Advertisement

குற்றம் காணா இல்லம்... குறை இல்லா இல்லம்

''மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்வளத்தக்காள் வாழ்க்கைத் துணை''குடும்ப வாழ்வுக்கு ஏற்ற நற்குண நற்செயல்கள் உடைய வாழ்க்கைத் துணை இல்லற வாழ்விற்கு இனிமை தரும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். குடும்பம் என்பதுஅன்பால், பாசத்தால், அறத்தால் கட்டப்பட்ட மைப்பு.அந்த அமைப்பில் குழந்தைகள், பெற்றோர், சுற்றத்தார் என அனைவரும் பிணைக்கப்பட்டுஉள்ளார்கள். இந்தக் கட்டுமானம் என்ற இணைப்பு சிறப்பாகஇருந்தால் வாழ்வு சிதையாது
சீரமைப்போடு திகழும். குடும்பம் எனும் கட்டடத்திற்கு அடித்தளம் அமைக்கும் பெரும் பொறுப்பும், பண்பும் பெண்களுக்கே உரியது. இல்லறத்தை நல்லறமாய் மாற்றும் பண்பு இல்லத் தலைவியிடம்உள்ளது.இல்லறம், அன்பு, அடக்கம், பொறுமை, வாய்மை, பண்புடைமை எனும் பல பண்புகளோடு பிணைக்கப்பட்டால் அது நல்லறமாகும். விளக்கின் திரி சுடர்விட்டு எரிந்து அனைவருக்கும் ஒளி கொடுத்து, தன்னை சாம்பலாக்கி கொள்ளும். அதைப் போன்ற தன்மை உடையவள் பெண் என்பதால், பெண்ணின் பெருமையை பற்றி குடும்ப விளக்கு என்ற நுாலில் பாரதிதாசன் விளக்கியுள்ளார்.
பாரதிதாசன் பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளை பட்டியல் போட்டுள்ளார். மாடு கறந்தனள்,வீட்டை நிறம் புரிந்தனள், பைம்புனல் தேக்கினாள், சிறுகதை கூறியும், துளிருடல் நலங்காது நின்ற திருக்கோலப் பொன்னின் சிலைகட்கு நன்னீராட்டி, உடை அணிவித்து, தெருவரை தானும் நடந்து செல்வாள் பெண் என்று விடாது தொடரும் பெண்ணின் வேலைகளை பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார் பாரதிதாசன்.
உறவெனும் பாலம்
வருவாய்க்கு தக்க செலவு,கணவனையும், அவர்களை சார்ந்தவர்களையும், பிள்ளைகளையும் நல்ல முறையில் பேணுவது, விட்டு கொடுத்து போவது போன்ற பண்புகள் நிறைந்த குடும்பம் நல்ல பல்கலையாக திகழும்.அனைத்து உயிர்களுக்கும் முதல் கோயில் தாயின் கருவறையே. தாயின் கருவறையில் இறைவனிடம் இருப்பது போல அனைத்து உயிர்களும் எதையும் தேடாது பாதுகாப்பாக சுகமாக வாழ்கிறது. கருவை சுமந்து அது பிறந்து வளரும் வரை கண்ணை இமை காப்பது போல தனக்கு என்று எந்த வேண்டுதல் இன்றி வழிநடத்தி செல்லும் மற்றொரு தெய்வம் தாய்.
அன்பை உறவுப்பணியில் துவங்கி சமுதாய பணிக்கு எடுத்து செல்வது தாய். வளரும் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் போது கூறும் கருத்து செறிவான பாடல்கள், கதைகளால் உளவியல் ரீதியாக குழந்தைகள் தன்னை அறியாமல் பல நல்ல கருத்துக்களை பெறுகிறார்கள். குழந்தை பருவத்தில் தாயிடம் ஏற்படும் ஈர்ப்பால்பின்னாளில் வளர்ந்தவுடன் தாங்கள் ஏற்படுத்தும் நிறுவனங்களுக்கு பெரும்பாலும் தாயின் பெயரையே சூட்டுகின்றனர். வெளிச்சத்தை தந்து விட்டு உருகும் மெழுகுவர்த்தியே தாய்.
இல்லறமே நல்லறம்
சிலந்தி போல் தன்னை சுற்றி பல உறவுகளை ஏற்படுத்தி கொண்டு இல்லத்தின் மையமாக வாழ்பவள் பெண். அவ்வுறவுகளை பலப்படுத்துவதும், பலவீனப்படுத்துவதும் அனைவரின் அணுகுமுறையில்தான் உள்ளது. உறவுகள் மலர்வதும், உதிர்வதும் அவர்களின் உணர்வைச் சார்ந்தே அமைகிறது. அன்று பெண்ணால் குழந்தைகளுக்கு காட்டப்பட்ட விரிந்தஉலகம் இன்று காலத்தின் கட்டாயத்தால் சுருங்கி விட்டது.
பொருளாதாரத்தின் அடிப்படையில் இன்று பெண்கள் பணிக்குசெல்வதால் குழந்தைகளுடன் செலவிடும் நேரம் குறைந்து விட்டது. அன்பையும், அரவணைப்பையும் காட்டிய தாய் அருகில் இல்லாததால் குழந்தைகள் தங்களுடைய நேரத்தை கைபேசியிலும், சின்னத்திரையிலும் செலவிடுகிறார்கள்.
வாழ்க்கை பயணம் சுகமாக அமைய பணம் மட்டும் முக்கியமல்ல. மனமும் முக்கிய பங்கு வகிக்கிறது. அன்று குழந்தைகள் தாயின் கனிவான முகத்தைப் பார்த்து வளர்ந்தார்கள். இன்று தாயின் பணிச்சுமையை பார்த்து வளர்கிறார்கள்.
அன்பெனும் அரவணைப்பு
இளமையில் கல் என்ற கூற்றின்படி குழந்தைகள் பெற்றோரிடம் இளமையில் கற்று கொள்ளும் பாடமே முதுமை வரை அவர்களை நடத்திச் செல்லும். குழந்தைகளுக்கு முதல் குரு தாயே. தாயின் அன்பான அரவணைப்பையும், கனிவான முகத்தையும், இனிமையான சொற்களையும் கேட்டு வளரும் குழந்தைகள் நேர்மறை எண்ணங்களுடன் வாழ்வை எதிர்கொள்வர். பறவைகள் குஞ்சுகளுக்கு உணவூட்டும். குரங்குகள், குட்டிகளை வயிற்றில் அணைத்துச் செல்லும்.
பசு கன்றை தன்னோடு கூட்டிச் செல்லும். தேடலின் நிலையை அறிந்தவுடன், தகுந்த தருணத்தில் தனது குழந்தைகளுக்கு அனைத்தையும் கற்று தரும். அது போலத் தான் தாயும், தேடலின் ஆரம்பத்தில் சரியான இலக்கை நோக்கி குழந்தைகளை கொண்டு செல்ல வேண்டும். உறவுகளை வலுப்படுத்தும் நல்ல எண்ணங்களை குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் பயிற்றுவிக்க வேண்டும்.
''பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்தமக்கள் பேறல்ல பிற''தாய் தான் அறிவு அறிந்த குழந்தைகளை நல்வழிக்கு இட்டுச் செல்லும் பொறுப்பை மேற்கொள்கிறாள். நல்ல எண்ணங்களை ஒவ்வொரு குழந்தையின் உள்ளத்தில் விதைத்தால் நல்ல விளைவுகள் கிடைக்கும் என்று உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
கூட்டுக்குடும்பத்தில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, உதவி செய்யும் மாண்பு, வேலையை பகிர்ந்து கொள்ளும் தன்மை, பரந்த உள்ளம், தேவையான நேரத்தில் மவுனம் காத்தல், சகிப்புத்தன்மை என தன்னலமற்ற பண்புகள் நிறைந்திருந்தது. அந்த பண்பை குழந்தைகள் கேட்டும் பார்த்தும் தெரிந்து கொண்டார்கள்.
இன்றைய சூழலில் பெண்களும் வேலைப் பளுவின் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகிறார்கள். பெண்கள் வாழ்வின் ஆணிவேர், அச்சாணி, அவர்களுக்கென்று சமையல், விருந்தோம்பல், பிள்ளைப்பேறு, குழந்தைவளர்த்தல், உறவுகளை மேம்படுத்துதல் என்னும் பல கடமைகள் உள்ளது. பெண்களுக்கு என பல சோதனைகள் வந்தாலும், அதை சாதனையாக்கி காட்டும் திறமை உடையவர்கள்.
விட்டு கொடுத்தால்உயிரைக் காக்கும் உயிரினைச்சேர்த்திடும்உயிரினுக்குயிராய் இன்பமாகி விடும்உயிரினும் இந்தப் பெண்ணை இனிதடா ஊதுகொம்புகள், ஆடுகளிகொண்டே எனவும், துன்பம் தீர்வது பெண்மையினாலடா, சூரப்பிள்ளைகள் தாயென்று போற்றுவோம் என்றும் எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி என்றும் மகாகவி பாரதியார் பெண்ணை பாராட்டுகிறார்.
விடுதலை என்பதற்கு வரையறைகள் உண்டு. வரைமுறையோடு உள்ள செயல்பாடுகள் தான் வாழ்வை நன்முறைப்படுத்தும் என்று திருக்குறள் கூறுகிறது. கடலெல்லாம் நீர்ப்பரப்பாக இருந்தாலும், கலம் செலுத்துவோர் தாகத்துக்கு அத்தண்ணீர் பயன்படாது. அதுபோல் வாழ்வில் அனைத்து செல்வங்கள் இருந்தாலும், வாழ்க்கை துணைநலம் சரியில்லையெனில் வாழ்வு பட்டமரமாய் பயனின்றி போய் விடும்.விட்டு கொடுக்கும் வாழ்க்கை என்றும் செம்மையுறும். வாழ்க்கை என்பது சக்கரம் போன்றது. மேடு, பள்ளங்களை தாண்டி தான்வாழ்வில் முன்னேற வேண்டும். புரிதல் என்னும் வல்லமை படைத்தவர்கள் வாழ்க்கையை நல்லறமாக்கி கொள்வார்கள்.
இளமையை இழந்து புலன்கள் தேய்ந்தாலும், தோல்கள் சுருங்கினாலும், உள்ளத்தால் இணைந்து வாழ்வை செம்மையுறச் செய்யும் மாண்பு பெண்ணிடமே உள்ளது.''மனையுள் இருந்தவர் மாதவர்ஒப்பர்வினையுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்''
'இல்லத்தின் கடமைகளைசெவ்வனே செய்து வரும் பெண்கள் ஞானிகளுக்கு இணையாவர்' என திருமந்திரம் கூறுகிறது. குழந்தைப் பருவத்தில் பெற்றோர்க்கு அன்பெனும் ஊன்று கோலாய், கணவனுக்கு துணை எனும் ஊன்று கோலாய், பிள்ளைகளுக்குத் தாய் எனும் ஊன்று கோலாய், பெரியோர்க்கு உதவிக்கரம் எனும் ஊன்றுகோலாய் என்றும் நிலைத்து நிற்பது பெண்மை.
குற்றம் காணா இல்லம்,
குறை இல்லா இல்லம்.
-முனைவர்ச.சுடர்க்கொடிகல்வியாளர், காரைக்குடி94433 63865

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    தற்காத்து தற்கொண்டார்ப்பேணி தகைசார்ந்த சொற்காத்து சோர்விலாள் பெண் ,இதைவிட பெண்ணின் பெருமையை உலகில் யாரும் சொல்லிவிடவே முடியாது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement