Advertisement

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா

'நீ வருவாய்' என்ற படத்தில் 'பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா, பூங்காற்றே பிடிச்சிருக்கா' என தேவயானி வாயசைத்துப் பாடியதில் துவங்கி, விஜய்யின் 'வில்லு' வில் 'டாடி மம்மி வீட்டில் இல்லை; தடைபோட யாரும் இல்லை' என்ற இளைஞர்களை குஷிப்படுத்தி, வீரம் படத்தில் அஜித் பாடும் 'ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும் அதகளம் புரிந்திடும்' என்று 'தெறி'த்து, சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் 'கருத்தவன் எல்லாம் கலிஜா' என்ற பாடல் உள்பட பல பாடல்களை எழுதியவர் கவிஞர் விவேகா. சண்டே ஸ்பெஷலுக்காக இங்கே மனம் திறக்கிறார்...

* உங்களை பற்றி?திருவண்ணாமலை மாவட்டம், வேடக்குளம். முழுப்பெயர் விவேகானந்த வீர வைரமுத்து. சினிமாவுக்காக விவேகா என சுருங்கிப் போச்சு.தந்தை முனுசாமி விவசாயி. நாட்டுப்புற கலைஞர். ஊரில் மாரியம்மன் கோயிலில் கூழ் ஊற்றும் நிகழ்வில் உள்ளூர் கலைஞர்களை வைத்து தெருக்கூத்து நடத்துவார். கதாபாத்திர கையேடு தயாரிப்பில் அவருக்கு உதவும்போது கவிதை எழுதும் ஆர்வம் உருவானது. பள்ளி, கல்லுாரி கவிதை போட்டிகளில் பரிசு பெற்றுள்ளேன். முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் பரிசு பெற்றுள்ளேன். கல்லுாரி மாணவர்கள் உசுப்பேற்றி பாடல் எழுத துாண்டினர்.

* சினிமா வாய்ப்பு எப்படி...இயக்குனர் ராஜ்குமாரின் சூப்பர்குட் அலுவலகத்திற்கு நண்பருக்கு துணையாக காத்திருந்தேன். வெளியே வந்த ராஜ்குமாரிடம் சந்திக்க விரும்புவதாக கூறினேன். அழைத்து பேசி கவிதை எழுத சொன்னார். கவிதையை ரசித்தார். 2 மாதங்களுக்கு பின் இரவு 12:00 மணிக்கு அழைத்தவர் கதையை கூறி காலை 9:00 மணிக்கு பாடல் தரும்படி கேட்டார். முதல்பாடல் என்பதால் ஒருவித கிளர்ச்சியுடன் 'பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா, பூங்காற்றே பிடிச்சிருக்கா' என எழுதினேன். பாடல் ஹிட் ஆனதும் கட்டியணைத்து பாராட்டினார். தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. சிங்கம், 1,2,3, கந்தசாமி படத்தில் 8 பாடல்கள், காஞ்சனா, 1,2, வேட்டைக்காரன், கமல் நடித்த மன்மதன் அம்பு என இதுவரை 2 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிவிட்டேன்.

* பிடித்த பாடல் நான் எழுதிய அத்தனை பாடல்களும் பிடித்தவைதான். சிங்கம் படத்தில் பாடல்களை ரசித்த நடிகர் சிவக்குமார், 'திரும்பவும் கவிஞர் கண்ணதாசனின் வரிகளை ரசித்தது போல் உள்ளது' என்றார். நடிகர் சூர்யா இந்திபட இயக்குனர் ராம்கோபால் வர்மாவிடம் சிபாரிசு செய்ததால், ரத்தசரித்திரம் படத்தில் 7 பாடல்கள் எழுதினேன்.

* கவிதைக்கென நேரம் ஒதுக்குவதுண்டா...அப்படியெல்லாம் இல்லை. எப்போது தோன்றுகிறதோ உடனே எழுதிவிடுவேன். கந்தசாமி படத்தில் 'எம்பேரு... மீனாகுமாரி, என் ஊரு... கன்யாகுமரி' என்ற பாடலை 12 நிமிடத்தில் எழுதி கொடுத்தேன். பாடல்கள் மக்கள் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் இருப்பதால் எழுத்தாளர் பிரபஞ்சனிடம் 'மக்கள் மொழி கவிஞர்' விருது பெற்றேன்.

* சினிமாவில் மறக்க முடியாததுஎனது பாடலை கவிஞர் வாலி ரசித்து கன்னத்தில் தட்டி பாராட்டுவார். ஆங்கில கலப்பு இன்றி பாடல் எழுத வேண்டும் என்பது ஆசை. இயக்குனர்கள் படத்திற்கான சூழலுக்கு ஏற்ப பாடல் வேண்டும் என்பதால் ஆங்கில கலப்பு வந்து விடுகிறது.

* இளைஞர்களுக்கு அறிவுரைதினமும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். 20 வயது இளைஞர் அப்டேட் இன்றி இருந்தால் அவர் முதியவர். 70 வயது முதியவர் அன்றாடம் அப்டேட் ஆக இருந்தால் அவர் இளைஞரே. இளைஞர்களின் வாழ்க்கையில் தேடல் இருக்க வேண்டும், என்றார்.
கவிஞரை பாராட்ட vivekamssgmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement