Advertisement

எங்கெங்கு காணினும் சக்தியடா!

ஆண்களுக்கு இங்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை மெய்ப்பிப்பதாக அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். இந்தியாவிலும் பெண்கள் 1917 வரை ஓட்டளிக்க உரிமையில்லாத நிலையிருந்தது. கேரள அரசும், சென்னை மாநிலமும் பெண்கள் ஓட்டளிக்க முதன்முதலில் சட்டம் இயற்றின. முத்துலட்சுமிரெட்டி முதல் பெண் சட்டசபைஉறுப்பினரானார். அதன் பின் தான் பல ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் பெண்கள் ஓட்டளிக்கும் உரிமை பெற்றனர். இந்தியா சுதந்திரம் பெற்ற பின் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். இனம், பால், மொழி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு செய்யக் கூடாது என குறிப்பிட்டது.
1901 ஆண்டு கணக்கெடுப்பின்படி 1000 ஆண்களுக்கு 1027 பெண்கள் இருந்தனர். இந்நிலை படிப்படியாக குறைந்து வருகிறது. நவீன ஸ்கேன் போன்ற உபகரணங்கள் உதவியுடன் கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனக்கண்டுபிடித்து கூறுவது குற்றம். அவ்வாறு செய்யும் டாக்டர்கள் மீதும் பரிசோதனை நிலையங்கள் மீதும் குற்ற நட வடிக்கை எடுக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. குழந்தைக்கோ அல்லது தாயின் உடல் நலத்திற்கோ குழந்தை பிறப்பு ஊறுவிளைக்கும் என்ற நிலையில் மட்டுமே கருக்கலைப்பிற்கு அனுமதி உண்டு. அரசு அனுமதியின்றி செயல்படும் இடங்களிலும் தகுந்த காரணமின்றியும் மற்றும் தகுதியில்லாத நபர்களாலும் செய்யப்படும் கருக்கலைப்பிற்கு ஒரு குழந்தை உயிருடன் பிறந்த பின் அதனைக் கொன்றால் என்ன தண்டனை கிடைக்குமோ அந்த தண்டனை கிடைக்கும் என வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அரசின் கடமை : கட்டாயக் கல்வி சட்டம், ஆண் பெண் குழந்தைகளுக்கு 14 வயது வரை துவக்க கல்வி கொடுப்பது அரசின் கடமையாகுகிறது. சிறார் நீதி மற்றும் பாதுகாப்புச் சட்டம், 18 வயதிற்குட்பட்ட அனைவரும் குழந்தைகள் எனவும், ஆதரவு தேடும் குழந்தைகளை பெற்றோர்களை போல பாதுகாப்பது அரசின் கடமை என்றும், குழந்தைகளை பராமரிக்காத பெற்றோருக்கும் பாதுகாவலருக்கும் தண்டனை உண்டென்று கூறி குழந்தைகள் உரிமையை பாதுகாக்கிறது. 1978 குழந்தை திருமண சட்டப்படி திருமண வயது 18 ஆகும். 1929ல் இயற்றப்பட்ட சட்டப்படி 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு திருமணம் செய்வது குற்றமாகும். சமீபத்தில் ஒரு ஆய்வின்படி உலகில் 18 வயதுக்கு கீழே திருமணம் செய்யப்படும் பெண்களின் எண்ணிக்கை ஆறு கோடி. இவர்களில் 40 சதவீதம் பேர் இந்தியர்கள்.
இழப்பீடு பெற வழி : 18 வயதுக்குட்பட்ட பெண்ணை திருமணம் செய்யும் ஆணுக்கும் திருமணத்தை நடத்தி வைப்பவர்களுக்கும் சிறைத் தண்டனை வழங்கலாம் எனச் சட்டம் கூறுகிறது. திருமணத்தின் போதும் அதற்கு முன்பும் பின்பும் வரதட்சணை கேட்பதும் மற்றும் கொடுமைப்படுத்துவதும் குற்றம் என வரதட்சணை தடுப்பு சட்டம் 1961 ல் இயற்றப்பட்டது. மணம் ஆகாமல் கணவன், மனைவி போல் வாழ்பவர்களும் இச்சட்டத்தின் கீழ் நிவாரணம் கோரலாம். மனைவியை கணவனின் அல்லது அவரது உறவினரின் வீட்டிலிருந்து வெளியேற்ற முடியாது. விவாகரத்தான பெண்கள், குழந்தையை தானே வளர்க்க உரிமை கோரலாம். மேலும் தன்னையும் தன் குழந்தைகளையும் பராமரித்து கொள்ளவும், உளவியல் உடல் ரீதியான சித்ரவதை பாதிப்பிற்கும் கணவன் மற்றும் அவரது உறவினர்களிடமிருந்து இழப்பீடு பெறவும் சட்டப்படி உரிமைஉள்ளது. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசு பாதுகாப்பு அதிகாரிக்கு, நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றத் தவறினால் ஒரு ஆண்டு சிறைத்தண்டனையை இச்சட்டத்தின் கீழ் வழங்க முடியும். தற்போது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் நீதிமன்றங்களும் சிறப்பு அரசு வழக்கறிஞர்களும் உள்ளனர். 1990ல் வெளியான ஒரு புள்ளி விபரம் இந்தியாவில் மூன்று நிமிடத்திற்கொரு பாலியல் பலாத்காரமும், ஒவ்வொரு 7 நிமிடத்திலும் பெண் கடத்தப் படுவதாகவும், ஒவ்வொரு 43 நிமிடத்திற்கும் ஒரு பெண் தற்கொலை செய்து கொள்வதாகவும் குறிப்பிட்டது. தற்போது கடுமையான சட்டங்களால் இந்நிலை குறைந்துவிட்டது. மனித உரிமை ஆணையம், தேசிய பெண்கள் ஆணையம், மாநில பெண்கள் ஆணையம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விசாரிக்கப்படுகிறது. இதற்கு தமிழிலும் புகார் அனுப்பலாம். நீதிமன்றம் கட்டணம் கிடையாது. ஒவ்வொரு நீதிமன்றங்களிலும் செயல்படும் சட்டப்பணிகள் ஆணைக்குழு பெண்களுக்கு இலவச சட்ட உதவியை வழங்குகிறது. தற்போது பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டுத் திட்டமும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குற்றச்சம்பவங்கள் இயற்கை பேரிடர் விபத்து போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர் இதன் மூலம் ஆண், பெண் வேறுபாடின்றி இழப்பீடு பெறலாம்.
உரிய பிரதிநிதித்தும் இருக்கிறதா : உலக மகளிர் தினம் கொண்டாடப்படும் நுாறு ஆண்டுகளுக்கு பின்னரும் கூட இந்தியாவில் மூன்று உயர்ந்த அமைப்புகளான நீதித்துறை, சட்டமியற்றும் துறை மற்றும் நிர்வாகத்துறை ஆகிய வற்றில் பெண்களின் பங்களிப்பு அவர்களின் மக்கள் தொகை அளவிற்கேற்ப இல்லை. இந்தியாவில் 24 உயர்நீதிமன்றங்களில் சத்தீஸ்கர், இமாச்சலபிரதேசம், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, உத்தரகண்ட் மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் ஒரு பெண் நீதிபதி கூட இல்லை. ஆனால் இந்தியாவிலேயே அதிக பெண் நீதிபதிகளை கொண்ட உயர்நீதிமன்றங்களான சென்னை, மும்பை திகழ்கிறது. சென்னையிலுள்ள 58 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 11 பெண் நீதிபதிகள் முன்மாதிரி தீர்ப்புகளை வழங்கி கொண்டுள்ளனர். தமிழகத்தின் விசாரணை கீழமை நீதிமன்றங்களில் 33 சதவீத பெண்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள். ஆனால் 1950 முதல் இன்று வரை இந்திய உச்சநீதிமன்றத்தில் நான்கு பெண் நீதிபதிகள் மட்டுமே பணியாற்றியுள்ளனர். தற்போதுள்ள 26 நீதிபதிகளில் தமிழகத்தை சேர்ந்த ஒரே ஒரு நீதிபதி மட்டுமே பெண்ணாவார்.முன்னோடியாக தமிழகம் தற்போது இந்நிலை மாறத் துவங்கியுள்ளது. சட்டக்கல்லுாரிகளில் ஆண்களுக்கு இணையாக பயின்று வழக்கறிஞர் தொழிலில் தன் அதிகாரத்தை துவங்கியுள்ளனர். வாக்களிப்பதற்கே போராடிய பெண்கள், முதல் இந்திய பார்லிமென்டில் உறுப்பினர்களில் 4 சதவீத இடம் பிடித்தனர். தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களிலும் 10 சதவீத பெண்கள் உள்ளனர். இந்திய வரலாற்றில் முதன்முறையாக 2007ல் தான் பெண்ணான பிரதீபா பாட்டீலுக்கு ஜனாதிபதி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்தியாவிலுள்ள சட்ட மன்றங்களில் அதிக பெண் எம்.எல்.ஏ.,க்கள் உள்ள மாநிலங்களான பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் திகழ்கிறது. ஆனால் 15 சதவீத பெண் எம்.எல்.ஏ.,க்கள் கூட எந்த மாநிலத்திலும் இல்லை.இந்திய அரசியலில் அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரும் சட்ட மசோதா பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டு 14 ஆண்டுகளுக்கு பின்பு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட பின்பும் மக்களவையில் இன்று வரை நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்படவில்லை. 1988 உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம் இடஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இன்று அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு உயர்ந்து வருகிறது. ஆணுக்கு எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை என அவர்களின் செயல்பாடு உள்ளது. நீதி, நிர்வாகம், சட்டம் இயற்றல், தொழில் துறைகளில் பெண்களுக்கான வாய்ப்புகள் பிரகாசமாகவுள்ளன. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநில தலைமை செயலராக பெண்கள் இன்று சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சிஅளிக்கிறது. இந்த மகிழ்ச்சி எல்லா துறைகளிலும் தொடர உறுதி ஏற்க வேண்டும்.
-முனைவர் ஆர்.அழகுமணிவழக்கறிஞர், மதுரை98421 77806

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement