நடவடிக்கை வேண்டும் ,லஞ்சம் ஒழிப்பு அதிகாரிகள் அவர்களே ஊழல் செய்யும் இதேபோல் ரைடு வேண்டும் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அவர்களது வீடுகளிலிலும், மதுரை திருமங்கலத்திலும் உள்ள வட்டாச்சியர் அலுவலகம் & சார்பதிவாளர் அலுவலகம் உள்ள ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதிலும் , சகிடுமேனிக்க நில ஆக்ரமிப்புகளில் ஈடுபடுவதும் , பட்ட மாறுதல்களிலும் பெரும் பணம் வாங்கிக்கொண்டும் பல தில்லு முள்ளு வேலைகளையும் செய்துவருகின்றனர் ,இவர்கள் மீதும் விஜிலென்ஸ் செல் நடவடிக்கை தேவை என்பது அந்த பகுதி மக்களின் வேண்டுகோள் . மாண்புமிகு தமிழக கவர்நேர் அவர்கள் மதுரை திருமங்கலம்சென்று ஆய்வு செய்யவேண்டுமென்பது அங்குள்ள மக்களின் தலையாயவேண்டுகோள். தினமலரின் உதவிகளும் தேவை இந்த விஷயத்தில்

  • Giridharan S - Kancheepuram,இந்தியா

    நல்ல நேரத்திலே திறந்தா லஞ்சம், வாங்காம எல்லோரும் வேலை செய்யப்போறாங்களா என்ன. ராகுகாலத்திலே திறந்ததால் மக்கள் வேண்டுமானால் பயப்படுவாங்க. என்ன ஒரு காரியமும் நடக்காம லஞ்சம் தலைவிரித்து ஆடிச்சுன்னா.. மாவட்ட ஆட்சியர் காலையிலேயே வந்துட்டாரு இல்லை. ஒன்னும் பயப்படவேண்டாம்.. அரசு அலுவலர்கள் மக்களுக்காக பணியாற்றினார்கள் என்றால் எதற்கும் பயப்படவேண்டாம்.

Advertisement