Advertisement

குழந்தை என்னும் குலதெய்வம்

வாழ்க்கையில் கற்று கொள்வதில்குழந்தையை போல் இரு...அதற்கு அவமானம் தெரியாது...விழுந்தவுடன் அழுது முடித்துதிரும்பவும் எழுந்து நடக்கும்...குழந்தை பருவம் என்பது ஒவ்வொரு மனித வாழ்க்கையிலும் மறக்க முடியாத தருணமாக உள்ளது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எத்தனை கோடி செல்வங்கள் சேர்த்தாலும் குழந்தை செல்வத்தை மட்டும் தானாக சேர்க்க முடியாது. குழந்தை என்பது கடவுள்கொடுக்கும் வரம் இல்லை, அந்த குழந்தை ஒரு குடும்பத்தின் குலதெய்வம். தம்பதியர்கள் திருமணமான புதிதில் முதலில் குழந்தை வேண்டும் என்று நினைக்கிறார்கள்.பின், நாளடைவில் குழந்தை மீதுள்ள பற்று குறைந்து தன்னை மலடு என்று யாரும் குறை கூறக்கூடாது என்பதற்காக தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று நினைக்கின்றனர். ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் சமூகத்தில் அங்கீகாரத்தை பெற்றுத் தருவது குழந்தை.
மழலை பேச்சின் சக்தி : குழந்தைக்கு கோபம், பொறாமை, வஞ்சம், களவு, சூது, என எதுவும் தெரியாது. அதற்கு தெரிந்த இரண்டே குணங்கள் அழுகையும் சிரிப்பும் மட்டுமே. அது இரண்டுமே ரசிக்ககூடியது மற்றும் அழகானது. அலுவலகத்தில் அதிக வேலை பளு காரணமாக சோர்வாக வந்தாலும் தன்வீட்டு குழந்தையுடன் ஆனந்தமாக பேசி மகிழ்வதில் சுகம். அதனுடைய மழலைப் பேச்சும், கள்ளமில்லா சிரிப்பும் எவ்வித மனஅழுத்தத்தையும் போக்கக்கூடியஆற்றல் கொண்டது. சில மன வியாதிகளுக்கு மருந்தே குழந்தைகளுடன் விளையாடி மகிழ்வதே.
“குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச்சொல் கேளாதார்.”என்றார் வள்ளுவர். அத்தகைய சக்திவாய்ந்த அந்த மழலை பேச்சிற்கு இணையாக இன்னும் எந்த ஒரு விஷயமும் அறிவியலால் கண்டுபிடிக்கப்படவில்லை.
70 கிலோ உருவம் : 14 வயது வரை உள்ள அனைவரும் குழந்தைகளே, அந்த அறியாத வயதில் அவர்கள் பெற்றோரிடமிருந்து கற்கும் பாடங்கள் நிறைய உள்ளன. அறிந்தோ அறியாமலோ தன்வீட்டாரின் அனைத்து செய்கை களையும் கவனிப்பர். பெற்றோர் தன் குழந்தைகள் முன் உரையாடும் போது வார்த்தை பிரயோகம் மிக முக்கியம். குடும்பப் பிரச்னைகளை குழந்தைகள் முன்பு பகிரக்கூடாது. கணவன் மனைவி சண்டையை கூட குழந்தைகள் முன்பாக போடக் கூடாது. சிறு வயதில் அவர்கள் மனதில் பதியும் விஷயங்களும் எண்ணங்களும் பசுமரத்தாணி போல ஆழ பதியும்.வளர்ந்து முதிர்ந்த நாமே செய்யக்கூடாத செயல்களையும் பேசக்கூடாத வார்த்தைகளையும் செய்யும் போது குழந்தைகளால் மட்டும் எப்படி முடியும். சேட்டைசெய்தால் தான் குழந்தை இல்லையென்றால் அதற்கு ஏதோ பிரச்னை என்று அர்த்தம். இதற்காக அவர்களை போட்டு அடிப்பது எவ்வளவு பெரிய கொடுமை. திரைப்படம் ஒன்றில் வந்த கருத்து “70 கிலோ உருவம் கொண்ட ஒரு மனிதன் 10 கிலோ கொண்ட ஒரு குழந்தையை அடிப்பது எவ்வளவு பெரிய வன்முறை”.இந்த கருத்து மிகவும் ஆழமானது. இதன் பிறகு பல பெற்றோர் தன் குழந்தையை அடிப்பதை நிறுத்திவிட்டனர். பல வீடுகளில் தோசைக் கரண்டியும், பெருக்குமாறும் குழந்தைகளை அடிப்பதற்கே பயன்படுத்தப்படுகிறது. உலகின் மிகப்பெரிய கொடுமையான தண்டனை இதுவாகத் தான் இருக்கும். சேட்டை செய்யும் குழந்தையை மடியிலமர்த்தி அதற்கு புரியும்படி எடுத்துரைத் தாலே அதனிடம் சிறந்த மாற்றத்தை காணமுடியும்.
ருசிப்பதில் நாவடங்கா பெரியவர்கள் : சில பெற்றோர் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் கடை உணவு ஐஸ்கிரீம், சாக்லேட் என பல விஷயங்களுக்கு தடை போடுகின்றனர். இதனால் குழந்தைக்கு எதிர்மறை எண்ணம் உருவாகி வீட்டிற்கு தெரியாமல் பள்ளியிலோ நண்பர்களுடன் சேர்ந்தோ சாப்பிடுகின்றனர். சர்க்கரை வியாதி வந்தபின்னரும் அதைப் பற்றிய விளைவுகளை தெரிந்த பின்னும் பல பெரியவர்கள் அதனை ருசிக்கின்றனர். பெரியவர்களாலேயே நாவடக்கம் செய்ய முடியாத போது குழந்தைகளால் எப்படி முடியும். இதற்கு பதிலாக நம் கண்முன்னே நாமே அவர்களுக்கு அளவாக வாங்கிக் கொடுத்து உண்ண சொல்லி அதன் விளைவுகளையும் புரியும்படி எடுத்துக் கூறலாம்.இன்று பல வீடுகளில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் சித்ரவதை ஒன்று உண்டு. பெற்றோர் தன் சிறு வயதில் பாட ஆட நினைத்திருப்பர்.ஆனால், அவர்களால் அது முடியாமல் போயிருக்கும். எனவே, அந்த கனவுகள் நிறைவேறாத ஆசைகள் அனைத்தையும் தன் பிள்ளைகள் மூலமாக தீர்த்துக்கொள்வர். அந்த சிறு வயதில் 8 மணி நேரம் பள்ளி வகுப்பு பின் வீடு வந்தவுடன் மறுபடியும் கிளம்பி டியூஷன், பாட்டு, நடனம், இந்தி டியூஷன் என பல வகுப்புகள். வயலில் உழவு வேலை பார்க்கும் மாட்டிற்குகூட சிறிது நேரம் இளைப்பாற நேரம் கொடுப்போம். அதைவிட மோசமான பிறவிகளா நம் குழந்தைகள். பல பெற்றோர்கள் தன் குழந்தைகள் அனைத்து துறையிலும் சாதிக்க வேண்டும் என்று அவர்களை மனித வதை செய்கின்றனர். குழந்தைகளுக்கும் ஒரு மனது இருக்கிறது. அதற்குள்ளும் நம்மை போன்ற எண்ண அலைகள் உண்டு என்று நினைத்து அதனை இந்த சிறப்பு வகுப்புகள் என்னும் கொடுமைச்சிறையிலிருந்து மீட்டெடுக்கலாம்.
“காலை எழுந்தவுடன் படிப்புபின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டுமாலை முழுதும் விளையாட்டுஎன்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா”என்று பாரதியாரே கூறியுள்ளார்.பிள்ளைகளை பள்ளி முடிந்து வீட்டில் வைத்துப் பார்க்க சலிப்பு. இதன் விளைவாகவே இந்த சிறப்பு வகுப்புகளில் சேர்த்தல் அதிகரித்துவிட்டது. அதிக கட்டணத்தையும் செலுத்தி குழந்தைகளையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி விடுவதற்கு பதிலாக தன் பிள்ளைகளை வெளியே விளையாட அனுமதித்து அதனுடன் அமர்ந்து பேசினாலே பணமும் நேரமும் மிச்சம். அதன் எதிர்காலமும் சிறப்பாக அமையும். இன்றுள்ள அத்தனை சாதனையாளர்களும் பெரியவர்களும் காமராஜர் முதல் அப்துல் கலாம் வரை உள்ள அனைவரும் அன்று சாதாரண அரசு பள்ளியில் படித்து சாதிக்கவில்லையா. பிள்ளைகளை கழுதைகளாக நினைத்து நம் கனவு என்னும் பொதியை அதன் முதுகில் ஏற்ற வேண்டாம்.அதற்கும் சிறகு விரித்து வானில் பறக்க ஆசை உண்டுஎன்பதனை எண்ணி ஆனந்தமாக பறக்க விடுங்கள்.
- கே.பிரவீணாபேராசிரியர், தியாகராஜர் கல்லுாரி, மதுரைpraveena52gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement