Advertisement

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆற்றல்

ஒவ்வொருவருக்குள்ளும் எவ்வளவு ஆற்றல்கள் ஒளிந்திருக்கின்றன என்று நமக்குத் தெரியுமா? நாம் ஒவ்வொருவரும் ஆற்றல் மிக்கவர்கள். ஆனால், யானையைப் பிணைத்திருக்கும் சங்கிலியையும் கட்டையையும் போன்று தன்னம்பிக்கை குறைவு முதலான பல செய்திகள் நம்மைப் பலமற்றவராக ஆக்கி வைத்துள்ளன. நம்முடைய கட்டுப்பாடுகள், மூட நம்பிக்கைகள், போலி வாழ்க்கை, நமக்கு நாமே போட்டுக் வைத்திருக்கின்ற கட்டுப்பாடுகள், நம்முடைய பழக்கவழக்கங்கள் எல்லாமே சேர்த்து நம்மை வலுவிழக்க வைத்து சங்கிலியால் பிணைத்து வைத்திருக்கின்றன.நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால் இவ்வுலகில் எந்தச் சாதனையையும் விலங்குகளோ பறவைகளோ நடத்திக் காட்டிவிடவில்லை. நடத்திக் காட்டவும் முடியாது.அணுகுண்டைக் கண்டுபிடித்தவனும் மனிதன்தான்! அமைதி வழியில் அறப்போர் நடத்தி விடுதலை வாங்கித் தந்த காந்தியடிகளும் மனிதன்தான்!சந்திரனிலே நடந்து காட்டியவன் மனிதன்தான்! சந்திரனைப் பற்றிக் கவிதை எழுதுபவனும் மனிதன்தான்!ஆற்றலை நம்புங்கள்மற்றவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு? இவர்களெல்லாம்தங்களிடமிருந்த ஆற்றலை ஏதோ ஒரு வடிவத்தில் வெளிக்கொண்டு வந்தார்கள். வரலாறு தன் வாரிசுப் பட்டியலில் அவர்களை இணைத்து கொண்டது. நம்மில் பலரோ,நாலாவது வீட்டுக்காரனுக்குக் கூடத் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே!யூதக் குடும்பத்திலே பிறந்த அந்தச் சிறுவனுக்கு முதலில் பேசக் கற்றுக்கொள்வதே நிதானமாக இருந்தது. பள்ளிப் படிப்பில் பின்தங்கிய மாணவன், விளையாட்டில் துளிக்கூட திறமை இல்லாததால் அவனுடைய தந்தை கவலைப்பட்டார். பழகுவதற்கு நண்பர்கள் இல்லை. தனிமையில் வாடிய அவன், பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் முதல் முயற்சியில் தேறவில்லை. இரண்டாவது முயற்சியில் 'தப்பித்தோம் - பிழைத்தோம்' என்று தேறியதே பெரும் பாடாயிற்று.மேலே நாம் பார்த்த சிறுவன் கதை அப்படியென்றால்,இன்னொரு மனிதனின் இளமைப் பருவத்தைக் காணலாம்.பிறக்கும்போது, தலை தேங்காய்போலப் பெருத்திருந்ததால் அவனுக்கு மூளையில் கோளாறு இருக்கக் கூடும் என்று எல்லோரும் அஞ்சினார்கள்.வகுப்பறையில் உட்கார்ந்து அவன் கனவு காண்பதைக் கண்ட ஆசிரியர், அவனுக்குப் படிப்பு வராது என்று சொல்லிவிட, வீட்டில் அவனுக்குப் படிப்பு சொல்லிக் கொடுத்தது அவன் தாய். அவனுடைய விசித்திரமான முயற்சிகளையும், விளையாட்டுகளையும் பார்த்த மற்றவர்கள் தீர்மானித்தது 'இந்தப் பையன் ஒரு மாதிரி' என்று. பையனின் அப்பாவே, மகன் சரியில்லை என்று நினைத்தார். மொத்தத்தில் அந்தச் சிறுவன் பள்ளிக்கூடத்தில் முறையாகப் பெற்ற கல்வியே மூன்று மாதங்கள்தாம்.முதலில் நாம் பார்த்த சிறுவன் யாராக இருக்கக்கூடும்? அவன்தான் இன்றுவரை உலகில் தோன்றிய விஞ்ஞானிகளிலேயே தலை சிறந்த அறிவியலறிஞர் என்று புகழப்படுகின்ற, நோபல் பரிசு பெற்ற ஆல்பிரட் ஐன்ஸ்டீன். இரண்டாவதாக நாம் பார்த்த மக்குச் சிறுவன்தான் மிகவும் அதிகமான அறிவியல் படைப்புகளைக் கண்டுபிடித்து உலகையே கலக்கிய மனிதர். அவர்இல்லையேல் சினிமா இல்லை. ஏன் மின்சார பல்பே இல்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்டபடைப்புகளை உருவாக்கிய அவர்தாம் தாமஸ் ஆல்வா எடிசன்.
விளையும் பயிர் நண்பர்களே! : விளையும் பயிர் முளையிலே தெரியுமே! என்ற பழமொழி பயிர்களுக்குப் பொருந்தலாம். ஆனால் மனிதர்களுக்குப் பொருந்த வேண்டும் என்ற கட்டாயமில்லை. உள்ளிருக்கும் ஆற்றல்கள் வேறு. வெளித் தோற்றம் வேறு!ஆகவே நம்புங்கள், நமக்குள் நிறைய ஆற்றல்கள் ஒளிந்திருக்கின்றன.வாழ்க்கையில் கொஞ்சமாவது சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டும். வெற்றி அப்போதுதான் கிட்டும். சிரமப்படாமல் சிகரங்களைத் தொட முடியாது.என்னிடம் எந்த ஆற்றலும் இல்லை என்று நிச்சயம் எந்த மனிதனாலும் சொல்லவேமுடியாது. சொன்னால் அது பொய். பொய் சொல்லும் ஆற்றலாவது இருக்குமல்லவா?எதிர்காலத்துக்காக நாம்திட்டமிடும்போது இந்த ஆற்றல்பட்டியல் அவசியம் தேவையல்லவா?வாழ்க்கையில் எவ்வளவோ நேரத்தை வெட்டிப் பேச்சில் கழிக்கிறோம்.இன்று மாலை உங்கள் நண்பர்களைச் சந்திக்கும்போது ஏன் ஒவ்வொருவரும் தத்தம் ஆற்றல் பட்டியலைத் தயாரித்து அதை ஆராயக்கூடாது.“உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆற்றல்” என்ற தலைப்பில் ஒரு பயிற்சியாளர் ஒரு குழுவுக்குப் பயிற்சி அளித்து வந்தபோது, அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்.“ஒரு செங்கல்லின் பயன் யாது?”
வந்த பதில்கள் : கட்டடம் கட்ட, யாரையாவது தாக்க, மஞ்சள் குங்குமம் இட்டு கடவுளாக வணங்க, சின்ன நீரோடையைக் கடக்கும்போது கால்வைக்க, செங்கல் துாளில் பல் துலக்க, மிளகாய்த் துாளில் கலப்படம் செய்ய, சிறிய கல்லாக உடைத்து முட்டுக் கொடுக்க, புடலம்பிஞ்சி கட்டித் தொங்கவிட, 'பேப்பர் வெயிட்' போல் பயன்படுத்த, அவசர அடுப்புத் தயாரிக்க, தோட்டத்தில் பாதைகளில் எல்லையாகப் பதிக்க, செடி நடும்போது சுற்றுத் தடுப்பு கட்ட! இப்படிப் பல பதில்கள் வந்தன!ஒரு சாதாரணச் செங்கல்லே இத்தனை வேலைகளைச் செய்யும் போது, நம்மால் எவ்வளவு செய்ய முடியும்?ஒரு செங்கல் - அதற்குக் கை, கால்கள், ஐம்புலன்கள், உயிர் ஒன்றும் கிடையாது. ஆனால், அது பல செயல்களைச் செய்யப் பயன்படும்போது, நமக்கு உயிர் இருக்கிறது. உடல் இருக்கிறது. உறுப்புகள் இருக்கின்றன. உணர்வும் இருக்கிறது. அப்படியானால் நாம் எத்தனை ஆற்றல்களை வளர்த்துக் கொள்ளலாம்? இன்னும் எவ்வளவு செயல்களைச்செய்யலாம்?
முயன்றால் முதல்பரிசு : உங்களுக்குள் ஆற்றல் ஒளிந்து இருக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் : ஒரு கல்லுாரியில் விளையாட்டுப் போட்டி நடக்கும் போது நுாறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஒருவர் விரைவாக ஓடி இரண்டாம் பரிசு வாங்குகிறார். இதுதான் தனது உண்மையான ஆற்றல் என்று கருதுகிறார். அது உண்மையா? அந்த வீரர் ஏதாவது ஒரு கிராமத்தின்புறப்பகுதியில் நடக்கும்போது நாய்கள் விரட்டிக் கொண்டு வந்தன. அப்போது தப்பிப்பதற்காக அவர் ஓடிய வேகம், ஓட்டப் பந்தயத்தில் ஓடி யதைவிட கூடுதலாக இருந்தது. அப்படியானால் அந்த ஆற்றல் அவருக்குள்தான் இருந்தது இல்லையா? முயன்றால் முதல் பரிசு கிடைத்திருக்கும். “உலகின் மிகப் பெரிய ஆற்றல் எது?” என்று விவாதம் நடந்தது. 'மின்சாரம்', 'காந்தம்', 'புவிஈர்ப்பு விசை' என்று ஆளுக்கொரு குரலை எழுப்பினர்.ஹிரோஷிமாவில் விழுந்த அணுகுண்டு 1,80,000 பேரை 2 நொடிகளில் கொன்றுவிட்டது. எனவே அணுசக்திதான் உலகிலேயே மிகப் பெரிய ஆற்றல் கொண்டது என்று ஒருவர் சாதித்தார். இன்னொருவர் கூறினார் 'அந்த அணுசக்தியைக் கண்டுபிடித்ததுகூட ஒரு மனிதரின் மூளைதானே. ஆகவே, உலகின் மாபெரும் ஆற்றல் மனிதனிடம்தான் மறைந்து கிடக்கிறது'.
மூளை விலை : மூளையைப் பற்றிச் சொல்லும் போது ஒரு நகைச்சுவை நினைவுக்கு வருகிறது.பல ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானில் மூளைக் கண்காட்சி நடந்ததாம். ஆராய்ச்சிக்காக மூளையும் விற்கப்பட்டதாம். அமெரிக்க மூளை ஐந்து லட்சம், ரஷ்ய மூளை பத்து லட்சம், சீன மூளை பதினைந்து லட்சம், ஜப்பான் மூளை இருபது லட்சம், இந்திய மூளை ஐம்பது லட்சம். ஏன் இந்திய மூளை மட்டும் விலை அதிகம்? மற்ற நாட்டில் மூளையைப் பயன்படுத்தி நிறைய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார்களாம். தேய்மானத்துக்குதக்கபடி விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதாம்.இந்திய மூளைதான் அதிகம் பயன்படுத்தப்படாமல், தேய்மானம் இல்லாமல் புதிதாக இருக்கிறதாம்.நமது சோம்பேறித்தனத்துக்கு கிடைத்த பரிசு இது.
-முனைவர் இளசை சுந்தரம்மதுரை வானொலி நிலைய முன்னாள் இயக்குனர்98430 62817

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement