Advertisement

தியாகம் செய்கிறாள் பெண்!

பேருவகை கொள்ளும் மனித வாழ்க்கையில் நமதுசெயல்பாடுகளின் வழியாகவே ஒவ்வொரு மனிதனும் அறியப்படுகிறான். அவை நாம் செல்வதற்கான பாதையினையும், வெல்வதற்கான தளத்தினையும் நம்மிடம் சேர்ப்பித்த படியே இருக்கின்றன. வாழ்வென்பது நதியானால் அதன் இரு கரையினராக விளங்குவது ஆணும் பெண்ணுமே. மரம், செடி, கொடி இனங்கள் இப்பூவுலகில் இருந்தே உதித்ததாக நாம் கருதுகிறோம். அதேபோல் உலகின் முதல் உயிர் பெண்ணில்இருந்தே உருக்கொண்டது.கருவினை உயிர்ப்பித்து மகவாக ஈனும் ஆற்றலின் காரணமே பெண் தாயாக வழிபாடு செய்யப்படுகிறாள். மானுடத்தின் ஆற்றல்இவ்வாறுதான் சக்தியின் வடிவமாயிற்று."மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடவேண்டுமம்மா" என்ற கவிமணியின் வரிகள் மண்ணிற்கும் விண்ணிற்கும் ஆதாரமான பிறப்பெடுத்தவள் பெண்ணே என்பதை உரக்கச் சொல்கிறது. "பெண்ணின் பெருந்தக்க யாவுள" எனும் வள்ளுவத்தின் கூற்று, தன் வீடு, கணவன், மக்கள் என்பாரோடு, தாவரம் செழிக்கவும் நாடு காக்கவும் வேண்டுகிறவள் பெண் என்பதை அல்லவா அறிவிக்கிறது.வளமை என்பது பெண்ணில் இருந்தே தொடங்கியதாக நாம் அறிகிறோம். அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு கருதும் சிறப்பு தாய்மையின் அடையாளமாகும். தாயின் சிறப்பு பெண்ணுக்கே அன்றி எவருக்கும் இருந்திருக்கவில்லை.மார்ச் 8, 1910தனது உழைப்பின் வழியேகுருதியினை செலுத்தியும் கிட்டாத கூலி உயர்வு, அதிகப்படியான வேலை நேரம், சமத்துவமற்ற நிலையில் தங்களுக்கான குரலை வலுப்படுத்தி ஒலிக்கச் செய்யும் முயற்சியாக, 18ம் நுாற்றாண்டில் அமெரிக்காவில் கிளர்ச்சிதுவங்கியது. அதற்கு அமெரிக்க அரசு செவி சாய்க்காத நிலையில் பெண் தொழிலாளர்கள் கிளர்ச்சியில்இணைந்தனர். 1857 மார்ச் 8ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் அரசால் ஒடுக்கப்பட்டது 1910ம் ஆண்டு டென்மார்க்கில் பெண்களின் உரிமை மாநாடு நடைபெற்றது. உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகளும் இதில் கலந்துகொண்டன. அங்கு ஜெர்மனி தலைவர் கிளாரா ஜெட்கின் ஆல் முன்மொழியப்பட்ட மகளிர் தினம் பற்றிய தீர்மானம் 1920ல், சோவியத் ரஷ்யாவில் நிகழ்ந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவின் கெலன் ரா முயற்சியால் மார்ச் 8ம் தேதி மகளிர் தினம் கொண்டாட வேண்டும்என்னும் பிரகடனம் ஆயிற்று.சம ஊதியம், சம வேலை நேரம், வாக்குரிமை போன்றவற்றிற்காக மட்டும் நிகழ்ந்த புரட்சியாக இதைக் கொள்ள முடியாது. 1960களில் ஐரோப்பிய நாடுகளில் தோன்றிய பெண்ணிய இயக்கமும், 1970ம் ஆண்டுகளில் ஐக்கியநாடுகள் சபையின் மகளிர் தினத்தைக் கொண்டாடும் முயற்சியும் மகளிர் தினத்தை முக்கியப்படுத்தி உள்ளன.
பெண் -இருப்பும் சிறப்பும் : சிந்துவெளி நாகரிகப் புதைபொருள் சின்னங்கள் பெண்ணையும் தாய் தெய்வ வழிபாட்டையும் வெளிப்படுத்துகின்றன. "பெண்மை இறைமைத் தன்மை உடையது;கடவுள் நிலை அடைவதற்கும் பெண்ணியல்பு இன்றியமையாததாகி இருக்கிறது," என்று பெண்ணின் பெருமை நுாலில் திரு.வி.க., கூறுவார். பெண் என்பவள் தனது குடும்பம் குழந்தைகளுக்காக தனது சுய விருப்பத்தை மறைத்து வாழ்பவளாக தன்னைத் தியாகம் செய்கிறாள். சிறு வயதில் இருந்தே பெண்ணானவள் தன்னைச் சுற்றி இருக்கும் பலரையும் சார்ந்திருக்கவே பழகுகிறாள். 2010 ல் ஐ.நா.,வின் மனித உரிமைப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் 138 நாடுகளை கொண்ட தரவரிசையில் 122 ம் இடம் பெற்றுஉள்ள நம் இந்தியாவின் சமத்துவம், இங்கு பெண்களின் நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது .கல்வி, வேலைவாய்ப்பு, சம ஊதியம், பதவி உயர்வு என பணிபுரியும் இடம் முதல் குடும்பத்தில் வரை பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. சர்வதேச மனித உரிமைகள் விவாதங்களில் "பால் சமத்துவம் இன்மை" என்பது அனைத்துத் தளங்களிலும் தீர்க்கப்படவேண்டிய முக்கிய பிரச்னை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பிரகடனம் தெரிவித்துள்ளது.
பெண்- பாதுகாப்பும் உரிமையும் : பெண் குடும்பத்தின் பாதியானவள். அவளுக்கென்று உரிமைகளும் கருத்துக்களும் உண்டு என்று பல தளங்களில் ஏற்கப்பட்டதன் காரணமாகவே கல்வியில், வேலைவாய்ப்பில் குறைந்தபட்ச உரிமைகளை அவள் பெற முடிந்திருக்கிறது.நாம் பின்பற்றும் சமயங்களும் பெண்ணை உயர்வான இடத்தில் வைத்தே போற்றுகின்றன, என்ற போதும் பெண்ணுக்கான பாதுகாப்பு வேண்டும் என்பது எதனைக் காட்டுகிறது? பெண் மீது ஏவப்படும் அடக்குமுறையும், பாலியல் துன்புறுத்தல்களும், வன்முறையும் பெண்ணுக்கான உரிமைகளை அடையாளப்படுத்துகின்றன. பெண்ணுக்கு எதிரான விஷயங்கள் மனித உரிமை மீறலாகிறது.வியன்னாவில் நிகழ்ந்த உலக மனித உரிமை மாநாட்டில் பெண்களின் உரிமைகளை மீறுதல், மிகக் கொடிய மனித உரிமை மீறல் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு பெண்கள் பாதுகாப்புசட்டம் மிக முக்கியமாகப் பணியிடங்களில் தகுந்த பாதுகாப்பை வழங்குவதற்கான சட்டம் ஆகும். குடும்பம் மற்றும் வெளியிடங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கான உதவி மையங்கள், தன்னார்வஅமைப்புகள், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.பெண்களுக்கான பாதுகாப்பையும் உரிமையையும் இயல்பாக வழங்குவதுதான் ஒரு சமூகத்தின் செயல்பாடாக இருக்க முடியும். அவை மறுக்கப்படும்போது சட்டங்களின் தேவை எழுகிறது.இயல்பாக வெளியில் நடமாடவும், தனது கருத்தை பொதுவெளியில் பதிவுசெய்யவும் தனக்கான அடிப்படைத் தேவைகளைப் பெறவும் அவளுக்கு சுதந்திரம் வேண்டும். பெண் பற்றிய புரிதலில் அடிப்படையான மாற்றத்தை நம் குடும்பங்களில் இருந்தே துவங்க வேண்டும்.பெண் என்பவள் இச்சமூகத்தில் வாழும் சக உயிர். யாருக்கும் எதிரி அல்ல எனும் சிந்தனை மேலோங்கும் போது தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திரைகள் விலகும்.பெண்- இயல்பும் வரலாறும்எழுதப்பட்ட உலக வரலாற்றில் பெண்ணின் வரலாறென குறைந்தபட்ச வரலாறே குறிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆணுடைய போர், அரசியல், நிர்வாகம் குறித்தே எழுதப்பட்ட வரலாற்றில் பெண்கள் புறக்கணிக்கப்பட்டே இருந்துள்ளனர். மனைவி, மகள் போன்ற செய்திகளாக மட்டுமே பெண்கள் குறிக்கப்பட்டனர், என்பது இன்றைய தினத்தில் சிந்திக்க வேண்டியதாகும். ஆரம்பம் முதலே நாகரிகம் வளர்ந்த காலம் முதல் கலாசாரம்,அறிவியல் ,கலை அரசியலில் பெண்களின் இடமும், இயல்பான பங்களிப்பும் குறிப்பிடப்படவில்லை.புதிய முயற்சியாக இந்திய வரலாற்றில் பெண்களின் பங்கினை நினைவு கூறும் வகையில் "கூகுளின் கலை மற்றும் கலாச்சார இணையதளம்" இந்தியப் பெண் ஆளுமைகளை அடையாளப்படுத்தி ஆவணப்படுத்தி உள்ளது பாராட்டப்பட வேண்டியதாகும்.
வரலாற்றின் போக்கை தீர்மானிப்பதில் தொடங்கி சமுதாயத்தின் ஒவ்வொரு அசைவிலும் பெண்ணின் பங்கு மறுக்க இயலாதது. கல்வி மருத்துவம், இலக்கியம் கணினி, விவசாயம் என அனைத்திலும் பெண்ணின் செயல்திறன் அளப்பரியது, ஆனாலும் சரிநிகர் சமத்துவ உரிமையான 50 சதவீதத்தை பெண்களுக்கு அளித்திருக்கிறோமா? பெண்களைத் தங்கள் சிந்தனைகளால் முடக்குவதும் வக்கிர எண்ணங்களால் அவர்களை அழிப்பதும் இன்னும் நின்றபாடில்லை.பெண்ணின் உள்ளத்தையும் உடலையும் வன்முறையால் சீண்டி தங்களை மகிழ்ச்சியுடன் வைத்து கொள்ளும் சிந்தனையில் மாறுதல் ஏற்படாத வரையில்,"பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே" என்கிறார் பாரதிதாசன்.
-கவிஞர். அ.ரோஸ்லின்ஆசிரியை, அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, வாடிப்பட்டிkaviroselina9997gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    வள்ளுவர் பெண்ணைப்பற்றி சொல்லிய வரிகள் இதுமட்டுமே அட்சரம் kodiperum தற்காத்து தற்கொண்டார்ப்பேணி தகைசார்ந்த சொற்காத்து சோர்விலாள் பெண்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement