Advertisement

நீர் மேலாண்மையில் தோற்றுப்போனோமா... : இன்று உலக நீர் தினம்

கவுன்ட் டவுன்' ஸ்டார்ட் ஆகிவிட்டது. தென்ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய நகரான கேப்டவுனில் தண்ணீர் முற்றிலும் தீர்ந்து பூஜ்ஜிய நிலையை எட்டும் நாள் (டே ஜீரோ) மே 11- என கணிக்கப்பட்டிருக்கிறது.
தண்ணீர் இல்லாத உலகின்முதலாவது மிகப்பெரிய நகரம் என்ற மோசமான சாதனைகேப்டவுனுக்கு கிடைக்க போகிறது.நாற்பது லட்சம் மக்களை கொண்டது கேப்டவுன். கடந்த மூன்று ஆண்டுகளாக வறட்சியின் கோரப்பிடியில் சிக்கிய இந்த நகரம் பல மாதங்களாக குடிநீர் பஞ்சத்தால் பரிதவித்து வருகிறது. அங்கு இப்போது, ஒருவர் நாளொன்றுக்கு ஐம்பது லிட்டர் நீரை தான் பயன்படுத்தலாம். தண்ணீரால் கார் கழுவக்கூடாது. குளிக்க இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஷவரைத் திறக்கக்கூடாது. தோட்டம், நீச்சல்குளம் போன்றவற்றுக்கு தண்ணீர் கிடையாது. குடிநீர் வழங்குவதற்காக நம்மூர் ரேஷன்கடைகள் போல சுமார் இருநுாறு குடிநீர் வழங்கல்மையங்கள் தயார்நிலையில் உள்ளன. வரிசையில் நின்று தண்ணீர் வாங்க வேண்டியதுதான் பாக்கி. இத்தனைக்கும் சிறந்த நீர்பாதுகாப்பு கொள்கைகளுக்காக 2015ல்சர்வதேச விருதினை இந்த நகரம் பெற்றது. 'கேப்டவுன் தானே.. நமக்கில்லையே' என அசிரத்தையாக நாம் இருக்கமுடியாது. இந்த நிலை நமக்கும் வரலாம்.
இந்தியா எங்கிருக்கிறது? : உலக மக்கள் தொகையில் இந்தியா 16 சதவிகிதமும், பரப்பளவில் 2.4 சதவிகிதமும் கொண்டு உள்ளது. ஆனால், உலகின் மொத்த தண்ணீரில் 4 சதவிகிதம் மட்டுமே இந்தியாவுக்குரியது. அப்படியென்றால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை உள்ள நாடா?இங்கிலாந்து நீரியல் நிபுணர்கள் குழு, உலகின் 149 நாடுகளில் கிடைக்கக்கூடிய நீர்வளங்கள்மற்றும் அங்கு வாழும் மக்கள் தொகை ஆகியவற்றின் அடிப்படையில் ஓர் ஆய்வு நடத்தியது. குவைத், சிங்கப்பூர் போன்ற 20 நாடுகளை நீர்வளத் தட்டுப்பாடுள்ள நாடுகள் எனவும், போலந்து, லிபியா போன்ற 8 நாடுகளை நீர்த்தேவைகளைச் சமாளிப்பதில் சிரமப்படும் நாடுகள் எனவும், மீதமுள்ள கனடா, அமெரிக்கா, ஜப்பான், சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற 121 நாடுகளை நீர்வளம் மிகுந்த நாடுகள் எனவும் வரையறுத்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா 107வது இடத்தில் உள்ளது. எனவே, இந்திய நாட்டின் மொத்த நீர்வளத்தில் குறைவில்லை என்பதை நிபுணர்கள் குழுவின் அறிக்கை மூலம் அறியமுடிகிறது.ஆனால், மழையின் அளவு மற்றும் மழை பெய்யும் காலம் ஆகியவை நம் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் ஒரே சீராக இருப்பதில்லை.ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளில் 100 மி.மீ ஆகவும், கேரள மாநிலத்தின் வட பகுதிகளில் 6000 மி.மீ ஆகவும், சிரபுஞ்சி எனும் இடத்தில் 11500 மி.மீ ஆகவும் ஆண்டு சராசரி மழையளவுகள் மாறுபடுகின்றன. நமது நாட்டின் சராசரி மழையளவு 1150 மி.மீ.
தமிழகம் : இந்திய மக்கள் தொகையில் 7 சதவிகிதமும், பரப்பளவில் 4 சதவிகிதமும் கொண்ட தமிழகம், நீர் ஆதாரத்தில் 3 சதவிகிதம் மட்டுமே கொண்டிருக்கிறது. தமிழகம் மழை மறைவு பிரதேசம். நமக்கு நீருக்கான ஒரே ஆதாரம் மழை. இரு பருவ மழைகள் மூலம் தமிழகத்திற்கு ஒரு ஆண்டில் கிடைக்கும் மழை நீரின் சராசரி அளவு 958 மி.மீ. இது தேசிய சராசரியை விடக் குறைவு. தென்மேற்குப் பருவமழை கடலோர மாவட்டங்களில்தான் அதிகம் பெய்கிறது. கோடைகால மழையோ, பூமியின் மேற்பரப்பின் வெப்பநிலையால் பெருமளவு நீராவியாகி விடுகிறது. மாநிலம் முழுக்கப் பரவலாகக் கிடைப்பது வடகிழக்குப் பருவமழைதான்.காடுகளெல்லாம் அழிக்கப்படாத பண்டைகாலத்திலேயே பலஆண்டுகள் மழை பொய்த்து பஞ்சம் ஏற்பட்டதாகவும், அதனால்பாண்டிய மன்னன் மக்களை அழைத்து, "மழை பொய்த்தமையால் என்னால் உங்களைக் காக்கமுடியவில்லை. நீங்கள் வேறு ஊர் சென்று பிழைத்துக்கொள்ளுங்கள்" எனக் கூறியதனை இறையனார் அகப்பொருள் உரையின் மூலம் அறிகிறோம்.
நீர் மேலாண்மை : நீர் மேலாண்மை என்பது நீராதாரங்களை உருவாக்குவது,அவற்றைப் பாதுகாப்பது, நீரைச் சேமிப்பது, சேமித்த நீரை உபயோகமான முறையில் பயன்படுத்துவதற்காகத் திட்டமிடுவது, நீரை வினியோகம் செய்வது, நீர் விரையத்தைக் குறைப்பது ஆகிய கொள்கைகளைக் கொண்டதாகும்.நமக்குக் கிடைத்த சுமார் 70 ஆண்டுகால தமிழக மழையளவு பட்டியலைப் பார்த்தோமேயானால், மழைப் பொழிவில் பெரிய வித்தியாசமேதுமில்லை. அப்படியென்றால் ஏன் நீர் தட்டுப்பாடு என்ற கேள்வி எழலாம். மக்கள் தொகை பெருக்கம் ஒருபுறம் என்றாலும், பெய்த மழையை தேக்கி வைக்கும் நீர்நிலைகளைக் காவுகொடுத்ததுதான் முக்கியகாரணம்.1970--80 காலகட்டத்தில் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் குறித்த கணக்கெடுப்பு நடந்தது. அந்தப் புள்ளி விபரப்படிதமிழகத்தில் 39 ஆயிரத்து 202 நீர்நிலைகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்போதும் இந்தக் கணக்கைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால், 'தமிழ்நாட்டில் உள்ள இந்த நீர்நிலைகளில் 10 சதவிகிதம் அழிந்து போய்விட்டன' என்று அதிரவைக்கிறது சர்வதேச நீர்மேலாண்மை மையம்.நம் கண்மாய்கள் சங்கிலித்தொடர் அமைப்பைக் கொண்டவை என்பதால், கடைமடைப் பகுதிகளில் இருக்கும் விவசாயிகளும் பலன் பெற்றனர். இப்போது கண்மாய்களை இணைக்கும் கால்வாய்களும் அழிந்துபோனதால் சங்கிலித்தொடரும் அறுந்து போனது. விவசாயி வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருக்கிறான்.நகர்மயமாதலில் முதலில் பலியாவது நீர்நிலைகளே.
ஏன் வேண்டும் நீர்நிலைகள் : புவி வெப்பமடைந்து வருவதால், உலகின் பல பகுதிகளிலும் பருவ நிலையில் மாறுதல்கள் நிகழ்ந்து வருகின்றன. அதற்கு தமிழகமும் விதிவிலக்கல்ல. வரும்காலங்களில் தமிழகத்திலும் பருவ மழைக்காலம் குறைந்து, மழையின் அடர்த்தி அதிகரிக்கக்கூடும். அதாவது 42 நாட்கள் பெய்யவேண்டிய பருவ மழைக்காலம் 32 நாட்களாகக் குறைவது மட்டுமின்றி, நாள் முழுதும் பெய்யக்கூடிய மழை அளவு, 2 மணி நேரத்தில் பெய்யும். குறைந்த காலத்தில் கொட்டித்தீர்க்கும் மழைநீரை சேமிக்க நீர்நிலைகளைத் தயாராக வைத்திருக்கவேண்டும். இல்லையெனில், வெள்ளச் சேதம் தவிர்க்க முடியாததாகிவிடும். மேலும் பெய்த மழை நீரை சேமிக்காததால் கோடையில் கடும் வறட்சி எட்டிப்பார்க்கும்.சென்னையில் 2015 ஆண்டு பெய்த மழை மூலம் கிடைத்த தண்ணீர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு போதுமானதாக இருக்கும் என வல்லுனர்கள் கணித்தனர். ஆனால் ஆறு, ஏரிகள் ஆக்கிரமிப்பாலும், அரசின் நீர் மேலாண்மை திட்ட குறைபாடுகளாலும் மொத்த நீரும் கடலில் கலந்து வீணானதுடன்,அடுத்த சில மாதங்களிலேயே குடிநீருக்கு கையேந்தும் நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டது. 2016-ல் கடும் வறட்சிக்கு ஆளானோம். கடந்த 142 ஆண்டுகளுக்கு பிறகு குறைவாக மழை பெய்தது அந்த ஆண்டுதான். வீணாகும், அபரிமிதமாக கடலில் கலக்கும் நீரை சேமிக்கவேண்டுமென்றால் நீர்நிலைகள் அவசியம். நீர் நிலைகள் உயிர்ப்புடன் இருக்கும்பட்சத்தில் நாம் தண்ணீருக்காக பிற மாநிலங்களில் கையேந்துவதைக் குறைத்துக் கொள்ளமுடியும்.
என்ன செய்யலாம் : "நீர் சவால்களுக்கு இயற்கை அடிப்படையிலான தீர்வு" என்பதே இந்த உலக நீர் தினத்தின் கருப்பொருள். எனவே, நீர் தேவைக்காக நிலத்தடி நீரைத் தோண்டுவது தீர்வாகாது.அனைத்துப் பகுதியிலும் ஒரே சீரான நீர்வளம் இல்லை.நீர்வளம் மிகுதியான பகுதிகளில் வீணாக்கப்படும் நீரும், கடலில் கலக்கும் உபரி நீரும், பற்றாக்குறையான பகுதிகளுக்குப் பயன்படாமல் வீணாகிக் கொண்டிருக்கிறது. இப்படி வீணாகும் நீர்வளம், இந்தியாவின் பயன்படுத்த தகுதியான மொத்த நீர்வளத்தில் 42 சதவிகிதம்.நம் நீர்தேவைக்கு பருவமழையையும் பக்கத்து மாநிலங்களையும் சார்ந்திருப்பதை விட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கலாம். இதைப்போல நீரை மறுசுழற்சி செய்வதிலும் விழிப்புணர்வு வேண்டும்.நாட்டின் மொத்த நீர் வளத்தில் 80 சதவிகிதம் விவசாயத்துக்கு பயன்படுகிறது. நவீன தொழில்நுட்பம் மூலம் விவசாயத்துக்கான நீரின் தேவையைக் குறைக்கலாம். அப்போதுதான் குடிநீர் தேவையை ஈடுகட்டமுடியும்.நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் பாராமல் அகற்றிடவேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். நீர்நிலைகளைப் பராமரிக்க, பாதுகாக்க, தனியாக ஒரு தன்னாட்சி அமைப்பினை உருவாக்கிட வேண்டும்.தண்ணீர் சேமிப்பு மற்றும் பயன்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு தொடர்ந்து ஏற்படுத்தி வரவேண்டும். மழைநீர் சேகரிப்பை ஊக்கப்படுத்துவதோடு வீடுகளில், பொது இடங்களில் தண்ணீர் வீணாக்கப்படுவதை கண்காணித்தலும் அவசியம்.ஒரு சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி, வறுமைக் குறைப்பு, சுற்றுசூழல் வளம், உணவு, எரிசக்தி, பாதுகாப்பு எனஅனைத்திற்கும் ஆதாரமாகஇருப்பது நீர். நீர் மேலாண்மையை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பது நாளைய தலைமுறைக்கு செய்யும் துரோகம்.
-ப. திருமலைபத்திரிகையாளர், மதுரை84281 15522

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement