Advertisement

கண்டிப்பும் அவசியமே

ஒரு காலத்தில் நமது குடும்பங்கள் அனைத்தும் கூட்டுக்குடும்பமாக விளங்கியது. ஒவ்வொரு குடும்பத்திலும் இரண்டிற்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தார்கள். அவர்களிடம் அன்பு, அடக்கம், பணிவு, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை போன்ற குணங்கள் அனைத்தும் நம் சமூக அமைப்பில் இயற்கையாகவே இருந்தது. அதுமட்டுமல்ல அந்த குழந்தைகளை கண்டிப்புடனும், கட்டுப்பாடுடனும் வளர்த்தோம். ஒரு சிறிய தவறு செய்தால் கூட குடும்பத்தில் இருக்கும் யாருடைய கவனத்திற்கும் சென்றாலும் கண்டித்து திருத்துவார்கள். யாருடைய கவனத்திற்கும் செல்லாமல் தப்பவும் முடியாது. ஏனெனில் கூட்டுக்குடும்ப அமைப்பில் எல்லா விஷயங்களும் பகிரப்படும். இத்தனைக்கும் மேலாக ஆசிரியர்களிடம் அபரிதமான மரியாதையும், அன்பும் இருந்தது. அவர்களுக்கு மிகப் பெரிய அங்கீகாரம் இருந்தது.
இது அந்தக் காலம் : பள்ளியில் குழந்தைகளை ஆசிரியர்களிடம் விட்டுச் செல்லும் பெற்றோர், ''இவன் உங்கள் பிள்ளை மாதிரி, இவனை கண்டிக்கவும், தண்டிக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு. இவர் தவறு செய்தால் கண்ணை மட்டும் விட்டு விட்டு எங்கு வேண்டுமானாலும் தண்டியுங்கள்,'' என கூறக் கேட்டதுண்டு.அவர்கள் அப்படிச் சொன்னார்கள் என்பதற்காக எந்த குழந்தையும் தண்டிக்கப்பட்டதில்லை. எந்த குழந்தையும் பாதிக்கப்படவில்லை. அந்த அளவிற்கு ஆசிரியர்களுக்கு உரிமையும், அதிகாரமும் இருந்தது.மாதா, பிதா, தெய்வம் தான் குரு என்பது தான் உண்மை நிலை.
திசை திரும்பிய மாற்றம் : காலப்போக்கில் ஒவ்வொரு குடும்பத்திலும் பொருளாதார நலன் கருதி பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அம்மாக்களும் பணிக்கு சென்றனர். அப்பாக்களும் கூடுதலாக பணிச் சுமைக்கு ஆளானார்கள். அவர்களது கவனம் திசை திரும்பியது.தங்களுக்கென வாழ்க்கை முறையில் கட்டுப்பாட்டை கொண்டு வந்தனர். ஒரே ஒரு குழந்தை மட்டுமே பெற்றார்கள். அதையும் செல்லம் கொடுத்து வளர்த்தார்கள். ஆனால் வேலைப் பளு காரணமாக குழந்தைகளை காப்பகத்தில் சேர்த்தனர். இங்கு தான் மனிதன் ஐந்தறிவு படைத்தவைகளிடமிருந்து வேறு படுகிறான். அம்மாவும், அப்பாவும் வேலைக்கு சென்றாலும் எந்த ஒரு பறவையும், எந்த ஒரு விலங்கும் தங்கள் குஞ்சுகளையும், குட்டிகளையும் காப்பகத்தில் விட்டு விட்டு பணிக்கு சென்றதில்லை. மனிதன் மட்டும் தான் அந்த செயலை செய்தான். அதனால் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய நேரத்தில் கேட்பதையெல்லாம் தாமதிக்காமல் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். இது அந்த குழந்தைகளின் மனதில் நாம் எது கேட்டாலும் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது. அவர்களுக்கு தோல்வி என்ற அனுபவத்தையோ, ஏமாற்றம் என்ற அனுபவத்தையோ நாம் ஏற்படுத்தியதே இல்லை. இதன் விளைவு அந்த குழந்தைகள் வளர்ந்தவுடன் சமுதாயத்தில் ஏற்படும் போட்டிகளை சமாளிக்க முடியாமல் தவறான முடிவை தேர்ந்தெடுக்கிறார்கள்.
தயங்கும் பெற்றோர் : அன்றைய காலத்தில் ஒரு வீட்டில் இரு குழந்தைகளுக்கு மேல்இருந்ததால் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை குழந்தைகள் தானாக கற்றுக் கொள்ளும் சூழ்நிலை உருவானது. இழப்புகள் பெரிதாக தெரிவதுமில்லை. ஆனால் இன்றைய சூழ்நிலையில் தான் நினைத்தது தனக்கு கிடைக்காவிட்டால் ஏற்படும் மன அழுத்தங்கள் பல விபரீத விளைவுகளை உருவாக்குகின்றன.குழந்தைகள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டித் திருத்த பெற்றோர் தயங்குகிறார்கள். சமுதாயம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. திருத்த நினைத்து பள்ளியின் ஆசிரியர்கள் முயற்சி செய்தால் அதை பெற்றோரே விரும்பாமல் திசை திருப்பி விடுகின்றனர்.தனக்கும், பக்கத்து வீட்டு பெண்ணுக்கும் நடந்த சண்டையால் மனம் உடைந்த மகளின் தற்கொலை முடிவுக்கு, தனது கணவனிடமிருந்து தப்பிப்பதற்காக, பள்ளி ஆசிரியர் தான் காரணம் எனக் கூறிய தாயார் பற்றி செய்தியை நாளிதழில் படிக்க நேர்ந்தது. மாணவனுக்கு எந்த பிரச்னை என்றாலும் அதற்குஆசிரியர் மீது பழிபோடும், பெற்றோர் போக்கு கவலை அளிக்கிறது.மாணவர்கள் தவறு செய்தால், வகுப்பில் அதை சுட்டிக்காட்டினால், அதை மிகப் பெரிய அவமானமாக பெற்றோர்கள் புகார் செய்வதால் ஆசியர்களும் கண்டிப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
குழந்தை வளர்ப்பு எப்படி : ஆசிரியர்கள் கைகள் கட்டப்படும் போது சமுதாயத்தில் சீர்கேடுகள் தோன்றுவதற்கு அதுவே அடிப்படை காரணமாகிறது. சமீபத்தில் நிகழ்ந்த பல குற்றச் செயல்களின் பின்னணியை பார்க்கும் பொழுது குழந்தைகள் வளர்க்கப்பட்ட விதத்தினால் தான் இந்த குற்றச் செயல்கள் நடந்தது கண்கூடாக தெரிகிறது.குற்றச் செயல்கள் புரிந்தவர்கள் தங்கள் வாழ்வையும் தொலைத்து, ஒன்றுமறியா அப்பாவிகளின் வாழ்வையும் சீரழித்ததற்கு காரணம் கண்டிப்பற்ற வளர்ப்பு முறை தான் என்பது தெள்ளத் தெளிவு. அந்தக் காலத்தில் கண்டிப்பும், கட்டுப்பாடும் குடும்பத்திலும் இருந்தது. சமுதாயக் கட்டமைப்பிலும் இருந்தது, பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும், பணிபுரியும் இடங்களிலும் இருந்தது. ஆனால் இன்றையசூழ்நிலையில் இது போன்று, எந்த இடத்திலும் அதற்கான வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலையால் இன்றைய குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் பல்வேறு விதமான அனுபவங்களை பெற நேரிடுகிறது. அந்த அனுபவங்களை சமாளிக்கும் விதத்தில் தான் அவர்களது ஆளுமை வெளிப்படுகிறது. அப்படிப்பட்ட அனுபவங்களை பெற்றவர்கள் எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் கொண்டவர்களாக திகழ்கிறார்கள்.
கண்டிக்க அனுமதியுங்கள் : கண்டிப்புடன் வளர்க்கப்படாத குழந்தைகள் தோல்விகளை தாங்கும் மனம் படைத்தவர்களாக இருக்க முடியாது. ஏமாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் குணம் படைத்தவர்களாக இருக்க முடியாது. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர்களாக இருக்கமுடியாது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்களாக இருக்க முடியாது. எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள். சமூகப் பொறுப்பு உள்ளவர்களாக இருக்கமாட்டார்கள். இந்த மனப்பான்மை குடும்பத்தை, உறவு முறையை, சமுதாயத்தை பாதிக்கும். இறுதியில் அவர்களது வாழ்க்கையையே பாதிக்கும். உங்கள் குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டவராக இருந்தால் கண்டித்து வளருங்கள். அடுத்தவர்களையும், ஆசிரியர்களையும் கண்டிக்க அனுமதியுங்கள். அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலனும் வளமும் பெறகண்டிப்பும் அவசியமே.
- எஸ்.ராஜசேகரன்தலைமையாசிரியர், இந்து மேல்நிலைப் பள்ளிவத்திராயிருப்பு. 94429 84083

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement