Advertisement

இதயத்தால் உங்களை தொடுகிறேன்: - எல்.முருகராஜ் -

விஷ்க்... நீளமான கத்தி ஒன்று, காற்றை கிழித்துக் கொண்டு, படுவேகமாக கீழே இறங்குகிறது.
இறங்கும் கத்திக்கு நேர், கீழே கைகளை நீட்டி படுக்க வைக்கப்பட்டு இருந்த, ஒரு சிறுமியின் இரு முன்னங்கைகளும் பலியாகி, ரத்தச் சகதியில் துண்டாகிப் போய் தனித்தனியாக விழுந்தன.
அங்கே கைகளை பலி கொடுத்த, அந்த கறுப்பின பழங்குடிப் பெண்ணின் குரல் தான், இன்றைக்கு, 'யுனிசெப்'பின், மனிதநேய துாதுவரின் குரலாக மாறி, போரில் பாதிக்கப்படும் சிறார்களுக்காக, உலகமெங்கும் ஒலித்து வருகிறது.

அவர் தான், மரியாட்சூ கமரா.மேற்கு ஆப்ரிக்காவின், சிரயா லினன் என்ற பகுதியில் உள்ள, மாக்பேராவ் என்ற, சிறிய கிராமத்தைச் சேர்ந்த, எளிய பழங்குடி குடும்பத்தில், 1986ல், பிறந்தவர். (இப்போது இவருக்கு வயது, 31). சாப்பாட்டிற்கு பஞ்சம் இருந்தாலும், சந்தோஷத்திற்கு பஞ்சம் இல்லாமல் தான், மரியாவின் பொழுதுகள், அவரது, 12 வயது வரை போய்க் கொண்டிருந்தன.
அப்போது எழுந்த உள்நாட்டு கலவரத்தில், ஓர் இனம் இன்னொரு இனத்தை அடியோடு அழித்தொழிக்க, ஆயுதத்தை ஏந்தியது.ஆயுதத்தின் வெறிக்கு, குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என, யாருமே தப்பவில்லை; மரியா உட்பட.கண் எதிரே கைபிடித்து விளையாடிய தோழியரும், அண்ணன்களும், தம்பிகளும், குடும்பத்தினரும், குரூரமாக வெட்டி வீழ்த்தப்பட்டதை பார்த்து மயங்கி விழுந்தார்.


இது எதையுமே உணராத மரியா, மயக்கம் தெளிந்து எழுந்த போது, தன்னைச் சுற்றி, உறவுகள் எல்லாம் கோரமாக பிணமாக சிதறிக் கிடப்பதை பார்த்தார்; அழுகை பீறிட்டு வந்தது; துடைத்துக் கொள்ள கைகளை கொண்டு போகும் போது தான் கவனித்தார், தன் கைகள் இரண்டுமே துண்டிக்கப்பட்டு இருப்பதை.துண்டிக்கப்பட்ட கைகளில் இருந்து, ரத்தம் நிறைய வெளியேறி இருந்தது. இனி, வெளியேற ரத்தம் இல்லை என்ற நிலையில், பிய்ந்த சதையில், திரள் திரளாக ரத்தம் கெட்டிப்பட்டு ஒட்டிக் கிடந்தது. மரியாவிற்கு இப்போது, மீண்டும் மயக்கம் வந்தது. இந்த மயக்கத்திற்கு காரணம், பசியும், தாகமும்.சக்தி அனைத்தையும் திரட்டிக் கொண்டு எழுந்து, கால் போன போக்கில் நடந்தார். நீண்ட தொலைவிற்கு பின், ஒரு தண்ணீர் தேக்கத்தைக் கண்டார். கையில் தண்ணீர் எடுத்து குடிக்க முடியாத நிலையில், தவழ்ந்து, ஒரு நாயைப் போல தண்ணீரை அருந்தினார்.


தாகம் தீர்ந்தது. ஆனால், பசி தீர வேண்டுமே. மீண்டும் நடந்த, மரியாவின் பரிதாப நிலையைப் பார்த்து, வழியில் தென்பட்ட ஒருவர், தன் கையில் இருந்த மாம்பழத்தை கொடுத்தார். அந்த மாம்பழத்தைச் சாப்பிட வழியில்லாமலும், பசியை அடக்க முடியாமலும், ரொம்பவே சிரமப்பட்டார்.ஒரு வழியாக, அந்த ஊரில் உள்ள மருத்துவமனையை அடைந்தவரை, யாரும் எதுவும் கேட்கவில்லை. ஏனென்றால், ஊரில் நடக்கும் உள்நாட்டு கலவரத்தை, அவர்களும் அறிந்திருந்தனர்.மரியாவின் கைகள் வெட்டுப்பட்டிருந்த இடத்தில், நிறைய பாதிப்புகள் இருந்ததால், மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையை தொடர்ந்தனர். சிகிச்சையின் ஒரு கட்டமாக நடத்தப்பட்ட பரிசோதனையில், மரியாவிற்கு நேர்ந்த அடுத்த சோதனை தெரிய வந்தது.


ஆம். கைகளை வெட்டிய அந்த கலவர நேரத்திலும், யாரோ ஒரு கயவன், மரியாவை நாசப்படுத்தியதன் விளைவாக கர்ப்பமுற்றிருந்தார்.எலும்பும், நரம்புமாக இருந்த மரியாவின் கர்ப்பத்தை கலைப்பது, நிச்சயம் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில், கரு வளர மருத்துவர்கள் காத்திருந்தனர். அந்த கரு, நோஞ்சான் குழந்தையாக வெளியே வந்தது. கொஞ்ச நாளில், அந்த குழந்தையும் இறந்து போனது.இதெல்லாம் என்ன, ஏன் இப்படி நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் பக்குவம், மரியாவிற்கு நிச்சயமாக இல்லை. அவருக்கு நிச்சயமாக தெரிந்த ஒன்று, இனியும் மருத்துவமனையில் வைத்து பார்க்க மாட்டார்கள் என்பது தான்.


மருத்துவமனையை விட்டு வெளியே வந்தவருக்கு, அடுத்து என்ன செய்வது என, புரியவில்லை. அசதியாக உட்கார்ந்தவரின் மடியில், ஒருவர் பிச்சைக்காசு போட்டுச் சென்றார். கொஞ்ச நேரத்தில், மேலும் கொஞ்சம் காசு சேர்ந்தது. இப்படி, திடீர் பிச்சைக்காரியாக மாறியவர், அப்படியே பல நாளைக் கடந்தார்.இரவில், இவரை போல உள்நாட்டு போரில், கை, கால் சேதமுற்றவர்கள் தங்கும் இடத்தில் தங்கிக் கொள்வார். அங்கு இருந்தவர்கள் ஒவ்வொருவரும், தங்களுக்கு நேர்ந்த சோகத்தை பங்கிட்டுக் கொண்டு, தெரு நாடகமாக போட்டனர். அந்த தெரு நாடகத்தில், மரியாவின் பாத்திரம் தான், பார்வையாளர்களின் பலருக்கு கண்ணீரை வரவழைத்தது.அப்படி பார்த்த பார்வையாளர் ஒருவர், மரியாவிற்கு சிகிச்சை தரும் நோக்கில், தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவரால், மரியாவிற்கு இழந்த கைகளை மீண்டும் தர முடியவில்லையே தவிர, நிறைய தன்னம்பிக்கையை தந்தார்.அந்த தன்னம்பிக்கையுடன், எழுத்தாளர், சூசன் மேக்லாந்துடன் இணைந்து, 'bite of the mango' என்ற, தன் நிஜக் கதையை எழுதினார். புத்தகம், பல மடங்கு விற்பனையானது; பல மொழிகளில் வெளி வந்தது. குரூரமான உள்நாட்டு போரின் கோர முகம் தெரிய வந்தது; உலகம் அதிர்ந்தது.


உள்நாட்டு சண்டைகள், அதிக பீதியை உண்டாக்காமல் இருப்பது போல தோன்றலாம்; சர்வதேச செய்திகளில் அடிபடாமல் இருக்கலாம். ஆனால், இத்தகைய சண்டைகளால் உண்டாகும் துயரங்களும், நாச மோசங்களும், படு பயங்கரமானவையே. உள்நாட்டு சண்டைகளால், கோடிக்கணக்கானோர் செத்து மடிந்திருக்கின்றனர். 20 ஆண்டுகளில் மட்டும், இந்த வெறித்தனமான இனச் சண்டையால், கிட்டத்தட்ட, 50 லட்சம் பேர் உயிரிழந்து இருக்கின்றனர் என்பது போன்ற புள்ளி விபரங்களை சேகரித்த, 'யுனிசெப்' நிறுவனம், உள்நாட்டு போரை நிறுத்துவதற்கு, அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, மரியாவையே, மனிதநேய பேச்சாளராக பயன்படுத்த முடிவு செய்தது. உடனடியாக, மரியாவை, கனடாவிற்கு அழைத்து, உள்நாட்டு போர் அபாயம் குறித்து, விழிப்புணர்வு தரும் பேச்சாளராக இருக்கக் கேட்டுக் கொண்டது.
என் கழுத்துக்கும், கைகளுக்கும் அதிக துாரமில்லை. ஆனாலும், கத்தி கைகளை வெட்டியதால் உயிர் பிழைத்தேன். ஏன் உயிர் பிழைத்தேன் என, பல நாட்கள் கண்ணீர் விட்டு இருக்கிறேன். இதோ, இப்போது தான், அதற்கான காரணம் தெரிந்தது.


அந்த கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அந்த அனுபவத்தை பேசும் பேச்சாளராக்கி உள்ளது. இப்போதும், கண்ணீர் விடுகிறேன். ஆனால், இந்த கண்ணீர், இந்த எளியவளின் பேச்சைக் கேட்கக் கூடியிருக்கும், உங்கள் அன்பைப் பார்த்து வரும் கண்ணீர்.
நான், உங்கள் ஒவ்வொருவரையும் கைகளால் தொட முடியாது. ஆனால், இதயத்தால் தொட முடியும் எனச் சொல்லி, தன் கதையை, அவர் உணர்ச்சிபூர்வமாக சொல்ல ஆரம்பித்து, உள்நாட்டு போரால் அதிகம் பாதிக்கப்படும், அறியாச்சிறார்களின் நிலைமையை எடுத்துச் சொல்லும் போது, அழாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.


இப்படி, இவர் ஆயிரக்கணக்கான மேடைகளில் ஏறி, உணர்ச்சி பொங்க பேசி வரும் பேச்சுக்கள் வீண் போகவில்லை. பல நாடுகளில், உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததுள்ளது. முக்கியமாக, அவர் பிறந்த இடத்தில்...!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Gopalakrishnan Ammasi - villupuram,இந்தியா

    முடியலை வலிக்கிறது. இதயம் கனக்கிறது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement