Advertisement

ஒன்பதாயிரம் பேரின் பாஸ்!

ரயில் இன்ஜின் டிரைவர்களுக்கான கேன்டீன் அது... ரயில்களில் பணிபுரிந்து வருபவர்கள் இங்கு தங்கி மீண்டும் ரயிலுக்கு செல்வர். ஒரு நாள் இரவு 8:00 மணிக்கு பெண் டிரைவர் ஒருவர், இங்கு சாப்பிட செல்கிறார். அங்குள்ள ஊழியர்கள் வழக்கமான, சற்று தரக்குறைவான டிபனை பரிமாறுகின்றனர். அதை ருசித்த மறுநிமிடமே ஒப்பந்ததாரர், ரயில்வே அதிகாரிகளின் அலைபேசி ஒலிக்கிறது. அலறி அடித்தபடி அனைவரும் அங்கு வந்து சேர, டிபனை ருசித்த பெண்ணை கண்டு அதிர்ந்து நிற்கின்றனர். இனி டிரைவர்களுக்கு தரமான, சுத்தமான, சுகாதாரமான உணவை பரிமாற வேண்டும் என அறிவுறுத்துகிறார் அப்பெண். அறிவுறுத்தி அதிர்ச்சியூட்டியவர் இன்ஜின் டிரைவராக வந்த மதுரை ரயில்வே கோட்ட 'முதல் பெண் கோட்ட மேலாளர்' நீனு இட்டியரா.

வழக்கமாக மதுரைக்கு மாற்றலாகி வரும் வடமாநில கோட்ட மேலாளர்கள் வந்தோமா, சென்றோமா என்றிருந்த நிலையை மாற்றி, சுத்தமான ரயில்வே ஸ்டேஷன்களை உருவாக்கி காட்டியவர்.ரயில்வே பணிகளை ஏனோ தானோ என செய்த ஒப்பந்ததாரர்கள் இவர் பொறுப்பேற்றதில் இருந்து, பணிகளில் தரத்தை கையாள துவங்கியுள்ளனர். காலை 10:00 மணிக்கு சென்றோமா, வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டோமா, ஒரு மணி நேரத்தில் டீ அருந்த வெளியில் சென்றாமோ, மதிய உணவுக்கு வீட்டிற்கு பறந்தாமா, நல்ல துாக்கத்திற்கு பிறகு மாலை அலுவலகத்திற்கு திரும்பினோமா, ஐந்து மணிக்கு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டோமா என இருந்த அலுவலர்கள் இவர் வந்ததற்கு பிறகு மாறிப்போயினர்.

பூர்வீகம் கேரளா... அப்பா இட்டியரா, ஆக்ரா பல்கலையின் ஓய்வு பெற்ற துணைவேந்தர். அம்மா அன்னம்மா டாக்டராக பணிபுரிந்தவர். இதனால் வளர்ந்தது உத்தரபிரதேசத்தில். பிறகு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு எழுதி ரயில்வே பணியில் சேர்ந்தது தமிழகத்தில். இதனால் மலையாளம், தமிழ், இந்தி, ஆங்கிலம் மொழிகளிலும் அசத்துகிறார் நீனு இட்டியரா. 1988 பேட்ச் இந்தியன் ரயில்வே டிராபிக் சர்வீஸ் அதிகாரியான இவர் தெற்கு ரயில்வேயில் வர்த்தகம், லஞ்ச ஒழிப்பு, மக்கள் தொடர்பு, ரயில்வே தேர்வாணையம் போன்ற பல நிலைகளில் பணிபுரிந்த பிறகு மதுரை ரயில்வே கோட்ட மேலாளராக கடந்தாண்டு ஏப்ரலில் பொறுப்பு ஏற்றார். பதினான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய இக்கோட்டத்தில் பணிபுரியும் ஒன்பதாயிரம் பேருக்கு இவர் தான் பாஸ்!
மகளிர் தினத்தையொட்டி தினமலர் வாசகர்களுக்காக நீனு இட்டியராவிடம் பேசியதிலிருந்து....*பெற்றோர் வசதியாக இருந்தாலும் கூட பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்து இருக்க கூடாது; களத்தில் நின்று பெண்கள் உழைக்க வேண்டும்; அரசு பணியாக இருக்க வேண்டும். இது தான் ரயில்வே பணியில் சேர துாண்டுதல்.*இப்பணியில் திருப்தியடைந்துள்ளேன் என கூற மாட்டேன். ஆனால் பணியை நேசிக்கிறேன். பயணிகளுக்கு முடிந்தளவு சேவை செய்கிறேன்.*எல்லாவற்றையும் எல்லா நேரத்திலும் செய்து விட முடியாது. ரயில்வே ஸ்டேஷன்களுக்கு செல்ல ரோடு வசதி, ரயில்கள் வந்து செல்லும் நேரத்தை எளிதில் அறியும் வசதி, ரயில்கள் வரும் வரை ஸ்டேஷன்களில் பயணிகள் இருக்கை வசதி, சுத்தமான ஸ்டேஷன் இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.*முக்கிய ஸ்டேஷன்களில் பயணிகளுக்காக நடைபாதை மேம்பாலம், முக்கிய ஸ்டேஷன்களில் தானியங்கி படிக்கட்டுகள், லிப்ட் வசதி செய்யப்படுகிறது.* டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்பதை பயணிகள் தவிர்க்க தானியங்கி டிக்கெட் வழங்கும் கருவிகள், இணையம் மூலம் டிக்கெட் போன்ற வசதிகள் செய்யப்படுகிறது.*சென்னையில் வர்த்தக பிரிவில் பணிபுரிந்த காலகட்டம். சேலத்தில் ரயில் விபத்து பற்றி அறிந்து அங்கு சென்றேன். ஸ்டேஷன் மேலாளரை சூழ்ந்து பயணிகள் கோஷமிட்டபடி இருந்தனர். அவர்களை விலக்கி மேலாளரை விடுவித்து கூட்டத்தினரிடம் தேவையை கேட்டேன். அப்போது, 'உன்னை போன்ற சின்னப்பெண்ணால் முடியுமா. உங்களை அனுப்பியது யார்' என ஒருவர் குரல் கொடுத்தார். பெண்ணால் முடியுமா என கேள்வி எழுப்பியது எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது.*பெற்றோர் தங்கள் மகன்களை பார்த்துக் கொண்டாலே போதும்... மகள்கள் பாதுகாக்கப்படுவர் என்பது என் கருத்து.* இன்று எல்லா துறையிலும் பெண்கள் ஆண்களுக்கு இணையாக பணிபுரிவது சந்தோஷமளிக்கிறது. இருப்பினும் பெண்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பு, அவர்கள் ஓய்வு எடுக்க ஓய்வறை (பிரைவேஸி) முக்கியம்.* பொழுது போக்கு: புத்தகங்கள் படிப்பது; தோட்ட பராமரிப்பு. பிடித்த உணவு: வெண் பொங்கல்.இவரை வாழ்த்தdrmmdu.railnet.gov.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement