Advertisement

பான்யன் ரெஸ்டாரண்ட் நடத்தும் பழங்குடியினர்.


பான்யன் ரெஸ்டாரண்ட் நடத்தும் பழங்குடியினர்.


பெரும்பாலான தமிழ் படங்களில் தேயிலை தோட்டத்தின் நடுவே நாயகனும் நாயகியும் ஆடிப்பாடும் போது துாரத்தில் கழுத்துவரையில் சேலை அணிந்த பெண்கள் ஒலா...ஒலா..ஒ...லலல்லா என்று கோரசாக பாடுவதைப் பார்த்திருப்பீர்கள்.இப்படித்தான் மலைஜாதி பழங்குடியினர் நமக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டு உள்ளனர்.

ரயில் போடுவதற்கு,அனை கட்டுவதற்கு,ரோடு போடுவதற்கு,வனங்களை பாதுகாப்பதற்கு என்ற பலவித காரணங்களால் பழங்குடியினர் தங்கள் அடையாளங்களையும் இருப்பிடங்களையும் தொலைத்து ரொம்பநாளாகிறது.
இருந்தாலும் இந்த வாழ்க்கை போராட்டத்திலும் நீரோட்டத்திலும் கலந்து கொண்டு தங்களைக் கரைத்துக் கொண்டு முன்னேறிக் கொண்டு இருப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

அவர்களில் ஒரு பிரிவினரின் சாதனைதான் முதுமலையில் உள்ள பான்யன் ரெஸ்டாரண்ட்.
தமிழ்நாட்டின் நீலகிரிமாவட்டத்தின் வடமேற்கில் கர்நாடகம் மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது முதுமலை வனவிலங்கு காப்பகம்


1940 இல் தொடங்கப்பட்ட இதுவே தென்னிந்தியாவின் முதல் வனக்காப்பகம் ஆகும்.தொடக்கத்தில் 60 சதுர கிமீ பரப்பு கொண்டதாக இக்காப்பகம் இருந்தது. பின் 1956 ஆம் ஆண்டு 295 கிமீ ஆக விரிவுபடுத்தப்பட்டது. இது மேலும் விரிவுபடுத்தப்பட்டு தற்போதுள்ள 321 கிமீ பரப்பளவை அடைந்துள்ளது. மேலும் இந்த காப்பகம் யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மான்,மயில்,கரடி,குரங்கு,யானை,புலி,சிறுத்தை உள்ளீட்ட வனவிலங்குகளை அதனதன் வாழ்விடத்திற்கே வாகனங்களில் சென்று இங்கு பார்க்கலாம் இதற்காக வருடம் முழுவதும் இங்கே பார்வையாளர்கள் வருகின்றனர்.

இவர்களுக்கு தேவையான நல்ல உணவிற்கு ஒரு பிரச்னை இருந்தது.

இந்தப்பகுதியில் உள்ள பழங்குடியினர் அதிகம் படிக்காதவர்கள் இங்குள்ள ஆற்றில் மீன் பிடித்தும் சின்ன சின்ன வேலைகள் செய்தும் குடிசை வீடுகளில் வாழ்பவர்கள் இயற்கையை அதிகம் நேசிப்பவர்கள்.

இவர்கள் தாங்களே முன்வந்து உணவு விடுதி நடத்தும் பொறுப்பை ஏற்று நடத்துவதாக கூறினர், ஆரம்பத்தில் இவர்களுக்கு இங்கு ஒரு டீ கடை நடத்த மட்டுமே வனத்துறை அனுமதி தந்தது, இதனை திறம்பட நியாயமாக நேர்மையாக நடத்திக்காட்டியதன் காரணமாக உணவு விடுதி நடத்த அனுமதித்தனர்.இப்படி உருவாகியதுதான் பான்யன் ரெஸ்டாரண்ட்.

இதன் தலைவர் சிக்க பொம்மனும் காசாளரும் மட்டும்தான் ஆண்கள், மற்றபடி சமைக்க பரிமாற என்று அனைவரும் பெண்கள்தான் மொத்தம் 32 பேர் உள்ளனர்.சைவ,அசைவ உணவுகளை காலை மதியம் இரவு நேரங்களில் சுடச்சுட மிகச்சுவையாக கொடுக்கின்றனர். எத்தனை மணிக்கு வந்தாலும் எத்தனை பேர் என்றாலும் உடனே அடுப்பை பற்றவைத்து சாப்பாடு செய்து போடுகின்றனர். சுற்றுவட்டாரத்தில் வேறு ஒட்டலே கிடையாது என்பதுடன் பசியோடு வந்தவர்கள் பசியாற்றி அனுப்புவதுதானே நம் பண்பாடு என்று காரணம் சொல்கின்றனர்.

நியாயமான விலை நல்ல சுவை என்பதால் கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் சரணாலயம் செல்பவர்கள் கூட இருபது கிலோமீட்டர் துாரம் பயணித்து இங்கே வந்து சாப்பிட்டுவிட்டே செல்கின்றனர்.

ஒவ்வொருவர் தத்தம் தகுதிக்கேற்ப வருமானத்தை பிரித்துக் கொள்கின்றனர் ஏப்ரல் மே மாதங்களில் கூட்டமும் வருமானமும் அதிகம் வரும் அந்த கூடுதல் வருமானத்தை போனசாக எடுத்துக்கொள்கின்றனர் இப்படி எல்லா செலவும் போக சேமிக்கவும் செய்கின்றனர்.

இந்த சேமிப்பில் இருந்து இவர்கள் செய்யும் செயல்கள்தான் இன்னும் வியப்பை ஏற்படுத்துகிறது தங்கள் இனத்தில் படிக்கவிரும்பும் குழந்தைகள் படிப்புக்காக செலவிடுகின்றனர் இது போக எதிர்பாரத மருத்துவச்செலவு உள்ளீட்ட செலவுகளுக்கு கொடுத்து உதவுகின்றனர்.அரசாங்கத்திற்கும் வாடகையாக வருமானம் கொடுத்துவருகின்றனர்.

அடுத்த முறை முதுமலை வனக்காப்பகம் போகும் போது அவசியம் இந்த உணவு விடுதிக்கு போய் உணவருந்திப் பாருங்கள் உணவு அலாதி சுவையுடன் இருக்கும் காரணம் அதில் உப்பு புளி காரத்துடன் அவர்களது அலாதியான அன்பும் கலந்திருக்கிறது.

தலைவர் சிக்க பொம்மன் எண்:9443292496.

எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

    நீங்க கொடுத்த நம்பரில் ட்ருகாளர் ஐடியே சொல்லுது சிக்க பொம்மன் யாருன்னு கெ கெ கெ

  • Chola - bangalore,இந்தியா

    i tasted their food. and it is really awesome, thanks dinamalar for posting their work.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement