Advertisement

பாரதியும், சிவசக்தியும்!

“நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்,இமைப்பொழுதும் சோராது இருத்தல்”என்பது பாரதியார் 'விநாயகர் நான்மணி மாலை'யில் வெளியிடும் வாக்குமூலம். வசன கவிதைஒன்றில்,“ நமது பாட்டு மின்னலுடைத் தாகுகநமது வாக்கு மின்போல அடித்திடுக”என தமது பாடலுக்கும் வாக்கிற்கும் உவமையாக மின்னலை குறிப்பிடுவார். “தீயே நிகர்த்து ஒளி வீசுந் தமிழ்க் கவி” என்று தம் கவிதையைத் தீயுடன் ஒப்பிட்டுக் கூறுவார் அவர். இங்ஙனம் மின்னலைப் போல் அடித்திடும் - தீயைப் போல்ஒளி வீசும் - வகையில் பாரதியார் படைத்துள்ள பாடல்கள் பல.அவற்றுள் சீரிய கவிதைக் கூறு களாலும் ஆளுமைப் பண்புகளாலும் சிறந்து விளங்குவது'நல்லதோர் வீணை செய்தே' எனத் தொடங்கும் பாடல் ஆகும். 'கேட்பன' என்னும் தலைப்பில் அமைந்த அம் முத்திரைப் பாடலின் அமைப்பினையும் அழகினையும் இங்கே காணலாம்.திருஞானசம்பந்தர் பாடியது போல'ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே' என்று திருஞானசம்பந்தர் பாடியது போல், பாரதியாரும் தம் பாடலை 'நல்லது' என்ற மங்கலச் சொல்லுடன் தொடங்கி இருப்பது சிறப்பு. இலக்கண விதிப்படி உரைநடையில் எழுதினால் 'நல்லதொரு வீணை' என்றுஎழுதுதல் வேண்டும். ஆனால், பாரதியாரோ கவிதை மொழியில் இலக்கண மரபினை மீறி 'நல்லதோர் வீணை' என்று எழுதுகின்றார். பேச்சுத் தமிழுக்கு - மக்கள் தமிழுக்கு - தலைவணக்கம் செய்வதுதான் பாரதியாரின் தனிப்பாணி. இதனையே 'நல்லதோர் வீணை' பாடலிலும் நயமுறப் பின்பற்றியுள்ளார் அவர்.'நல்லதோர் வீணை' - அழகிய உருவகம். அறிவு, உள்ளம், உடல், உயிர் என்னும் நான்கும் நலமுற அமைந்த பாங்குடன் பொருந்திய உயர்மனிதனை குறிப்பிடுவது.யாராவது நல்லதோர் வீணை செய்து, அதை நலமுற மீட்டி மகிழாமல் - மற்றவரை மகிழச் செய்யாமல் - நலங்கெடப் புழுதியில்எறிவது உண்டோ? என வினவுகின்றார் பாரதியார்.'சொல்லடி சிவசக்தி!'உயிர் நண்பனை 'அடா' என்று விளித்து மகிழ்வது போல், 'சொல்லடி சிவசக்தி' என்று சிவசக்தியை உரிமையோடும் உள்ளார்ந்த அன்போடும் விளித்து மகிழ்கின்றார், மனம் மிக நெகிழ்கின்றார் பாரதியார். இப்படி 'அடி' என்று விளித்துப் பேசுவதில் பாரதியாருக்கு விருப்பம் மிகுதி. 'சொல்லடி சிவசக்தி' என இரண்டு முறை இப்பாடலில் சக்தியை விளித்துப் பேசியுள்ளார் அவர்.'சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்!'எப்போதும் அறிவுக்கு முதன்மை தருபவர் பாரதியார். சுடர் மிகு அறிவுடன் சிவசக்தி தம்மைப் படைத்து விட்டதில் பாரதியாருக்கு மிகுந்த பெருமை. ஆனால் இன்றைய சூழலில் உலகியலில் வெற்றி பெற வேண்டுமானால், வெறும் அறிவு மட்டும் போதாதே? வல்லமையும் வேண்டுமே.'வல்லமை தாராயோ - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே!'ஒரு மனிதன் நல்லவனாக வாழ்ந்தால் மட்டும் போதாது. அவனுக்கு வல்லவனாகவும் வாழத் தெரிய வேண்டும். பாரதியார் சிவசக்தியிடம் 'வல்லமை தாராயோ?' என்றே கேட்கிறார். அவர் கேட்பது, தனிப்பட்ட முறையில் தாம் மட்டும் நன்றாக வாழ்வதற்காக அன்று. 'இந்த மாநிலம் முழுவதும் பயனுற வாழ்வதற்கே' தமக்கு வல்லமை தருமாறு சிவசக்தியிடம் வேண்டுகின்றார்.அறிவு கொண்ட மனிதன் 'பாட்டுத் திறத்தாலே இவ் வையத்தைப் பாலித்திட வேண்டும்' என்ற உயர் எண்ணமே பாரதியாரின் வாழ்வு, வாக்கு இரண்டையும் எப்போதும் இயக்கும் அடிநாதமாக விளங்கியது.சுடர்மிகு அறிவு கொண்ட மனிதனாகப் பராசக்தி தம்மைப் படைத்து விட்டதில் பாரதியாருக்கு அளவிலா மகிழ்ச்சி. ஆனாலும், கூடவே சிறு ஐயம். எனவே, 'என்ன நினைத்திருக்கிறாய் உன் மனதில்? சுடர்மிகு அறிவுடன் படைத்து விட்ட என்னை, நிலச்சுமை என வாழ்ந்திடப் புரிகுவையோ?' என்று கேட்கிறார் பாரதியார்.'உள்ளம் வேண்டிய படி செல்லும் உடல்'எப்போதும் உள்ளம் வேண்டிய படி இயங்கும் நிலையில் உடல் இருக்க வேண்டும். இதற்குப் பாரதியார் கையாளும் உவமை அருமையானது. 'விசையுறு பந்தினைப் போல்' உடல், உள்ளம் வேண்டியபடி கேட்க வேண்டும் என்கிறார்.பாரதியின் வேண்டுதல் 'மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்' என அறத்திற்கு இலக்கணம் வகுப்பார் வள்ளுவர். தொடர்ந்து அடுத்த குறட்பாவில், 'அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் நான்கு' என மனத்துக்கண் படிந்து கிடக்கும் மாசுகள் எவை என அடையாளம் காட்டுவார். இம்மன மாசுகள் நான்கனுள் அவாவினை (ஆசையினை) மட்டும் தனியே பிரித்து எடுத்து 'நசையறு மனம்' வேண்டும் என்று சிவசக்தியிடம் கேட்கின்றார் பாரதியார்.பாரதியார் சிவசக்தியிடம் வேண்டுவது 'நல்லக'த்தை.அதுவும் எப்படிப்பட்ட 'நல்லகம்' தெரியுமா? 'தசையினைத் தீச் சுடினும் - 'சிவசக்தியைப் பாடும் நல்லகம்' வேண்டுமாம். சிவசக்தியைப் பாடுவதில் இருந்து சிறிதளவும் தவறிவிடக் கூடாது எனக் கருதுகின்றார் அவர்.நிறைவாக, பாரதியார் சிவசக்தியிடம் கேட்பது மதியை, 'அசைவறு மதி'யை அதாவது சஞ்சலத்திற்கு இடம் தராத 'மதி'யை. 'இவை அருள்வதில் உனக்கு ஏதுந் தடையுளதோ?' என்கிறார்.பாரதியார் தமக்குச் சூட்டிக் கொண்ட பல்வேறு புனை பெயர்களுள் ஒன்று 'சக்திதாசன்' என்பது. சக்தியிடம் ஏதேனும் கேட்கும் போது அவர் 'தாச'னாகவே மாறிவிடுவார். சிவபெருமானிடம் தோழமை நெறியில் நின்று சுந்தரர் உரிமையோடு பேசுவது போல், பாரதியார் சிவசக்தியிடம் உரிமையோடு பேசுவார். உருக்கமான குரலில் உணர்ச்சி ததும்பக் கேட்பார். 'நான் உன்னிடம் சிலவற்றைக் கேட்டுஉள்ளேன். இவற்றை எனக்கு அருள்வதில் உனக்கு எதுவும் தடையுள்ளதோ?' - இக் கேள்வியில் எத்தனைக் கசிவும் கனிவும் குழைவும் ததும்பி நிற்கின்றன பாருங்கள்!நிறைவான பாடல்'நல்லதோர் வீணை செய்தே' என்ற இப்பாடல் எல்லாக் கவிதைக் கூறுகளும், கவிஞரின் ஆளுமைப் பண்புகளும் பொருந்தியுள்ள ஒரு நிறைவுப் பாடல்.எல்லாவற்றிற்கும் மேலாக, பாரதியாரின் தமிழில் ஓர் ஒளிஎங்கும் பரந்து விளங்கக்காண்கிறோம். தெய்விக சக்தியொன்று திடீரென்று கவிஞரது ஆத்மாவிற்குள் புகுந்து முழுதும் இடங்கொண்டு, பரவசப்படுத்தி, ஒளிப்பிழம்பு ஆக்குகிறது. இந்த ஒளியிலேயே ஆனந்தக் கனவுகள் நனவுகளாக முன்னிலைப்படுத்துகின்றன. ''கனவுகள் தாமாகவே ஒளி மிகுந்த உருப் பெற்று, கற்பவரது ஆத்மாவிலும் ஒளியைப் பரப்பி உண்மை காணச் செய்கின்றன” என்னும் பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் மதிப்பீடு பாரதியாரின் இப்பாடலைப் பொறுத்த வரையில் நுாற்றுக்கு நுாறு உண்மை.
-பேராசிரியர் இரா.மோகன்எழுத்தாளர், மதுரை94434 58286

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement