Advertisement

கட்சிகளிடம் சிக்கி தவிக்கும் காவிரி!

'கெடுப்பதுாம் கெட்டார்க்கு சார்வாய் மற்றாங்கே கொடுப்பதுாம் எல்லாம் மழை' என, மழையின் மகிமையை, திருவள்ளுவர், ஏழே சொற்களில், அழகாக விளக்கி இருக்கிறார். தற்போதைய காவிரி பிரச்னைக்கு, இந்த திருக்குறள் அழகாக பொருந்துகிறது. அதே நேரத்தில், இந்த குறளில், 'மழை' என வரும் இடத்தில்,காங்கிரஸ் மற்றும் தி.மு.க., என்ற வார்த்தைகளை பொருத்தினால், இவ்விரு கட்சிகளின் சூழ்ச்சியால் தான், காவிரி பிரச்னை இந்த அளவுக்கு சிக்கலாகி போயுள்ளது என்பதும் விளங்கும்.ஒரு வித்தியாசம்... மழைக்கு, அதிகமாகப் பொழிந்து, கெடுக்கவும் தெரியும்; அளவாகப் பெய்து, கொடுக்கவும் தெரியும். ஆனால், இவ்விரு கட்சிகளுக்கும், கெடுக்க மாத்திரமே தெரியும்; இந்த கட்சிகளால் தான், காவிரி பிரச்னை, இன்னும் இழுபறியாக உள்ளதும் விளங்கும்.உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில், நதிகள் உற்பத்தியாகி, ஓடிக் கொண்டு தான் இருக்கின்றன. அவற்றில் சில, நாடு விட்டு நாடு பாய்கின்றன. பாகிஸ்தானிலிருந்து நம் நாட்டில் பாயும், சிந்து நதி நீரைக் கூட, பிரச்னையின்றி பகிர்ந்து கொள்ள முடிகிறது.ஆனால், ஒரே நாட்டுக்குள் ஓடும் காவிரி நதிநீரை பகிர்ந்து கொள்வதில், தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையே, காலம், காலமாக பிரச்னை நீடிக்கிறது.எந்த நதியாக இருந்தாலும், அது உற்பத்தியாகும் இடத்தை விட, கடைசியாக கடலில் சென்று கலக்கும் இடத்திற்கு அதிக உரிமை என்பது தான், நீர் மேலாண்மை கூறும் விதி. அப்படி பார்க்கும் போது, காவிரி நதி உற்பத்தியாகும் கர்நாடகாவை விட, நதி கடலில் கடக்கும் இடத்திலுள்ள தமிழகத்திற்கு தான் அதிக உரிமை. அந்த உரிமையை பாதுகாக்கவும், நிலை நிறுத்தவும், இங்கு ஆட்சியிலிருந்த அரசியல் கட்சியான, தி.மு.க., மற்றும் காங்கிரஸ் தவறியதன் விளைவே, தமிழகம் இன்று சந்தித்து கொண்டிருக்கும் பிரச்னை.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக, மைசூர் சமஸ்தானத்திற்கும், மதராஸ் ராஜதானிக்கும், 1924ம் ஆண்டில், 50 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது; அதாவது, 1974 வரை.ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டிய, 1974ல், தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது, தி.மு.க., - முதல்வராக இருந்தது,கருணாநிதி.விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்ததால், அவர் தலை மீது தொங்கிக் கொண்டிருந்த, 'சர்க்காரியா கமிஷன்' என்ற விசாரணை வளையத்திலிருந்து வெளியே வர, அவர் கொடுத்த விலை தான், காவிரி.காங்கிரசின் துாண்டுதலின் படி, காவிரி நீரை கர்நாடகா தேக்கி வைத்துக் கொள்ள, அணைகளை கட்டிக்கொள்ள, கருணாநிதி ஒப்புக் கொண்டார்.ஒரு அணை கட்ட அவர் ஒப்புக்கொண்டதை வைத்து, கர்நாடகாவில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு, கிருஷ்ணராஜ சாஹர், கபினி, ஹேமாவதி, சாரங்கி என, நான்கு அணைகளைக் கட்டி, மொத்த நீரையும் எடுத்துக் கொண்டது.அணைகளில் தேக்கி வைக்க முடியாமல், வழியும் நீரை மட்டும், போனால் போகிறதென, தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு திறந்து விட்டது.கர்நாடகா, ஒவ்வொரு அணை கட்டும் போதும், அந்த மாநிலத்தின் சாகுபடி பரப்பு பெருகிக் கொண்டே வர, இங்கே, தமிழகத்தில், தஞ்சை உட்பட, காவிரி டெல்டா மாவட்டப் பகுதிகளில், பாசனப் பரப்பு சுருங்கிக் கொண்டே வருகிறது.மூன்று போகம் சாகுபடி செய்த காவிரி டெல்டா விவசாயிகள், சம்பா மற்றும் குறுவை சாகுபடிக்காக, கர்நாடகா எப்போது தண்ணீரை திறந்து விடும் என, மேட்டூரில் தவம் இருக்க துவங்கினர்.இந்நிலைக்கு காரணம், தமிழகத்தில், தி.மு.க., மற்றும் கர்நாடகாவில், ஆட்சியிலிருந்த, காங்கிரஸ் கட்சிகள் தான்.ஆறுகளில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தால், மணலை அள்ளி, வியாபாரம் செய்ய முடியாது என்பதால், ஆறுகளை வற்ற விட்டு, லாரி லாரியாக ஆற்றுப் படுகைகளிலிருந்து மணலை அள்ளி, விற்று, கோடிகளை குவிக்க துவங்கின, தமிழகத்தின், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள்.தமிழக ஆறுகளைச் சுரண்டி, மணலெடுத்து, கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும், ஆந்திராவுக்கும் விற்று விட்டு, அந்த மூன்று மாநிலங்களிடம், தண்ணீர் பிச்சை கேட்டு, மன்றாடிக் கொண்டிருக்கும் நிலைமை உருவானது, இந்த கட்சிகளின் ஆட்சியாளர்களால் தானே!ஆற்று மணலை சுரண்டி எடுத்ததால், ஆறுகளில், நிலத்தடி நீர்மட்டம் சுத்தமாகக் குறைந்து, முற்றிலுமாக வற்றிப் போனது. இந்த உண்மையை தெரியாத விவசாயிகளின் அமைப்புகள், இவ்விரு கட்சிகளின் துரோகங்களை கண்டிக்காமல், அவர்களுடன் இணைந்து போராடுகின்றன.நீதிமன்ற தீர்ப்புகளை காங்கிரஸ் மதிக்காத போக்கு, அலாகபாத் கோர்ட்டில், இந்திராவுக்கு எதிராக, 'லோக் நாயக்' ராஜ் நாராயணன் தொடர்ந்த தேர்தல் வழக்கின் தீர்ப்பு, 1975ல் வெளியான போது தான் துவங்கியது. 'தேர்தலில் இந்திரா வெற்றி பெற்றது செல்லாது; அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் அவர் போட்டியிடக்கூடாது' என, அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி தீர்ப்பளித்த அடுத்த வினாடியே, அந்த கோர்ட் வளாகத்திலேயே, இந்திராவின் இரண்டாவது மகன், சஞ்சய், வன்முறையை துவக்கினார்.அன்றிரவே நாட்டில், அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டது. 'நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தோம்' என, பீற்றிக் கொள்ளும் காங்கிரஸ், சட்டத்தையும், நீதிமன்ற தீர்ப்புகளையும் மதிக்கும் மாண்பு இப்படித்தான் இருந்தது.காங்கிரஸ் தலைமையே நீதிமன்ற தீர்ப்புகளை உதாசீனப்படுத்திய நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, நீதிமன்ற தீர்ப்பு களை ஏற்குமா என்ன? மகன் அழகிரிக்கு மந்திரி பதவி வேண்டுமென்பதற்காக, உடலுக்கு முடியாத நிலையிலும், விமானம் ஏறி, டில்லி சென்று, காத்திருந்து, அப்போதைய காங்கிரஸ் தலைவர், சோனியாவை சந்தித்து, மந்திரி பதவியை, அழகிரிக்கு பெற்று வந்த கருணாநிதி, தன் ஆட்சி காலத்தில், சோனியாவை சந்தித்து, காவிரி பிரச்னை குறித்து, ஒரு முறை கூட பேசியதில்லை.மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்ற உத்தரவை, மத்திய அரசு, அரசிதழில் வெளியிடாமல், காலம் தாழ்த்திக் கொண்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில், ஜெயலலிதா வழக்கு தொடுத்து, மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்ற உத்தரவை, அரசிதழில் வெளியிட வைத்தார். அதன் பின், ஜெயலலிதாவுக்கு, 'காவிரித்தாய்' பட்டம் கிடைத்தது; தமிழகத்திற்கு, காவிரி நீர் கிடைத்ததா.. இல்லையே! அதன் பிறகும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை, காங்கிரஸ் ஆளும், கர்நாடக அரசு மதிக்காததால் தான், காவிரி இன்னும் பிரச்னையாகவே ஓடிக் கொண்டிருக்கிறது, கர்நாடகாவில். அதனால் தான், தி.மு.க.,வுடன், 'லெட்டர் பேடு' கட்சிகள், அமைப்புகள் இணைந்து, தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய வண்ணம் உள்ளன. காவிரி நீரை, தமிழகத்திற்கு பெற்றுத் தர வேண்டும் என்ற, உயரிய எண்ணமெல்லாம், இந்த கட்சிகளுக்கு கிடையாது. அவர்களுக்கு இருப்பது, இரண்டே குறிக்கோள் தான்... ஒன்று, பிரதமர் மோடியை எதிர்க்க வேண்டும்; அதற்கான வாய்ப்பாக இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இரண்டாவது, தமிழக இளைஞர்களின் மூளையை சலவை செய்து, அவர்களுக்கு உண்மை பிரச்னை தெரிய விடாமல் செய்து, தங்களுக்கு, 'பப்ளிசிட்டி'யும், பணமும் சேர்க்க வேண்டும் என்பது தான்.காவிரி நதிநீர் பிரச்னையில் தமிழக விவசாயிகளுக்கும், மக்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டுமென்ற எண்ணம், தி.மு.க.,வோடு, 'கை' கோர்த்து முழங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு இருக்கிறதா... இல்லையே!அவ்வாறு இருக்குமானால், தி.மு.க.,வின் கூட்டணிக் கட்சியான, காங்கிரசின் தலைமையை அணுகி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடச் சொல்லி, கர்நாடக, காங்கிரஸ் முதல்வர், சித்தராமையாவுக்கு ஆலோசனை வழங்கச் சொல்லலாமே... ஏன் சொல்வதில்லை... என்ன தயக்கம்?சோனியா அல்லது ராகுல் சொன்னால், 'முடியாது' என, கர்நாடக முதல்வர், சித்தராமையா சொல்லி விடுவாரா... இதில், தமிழக காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசர் நிலைமை தான் பரிதாபம். மனதுக்குள், அ.தி.மு.க.,காரராகவும், மாநிலத்தில் அரசியல் நடத்த, தி.மு.க.,வோடு சேர்ந்து கொடி பிடித்தும், கோஷமிட்டு கொண்டிருக்கிறார்.தி.மு.க.,வாவது, போராட்டம், கறுப்புக்கொடி, கறுப்பு உடை, கண்டன ஆர்ப்பாட்டம் என, சிரிப்பு காட்டிக் கொண்டிருக்கிறது.ஆனால், அதன் கூட்டணி கட்சியான காங்கிரசின் தலைமையான, சோனியா அல்லது ராகுல், காவிரி நதி நீர் பிரச்னை குறித்து, இது வரை, ஒரு வார்த்தை- கூட பேசாமல், மவுனியாக, நடிக்கின்றனர்.எப்படி பேசுவர்...என்ன கருத்து கூறுவர்... பிரச்னைக்கு மூல காரணமே, அவர்கள் தலைமை வகிக்கும் காங்கிரஸ் தானே!கறுப்பில் பேன்ட், சட்டை அணிந்து, 'காவிரி உரிமை மீட்பு போராட்டம்' என்ற பெயரில், ஊர் ஊராக நடைபயணம் மேற்கொண்ட, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின், விமானம் ஏறி, டில்லிக்கு சென்று, சோனியா, ராகுலை சந்தித்து, காவிரி பிரச்னையில், கர்நாடக முதல்வர், சித்தராமையாவை, கோர்ட் உத்தரவை மதிக்க ஆலோசனை கூறும் படி, கோரிக்கை விடுக்கலாம் அல்லவா... விடுத்தாரா?'அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது' என்ற பழமொழிக்கு ஏற்ப அவர் செயல்படுகிறார்.ஆனால், 'தும்பை விட்டு வாலை பிடிக்கிற கதை'யாக, தி.மு.க.,வையும், காங்கிரசையும் விட்டு, பிரதமர் மோடியையும், பா.ஜ.,வையும் குறை கூறிக் கொண்டிருக்கின்றன, தமிழக குட்டிக்கட்சிகள், பெயர் தெரியாத அமைப்புகள்.பிரச்னை துவங்கிய, 1974ம் ஆண்டில், பாரதிய ஜனதா என்றொரு கட்சியே நாட்டில் கிடையாது என்பதை, அவர்கள் நினைவில் கொள்ளவில்லை. காவிரி விவகாரத்தில், குற்றவாளிகளாக இருக்கும் அரசியல் கட்சிகளில், எந்த கட்சி அதிக குற்றம் செய்தது என்பது, பொதுமக்களுக்கு நன்கு தெரியும்.யாரை குற்றம் சொல்லி, என்ன பயன்... தமிழகத்திலேயே உற்பத்தியாகி, தமிழகத்திலேயே முடியும், திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் பாயும், தாமிரபரணி நதியை என்ன செய்து கொண்டிருக்கிறோம்... குளிர்பான கம்பெனிக்கு அல்லவா, குத்தகைக்கு விட்டிருக்கிறோம்! என்ன உத்தரவிட்டாலும், அந்த நீதிமன்ற உத்தரவு களை மதிக்காமல், அலட்சியப்படுத்தும் போக்கு, தமிழக அரசியல்வாதிகளிடமும், கர்நாடக ஆட்சியாளர்களிடமும் நீடிக்கும் வரை, காவிரி மேலாண்மை வாரியமோ, 'ஸ்கீம்' எனப்படும், செயல்திட்டமோ, எது அமைந்தாலும், காவிரியிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட, தமிழகத்திற்கு வராது; வர விட மாட்டார்கள். காரணம், அரசியல்!ஆரம்ப வரிகளை மீண்டும் ஒரு முறை கொஞ்சம் மாற்றி, வாசித்துப் பாருங்கள். 'கெடுப்பதுாம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே கொடுப்பதுாம் எல்லாம் இந்த அரசியல் கட்சிகள் தான்!' என்பது புரியும்.
எஸ்.ராமசுப்ரமணியன்எழுத்தாளர்
இ:மெயில்:essorresgmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா

    சரியான நேரத்தில் சரியான செய்திகள் சொல்லியுள்ளீர்கள் ஆனால் தமிழனுக்கு மண்டைல ஏறாது ஏறியிருந்தால் ஏப்பவோ தன்னிறைவு அடைந்திருக்கும்

  • Ganapathy - Bangalore,இந்தியா

    ஐயா நீங்கள் கூறுவது முற்றிலும் சரி- அரசியல் வாதிகளால் தீர்க்க முடியாத பிரச்னையை - நீதிமன்றம் தீர்த்தபிறகும் -பின் எந்த கட்சி இப்போது அரசியல் செய்கிறது -" பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும்"

  • A.Gomathinayagam - chennai,இந்தியா

    தமிழநாட்டில் இந்த இரண்டு கட்சியை தான் ஐம்பது ஆண்டுகளாக மாற்றி மாற்றி ஆட்சியில் அமர்த்தி உள்ளனர்.. ஆகவே மூவரின் பங்கும் இருக்கிறது . இன்றை, மத்திய அரசின் கர்நாடக தேர்தலை மனதில் வைத்து செய்யும் அரசியல் தான் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement