Advertisement

இளைஞர்களுக்குள் 'ஹார்மோன்' விளையாட்டு

வழக்கம் போல் கேள்வியுடன் ஆரம்பித்தது என் வகுப்பு பாடவேளை... '5---15, 16--21, 22--40, 41--60, 61--80 இந்த எண்கள் வரிசை எதை குறிக்கிறது' என கேட்டேன். குறும்புக்கார மாணவன், 'ஐ.பி.எல்., 20--20 கிரிக்கெட்டின் பிளே ஆப் ஸ்கோர்' என்றான். இன்னும் இன்னபிற வித்தியாசமான பதில்கள். சிரித்தபடியே பாராட்டி விட்டு விஷயத்துக்குள் நுழைந்தேன்.'இந்த எண்கள் வயது விகிதம், மனிதன் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு பருவம். இதில், எந்த காலகட்டம் மிகவும் கடினமானது' என கேட்டேன். பல பதில்கள், சுவாரசிய சிந்தனைகள். 99சதவீதம் பதில் 5- -15 குழந்தை பருவம் மிக சுகமானது, 22--40 வாழ்க்கையின் தொடக்கம், 41--60 மிக மிக கடினம், 61--80 நிம்மதி மற்றும் பரிதாப காலம் என பதில் வந்தது. கடவுள் வித்தியாசமான படைப்பாளி இதில் வியப்பு என்னவெனில் யாரும் பரிதாபமான, பயங்கரம் மிகுந்த, வாழ்வின் அஸ்திவாரத்தை செதுக்கும் 16--21 காலகட்டத்தை சொல்லவேயில்லை. நான் வகுப்பு எடுப்பது இப்பருவ வயது வளர்ந்த குழந்தைகளுக்குத் தான். இளங்கன்று பயமறியாது, சந்தோஷமான காலகட்டம் என்று இப்பருவத்தை மாணவர்கள் கூறியதால் வகுப்பறையில் மயான அமைதி, அதிர்ச்சியான முகங்கள். கடவுள் வித்தியாசமான படைப்பாளி மற்றும் நடுவர். கண்ணுக்குள் தெரியாத ஹார்மோன் விளையாட்டின் தேர்வை வைத்து, வாழ்க்கை தொடக்கத்துக்கான தகுதி தேர்வில் வென்றோமா, தோல்வியுற்றோமா என சோதித்து பார்க்கிறார். ஆனால், பரிதாபம் என்னவென்றால் இத்தலைமுறை குழந்தைகள் 65 சதவீதம், இத் தேர்வில் தோல்வியுறுகிறார்கள். இத்தோல்வி விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.ஹார்மோன்களின் கிளுகிளுப்பான விளையாட்டில் பெரும்பாலும் 'இனக்கவர்ச்சி', காதல் என்று நம்பப்படுகிறது. பாய் பிரெண்ட், கேர்ள் பிரெண்ட் இல்லாத இளமையை இளவட்டம் ஏற்க மறுக்கிறது. 'உங்கள் தோழனோ, தோழியரோ அழகாக உடையணிந்து வந்தால் பாராட்டுவீர்களா' என கேட்டேன். தாயோ, தந்தையோ, சகோதரனோ, சகோதரியோ,ஆசிரியையோ, ஆசிரியரோஅவ்வாறு வந்தால் ரசிக்கிறோம். ஆனால் நம் வயதொத்த எதிர்பாலின நண்பர்கள் வந்தால்அவர்கள் அறியாதவாறு தலைசாய்ந்து ரசிக்கிறோம். இயற்கை உருவாக்கிய விந்தையான ஹார்மோன்கள் விளையாட்டை மூலதனமாக வைத்து தானே 'டிவி' சீரியல்கள், திரைப்படங்கள் காம களியாட்டத்தை காதல் என்ற பெயரில் மனதிலும் பதியவைக்கிறது.
நவீன விஞ்ஞான வளர்ச்சி : மனித வாழ்க்கையே நல்ல தலைமுறைகளை உருவாக்குவது தானே. சத்தான தலைமுறைஉருவாகும் வித்து இப்பருவத்தில் தான் முளைவிடுகிறது. ஆனால் பயிராகி, தளைத்து, பூத்து, கனிவதற்குள் அவகாசம் அளிக்காமல் இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சி பூஞ்சை காளான்களை அறுவடை செய்து விடுகிறது. முந்தைய தலைமுறையினருக்கு 'பிரைவசி' என்பது 22 வயதுக்குப் பின் தரப்பட்டது. அப்போது அதை வீட்டுக்குள் கொண்டு சேர்க்கும் 'டிவி' பொதுவான இடமான 'ஹாலில்'தான் இருக்கும். தொலைக்காட்சியோ, தொலைபேசியோ அனைவரின் சத்தமில்லாத மேற்பார்வையில் தான் 16--21 வயது பருவத்தினருக்கு கிடைக்கப் பெற்றது. ஆனால், இன்று இளம் தலைமுறையினருக்கு பள்ளி பருவத்திலே கண்காணிப்பில்லாத 'பிரைவசி' அளித்துவிட்டோம்.
வெப்சைட்டில் கவர்ச்சி விளம்பரம் : ஹார்மோன் விளையாட்டின் வடிகாலாய் மனதையும், புத்தியையும் இணையதளம் அல்லவா தனிமையில் தின்று கொண்டிருக்கிறது. இப்படி எழுதியமைக்கு என்மீது கோபம் கொள்பவர்களும் இருக்கலாம்; பக்கம் பக்கமாக இணையதளத்தின் நன்மைகளை பட்டியலிடவும் வரலாம். எங்களுக்கு நடந்த சம்பவத்தை சொல்கிறேன். அன்றைய தினம் கம்ப்யூட்டர் ஆய்வகத்தில் மாணவர்கள் 'புரோகிராம்' செய்து கொண்டிருந்தார்கள். இடையே ஒரு கேள்வி எழுப்பினேன். அனைவரும் விடையை 'கூகுள்' செய்து கொண்டிருந்தார்கள். ஒரு மாணவன் மட்டும் விடையைக் கண்டு, நான் அருகில் சென்றவுடன் அவஸ்தையாக நெளிந்தான். காரணம் புரியாமல் திரையை பார்க்கும் போது அந்த 'வெப்சைட்'டில் விடையுடன் ஓரத்தில் கவர்ச்சியான பெண் புகைப்படத்துடன் ஒரு விளம்பரம் இருந்தது. மாணவர்கள் பாடம் சம்பந்தமாக படிக்கும் பக்கத்தில் எப்படி நுழைந்தது இந்த கவர்ச்சி விளம்பரம். நானோ, மற்றவர்களோ அருகில் இல்லையெனில் அவனுள் ஒரு குறுகுறுப்பு ஏற்பட்டு அது என்னவென்று பார்த்திருப்பான். வணிக மையத்தில் காம வியாபாரிகள் குறிவைப்பது இப்பருவ வயதினரைத்தானே.
என் வாழ்க்கைஎன் கையில் : இது தவறு எனும் பக்குவமுள்ளவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள், இயலாதோர் பலியாகிறார்கள். பலியாவதோடு இல்லாமல் பலிகேட்கவும் தொடங்கி விட்டார்கள். பாவம் காதலா, காமமா என அறியாமலே ஆசை வயப்பட்டு கிடைக்காத கோபத்தில் கொலையாளி ஆகிறார்கள். இங்கு குற்றவாளிகள் யார். இவர்களை போன்ற பேதமைகளை உருவாக்கிய திரைப்படங்கள், உணர்வுகளோடு விளையாடும் இணைய தளங்கள், நாம் மேலைநாடு கலாசாரத்தில் உந்தப்பட்டு கொடுத்த 'பிரைவசி'. கட்டுப்பாடற்ற சுதந்திரம், என் வாழ்க்கை என் கையில் எனும் மனப்போக்கு மேலை நாட்டு கலாசாரத்தில் உள்ளது, அவர்களின் சூழ்நிலைக்கு சரி என கொள்ளலாம். நம் கலாசாரத்திற்கும், பண்பாட்டிற்கும் ஒத்து வராது. இன்றைய காலகட்டத்தில் 'மாடர்ன்' எனும் பெயரில் நமது கலாசாரமும் இல்லாமல், மேலைநாட்டு பண்பாடும் இல்லாமல் திரிசங்கு சொர்க்கம் போல் அந்தரத்தில் பரிதாபமாக உள்ளோம்.
குழந்தைகள் மனதில் நஞ்சு : கல்லுாரி, பள்ளி மாணவி காதலனால் குத்தி கொலை, ஆசிட் வீச்சு, தீ வைப்பு... இன்னும் மனம் ரணமாகும் செய்திகள் எத்தனை எத்தனை. அனைத்துக்கும் காரணமான இனக்கவர்ச்சி எனும் பாலியல் விளையாட்டை அறிமுகப்படுத்திய நவீன அறிவியல் ஊடகம், குற்றம் நடைப்பெற்ற பின் குற்றவாளியை கைகாட்டி ஒதுங்கிக் கொள்கிறது. திரைப்படங்கள், நாடகங்கள் மட்டுமே மூலகாரணம் என எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால், அந்தக் கவர்ச்சி புள்ளி பல விட்டில் பூச்சிகளை ஈர்க்கும் சக்தி கொண்டது. எதுவும் தவறில்லை என்ற எண்ணத்தை சாதாரணமாக போகிற போக்கில் கற்பித்து விடுகிறது. திரைப்படங்கள், ஊடகங்களால் இளமொட்டுகள் பிஞ்சிலேயே கருகிக் கொண்டிருக்கிறது. பொறுப்புள்ளவர்களே, விரைந்து இனியேனும் இவர்களை மாயவலையில் சிக்காமல் காப்பாற்றுங்கள்.
இரு கையேந்தி உதவி : என் வீரிய மாணவ இளைய சமுதாயமே, சத்தமேயில்லாமல் சமூக சீர்கேடுகள் விஷக்கிருமிகளாய் பரவப் பார்க்கிறது. இப்பருவத்தில் ஏற்படும் மாற்றங்களை வெல்லும் ஒரே ஆயுதம் மனதை ஒருமுகப்படுத்துவதே. உங்களுக்கு பிடித்தமான கலைகளில் கவனத்தை திருப்புங்கள். யோகா, தியானம், விளையாட்டுகளில் திறன் வளர்த்திடுங்கள். சாதனையாளர்கள், வெற்றியாளர்கள் இப்பருவ வயதை எவ்வாறு கடந்தார்கள் என வாசியுங்கள்.நாளைய சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியை என்ற பொறுப்பில் கூறுகிறேன். பெற்றோர்களே, இப்பருவ வயதுடைய வளர்ந்த குழந்தைகளை சுற்றி உறுத்தாத கண்காணிப்பு வளையம் அமையுங்கள். குழந்தைகள் ஒளிவு மறைவின்றி நம்மிடம் பகிர்ந்தால் மட்டுமே, நாம் பெற்றோர் என்ற முறையில் வெற்றி பெற முடியும். ஆரோக்கியமான இளைய தலைமுறையை பெற்றோர், ஆசிரியர்கள், சமூகப் பொறுப்பாளர்கள் இணைந்து தர வேண்டும்.
ரா.லீனா ஸ்ரீஉதவிப் பேராசிரியைதியாகராஜர் பொறியியல்கல்லுாரி, மதுரைrleenasriyahoo.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement