Advertisement

உன்னத பணியில் உயர்நீதிமன்ற மதுரை கிளை

நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தென் மாவட்ட மக்கள் ஒருங்கிணைந்து போராடியதன் எதிரொலியாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை மதுரையில் அமைந்தது.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் ஏப்., 13ல் அடிக்கல் நாட்டப்பட்டது. கீழமை நீதிமன்றங்களில் பிறப்பிக்கப்படும் தீர்ப்புகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சென்னை செல்ல வேண்டியிருந்ததால் ஏற்படும் கால, பொருளாதார விரயத்தை தவிர்க்க மதுரையில் உயர்நீதிமன்ற கிளையை அமைக்க வேண்டும் என பொது மக்கள் குரல் எழுப்பியதையடுத்து மத்திய, மாநில அரசுகள் ஒப்பு கொண்டன.

இதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஜஸ்வந்த் சிங் கமிட்டி மதுரையில் பல்வேறு இடங்களை ஆய்வு செய்து பின் உலகனேரியில் கிளை அமைக்க இடத்தை தேர்வு செய்தது. 2000 ஏப்., 13ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டது. 2004 ஜூலை 24ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லகோதியால் திறக்கப்பட்டது. மதுரை உட்பட 13 மாவட்டங்கள் இதன் கட்டுப்பாட்டில் உள்ளன.

'கிரீன் பெஞ்ச்' ஆப் மதுரை107 ஏக்கரில் அமைந்த கிளையில் 24 நீதிமன்ற அறைகள், அலுவலகங்கள், நீதிபதிகள் குடியிருப்புகள், வழக்கறிஞர்கள் அலுவலகங்கள் உள்ளன. 76 க்கும் மேற்பட்ட மர வகைகள் உள்ளதுடன், 28 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் 15க்கும் மேற்பட்ட பூச்சியினங்கள் இக்கிளையில் வசிப்பதாக 'கிரீன் பெஞ்ச்' ஆப் மதுரை என்ற தன் நுாலில் குறிப்பிட்டுள்ளனர் வழக்கறிஞர்கள் லஜபதிராய், பிரபுதுரை.

கல்வியறிவும், செல்வமும் குறைவாக கொண்டோர் வாழும் இந்நாட்டில் பொதுநலனில் அக்கறை கொண்டவர் யாரும் பொது நலன் சார்ந்த வழக்குகளை இங்கு தொடரலாம். இவ்வழக்குகளை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும். தாமிரபரணியில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தியும், யானைமலையை இயற்கை வளக் கொள்ளையர்களிடமிருந்து காத்தும், தென்காசி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் கண் பார்வையிழந்த ஏழு பேருக்கு தலா மூன்று லட்சம் இழப்பீடு வழங்கியும் பொது நல வழக்குகளில் உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டது.

கருவேல மரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அரசுபள்ளிகளில் கழிப்பறைகளை ஏற்படுத்தவும், கீழடியில் தொல்லியல் துறை ஆய்வுகளை தொடரவும் உத்தரவிட்ட உயர்நீதிமன்ற கிளை, கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல், சிறைவாசிகளின் உரிமைகள், பெண்கள், குழந்தைகள், பட்டியல் இனத்தவர் பிரச்னைகளை தீர்க்க பொது நல வழக்குகளில் இக்கிளை பல குறிப்பிடத்தக்க உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஒரு எம்.எல்.ஏ., ஒரு எம்.பி., செய்யும் பணிகளை கூட பொது நல வழக்காடுபவரால் செய்ய முடியும்.

அரசு அதிகாரிகளோ அல்லது அரசின் பணியை செய்யும் அமைப்புகளோ கடமை தவறும் போது, ரிட் எனப்படும் நீதிப்பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை காப்பது அரசின் கடமை. அந்த கடமையிலிருந்து அதிகாரிகள் தவறிய போது மாவட்டம் தோறும் உயர்அதிகாரிகள் அடங்கிய குழுக்களை அமைத்து மணமக்களை பாதுகாக்க வேண்டும் என இக்கிளை உத்தரவிட்டது.

44 ஆயிரத்து 575 ரிட் மனுக்கள்:மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு நீதிப்பேராணைகளை விசாரிக்க இரு நீதிபதிகள் கொண்ட தனி அமர்வு உள்ளது. மற்ற நீதிப்பேராணைகளை விசாரிக்க தனித்தனி நீதிபதிகள் உள்ளனர். வழக்கு பதிவு ஏற்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு அதற்குரிய பதிவு எண் வழங்கப்பட்டு, மறுநாளே விசாரணைக்கு பட்டியலிடப்படும். கடந்த மார்ச் மாதம் மட்டும் இங்கு 1918 ரிட் மனுக்கள் தாக்கலாகின. ஒரே மாதத்தில் 1079 ரிட் மனுக்களில் தீர்ப்பு வழங்கப்பட்டது. உயர்நீதிமன்றம் கிளையில் மட்டும் 44 ஆயிரத்து 575 ரிட் மனுக்கள் விசாரணையில் உள்ளன.இதை விசாரிக்க தற்போது பத்து நீதிபதிகள் பணிபுரிகின்றனர்.

குற்றவியல் வழக்குகள்:குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின்படி 482வது பிரிவின் கீழ் உயர்நீதிமன்றத்திற்குரிய உள்ளார்ந்த அதிகாரத்தின்படி நடவடிக்கை வேண்டி ஒவ்வொரு நாளும் அதிகமான வழக்குகள் தாக்கலாகின்றன. பாதிக்கப்பட்டவர், காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாவிட்டால் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டுவது, வழக்கு பதிவு செய்ய மறுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோருவது, புலன் விசாரணை அதிகாரி நியாயமாக செயல்படாத போது விசாரணையை வேறு அதிகாரிகளுக்கு மாற்ற வேண்டுவது, நீதிமன்ற விசாரணையை விரைவாக முடித்து உத்தரவு பிறப்பிக்க கோருவது என உயர்நீதிமன்ற கிளையை அணுகலாம்.

குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் முன்ஜாமின், ஜாமின் வேண்டியும், ஜாமினில் செல்பவர் நிபந்தனைகளை மீறினால் அதை ரத்து செய்யவும் மனு செய்ய முடியும். குறைவான தண்டனை அல்லது விடுதலை செய்யப்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அதை எதிர்த்து மனு செய்யலாம். கடந்த மார்ச் மாதம் மட்டும் உயர்நீதிமன்ற கிளையில் 1759 புதிய குற்ற வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. 1613 குற்ற வழக்குகளில் உத்தரவிடப்பட்டுள்ளது.

கீழமை உரிமையியல் நீதிமன்றங் களில் வழங்கப்படும் இடைக்கால, இறுதி உத்தரவுகளை எதிர்த்து மேல்முறையீடு, சீராய்வு மனுக்கள், விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற, விசாரணையை விரைந்து முடித்து உத்தரவு வெளியிட உயர்நீதிமன்ற கிளையை அணுகலாம்.

உரிமை பாதுகாப்பு:அரசியலமைப்பு சட்டத்தாலும், இயற்கையாகவும் மக்களுக்குள்ள உரிமைகளை பாதுகாப்பதில் உயர்நீதிமன்றம் முதலிடம் வகிக்கிறது. மிக முக்கிய வழக்குகள் விடுமுறை நாட்களிலும் கூட விசாரிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசு களில் மக்கள் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் பணத்தை செயல்படுத்தவும், நிறைவேற்றப்படாத திட்டங்களை நிறைவேற்றவும் நீதிமன்றத்தை நாடலாம். சிறைவாசியாக இருந்தாலும் அவர்களின் மனித மாண்புகள் காக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. சிறைவாசிகளின் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என்றும், பரோல் உரிமை மறுக்கப்பட கூடாதென்றும், தனிமைச்சிறையில் அடைக்கப்பட கூடாதென்றும் சிறைவாசிகளின் குழந்தைகளுக்கு கல்வி வழங்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தகுந்த பாதுகாப்பு உபகரணங்களில்லாமல் துப்புரவு பணி செய்து தனியார் மற்றும் அரசு பணி பார்க்கும் போது இறந்த துப்புரவு பணியாளர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், தவறான மின் பராமரிப்பில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பலருக்கு இழப்பீடு வழங்கியும், அரசு பணியில் இறந்தவரின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கியும் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 28.37 லட்சம் ரூபாய் நஷ்டஈடு, மனித உரிமை தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது, குற்றாலத்தில் சுற்றுச்சூழல் கேடு ஏற்படாதவாறு குளிக்க உத்தரவிட்டது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை வழங்கிய மனித நேய தீர்ப்புகளை அடுக்கி கொண்டே செல்லலாம்.

சட்ட உதவி மையம்:நீதித்துறை பதிவாளரை தலைமையாக கொண்டு செயல்படும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் இலவசமாக வழக்குகள் ஏழைகளுக்கு நடத்தி கொடுக்கப்படுகிறது. வழக்கறிஞர், நீதிமன்ற கட்டணங்கள் கூட செலுத்த வேண்டியதில்லை. மேலும் ஆணைக்குழு சார்பில் மக்கள் நீதிமன்றங்கள் மூலம் வழக்குகள் விசாரித்து விரைந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் சராசரியாக ஐயாயிரம் வழக்குகள் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கலாகின்றன. இவற்றில் சராசரியாக ஒவ்வொரு மாதமும் 3500 வழக்குகள் முடிவுக்கு வருகின்றன.

தற்போது ஒரு லட்சத்து இரண்டாயிரம் வழக்குகள் இங்கு நிலுவையில் உள்ளன. உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் 16 நீதிபதிகள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1500க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரிக்கின்றனர். நாள்தோறும் இதன் ஆளுகைக்குட்பட்ட 13 மாவட்டங்களிலிருந்து நம்பிக்கையுடன் நீதியின் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். உயர்நீதிமன்றம் மதுரை கிளை பல மாநில உயர்நீதிமன்றங்களை விட வழக்குளை தீர்ப்பதிலும், மனித உரிமைகளை காப்பதிலும் முன்னிலையில் இருப்பது சிறப்பாகும்.

--முனைவர் ஆர்.அழகுமணி, வழக்கறிஞர், மதுரை, 98421 77806

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Ramanujam Veraswamy - Madurai,இந்தியா

    AT MADURAI BENCH OF MADRAS HIGH COURT IS LARGE NUMBER OF CASES PENDING - MAINLY DUE TO LESS NUMBER OF JUDGES OF MADRAS HIGH COURT ARE DEPUTED TO MADURAI BENCH, ON QUARTERLY BASIS. IT IS NECESSARY THAT MORE NUMBER OF JUDGES ARE DETAILED TO MADURAI BENCH OF MADRAS HIGH COURT AND THEY ARE TO BE ALLOWED LESS NUMBER OF LEAVE/ON DUTY ASSIGNMENT DURING THEIR SITTINGS AT MADURAI BENCH, SO THAT THEY CAN DEVOTE MORE ATTENTION IN DISPOSAL OF LARGE NUMBER OF PENDING CASES.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement