Advertisement

காப்பகத்தில் இருந்து வெளியேற விரும்பும் முதியோர்:மெட்டூர் இல்லத்தில் டி.எஸ்.பி., விசாரணை

திண்டுக்கல்:ஆதரவற்றோர் காப்பக நடவடிக்கை குறித்து நிலக்கோட்டை டி.எஸ்.பி., கார்த்திகேயன் நேரில் விசாரணை நடத்தினார். முதியோர் சிலர்சொந்த ஊருக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே மெட்டூர் கேட்டில், 2006 முதல் 'செயின்ட் ஜோசப்' ஆதரவற்றோர் காப்பகம் ஐந்தரை ஏக்கரில் செயல்படுகிறது. இங்கு ஆதரவற்ற இறக்கும் தருவாயில் உள்ளவர்களை பராமரிக்கின்றனர்.பாதிரியார் தாமஸ் முதன்முதலில் இங்குதான் காப்பகத்தை நிறுவினார்.அதன்பின்பே மற்ற பகுதிகளில் துவங்கியது.
இங்கு 300 படுக்கை வசதி உள்ளது. 229 பேர் தற்போது உள்ளனர். இங்கு இறந்தவர்களை வி.ஏ.ஓ., விடம் தகவல் தெரிவித்து விட்டு மீண்டும் பயன்படுத்தும் வகையிலான, கானகிரீட் கல்லறைகளில் அடக்கம் செய்கின்றனர். மூன்று வரிசைகளில் 6 அடி நீளத்தில் 42 கல்லறைகள் உள்ளன. ஒருவரை அடக்கம் செய்து 15 ஆண்டுகளுக்கு பின் திறக்கும் போது அழுகி 25 அடி ஆழ குழியில் குப்பையாகி விடுகிறது. இதற்கு 2006ல் திண்டுக்கல் எஸ்.பி., கந்தசாமி அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் எந்த முறையில் அடக்க செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல் சுட்டிக்காட்டவில்லை.அதிகாரிகள் ஆய்வு
பாலேஸ்வரம் காப்பகத்தில் ஏற்பட்ட பிரச்னையை தொடர்ந்து திண்டுக்கல் காப்பகம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. நேற்று முன்தினம் டி.ஆர்.ஓ., லதா ஆய்வு செய்தனர். நேற்று நிலக்கோட்டை டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் சீமைராஜ் காப்பக நிர்வாகியிடமும், முதியோரிடமும் விசாரணை நடத்தினர்.
ஆய்வில் இங்குள்ள முதியோரில் 92 பேர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். முதியோர்களை பராமரிக்க போதிய பணியாளர்கள் இல்லை. நிர்வாக அதிகாரி உட்பட 11 பேர் மட்டும் உள்ளனர். இதுவரை 1500 பேர் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாதம் ரூ. 4 முதல் ரூ.5 லட்சம் வரை செலவாகிறது.இதற்கு நிதி உள்ளூர், வெளிநாடு நன்கொடையில் செயல்படுகிறது.வெளியேற விருப்பம்
பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டம் உருவாக்கும் நடவடிக்கையில் பல மாவட்டங்களில் ஆதரவற்றோரை போலீஸ் உதவியுடன் வாகனத்தில் ஏற்றி வந்து இரவோடு, இரவாக இங்கு இறக்கி விட்டு சென்று விடுகின்றனர். இப்படி வருவோர் பலர் இங்கு கிடைக்கும் வசதியை பார்த்து தங்கிவிடுகின்றனர். பிச்சை எடுத்து சுகமாக வாழ விரும்புவோர், உறவுகளுடன் சேர விரும்பும் சிலர் திரும்பி செல்ல விரும்புகின்றனர். டி,ஆர்.ஓ.,விடம் 31 பேர் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அகிலாண்டேஸ்வரி, 45,(கும்பகோணம்): மனநலம் பாதிக்கப்பட்டதால் விரட்டப்பட்டேன். தற்போது குணமாகி விட்டேன், எனது 2 குழந்தைகளை பார்க்க ஆவலாக உள்ளேன். எனது கணவர் மொபைலை காப்பகத்தினர் தொடர்பு கொண்டால் எடுப்பதில்லை என வருத்தப்பட்டார்.ராஜூ, 55, (ஸ்ரீரங்கம்): தாய், தந்தையர் இல்லை. யாசகம் பெற்று பிழைப்பு நடத்தினேன். ஓட்டல்களில் வேலை செய்தால் நல்ல சம்பளம் கிடைக்கும். ஊருக்கு போய் பிழைத்து கொள்வேன்.ராமகிருஷ்ணன்,70. (மணச்ச நல்லுார்): பால் வியாபாரம் செய்து வந்தேன். கண் தெரியாததால் வேலை செய்ய முடிவில்லை. திடீரென லாரியில் ஏற்றி இங்கு வந்து விட்டு சென்றனர். உறவினர்களுடன் கடைசி காலத்தில் இருக்க விரும்புகிறேன்.ராமன்,65,(விழுப்புரம்): திருச்சியில் வேலை செய்து கொண்டிருந்தேன். போலீசார் வேனில் ஏற்றி அனுப்பி விட்டனர். சொந்த ஊருக்கு செல்ல விரும்புகிறேன். அனுப்பி வைக்க வேண்டும். பழனிச்சாமி, (திண்டுக்கல்)
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், அறுவை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்ந்தேன். அங்கிருந்த புரோக்கர்கள், வலுக்கட்டாயமாக இங்கு கொண்டு வந்து சேர்த்தனர். இங்கு தங்கியுள்ள விபரத்தை, உறவினர்களுக்கு தெரிவிக்க முடியவில்லை. பணியாளர்களின் தாக்குதலால், வெளியேறும் முயற்சியை கைவிட்டு விட்டேன்.
மோகன்குமார், (மேட்டுப் பாளையம்): கோவை அரசு மருத்துவமனையில், 2 ஆண்டுகளுக்கு முன் சிகிச்சை பெறச்சென்றேன். என்னை ஏமாற்றிய சிலர், இங்கு விட்டுச்சென்றனர். உரிய பராமரிப்பு இல்லை. போதிய உணவு, சிகிச்சை கிடைக்கவில்லை. வலது கால் துண்டித்த நிலையில் வந்துள்ளதால், பிற வேலைகள் செய்ய முடியவில்லை. பணியாளர்கள் கூறுவதற்கேற்ப நடந்து கொள்ள முடியவில்லை. அதிகாரிகள், மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
காப்பக நிர்வாகி ஜான்சி ஜெபஸ்தியம்மாள்: மருத்துவமனை, போலீஸ் அனுமதியோடு ஆதரவற்றோர் அனுமதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை தருகிறோம். இறந்தவர்களை கல்லறையில் அடக்கம் செய்கிறோம். ஒருவரை அடக்கம் செய்து விட்டால், அதனை திறக்க 15 ஆண்டுகள் கூட ஆகும். அப்போது கல்லறையில் எதுவும் இருக்காது. இதில் முறைகேடு ஏதும் இல்லை. இங்குள்ளோருக்கு தனியார் மருத்துவர் சிகிச்சை அளித்தார். அவரால் முடியாததால், அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லுாரியில் உதவி கேட்டோம். டாக்டர் பற்றாக்குறை உள்ளது வர இயலாது என கூறி விட்டனர்.ஈரோடு சமூக நலத்துறையினர் பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்துவதாக கூறி ஒரே நாளில் 21 பேரை விட்டு சென்றனர். வீடு செல்ல விருப்பம் தெரிவித்த 18 பேரை திருப்பி அனுப்பி விட்டோம். பராமரிக்க பணியாளர்கள் கிடைப்பது இல்லை.டி.ஆர்.ஓ., லதா: காப்பகத்தில் சுகாதார வசதி குறைவாக இருந்தது. இறந்தவர்களை எவ்வாறு அடக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது என்பது பற்றி குறிப்பிடவில்லை. விரும்புவோரை சொந்த ஊருக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யப்படும், என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement