Advertisement

பக்கத்து வீடுகளில் பழகுவோம்!

மனிதர்கள் சேர்ந்து மட்டுமல்ல சார்ந்தும் வாழ வேண்டும் என்பதால் தனித்தனியே என்றாலும் தனியாக வாழ்ந்துவிட முடியாது. தனிவீடுகளோ அடுக்கக வீடுகளோ அருகருகே நாம் என்பதாகத்தான் நம் எண்ணம் விரிய வேண்டும். அக்கம்பக்கம் வீடுகள் இருக்கின்றன என்று மட்டுமே விளங்கிக் கொள்ளாமல் சிலரோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று புரிந்து கொள்ளவேண்டும். உறவுகள் என்பவை வீட்டுக்குள் மட்டுமல்ல வெளியேயும் குறிப்பாகப் பக்கத்து வீடுகளிலும் இருக்கின்றன. அவர்களுடனான நல்லுறவுதான் நம்மை நிம்மதியாக வாழச் செய்கிறது. பாதுகாப்பாகவும் உணரச் செய்கிறது. பகைத்துக்கொண்டால் இருக்கிற போராட்டங்களோடு இதுவுமொன்றாய்ச் சேர்ந்து கொள்ளும்.
பழகுவதில் பயன் : சென்னையில் புரசைவாக்கத்தில் நாங்கள் குடியிருந்தபோது கீழே இரண்டு வீடுகள். முதல் மாடியில் இரண்டு வீடுகள். எங்கள் குடும்பம் முதல் மாடியில் ஒரு வீட்டில். எங்கள் மூத்த மகனின் முதல் பிறந்தநாள். என் மாமனார் தன் பேரனுக்கு ஒரு பவுனில் ஒரு செயின் வாங்கிப் பரிசளித்திருந்தார். புத்தாடை அணிந்து புது நகை புனைந்து பிள்ளை கீழே விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து ஆடிக்களைத்து மேலே வந்தபோது அணிந்திருந்த நகையைக் காணவில்லை. வீட்டில் எல்லோர்க்கும் வருத்தம். யாரிடம் கேட்பது என்றெல்லாம் யோசித்ததில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டுமென்று வந்திருந்த உறவுகள் அறிவுறுத்தின. நான் அதை மறுத்துவிட்டேன். “நகைதானே போகட்டும்; பரவாயில்லை. வேறு வாங்கிக்கொள்ளலாம். காவல் நிலையத்திற்குப்போனால் மீதியிருக்கிற மூன்று வீட்டுக்காரர்களையும் விசாரிப்பார்கள். அது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதுடன் நம்மீது அவர்களுக்கு எரிச்சலையும் ஏற்படுத்தும். கவனமாக இருக்கவேண்டும் என்பதை காசு செலவழித்துக் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்று விட்டுவிடுவோம். நகைக்காக சந்தேகப்பட்டால் நல்லுறவு போய்விடும்” என்றேன். நாங்களிருந்த அந்தக் குடித்தனத்தில் நான்கு வீடுகள். நாங்கள் மட்டும் எல்லோரிடமும் நல்லுறவு பேண மீதி மூன்று குடும்பங்கள் ஒன்றோடொன்று அடிக்கடி மோதிக்கொள்ளும். நான்தான் சமாதானம் செய்து வைப்பேன். அவர்களுக்குப் பாதுகாப்பாகவும் இருப்பேன். எனவே அவர்களைப் பகைத்துக்கொள்ள எனக்கு மனமில்லை.அக்கம்பக்கத்தோடு பழகுவதிருக்கட்டும்; இப்போதெல்லாம் யாரென்று அவர்களைத் தெரிந்து கொள்ளவே நம்மில் பலருக்கு ஆர்வம் கிடையாது. பழகினால் தொல்லை என்கிற எண்ணம் இப்போது நகரங்களில் அதிகமாகிவிட்டது. பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பழகவேண்டும். பழகுவதில் நமக்குப் பாதுகாப்பிருக்கிறது. நிறைய பயன்களும் இருக்கின்றன. பகைவர்களாக பொதுவாக நாமெல்லாம் பக்கத்து வீட்டுக்காரர்களைப் பகைவர்களாகவே பார்க்கிறோம். அவர்களே வந்து பழகினால்கூட, நமது சுதந்திரம் பறிபோகும், தனிமை கெடும், பேப்பர், காப்பிப்பொடி, சர்க்கரை என்று ஓசிக்கு வருவார்கள்; கடன் கேட்பார்கள். நம்முடைய நிம்மதியைக் கெடுப்பார்கள்; வாலிபப்பையன்கள் இருந்தால் நம் வீட்டுப் பெண்களோடு பழகிவிடுவார்கள் என்றெல்லாம் எவ்வளவு கற்பனை செய்யமுடியுமோ அவ்வளவு கற்பனை செய்துகொண்டு மனக் கதவுகளை மூடிக்கொண்டுவிடுவோம். இதையே நாம் வேறுவிதமாக நேர்மறையாகச் சிந்திக்கவேண்டும். அக்கம்பக்கத்தினரோடு அன்புடன் பழகினால் அநேக நன்மைகள் இருக்கின்றன. பக்கத்து வீட்டுக்காரர்கள் நம்முடைய பாதுகாப்பாளர்களாவார்கள். நம்மைப் பார்த்துப் பொறாமைப்படுவார்கள் என்று ஏன் நினைக்கவேண்டும்? பெருமைப்படுகிறவர்களாகவும் இருக்கலாம். பிரபலமான அந்த நடிகர், மருத்துவர், பேராசிரியர், அதிகாரி, ஆன்மிகவாதி எங்கள் வீட்டுக்கு அடுத்த வீடுதான் என்று பெருமைப்படுவார்கள் என்றேன் கருதக்கூடாது? சில நேரங்களில் அந்த புகழ்வாய்ந்த பெருமக்களே நம்மிடம் வந்து தம்மை அறிமுகம் செய்துகொள்வதுண்டு. அவசரத்திற்கு ஏதாவது வாங்க வேண்டுமென்றால் வெளியில் போகிற இளைஞரிடம் கேட்டால் வாங்கிவர மறுக்கவா போகிறார்? கஷ்டமோ நஷ்டமோ பகிர்ந்துகொள்ள ஒரு துணை. ஆபத்துக்கு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச்செல்ல ஆயத்த நிலையில் ஒருவர் என்றேன் நினைக்கக்கூடாது?
ஓர் அனுபவம் : இப்போது நாங்களிருக்கிற குடியிருப்பில் முதல்மாடியில் இருக்கும் ஒரு பெண் ஒருநாள் என்வீட்டுக் கதவைத்தட்டி“என்னுடைய கணவருக்கு உடல்நலம் சரியில்லை. மருந்து கொடுத்திருக்கிறோம். நள்ளிரவில் திடுமென்று பிரச்னை எதுவுமென்றால் உங்கள் காரில் மருத்துவமனைக்குக் கூட்டிச்செல்வீர்களா?” என்றதும் “அவசியம் கூட்டிப்போகிறேன்… அவர் நலமாக இருக்க பிரார்த்திக்கிறேன்” என்றேன். இரவு கதவு தட்டப்படவில்லை. நலமாக காலையில் எழுந்ததாக அவரது மனைவி நிம்மதிப் பெருமூச்சுவிட்டார். 'பக்கத்தில் ஒருவர் இருக்கிறார்' என்கிற நம்பிக்கையை அவர்களுக்குத் தந்ததில் நான் மகிழ்ந்தேன். பக்கத்து வீடுகளில் சிலருக்கு வெளியே பெரிய பெரிய தொடர்புகளெல்லாம் இருக்கும். ஆனால் அவர்களுக்கு அடுத்தடுத்த வீடுகளுடனான தொடர்பு அறவே இராது. ஒரு சிறு காரணம் கிடைத்தால்கூட பாய்வதற்குத் தயாராக இருப்பார்கள். பக்கத்து வீட்டுக்காரருடன் ஒரு சிறு பிணக்கென்றாலும் தெரிந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு போன் பண்ணிவிடுவார்கள். ஆனால் அந்த பக்கத்து வீட்டுக்காரருக்கு போலீஸ் கமிஷனரையே தெரியும் என்பது தெரியவந்ததும் தளர்ந்து போய்விடுவார்கள். வெளியே நமக்கு யாரைத் தெரிந்தாலும் சரி தெரியாமற் போனாலும் சரி பக்கத்து வீட்டுக்காரர்களை கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். அதில்தான் ஆயிரம் நன்மைகள் அடங்கியிருக்கிறது. பாரதப் பிரதமரே நமக்குப் பழக்கமென்றாலும் அழைத்தக்குரலுக்கு அடுத்த வீட்டுக்காரர்தான் முதலில் குரல்கொடுப்பார்.
பயம் இருக்கும் : அர்த்தசாமத்தில் நெஞ்சுவலியென்றால் அறிமுகமான பெரிய மனிதர்கள் அடுத்தநாள் தான் பார்க்க வருவார்கள். ஆனால் அடுத்த வீட்டுக்காரர்கள்தான் ஆபத்துக்கு ஓடிவருவார்கள். அன்னியோன்னியமாக இருக்கிறார்கள் என்கிற அடுக்ககங்களில் அல்லது குடியிருப்புகளில் எந்த ஆபத்தும் அசிங்கமும் நேர்வதில்லை. ஒரே குடியிருப்பில் வாழ்கிற மக்கள் தீவுகளாக வாழ்கிறார்கள் என்று தெரிந்துகொண்டால் சமூக விரோதிகள் துணிச்சலாகப் புகுந்து விடுவார்கள். சில கிராமங்களில் வெளியாட்கள் புகவே முடியாது. சின்ன தகராறு என்றாலும் ஊர்க்காரர்கள் ஒன்றாகச் சேர்ந்துகொள்வார்கள் என்கிற பயம் எல்லோருக்கும் இருக்கும்.நகரங்களில் யாரையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் யாருக்கும் இருப்பதில்லை. எப்போதோ நான் எழுதிய கவிதையொன்றில் இப்படியொரு வரிவரும். “சிலர் இருந்தார்கள்என்கிற விவரமே அவர்கள் இறந்தபோதுதான் தெரிகிறது” அடுக்ககங்களில் இருக்கிற பல அடையாளம் தெரியாத மனிதர்கள் யார் எவர் என்பது அவர்களின் இறுதியாத்திரையின் போதுதான் கேட்டறியப்படுகிறது. 'ஒருவர் பொறை இருவர் நட்பு' என்பார்கள். அமைதியின் அடித்தளமே இந்தப் பொறுமைதான். அடுத்த வீட்டுக்காரர்களுக்கு நீங்கள் நண்பர்களாக இருங்கள். உங்களுக்கு அவர்களே நண்பர்களாகக் கிடைப்பார்கள்.
ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்எழுத்தாளர்94441 07879

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement