Advertisement

ஒழுக்க நெறியே உயர்ந்த நெறி

மனிதன் என்ற பெயர் வரக் காரணம் என்ன? மனம்உள்ளதால் அவன் மனிதன்.மனதின் சிறப்பம்சம் என்ன?
சிந்திக்கும் திறன். இந்த திறன் வேறு எந்த உயிரினத்துக்காவது உண்டா? மனிதனுக்கு மட்டுமே உண்டு. அந்த திறனை வைத்து தான் இந்த அளவுக்கு அவன் வளர்ந்துஇருக்கிறான்.சரி, மனம் என்று ஒன்று இருந்தால் மனசாட்சி என்று ஒன்று இருக்க வேண்டுமே. அதுவும் இருக்கிறது. ஆனால், மனச்சாட்சிக்கு மதிப்பு இருக்கிறதா? இல்லையே. ஆம். மனசாட்சி தினந்தினம் செத்து பிழைக்கிறது என்பதும், மிதித்து நசுக்கப்படுகிறது என்பதும் தான் உண்மை. ஏன்?
அப்படி என்ன ஆகிவிட்டது? அதை சொல்வதற்கு முன்னால் மனச்சாட்சி, மனிதப் பண்புகள், ஒழுக்க நெறி ஆகியவற்றை மூன்று கால கட்டங்களில் பார்ப்போம்.
நேற்று
இளவரசன் ஓட்டிவந்த தேர் ஏறி, தன் கன்று இறந்தது என்று மன்னனிடம் முறையிட்டது ஒரு பசு. தன் மனசாட்சிக்கு மதிப்பளித்து மன்னன் எப்படி நீதி வழங்கினான் என்று எல்லோருக்கும் தெரியும். அவன் மனுநீதி சோழன். தன்னிடம் தஞ்சம் புகுந்த புறாவை, கழுகிடமிருந்து காப்பாற்ற தன்னுடைய தொடை சதையையே அறுத்து தராசில் வைத்து மனிதப் பண்பை காட்டினான் ஒரு மன்னன். அவன் சிபிச்சக்கரவர்த்தி. மன்னனின் தீர்ப்பு தவறானது என்று மக்களில்ஒருத்தராகிய கண்ணகி, நிரூபித்தாள்.
பிழையை உணர்ந்த பேரரசன் அப்போதே உயிர் விட்டான். அவன் நெடுஞ்செழியன். படர வழியின்றி தவித்த முல்லையை தனது தேரில் படரவிட்டு, பரிவைக் காட்டினான், பாரிவேந்தன். குளிரால் நடுங்கிய மயிலுக்கு தனது சால்வையை போர்த்தி தனது பெருந்தன்மையை காட்டினான், பேகன். மன்னர் காலத்தை விடுங்கள்.
இப்போது வாருங்கள்...இங்கிலாந்தில் இருந்த தனது சொத்துக்களை விற்று இந்த நாட்டுக்காக பெரியாறு அணையை கட்டி தந்தாரே ஆங்கிலேயர் பென்னிகுவிக், அவரது பெருந்தன்மைக்கு ஈடாக எதை சொல்வது? எந்த நாட்டிலோ பிறந்து இந்த நாட்டுக்கு வந்து, இங்குள்ள ஏழை எளிய மக்களுக்கும், நோயாளிகளுக்கும் அன்னையாய் மாறிஆதரவு அளித்த தெரசாவுக்குஇருந்ததை மனிதப் பண்பென்றா சொல்வது? அதையெல்லாம் தாண்டிய புனிதமான தெய்வ பண்பல்லவா அது? அப்துல்கலாம் தமிழகம் தந்த ஜனாதிபதி. எளிமை, துாய்மை, நேர்மை, இத்தனைக்கும் எடுத்துக்காட்டாய் வாழ்ந்து நம் இதயங்களில் இடம் பிடித்த ஏந்தல் அல்லவா அவர்.
இன்று
மனித பண்புகள், மனச்சாட்சி, மனிதநேயம், ஒழுக்க நெறிகள் உள்ளத் துாய்மை, நெஞ்சில் நேர்மை இவற்றை எப்படி தேடினாலும் இன்று எங்குமே காண முடியவில்லையே. ஊழல் உலகளாவியது என்ற உண்மை இன்று ஓங்கி வளர்கிறது. அதனால் ஒன்பதாயிரம் கோடி, பனிரெண்டாயிரம் கோடி என்று வங்கி ஊழல்கள் வளர்ந்து வருகின்றன. பல்கலை கழக ஊழல்கள், குட்கா ஊழல், செம்மரக்கடத்தல் ஊழல். ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன், கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி, கள்ளத்துப்பாக்கி விற்ற காவலர், தங்கம் கடத்திய விமானப் பணிப்பெண், ஐ.ஏ.எஸ்., தேர்வில் பிட் அடித்த ஐ.பி.எஸ்., அதிகாரி, கொடுமையிலும்கொடுமையாக, பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தகப்பன் என எத்தனையோ ஒழுக்க கேடுகள், தினத்துக்கு இரண்டாவது நடந்து கொண்டு தானே இருக்கின்றன.
எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என்பது போல், எப்படி இருந்த நாடு இப்படி ஆகிவிட்டது. அதுவும் இந்தியா மிகவும் தொன்மை வாய்ந்த நாடு. ஆதிசங்கரர், புத்தர், ராமகிருஷ்ணர், விவேகானந்தர்,வள்ளலார், பட்டினத்தார்,திருமூலர், அவ்வை போன்ற ஆன்றோர் அவதரித்த நாடு. இப்பேர்பட்ட நாட்டில் தான், இன்று இப்படி ஒரு இழிநிலை. இது வேதனை தரக்கூடியது அல்லவா? நாளைக்கான மாற்றத்தை நாம் இன்றைக்காவது சிந்திக்கஆரம்பிக்க வேண்டாமா?
நாளை
இன்று இப்படி இருக்கிற நாம், நாளை எப்படி ஆக வேண்டும்?அதற்கு எப்படி செயல்படவேண்டும்?இதுதான், நாளை பற்றிய இன்றைய கேள்விகள். நாம் மாற வேண்டும். மாறியே ஆக வேண்டும். இல்லையேல் நாறிப்போவது உறுதி. மெல்லத் தமிழினி சாகும் என்ற சொற்கேட்டு உள்ளம் நொந்தவன் பாரதி. தமிழ் சாகாதுதான். ஆனால் தமிழினம் தன் பெருமையை மெல்ல மெல்லசாகடித்து கொண்டிருக்கிறதே, இது சரியா? போனது போகட்டும்.
இன்று என்பது நம் வசம் இருக்கிறது. நாளையும் நம் வசமே இருக்க வேண்டும். நாளை நம் வளம் பெருக வேண்டும்.என்ன செய்யலாம்? முதலில் இதற்கெல்லாம் என்ன காரணம் என்று கண்டுபிடிக்க வேண்டும். நோயை தீர்க்க வேண்டுமானால், நோய்க்கான காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும். எவன் எக்கேடு கெட்டால் என்ன? நான் நன்றாக இருக்க வேண்டும்.அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். என்னை சுற்றி இத்தனை அவலங்கள்ஆட்டம் போடும்போது என் ஒருவனால் என்ன செய்ய முடியும் என்ற அசட்டுச்சித்தாந்தம்.
பாடங்களோடு சேர்த்து பண்புகளையும் சொல்லித் தராத பாடத்திட்டம். பால்ய பருவத்திலேயே நல்ல பண்புகளையும், பழக்க வழக்கங்களையும் அறிமுகப்படுத்தாத பெற்றோர்களாக பெரும்பான்மையினர் ஆகிவிட்டனர்.பெற்றோர் சொல்லை விட, ஆசிரியர் சொல்லை விட,நண்பர்களின் சொல்லுக்கே அதிக மதிப்பு தருபவர்களாக மாறிவிட்ட இளையதலைமுறை. சகிக்கமுடியாத அளவுக்கு மக்களிடம் மண்டிக்கிடக்கும் சகிப்பு தன்மை. இதையெல்லாம் தாண்டி சிலர் சிந்திக்கிறார்கள். மக்களை செயல்பட துாண்டுகிறார்கள். ஆனால், ஒன்று சேரவிடாமல் ஒரு தயக்கம் தடுக்கிறது. சரி, தீர்வு? அது தானே முக்கியம்.
தீர்வு என்ன
நாம் எப்பேர்ப்பட்ட பெருமைக்குஉரிய இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை முதலில் உணர வேண்டும். இனியும் இந்த இழிநிலை இருக்க கூடாது என்ற உறுதி உள்ளத்தில் உதிக்க வேண்டும். வசீகரப் பேச்சு போன்றவற்றில் சிக்கி சீரழியக்கூடாது. அடுத்த வீட்டில் தீப்பிடித்தால் எனக்கென என்ற அலட்சிய மனோ பாவம் மறைய வேண்டும். நாட்டில் ஆயிரம் குறைகள் இருக்கலாம். குறைந்தபட்சம் அவரவர் தெருவில் உள்ள குறைகளையாவது நீக்க, துடிப்பான இளைஞர்களும், அனுபவம்மிக்க முதியவர்களும் இணைந்து செயலாற்ற வேண்டும்.
குறைகள் தீரும் வரை தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். அதற்கான அதிகாரிகளை துாங்கவிடக்கூடாது.மக்கள் நலனை பற்றி சிந்திப்பதற்கு நேரமோ மனமோ இல்லை என்றால், மக்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு திறமையோ ஆற்றலோ இல்லையென்றால் அவர்களுக்கு அரசன், அதிகாரி என்ற பெயர்களை விடபொம்மைகள் என்ற பெயர்கள் தானே பொருத்தமாக இருக்க முடியும்.
அப்படிப்பட்டவர்களை அப்புறப்படுத்த முயற்சி எடுக்காத மக்களுக்கு அடிமைகள் என்ற பெயர்தானே பொருத்தமாக இருக்க முடியும். ஆகவே தேவைப்பட்டால் போராடவும் தயங்க கூடாது. அத்து மீறும் போராட்டம் அல்ல. உரிமைக்கானபோராட்டம் என்று உணர்ந்து உறுதியுடன் போராட வேண்டும்.
ஒழுக்கம்எல்லாவற்றுக்கும் அடிப்படையாக, தனிமனித ஒழுக்கத்தில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.''ஒழுக்கத்தால் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி''ஒழுக்கத்தால் மட்டுமே ஒருவன் மேன்மை அடைய முடியும். ஒழுக்கம் தவறினால் பழிதான் பரிசு. ஒருவனுக்கு ஆயிரம் திறமைகள் இருக்கலாம். ஆனால்,குடியும், கோபமும், ஆணவமும்ஒழுக்க குறைவும் அவனை மேன்மை அடைய விடாமல்,பள்ளத்தில் இழுத்து வந்து படுக்க வைத்து விடும் என்கிறார் சுதங்கமா முனிவர். உயர்வுக்கான வழி,ஒழுக்கம் கலந்த உழைப்பேஎன்பது தான் உண்மை. தமிழர்களிடம் உன்னதமான உழைப்பு உண்டு. ஆனால், தனிமனிதஒழுக்கம், நேர்மை இவற்றை சரி செய்தால் அவனை வெல்ல அவனியில் எவனும் இல்லை.
-தங்கவேலு மாரிமுத்து
எழுத்தாளர்திண்டுக்கல்93603 27848

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    மனிதன் மன்னிப்பான் மானியான் மதமிழான் உத்தமன் - டீ.கே. ஷண்முகம் நாடகமான மனிதன் கதையில்பெரியோர் மனிதனுக்கான இலக்கணங்களாக வகுத்து வைத்துள்ளதாக வரும் வசனம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement