Advertisement

நாளைய தலைமுறை பெண்கள்

பெண்ணின் பெருந்தக்க யாவுள என்று வள்ளுவனோ, பெண்மை வெல்கவென்று
கூத்திடுவோமடா' என பாரதியோ, 'மங்கையராய்ப் பிறப்பதற்கே
மாதவம் செய்திட வேண்டும்' என கவிமணியோ சொன்னது மட்டுமல்ல இந்த உலகத்தில் உள்ள பெரும்பாலான ஆண் சமுதாயமும் பெண்மையைக் கொண்டாடிக் கொண்டு தான் இருக்கிறது. பெண்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் ஆண்களுக்கான தினமுமாகவே பெண்கள் தினத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெண் எப்போது பெருமை அடைகிறாள் : சக மனுஷியாக, தோழியாக, காமம் கலக்காத நட்புக்குரியவளாக பெண்களைப் பார்க்கும் ஆண்களாலேயே பெண் பெருமை அடைகிறாள். பிரசவ அறையில் வலியால் துடிக்கும் பெண்ணின் வேதனையை உள் வாங்கும் ஆண், மாத விடாய் துன்பங்களின் போது வீட்டு வேலையைப் பகிர்ந்து கொள்ளும் ஆண் என ஒவ்வொரு ஆணும் போற்றுதலுக்கு உரியவனாகிறான். அதே சமயத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும், பாலியல் வன்முறைகளும் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன என்பதும் வேதனையான ஒன்று. காதலிக்க மறுத்த பெண்ணின் முகத்தில் ஆசிட் ஊற்றுவது, ஈவ் டீசிங், பெண் குழந்தைகள் மீதான பலாத்கார தாக்குதல்கள் என நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.
ஒட்டுமொத்த பெண்களும் சுதந்திரம் அடைந்து விட்டனரா, இதற்கான வழிகள் தான் என்ன?

பெண் என்பவள் யார் : பெண் என்பவள் வெறும் சதைப் பிண்டம் அல்ல. அவள் நகமும், ரத்தமும், சதையும் அதிக உணர்வுகளையும் உடைய ஜீவன் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உங்கள் வீட்டில் உள்ள ஆண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். பாலின பேதங்களை தவிருங்கள். 'ஆண் பிள்ளை அழக் கூடாது' என சொல்லி வளர்ப்பதை விட, 'பெண் பிள்ளைகளை அழ வைக்க கூடாது' என சொல்லிக் கொடுக்கவேண்டும். ஆண் குழந்தைகளும் அழலாம் தப்பில்லை. அப்போது தான் அவர்களின் இறுக்கங்கள் குறையும். இளகிய மனமாக மாறும் ஆண்மையும் அழகு தான்.போற இடத்தில் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என பெண்களுக்கு
கற்றுத் தரும் அம்மா, தன் வீட்டிற்கு வரும் மருமகளை எப்படி வைத்து கொள்ள வேண்டும் என்றும் ஆண் பிள்ளைகளுக்க சொல்லிக் கொடுக்க வேண்டும். பாடத் திட்டங்களிலேயே இந்த
உணர்வைக் கொண்டு வரலாம்.ஆண், பெண் வேறுபாடு என்பது பிறப்பால் மட்டுமே
என்பதை குழந்தை பருவத்திலேயே பதிய வைக்க வேண்டும். இரு பாலர் பள்ளிகளில் பெண் குழந்தைகள் படிக்கட்டும். தன்னுடன் படிக்கும் மாணவியை சக தோழியாக பார்க்கும் மன நிலை ஆண் பிள்ளைகளுக்கு உருவாகட்டும்.இனி வரும் தலைமுறைகளுக்கு எது சரி, எது தவறு என்பதைக் கூறுவதற்கு கல்வியே சரியான வழியாகும். ஹார்மோன்கள் மாறுபாட்டைப் புரிந்து, அந்தப் பருவத்தில் வழி தவறாமல் சரியான பாதையில் செல்வதற்கு ஆசிரியர்கள் துணை புரிய வேண்டும்.

பெற்றோருக்கு செப்பு சாமான்கள் வைத்த விளையாட்டு பொருட்களை பெண் பிள்ளைகளுக்கும், துப்பாக்கி, கார் பொம்மைகளை ஆண் பிள்ளைகளுக்கும் வாங்கிக் கொடுக்கும் சமுதாய நிலை தானே இன்றளவும் தொடர்கிறது. கண்டிப்பில் கூட இந்த வித்தியாசம் உண்டு. அப்பா அதட்டும் போது, 'தோலை உரிச்சுடுவேன்' என்ற வார்த்தையும், 'தப்பு செஞ்சா சாமி கண்ணைக் குத்திடும்பா' என்பது அம்மாவின் மயிலறகு வார்த்தையுமாகவே அமைந்து விடுகிறது. உணர்வுகளால் சூழப்பட்டவள் பெண் என்பதற்கான உதாரணமே இது.ஆண் என்ன, பெண் என்ன, எல்லாம் ஓரினம் தான் என்பதை குழந்தை பருவத்தில் இருந்தே சொல்லி வளருங்கள். தைரியம் நிறைந்தவர்களாகவும், வீரமானவர்களாகவும் மட்டுமல்ல ஒழுக்கம் நிறைந்தவர்களாகவும் ஆண் பிள்ளைகளை வளர்த்தலே பெண்களின் மீதான கொடுமைகளுக்குத் தீர்வாக அமையும். வீட்டில்
காட்டப்படும் பாலின வேறுபாடுகளே, சமுக அநீதிக்கான அடித்தளமாக அமைகிறது. அம்மாவின் வேதனையை குழந்தை பருவத்தில் உணரும் ஆண் மகன், அவளின் முதுமைக் காலத்தில் அவளைத் தவிக்க விட மாட்டான்.

என்ன சொல்லி வளர்க்கலாம் : 'பாதகம் செய்பவரைக்கண்டால் பயங் கொள்ளல் கூடாது பாப்பா' என பாரதி சொன்னதை நம் பெண் குழந்தைகளுக்குசொல்லிக் கொடுப்போம். கூர்மையான பார்வை மட்டுமல்ல கூர்மை யான நகங்களும் வேண்டும் பெண்களுக்கு. தங்களுக்கெதிரான வன்முறைகளை தைரியமாக சொல்வதற்குஉரிய மன நிலையை வளர்க்க வேண்டும்.
மனைவியின்பிரசவத்தின் போது கணவனைக் கூட இருந்து சில நிமிடங்கள் மட்டும் பார்க்கச்
சொன்னாலே போதும். ஆயுளுக்கும் புரியும் பெண்ணின் வலி. இருபது எலும்புகள் நொறுக்கப்படுவது போன்ற வலிக்குச் சமமானது பிரசவ வலி என்பதை உணரும் போது ஆண் தாயுமானவனாகிறான்.

வாரியார் சுவாமிகள் ஐந்து தாய்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். தன்னைப் பெற்றவள், அண்ணன் மனைவி, குருவின் மனைவி, அரசனின் மனைவி, தன் மனைவியின் தாய்.நள்ளிரவில் நகைகளுடன் தனியாகச் செல்லும் சுதந்திர சூழல் வேண்டாம். பகலில் அவளை சுதந்திரமாக நடை போட விடலாம். முக நுாலில் புகைப்படம் பதிவிடும் பெண்களை 'மார்பிங்' செய்வது குறைவது எப்போது? பொது தளத்தில் இயங்கும் பெண்களின் சொந்த விஷயங்களை பரபரப்பாக்கி
பார்க்கும் காலம் எப்போது மாறும்? அவர்களின் ஒழுக்க நிலை குறித்த விமர்சனங்கள் தவிர்க்கப்படுதல் எப்போது? மிக நீண்ட பேருந்து பயணத்தின் போது இயற்கை உபாதையை அடக்கிக் கொள்வதற்காக தண்ணீர் கூட அருந்தாமல் செல்லும் பெண்களுக்கு, கழிப்பறைகள் கட்டித் தரும் நிலை வருவது எப்போது? பெண்களின் மீதான தாக்குதல் வரும் போதெல்லாம் அவளின்
உடைகள் பற்றியும், தனியாக ஏன் சென்றாள் என்ற விமர்சனங்கள் தவிர்க்கப்படுவது எப்போது?

பதில் இல்லாத கேள்விகள் : கேள்விகள் கேட்கிறோம் பெண்களை. பதில் தர அனுமதிக்கிறோமா? சிக்கல்களை உருவாக்கும் சமுதாயம் அதனை தீர்ப்பதற்கான வழிமுறைகளை தந்திருக்கிறதா? இல்லை தான். போராட்டங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களை இலகுவாக்கும் நாள் வர வேண்டும். இப்படியான நிலைகள் ஒருபுறம் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக ஆண்களை மட்டுமே சொல்லி விட்டு சென்று விட முடியாது. பல சமயங்களில் ஆண்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் பெண்கள், தனக்கு வழங்கப்பட்ட சலுகைகளைத் தவறாகப் பயன்
படுத்தும் பெண்கள், குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திகொள்ளும் பெண்கள், தன்னை பலவீனமானவளாக உணர்ந்து கொள்ளும் பெண்கள், கணவரின் வீட்டினரை அங்கீகரிக்க மறுக்கும் பெண்கள், உரிமைகள் எது உணர்வுகள் எது எனப் புரியாமல் போராடும் பெண்கள், கணவனின் மன நிலை அறியாமல் துன்பப்படுத்தும் பெண்கள் என பெண்களின் மீதான சில குற்றச்சாட்டுகள் இருந்து கொண்டு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் இவையெல்லாம் நிரந்தரமான தவறுகள் இல்லை. ஏனெனில் பெண்கள் இயல்பிலேயே இரக்க உணர்வு மிகுந்தவர்கள். எனவே தன்னை அலசி ஆராய்ந்து அதனைச் சரி செய்து கொள்வர்.இந்த உலகம் என்னும் ஓவியம் பெண்ணினாலே அழகு பெறுகிறது.
வாழ்வின் ஆத்ம சக்தியாக, மனைவியாக, தாயாக, மந்திரியாக எல்லாமுமாக விளங்கும் பெண்
களைப் போற்றுவோம். பாட்டியின் கையில், அம்மாவின் கையில், திறவு கோல் இருந்தது. இன்றைய பெண் குழந்தைகள் கையில், எழுது கோல் இருக்கிறது. நாளைய தலைமுறை பெண்கள் கையில் செங்கோல் வைத்திருக்கும் காலத்தை நோக்கிய பாதைகளை வகுப்போம்.

ம.ஜெயமேரி, ஆசிரியைஊ.ஒ.தொ.பள்ளி
க.மடத்துப்பட்டி
bharathisanthiya10gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement