Advertisement

டீ கடை பெஞ்ச்

'டபுள் மீனிங்'கில் பேசும் போலீஸ் அதிகாரி!

''புது அதிகாரியை போட்டதும், முன் தேதியிட்டு, இடமாறுதல் குடுத்துட்டாங்க வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.


''எந்த அதிகாரியைச் சொல்றீங்க...'' என, விசாரித்தார் அந்தோணிசாமி.


''சேலம் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்துல, பிப்ரவரி, 2ம் தேதி, லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துனாவ... சூப்பர்வைசர்கள் ரெண்டு பேர்கிட்ட, 2.50 லட்சம் ரூபாயை பறிமுதல் செஞ்சாவ வே...


''இது சம்பந்தமா, மாவட்ட மேலாளர் தெய்வநாயகியிடமும் விசாரிச்சாவ... அப்புறமா, லீவுல போன மேலாளர், மூணு வாரம் கழிச்சு தான், பணிக்கு வந்தாங்க வே...


''பிப்ரவரி, 27 அன்னைக்கு, தமிழ்நாடு பாடநுால் கழக உதவி இயக்குனர், முத்துராமலிங்கத்தை, சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளரா நியமிச்சாங்க... அவர், இதுவரை பணியில சேரலை வே...


''இதனால, 10க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு, பிப்., 23ம் தேதி போட்டு, மார்ச் 1ல, தெய்வநாயகி இடமாறுதல் குடுத்திருக்காங்க... இதுல, கூடுதல் விலைக்கு மதுபானம் வித்து, சிக்குனவங்களும் இருக்காவ... இதுக்கு, கணிசமான தொகை கைமாறி இருக்கு வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.


''நினைவிடம் கட்டுமான பணியை பிடிக்க, போட்டா போட்டி நடக்குதுங்க...'' என, அடுத்த விஷயத்திற்கு வந்தார் அந்தோணிசாமி.


''ஜெயலலிதாவுக்கு தானே, நினைவிடம் கட்ட போறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.


''ஆமாம்... சென்னை யில, 43.63 கோடி ரூபாய்ல, இந்த நினைவிடத்தை கட்ட, தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்திருக்கு... பொதுப்பணித் துறை கட்டடங்கள் பிரிவின் கண்காணிப்பு பொறியாளரின் நேரடி மேற்பார்வையில, இந்த பணி நடக்க இருக்குங்க...


''கண்காணிப்பு பொறியாளர் பதவி, இப்ப காலியா இருக்கு... இந்தப் பதவியை பிடிக்க, பொதுப்பணித் துறை அதிகாரிகள் மத்தியில கடும் போட்டி நிலவுதுங்க...


''ஜெ., நினைவிடம் கட்டுற பணியில ஈடுபட்ட பெருமை கிடைக்கும்னு தான், இப்படி முட்டி மோதுறாங்க... சென்னையைச் சேர்ந்த இருவர், கோவை, திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த இருவர்னு, நாலு அதிகாரிகள், கோட்டையை சுத்தி சுத்தி வர்றாங்க...'' என்றார் அந்தோணிசாமி.


''பொது விழாவுலயே, இரட்டை அர்த்தத்துல பேசறார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...


''திருச்சி பக்கம் இருக்கற மாவட்ட, போலீஸ் அதிகாரி ஒருத்தர், பள்ளி, கல்லுாரி விழாக்கள்ல, சிறப்பு விருந்தினரா கலந்துக்கறார்... அப்ப, 'டபுள் மீனிங்'ல பேசி, மாணவியரை நெளிய
வைக்கறார் ஓய்...


''வேலையிலயும், பெண் போலீசார்ட்ட, இதே மாதிரிதான், ஏடாகூடமா நடந்துக்கறார்... 'இன்னும், ஆறு மாசத்துல, 'ரிடையர்' ஆக போற வயசுல, இதெல்லாம் தேவையா'ன்னு பெண் போலீசார் தலையில அடிக்கறா ஓய்...


''அரசு வேலை வாங்கி தர்றதா, பண மோசடி செஞ்சுட்டதா, இவர் மேல, ஏற்கனவே, திருச்சியில வழக்கு பதிவாகியிருக்கு ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.


''பெரம்பலுார் ஞானசிவக்குமார் வந்தா, வீட்டு பக்கம் வரச் சொல்லும் வே...'' என நாயரிடம் கூறிவிட்டு அண்ணாச்சி கிளம்ப, மற்றவர்களும் நடையை கட்டினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Varun Ramesh - Chennai,இந்தியா

    இவ்வளவு பெருமை மிக்க அந்த நபரை ஏன் பள்ளி - கல்வி நிறுவனங்கள் அழைக்கின்றன? உதாசீனம் செய்ய வேண்டாமா?

  • vasumathi - Sydney,ஆஸ்திரேலியா

    வீட்ல அம்மாவும், மருமக பொண்ணுங்க காய்ச்சினா சரிப்பட்டு வருவார்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement