Advertisement

மாணவர்களே...வெற்றி உங்களுக்கே!

பிளஸ் 2 மாணவர்கள் பள்ளி பருவத்தின் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டு, ஓராயிரம் கனவுகளை மனதில் சுமந்து கொண்டுபள்ளியின் இறுதி தேர்வை எழுத தயாராகி கொண்டிருக்கிறார்கள். மாணவர்களே...வாசம் வீசிய பள்ளி கல்விக்கு முடிவுரையும், கனவுக்கு உயிர்கொடுக்கும் கல்லுாரி கல்விக்கு முன்னுரையும் முன் மொழியப்படும் முத்தான பருவத்தை பயிர் செய்துள்ளீர்கள்.இறுதி தேர்வை நம்பிக்கையின் துணை கொண்டு எதிர் கொள்ளுங்கள், வாழ்க்கை உங்கள் வசமாகும்.

சந்தோஷ வாழ்வு


பனிரெண்டு ஆண்டு கால பள்ளிப்படிப்பில் ஒவ்வொரு நாளின்பகல் பொழுதும் கண்ணுக்குள் நிற்கும் கரும்பலகையோடும், வகுப்பறை இருக்கையோடும் ஒட்டி உறவாடி இருக்கும்.
ஆசிரியர்களின் அன்பையும், அரவணைப்பையும் பதியம் போட்ட பள்ளி பாடசாலைகள் அகரம் தொடங்கி அறிவு, அறம், பண்பு, பண்பாடுகளை உமக்கு
கற்றுக் கொடுத்திருக்கும். உறவு, தோழமையை உனக்குள் அறிமுகம் செய்திருக்கும். பெற்றோர் உற்றாரை பேணிக்காத்திட அவர்களுக்கு நீ பெருமை சேர்த்திட உன் மனம் என்னும் மணற்பரப்பில் விதை விதைக்கப்பட்டிருக்கும். சமூகத்தையும், சமத்துவத்தையும் உனக்கு சொல்லிக் கொடுத்திருக்கும். உனக்குள் ஒழிந்து கிடந்த திறமைகளை உலகிற்கே வெளிச்சம் போட்டு காட்டிக் கொடுத்திருக்கும்.ஒரு கவிஞன், கட்டுரையாளன், விளையாட்டு வீரன், எழுத்தாளன், படைப்பாளி, பாடகன், ஓவியன், மேடை பேச்சாளராக உனது
ஆளுமைகளை அரங்கேற்றம் செய்திருக்கும். கல்லும், முள்ளும் இல்லாத உன் எதிர்காலபயணத்திற்கு பாதை அமைத்து கொடுத்திருக்கும். கூழானாலும் குளித்துக்குடி, கந்தையானாலும் கசக்கிக்கட்டு என்று வறுமையிலும் வாழ கற்றுக் கொடுத்துஇருக்கும். இதுவெல்லாம் பள்ளி உனக்கு கற்றுக்கொடுத்த அடிச்சுவடுகள், காகித கப்பலை பார்த்து சந்தோஷமும், புத்தகத்திற்குள் மயில் இறகை வைத்து எப்போது குட்டி போடும் என ஏக்க பெருமூச்சுவிட்டிருப்பீர்கள்.ஒருதாய் வயிற்றில் பிறந்தபிள்ளைகளை போல் உண்மையாய் கொஞ்சி, பொய்யாய் கோபப்பட்டு பட்டாம் பூச்சியாய் சிறகடித்துபறந்திருப்பீர்கள். பணம், மனக்கஷ்டம் ஏதும் இல்லாத சந்தோஷ வாழ்வை அனுபவித்து உணர்ந்துஇருப்பீர்கள்.


பள்ளியிறுதி தேர்வுஉங்களின் கனவுகள், ஆசைகளுக்கு அடிநாதமாக விளங்குவது பனிரெண்டாம் வகுப்பு இறுதி தேர்வு தான். வாழ்க்கைக்குவடிவம் கொடுக்கும் தேர்வு இது என்றால் மிகையாகாது. மருத்துவம், பொறியியல், சட்டம், கலைஅறிவியல் போன்ற நீங்கள் நினைத்த எந்த துறைக்கும் செல்வதற்கு நுழைவுவாயில் தான் பள்ளி இறுதி தேர்வு. கண்கள் உறங்கலாம் உங்கள் கனவுகள் உறங்கக்கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் விட்டுச்சென்ற வார்த்தைகள் மாணவர்களாகிய உங்களுக்காகவே என்பதை மனதில் திவிடுங்கள்.உங்களின் சாதனைகளைசரித்திரம் சொல்ல கதவுகள் திறக்கும் நேரமிது. நிலத்தை பண்படுத்தி வீரியமுள்ள விதைகளை
விதைப்பதை போன்று பனிரெண்டுஆண்டுகள் உங்களை பண்படுத்தி இதயம் எனும் ஈர நிலத்தில் வீரியமான விதைகளை விதைத்துஉள்ளனர். பலனை அறுவடை செய்யும் பருவத்தை அடைந்து விட்டீர்கள். மாணவர்களே இனி நீங்கள் தொட்டது துலங்கும்.


அச்சம் தவிர்

அச்சம், தயக்கம், ஒருவித படபடப்பு ஆகியவை ஞாபக மறதியை உருவாக்கும் காரணிகள். உன்னுடைய எதிர்காலத்தை மழுங்கடிக்கும் அச்சத்தை முதலில் துாக்கி எறியுங்கள். உங்களின் மனநிலையை, சாந்தமான தைரியமான மனதாக வைத்து கொள்ளுங்கள்.அது உங்களின் உற்றதோழனாக இருந்து தோள்கொடுக்கும்.ஆனால், அச்சமும், தயக்கமும் உனக்கு எதிரியாக இருந்து குழிபறிக்கும். எப்போதும் நம்முடைய எதிரியை துாரத்தில் வைத்து தான் அழகு பார்க்க வேண்டும். தைரியம் எனும் தோழனை உன் இதயத்தில் இருத்தி வைத்துக்கொள். கல்பனா சாவ்லா- இந்த பெயர் அனைவருக்கும் தெரியும். ஆம் நண்பர்களே தம்முடைய வாழ்க்கையை சரித்திர சாதனையாக்கி வரலாற்றில் பதிவிட்டு மறைந்து போன வீரப்பெண்மணி. இந்த பெண்மணி இந்தியர் என்பதில் தேசம் பெருமை கொள்கிறது. இப்பெண்மணியை விண்வெளி வரை அழைத்து சென்றது, அப்பெண்ணின்
மனதில் புரையோடி கிடந்த அச்சமில்லாத தைரியம், தன்னம்பிக்கை தான் என்பதை மறந்துவிடாதீர்கள். நீல் ஆம்ஸ்ட்ராங் முதலில் நிலவில் காலடி வைத்தார். அவர் மனதில் அன்றைக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் இல்லை என்றால் அவர் நமக்கு யாரென்றே தெரியாமல் போயிருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக நமது தாய்மொழி கவிஞன் பாரதி, உச்சிமீது வானிடிந்து வீழ்கின்ற போதிலும்அச்சமில்லை அச்சமில்லை'என்றும் அச்சம் தவிர் என பதிவிட்டு மறைந்தார். எனவே அச்சம் தவிர்த்து திடமான மன ஆளுமையை வளருங்கள். தன்னம்பிக்கையை துணை கொள்ளுங்கள்.


பெற்றோருக்கு


பெற்றோர்களே, உங்களின் ஆசைகளையும், ஏக்கங்களையும் பிள்ளைகளின் மனதில் திணிக்காதீர்கள். அது பிள்ளைகளுக்கு மனக்கலவரத்தை ஏற்படுத்தி மனச்சோர்வு,மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை மனதில் வையுங்கள். குறைந்தது இவ்வளவு மதிப்பெண் நீ எடுக்க வேண்டும்; இல்லாவிடில்
பக்கத்து வீட்டினருக்கு பதில்சொல்ல முடியாது என்ற வறட்டு கவுரவத்தை கோடுபோட்டு காட்டி அவர்களை கட்டாயம் செய்யாதீர்கள். நண்பனாக இருந்து முதுகை தட்டிக்கொடுங்கள். அதை விட ஊக்கம் இவ்வுலகில் வேறில்லை.எதையும் சமாளிக்கவும், எதிர்கொள்ளவும் கற்றுக்கொடுங்கள். உடல்நலம், மனநலம் பேண சொல்லிக்கொடுங்கள். முக்கியமாக அலைபேசி
களின் அழைப்பையும், 'டிவி'க்களின் நிகழ்ச்சிகளையும் ஒத்திவைத்தால், நீங்கள் நினைத்தது நிறைவேறும்.

நினைவூட்டல்மாணவர்களே உங்கள்பதிவு எண்ணையும் இன்ன பிற தகவல்களையும் மறவாது, தவறாது முதல் பக்கத்தில் பதிவிடுங்கள். நேரத்தோடு பள்ளிக்கு செல்லுங்கள். நுழைவுச்சீட்டு, பேனா, பென்சில் உட்பட தேவையான பொருட்களுடன் செல்லுங்கள். வினாக்களை புரிந்து படித்து வினா எண்ணை கட்டாயம் பதிவு செய்யவும். அனைத்து வினாவிற்கும் விடை எழுதுங்கள். சிந்தனையை ஒருமுகப்படுத்தி, கவனம்சிதறாமல் தேர்வை எழுதினால், வெற்றி தேடி வரும்.அன்புள்ள மாணவர்களே, ஒரு தேசத்தின் எதிர்காலம் வகுப்பறையில் உருவாகிறது என்பது சான்றோர்களின் வாக்கு. இந்த தேசத்தின் எதிர்காலம் மட்டுமல்ல, உங்களின் குடும்ப எதிர்காலமும் உங்களை
நம்பியிருக்கிறதென்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் கற்ற கல்வி, பெற்ற மதிப்பெண் உங்களுக்கும் இச்சமூகத்திற்கும் பயன்படட்டும்.பண்பட்ட உங்கள் அறிவை படிப்பறிவு இல்லாத பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள். சமூகத்தின் ஆணிவேரான மாணவர்களே, உங்களின் ஆளுமை, அன்பை போதித்து, அறத்தை நேசிக்கட்டும். உன்உள்ளமும் உதடும் உண்மையை உறக்க சொல்லட்டும். நீ நினைத்ததை எட்டிப்பிடிப்பாய். கற்ற கல்வி
யும், பெற்ற தாயும் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார்கள். ஒளிமயமான எதிர்காலம் உங்கள் கைகளில் தவழட்டும், தரணி வாழ்த்தட்டும்._எம்.ஜெயமணிஉதவி பேராசிரியர்ராமசாமி தமிழ்கல்லுாரிகாரைக்குடி. 84899 85231

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement