Advertisement

பலே பலே ,அந்தகக்கவிப் பேரவைக்கு ஒரு சபாஷ்


பலே பலே ,அந்தகக்கவிப் பேரவைக்கு ஒரு சபாஷ்

பார்வையற்றோர் தங்கள் தமிழறிவை மேம்படுத்திக் கொள்ளும் பொருட்டு உருவாக்கப்பட்டதுதான் அந்தகக்கவிப் பேரவை.

பேரவையின் முதலாம் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட மகிழ்வும் நெகிழ்வும் இன்னும் என் நெஞ்சைவிட்டு நீங்க மறுக்கிறது.

அவர்களது அளவில்லாத அன்பிலும் பாசத்திலும் திக்குமுக்காடிப் போனேன்.அவர்களது தமிழார்வத்தையும் திறமையையும் பார்த்து வியந்து போனேன்.

அந்தகக்கவி என்று பெயர் வைத்ததற்கே ஒரு சபாஷ் போடலாம்

காரணம் தொண்டை நாட்டின் பாலாற்றங்கரையில் உள்ள பூதுாரில் பிறந்த இந்தக்கவிஞருக்கு பிறவி முதலே பார்வை கிடையாது

தனது முதுகில் எழுத்துக்களை எழுதச்சொல்லி தமிழ் கற்றவர், பல இலக்கியங்களை படித்தவர்,சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்,திருவாரூர் உலா,திருக்கழுக்குன்ற மாலை போன்ற பல அழியா காவியங்களை படைத்தவர்.

இவரது பெயரில் பேரவையை துவங்கிய பார்வையற்ற தமிழார்வம் மிக்க சிலர் மாதந்தோறும் ஏதேனும் ஒரு பொதுவெளியில் சந்தித்து கட்டுரை வாசித்தல் விவாதித்தில் திறன் வளர்த்தல் என்று கடந்த ஒரு ஆண்டாக இருந்தனர்.

இந்தக்கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் உள்ளீட்ட பல கட்டுரைகளை தொகுத்து தமிழ் வனம் என்ற நுாலை உருவாக்கியுள்ளனர். இந்த நுால் வெளியிட்டு விழாவை மையப்படுத்தி முதலாம் ஆண்டு விழாவினை வடிவமைத்திருந்தனர். பேரவையின் செயலாளர் மு.ராமன் வரவேற்புரை வழங்கிட, தலைவர் செ. பிரதீப் தலைமை உரையாற்றிட விழா களைகட்டியது.

பார்வையற்றோர் பள்ளியில் ஒன்றாகவும் நன்றாகவும் படித்த அர.ஜெயச்சந்திரன்,ப.ரங்கநாதன்,க.வேலு ஆகியோர் ஆகியோர் இன்று பல்வேறு கல்லாரிகளின் முதல்வர்களாக உள்ளனர். தமிழ்வனம் நுாலினை வெளியிட்டனர்.
இவர்கள் பேசுகையில் கல்வி எங்களை இவ்வளவு உயரமான இடத்தில் வைத்திருப்பது போல உங்களை இதைவிட உயரமான இடத்திற்கு கொண்டு செல்லும் படியுங்கள் உழையுங்கள் என்றனர்.

மாநிலக்கல்லூரி தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் மு. பழனி தமிழ் வனம் நூல் குறித்த அறிமுகத்தை அழகுபட தொகுத்துரைத்தார். ஜீவா பதிப்பகத்தின் பதிப்பாளர் கந்தசாமி வாழ்த்துரை வழங்கினார்.

கணினி பொறியாளர் திரு. ச. ரவிக்குமார் அவர்கள் வாசிப்போம் வலைப்பக்கத்தின் (www.vaasippom.blogspot.in) அறிமுகத்தையும், அதன் வடிவமைப்பு, பயன்படுத்தும் முறை, எதிர்கால திட்டங்கள் போன்றவற்றை சிறப்பாக விளக்கினார்.அரங்கில் இருப்பவர்களைப் பார்த்து கொஞ்சம் குரல்தானம் தாருங்களேன் என்றும் கேட்டுக்கொண்டார்.

விழாவின் ஒரு முக்கியமான நிகழ்வாக ஸ்ரீ நிகேதன் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற 'பன்னோக்கில் திருக்குறள்' நிகழ்வைச் சொல்லலாம்.திருக்குறளின் எண்ணைச் சொன்னால் போதும் அதிகாரத்தைச் சொல்லி குறளை முழுமையாகச் சொல்வார்கள் நீங்கள் குறளின் முதல் வார்த்தையைச் சொன்னால் முழுக்குறளையும் சொல்லி எண் அதிகாரம் போன்றவற்றையும் சொல்வார்கள், எப்படி கேட்டாலும் தயங்காது அவர்கள் சொன்ன பதிலால் அரங்கம் அதிர்ந்தது குறள் மகிழ்ந்தது.

சென்னைப் பல்கலைக் கழக தமிழ் மொழித்துறையின் முன்னாள் தலைவர் அரங்க ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இலக்கிய பொழிவில் கலந்து கொண்டு பார்வையற்ற மா.உத்திராபதி,செந்தில்குமார்,மோகன்,திவாகர்,குமார்,சேஷாத்ரி ஆகிய பேராசிரியர்கள் தமிழால் விருந்து படைத்தனர் காதுகள் குளிர்ந்தது.

ஓடி ஓடி உதவிய தன்னார்வலர்கள் துவங்கி நிகழ்ச்சிக்கு ஒலி ஔி வசதி செய்து கொடுத்த மைக் செட் கலைஞர்கள் வரை ஒருவரையும் விடாமல் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தனர்.

இந்த விழாவில் நான் கலந்து கொள்ளவேண்டும் என்று விரும்பிய வள்ளுவன் பார்வை கோவை வெங்கடேஷ்க்கும், என்னை அழைத்து அன்பில் கரையச் செய்திட்ட பண்பாளர் பாண்டியராஜ் அவர்களுக்கும் என் நன்றிகள்.

தமிழுக்கு இவர்கள் செய்யும் செய்துவரும் சேவை மிகப்பெரிது மனம் திறந்து பாராட்ட நினைப்பவர்கள் பாண்டியராஜை அழைக்கவும் எண்:9841129163.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

    ஒரு கவிதை போஸ்ட் பண்ணியிருக்கலாம். கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement