Advertisement

துயரத்தின் சிவந்த நிறம் இன்று ஜாலியன் வாலாபாக் தினம்

வரலாறு என்பது முன் நிகழ்ந்த காரியங்களின் தொகுப்பெனக் குறிக்கப்படுகிறது. நதியைப்போல நம்மைக் கடந்து செல்லும் வரலாறு, கடந்த காலத்தின் களிப்பினையும், துயரினையும், படுகையினில் வண்டலாகப் படிய வைத்துக் கடந்து செல்கிறது. இந்திய வரலாற்றின் பக்கங்களில், சுதந்திரத்தின் மீதான வேட்கையும், அந்நியரின் அடக்கு முறையும் செங்குருதி கொண்டு எழுதப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாட்டின் சுதந்திர வரலாறென்பது அதற்காகப்பாடுபட்டு உயிர்நீத்த தியாகிகளின் ஆன்மாக்களால் ஆனதாக இருக்கிறது.ஜாலியன் வாலாபாக் தினம்வீரம் செறிந்த நம் மண்ணின் உரிமையை, நாம் மீட்டெடுத்த சுதந்திர வரலாற்றில் துயர் செறிந்த இன்றைய நாளிற்கும் பெரு முக்கியத்துவம் உண்டு. பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் பொற் கோயிலுக்கு அருகில் ஜாலியன் வாலாபாக் திடலில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். அன்று சீக்கியர்களின் புனித நாள் பைசாகி தினம் என்பதால் சீக்கிய பக்தர்கள் திரளாகக் காணப்பட்டிருந்தனர், அத்திடலில் மக்கள் கூட்டம், குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அமைதியாகக் குழுமியிருந்தனர்.
உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் புரட்சி அல்லது போராட்டம் செய்யும் எவரையும் வழக்கு எதுவும் இல்லாமல் 2 வருடம் காவலில் வைக்கும் ரவுலட் சட்டத்தை அதன் அடக்குமுறையை எதிர்த்து ஏப்ரல் 13, 1919ல் மக்கள் திரண்டுஇருந்தனர். ரவுலட் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் படிக்கவும், அரசியலில் பங்கு பெறவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த அடக்குமுறை சட்டத்திற்கு நாடு முழுவதும் வலுத்த எதிர்ப்பு காணப்பட்டது.
கொடுங்கோல்தனத்தின் முகம்காந்தி இச்சட்டத்திற்கு எதிராக உண்ணாவிரத்தில் ஈடுபட்டார், கறுப்புச் சட்டம் என்று அவரால் குறிப்பிடப்பட்ட ரவுலட் சட்டத் திற்கான எதிர்ப்பை அமைதியான முறையில் வெளிப்படுத்தத் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை 1919 ஏப்ரல் 13ல் ராணுவ ஜெனரல் டையர் என்பவன் எந்தவித முன்னறிவிப்புமின்றி மக்களை நோக்கி சுடும்படி தனது படையினருக்கு உத்தரவிட்டான், ஒரே நேரத்தில் 90 துப்பாக்கிகள் துரிதமாய் இயங்கி குண்டுகளைப் பொழிந்தன.
நான்கு புறமும் உயர்ந்த மதில்களால் சூழப்பட்டதும்,சென்று வர ஒரே குறுகிய வழி கொண்டதுமான அந்த மைதானம் கொடுங்கோலனின் கரங்களில் சிக்கியது. துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க பெண்களும், குழந்தைகளும் முட்டி மோதியபடி ஓடவேண்டியிருந்தது. 10 நிமிடங்கள் தொடர்ந்த இத்துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 1,650 தடவைகள் அல்லது ஒரு சிப்பாய்க்கு 33 தடவைகளாகச்சுட்டனர்.
குறுகிய வழியே இருந்ததால், மக்கள் மூச்சடைத்தவாறு சுவர்களில் ஏறிக் குதிக்க முயற்சித்தனர். கிணற்றில் விழுந்தாவது தப்ப முயற்சித்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். கிணற்றில் விழுந்து நுாற்றுக்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். அதிகாரப்பூர்வமாக 379 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், வேறு பல நிறுவனங்கள்செய்த ஆய்வில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. காந்தியால் அமைக்கப்பட்ட இந்தியக் குழுவின் கணக்கெடுப்பின்படி ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருந்தனர் என அறிகிறோம்.
“என்னிடம் மட்டும் இன்னும் கூடுதலாகப் படையாட்கள் இருந்திருந்தால் அடிபட்டோர் மற்றும் இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருந்திருக்கும், நான் அங்கு போனது வெறுமே கூட்டத்தைக் கலைக்க மாத்திரமில்லை, மக்களின் நெஞ்சிலே ஒரு குலை நடுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் போனேன், அவசியத்துக்கு மேல் கடுமை காட்டி விட்டேனோ என்ற கேள்விக்கே இடமில்லை” என்னும் வார்த்தைகள் ஜெனரல் டையர் கூறியவை.
இந்தச்சம்பவம் இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டங்கள் இந்நிகழ்வுக்குப் பின் மேலும் அதிகரித்தது. பிரிட்டிஷ் அரசை எதிர்க்காதவர்களும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கொடூர முகத்தை உணரத் தொடங்கினர்.
அறப்போரும்... விடுதலை, உணர்வும்
இதன் தொடர்ச்சியாகவே 1920ல் ஒத்துழையாமை இயக்கம் துவங்கப்பட்டது. துயர் நிறைந்த இச்சம்பவம், மக்களின் உரிமையை கேலிக்குட்படுத்தியது. பிரிட்டிஷ் காலனியாதிக்கம் கோரமான தருணத்தை, இந்திய விடுதலை அறப்போரில் எழுதியது. வரலாற்றின் நிலைக்கதவுகளில் அப்பாவி மக்கள் மீதான உயிர் கொல்லும் இத்தகைய ஒடுக்கு முறைகள் எழுதப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன, அவை கொன்று அழிக்கப்படும் மக்களின் மனதில் தீராத வடுக்களை ஏற்படுத்திச் செல்கின்றன.
தங்களது அதிகாரத்தைத் தங்கள் கீழுள்ளவர்கள் மீது எப்படி வேண்டுமானாலும் செயல்படுத்தலாம் என்று எண்ணிய ஜெனரல் டயரின் கொடும் அடக்குமுறையே அமிர்தசரஸில் எண்ணற்ற உயிர்களைக் கொன்று வீழ்த்தியது.ஒவ்வொரு நாட்டிற்கும் சுதந்திர வரலாறு என்பது உண்டு, ஆனால் பாரதநாட்டின் வரலாறென்பது அகிம்சையில் விளைந்தது, தங்களின் செங்குருதியினைக் கொட்டி வளர்த்த விடுதலையின் பயிர் அது.
உலகிற்கெல்லாம் அகிம்சையின் அரும் யாகத்தை நடத்திக் காட்டிய முன்னோடி தேசம் நம் பாரதம்.இப்படுகொலைக்கு முதன்மைக் காரணமாக இருந்த பஞ்சாப் ஆளுநர் மைக்கேல் ஓ டயரைப் பல ஆண்டுகள் கழித்து இங்கிலாந்து சென்று கேக்ஸ்டன் மன்றத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்ற வந்த டயரை நேருக்கு நேர் சுட்டுக்கொன்றார் உத்தம் சிங்.

இங்கு துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவாகளுக்குத் தண்ணீர் கொடுத்து இளைப்பாற்றியஇளைஞன் உத்தம் சிங்கின் மனதில் கனன்று கொண்டிருந்த சுதந்திர நெருப்பு கொல்லப்பட்ட தன் அப்பாவி சகோதர, சகோதரிகளின் குருதியோடிய நிலம், உத்தம் சிங் மனதை ஆட் கொண்டது. பாரதத்தின் அடிமைத்தனையை எண்ணி வெகுண்டெழுந்த இளைஞன்உத்தம் சிங்கின் மனதில் விடுதலை உணர்வு செஞ்சுடரென எரிந்ததாலேயே நாடு கடந்து காத்திருந்து 21 ஆண்டுகள் கழித்தும்அவர்களுடைய சொந்தமண்ணிலேயே மைக்கேல் ஓ டயரைப் பழி தீர்த்தார் உத்தம் சிங்.
மன்னிப்பும் தியாகமும்
“என் தாய் நாட்டுக்காக சாவதை விட வேறென்ன பெருமை எனக்குக் கிட்ட முடியும்” என முழங்கிய உத்தம் சிங், அடக்கு முறைக்கு எதிரான தனது போராட்டத்தைத் தன் வாழ்வாக்கிக்கொண்டார்.ஜாலியன் வாலாபாக்கில் உயிர் நீத்த மக்களை நினைவு கூர்ந்து நினை விடம் அமைக்கப்பட்டுள்ளது அதில் உயிர் இழந்தோர் 379 எனவும் காயம்பட்டோர் 1337 பேர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2013ல் இந்தியா வந்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூட்டிற்கு வருத்தம் தெரிவித்தார். வருத்தம் தொரிவித்த முதல் பிரிட்டன் பிரதமரான கேமரூன், “ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது மிகவும் வேதனைக்குரியது, இங்கு நடைபெற்ற சம்பவத்தை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம், பிரிட்டிஷ் வரலாற்றில் இது மிகவும் வெட்கக்கேடான செயல்” எனக்குறிப்பிட்டார்.
சுதந்திரத்தின் ஆழமான உணர்வை அகத்தில் கொண்டு, உயிர் நீத்த தியாகச் செம்மல்களை இந்நாளில் நினைவு கூர்வதும் தியாகப் பெரியோர்களின் பாதச் சுவடுகளைப் பின்பற்றி ஓர் உன்னத சமுதாயம் படைக்க அறவழியில் நிற்பதும் நல்வழி போதித்த பெரியோர் வாக்கின்படி வாழ்வதுமே அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியாகும்.
அ. ரோஸ்லின், ஆசிரியைஅரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளி, வாடிப்பட்டிkaviroselina997gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

    இந்த மண் தியாகத்தின் உரை விடம். வீரன் யுத்தம் சிங்க்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement