Advertisement

ஆண்களே... உங்களிடம் எங்கள் எதிர்பார்ப்பு ஏராளம்!

ஆண் இல்லாமல் பெண் இல்லை; பெண் இல்லாமல் ஆண் இல்லை. இறைவனின் இருவேறு படைப்புகளில் யார் பெரியவர், சிறியவர் என்ற பேச்சுக்கு இடமில்லை. என்றாலும் ஆண்களிடம் பெண்களின் எதிர்பார்ப்பு ஏராளம். ஆண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பெண்கள் நினைக்கிறார்கள்? பெண்கள் தினமான இன்று சில பெண்களிடம் இந்த கேள்வியை கேட்டோம்.

எங்களை பாராட்டுங்கள்:- என். நித்யா லட்சுமி ஊடகவியலாளர், சென்னைபெண்களின் வளர்ச்சிக்கு ஆண்கள் ஒரு போதும் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது. ஒரு தந்தையாக, கணவராக, காதலனாக பெண்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் அறிவுரை கூறலாம். ஆனால், அவர்களின் முயற்சியை பாராட்ட வேண்டும். பெண்களுக்குள் மறைந்து கிடக்கும் திறமையை வெளிக் கொண்டுவர உதவி செய்து உற்சாகப் படுத்த வேண்டும். அதே போல் ஒரு பெண் தன்னிடம் உள்ள திறமையை தயக்கம் காட்டாமல் தைரியமாக நிரூபிக்க வேண்டும். முன்பெல்லாம் ஊடகத் துறையில் ஆண்கள் அதிகம் இருந்தனர். இன்று ஊடகத் துறையில் பெண்கள் பலர் கால்பதித்து சாதித்து வருகின்றனர். இன்றைய போட்டி உலகில் பெண்களுக்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது அதை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் அத்துமீறும் ஆண்களுக்கு எதிராக துணிச்சலாக குரல் கொடுத்தால் தினமும் பெண்கள் தினம் தான். தொடர்புக்கு: sainithuram gmail.com


நீங்கள் படிக்கட்டுகள்,- ந.தமிழ்மொழி, பேராசிரியை, மதுரை.
பெண்ணியம் என்றால் ஆண்களை எதிர்ப்பதல்ல; ஆண் ஆதிக்கத்தை எதிர்ப்பது. ஆரம்பத்தில் தாய்வழி சமூகமாக இருந்த போது குடும்பத்தில் பெண்கள் முதன்மையான இடத்தில் இருந்தனர். பின், தந்தைவழி சமூகமான போது அந்த முதல் இடத்தை ஆண்கள் பிடித்துக் கொண்டனர். அன்று பல புலவர்கள் அச்சம், மடம், நாணம் எல்லாம் பெண்களுக்கு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், ஆண்கள் எப்படியும் இருக்கலாம் என்ற நிலை தான் அன்று இருந்தது. அன்றைய பெண்கள் தன்னை தானே உருக்கி கொள்ளும் மெழுகுவர்த்தியாக மாறி தன் சுய விருப்பத்தை கூட வெளிப்படுத்த முடியாமல் தவித்தனர். ஆனால், இன்றைய ஆண்கள் குழந்தை திருமணத்தை தடுக்கின்றனர், விதவை மறுமணத்தை ஏற்கின்றனர். மொத்தத்தில் இன்றைய ஆண்கள் பெண்களுக்கு படிக்கட்டுகளாக தான் இருக்கிறார்கள்.

மரியாதை கொடுங்கள்: - ஆர்.மீனலோச்சனிநடிகை, தேனி.ஆண்கள் எல்லோரும் ஒரே ரகமாக இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. பெண்கள் எதிர்பார்ப்பது போல நடந்து கொள்வார்கள் என்றும் நினைக்க கூடாது. ஒரு ஆணிடம் பெண் எப்படி பழகுகிறோளோ அதை பொறுத்துத் தான் ஆண்கள் தங்களை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள். இருந்தாலும், இன்றைய ஆண்கள் பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். பெண் தானே என்று சாதாரணமாக நினைத்து அவர்களை உதாசினம் செய்யக் கூடாது. ஒரு சில ஆண்கள் பெண்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்; அவர்களால் தான் பெண்களின் மனநிலையை முழுமையாக உணர முடிகிறது. சினிமாவில் கூட பெண்கள் இன்று ஆணுக்கு நிகராக சவாலான கேரக்டர்களில் நடித்து தன் திறமையை, உழைப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆணும், பெண்ணும் வேறில்லை இருவரும் ஒருவரை ஒருவர் உள்வாங்கி கொண்டு வாழ்ந்தால் இந்த சமூகம் சிறப்பாக இருக்கும். தொடர்புக்கு: meenaloshini

வலியை உணருங்கள் - எஸ்.மதுப்பிரியா, கவிஞர், மதுரை.'போகும் இடமெல்லாம் எடை போட்டுப் பார்க்க பொருளல்ல பெண்' ஆம், முதலில் பெண்களின் வலியை ஆண்கள் உணர வேண்டும். தானும் ஒரு பெண்ணாக இருந்தால் இப்படித் தானே இருக்கும் என்று பெண்கள் இடத்தில் இருந்து ஆண்கள் யோசிக்க வேண்டும். ஒரு பெண் சிரிப்பதை கூட வித்தியாசமாக பார்த்து அதற்கு தவறான அர்த்தம் கண்டு பிடிக்கும் ஆண்கள் கொஞ்சம் திருந்த வேண்டும். நாகரீகம் இத்தனை பெரியளவில் மாறிய போதும் இன்னும் ஒரு சில ஆண்களின் மனநிலை மாறவில்லை. ஒரு பெண் ஏதாவது ஒரு சாதனை செய்தால் கூட அதை பாராட்ட தயங்கும் ஆண்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். இதே சமூகத்தில் ஒரு விதவைப் பெண் பூவும், பொட்டும் வைத்துக் கொண்டால் அதை மோசமாக விமர்சிக்கும் பெண்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். ஆனால், இந்த விஷயத்தை ஒரு சில ஆண்கள் முற்போக்கு சிந்தனையுடன் பார்ப்பது ஆறுதலான விஷயம்.

மனிதி வெளியே வா!'மனிதி வெளியே வா... மனிதன் என்ற சொல்லுக்குள்ளே அடங்காதே பெண்ணே... உயரம் உனதே தான் அமர்ந்தால் உயரம் தெரியாது... நீ நிமிர்ந்தே வா பெண்ணே'... திறமைகளை திரை மறைவில் திணித்துதவிக்கும் பெண்ணே வெளியே வா, சமையலறை புகையில் கனவுகளை கருகவிட்டு கொதிக்கும் பெண்ணே வெளியே வா பெண்ணே, அச்சம் இனியெதற்கு உச்சம் தொடலாம் நீ வெளியே வா, ஆணுக்கு பெண் சமம் என்றானபின் இன்னும் தயக்கம் ஏன் பெண்ணே வெளியே வா... இந்த பெண்கள் தினம் உன் சாதனையின் தொடக்கமாக இருக்கட்டும், உன் வெற்றியின் சின்னமாக இருக்கட்டும் வெளியே வா...

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement