கட்டியங்காரன் வந்துட்டேன் நல்லாப் பாருங்க..
இருவர் சுமந்து வந்த திரை விலகியிதும் வித்தியாசமான மீசை முகப்பூச்சுடன் நாகரீக கோமாளிக்கான வண்ணமயமான ஆடையுடன் சிறுவன் ஒருவனும் இளைஞர் ஒருவரும் கட்டியங்காரன் வேடமிட்டு மேடையில் ஆட்ட பாட்டத்துடன் வந்து நின்றனர்.பின் உரத்த குரலில் அபிமன்யு கூத்து நடக்கப்போவதை அறிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் கட்டைக்கூத்து சங்கத்தின் சார்பில் சென்னை தட்சின்சித்தராவில் ஒரு மணிநேரம் நடைபெற்ற அபிமன்யு தெருக்கூத்து எவ்வளவு நாளானாலும் நினைவைவிட்டு அகலாது.
ஏறக்குறைய 28 கலைஞர்கள் அபிமன்யு கட்டைக்கூத்தை நடத்தினர். கூத்தில் இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் ஆகியவை மூன்றும் சரிவிகிதத்தில் சங்கமித்தன. கிருஷ்ணன், அபிமன்யு போன்ற பிரதான கதாபாத்திரங்களையும் பெண்களே ஏற்று நடத்தினர்.அதிலும் அபிமன்யுவாக நடித்த சிறுமி பலரையும் அழவைத்துவிட்டார் கைகால்கள் வெட்டப்பட்ட போதும் வீரம் சிறிதும் குறையாதவராக தலையை கொய்யப்படும்வரை ஆவேசத்துடன் போரிடுபவராக நடித்து பலத்த பாரட்டைப் பெற்றார்.
சினிமாவால் கபளீகரம் செய்யப்பட்ட பல்வேறு கலைகளில் இந்த கட்டைக்கூத்து கலையும் ஒன்றாகும்.பெரும்பாலும் மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்களை எடுத்துக் கொண்டு கிராமங்களில் விடிய விடிய கூத்தை நடத்துவர்.பலவிதமாக முகத்துக்கு வேடமிட்டுக்கொண்டு வண்ணமயமாக ஆடை உடுத்திக்கொண்டு அவையோர் அனைவருக்கும் மைக் இல்லாமலேயே கேட்கக்கூடிய உரத்த குரலில் ஆடிப்பாடி நடத்தப்பட்ட இந்த கட்டைக்கூத்து அழிந்துவிடக்கூடாது என்பதற்காக காஞ்சிபுரம் கட்டைக்கூத்து சங்கம் அரும்பாடுபட்டு வருகிறது.
பெருங்கட்டூர் ராஜகோபால். கட்டைக் கூத்து சங்கத்தைத் தொடங்கியவர், இதில் நாற்பது ஆண்டு கால அனுபவம் கொண்டவர்.கட்டைக் கூத்துப் பயிற்சி அளிப்பதற்கு என்றே தனியாக உண்டு உறைவிடப் பள்ளியை நடத்திவருபவர். அந்தப் பள்ளியில் பயின்று, இன்று தமிழ்நாடு முழுவதும் பலநூறு கூத்துக்கலைஞர்கள் கட்டைக் கூத்தைச் நடத்திவருகின்றனர்.
இந்த அருமையான கட்டைக்கூத்து அழிந்துவிடாமல் இருக்க நமது ஆதரவு நிறைய தேவை ஆங்காங்கே இவை தொடந்து நடத்தப்பட வேண்டும் இது தொடர்பாக ராஜகோபாலிடம் பேசுவதற்கான எண்:9994556473.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!