Advertisement

மனம் எனும் தோணி

மனம் எனும் வலிமையான சக்தி 'ஒன்று' நமக்கு இருப்பதால் நாம் அமைதியாக வாழ முடிகின்றது. மனம் இருப்பதாலேயே 'மனுஷன்' என்ற பெயரும் நமக்கு வந்தது. இதன் ஆற்றல் அளப்பரியது. என்ன நினைக்கிறோமோ அதைப் பெற்றுத் தரும் வல்லமை உடையது மனம். இம்மனத்தை நாம் நல்வழியில் செல்ல விடாமல் தடுத்தால் தீமையே வரும்.புறநானுாறில் இடம்பெற்றுள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனத் தொடங்கும் பாடலின்கருத்துகள் மனதின் ஆற்றலோடு தொடர்புடையது. இப்பாடலின் முதலடி 1969 ல் நடைபெற்ற இரண்டாவது உலகத்தமிழ்மாநாட்டின் போது அப்போதய முதல்வர் அண்ணாதுரையால்தமிழக அரசின் ஒழுக்கப் பொன்மொழியாக அறிவிக்கப் பெற்றது. சிறப்பு வாய்ந்த இந்த பாடலைப் பாடியவர் கணியன் பூங்குன்றனார். இவர் பிறந்த ஊரின் பெயராலும் செய்யும் தொழிலாலும் இப்பெயர் பெற்றார். பூங்குன்றம் என்பதுஇன்றைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மகிபாலன்பட்டி.கணியன் பூங்குன்றனார், மிகச் சிறந்த மதிநுட்பம் வாய்ந்தவர். பொதுவாக ஏழை, பணக்காரன் என்றில்லாமல் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு துன்பத்தில் உழன்று கொண்டிருப்பதை உணர்ந்தார். அவ்வாறு துன்பத்தில் உழன்றவர்களுக்கு முடிந்தவரை ஆறுதல் கூறி வந்தார். இவ்வாறு தாம் கூறும் ஆறுதல் மொழிகள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் நின்று பயன்தர வேண்டுமே என்று நினைத்தார்.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்தீதும் நன்றும் பிறர்தர வாராநோதலும் தணிதலும் அவற்றோ ரன்னசாதலும் புதுவ தன்றே வாழ்தல்இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்இன்னாது என்றலும் இலமே மின்னொடுவானம் தண்துளி தலைஇ ஆனாதுகல்பொருது இரங்கும் மல்லல் பேரியாற்றுநீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளித்தனம் ஆகலின் மாட்சியின்பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.(புறம் 192) என்று பாடினார்.
மனம் சார்ந்த வழிபாடுகள் : தமிழ்நாட்டுக் கோயில் வழிபாடுகளும் மனம் சார்ந்ததே. திருக்கோயிலில் ஆயுஷ்ஹோமம் செய்வது, வேண்டுதல்களை நிறைவேற்றுவது எல்லாம் மனத்திருப்திக்காக தான். ஒருவர்தம்முடைய குலதெய்வத்தை மாதம் ஒரு முறை வணங்கினால் இயல்பாகவே மனம் வலிமை பெற்று, தான் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெறுவர் என்பதுமனத்தின் உறுதி அறிந்த சான்றோர்களின் கருத்து. ஒரு கலைஞன் மனதில் ஒரு இசைப்பாடலை பாட, அதன் பண்ணை தெரிந்து கொள்ள மனம் முக்கிய கருவியாக விளங்குகிறது. இதே முறை எல்லா நுண்கலைகளுக்கும் பொருந்தும். மனதில் உதித்த வடிவத்தை செயல்படுத்துபவர்கள் கலைஞர்கள். கலைகள் மனத்தின் ஆழமான வெளிப்பாடே ஆகும். ஆகவே கலைஞர்கள்மனதோடு தொடர்புடைய விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம்தருவார்கள்.இந்த உலகில் வாழும் அனைவரும் ஒருவருக்கொருவர் உறவினர்கள் தாம். அனைத்து நாடுகளும் அனைவருக்கும் சொந்தமானது தான். இதில் எவ்வித ஐயமும் வேண்டாம். காரணம் கோடானுகோடி ஆண்டுகள் நிலைத்திருக்கும் இந்தப் பூமியில் நாம் எண்ணற்ற பிறவிகள் எடுத்திருக்கிறோம். ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொருவருக்கும் உறவினராகப் பிறந்து இருக்கிறோம். இந்த உண்மையைப்பட்டினத்தடிகள்,'அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?முன்னை எத்தனை எத்தனை மமோ?மூட னாயடி யேனும் அறிந்திலேன்,இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ?என்செய்வேன்? கச்சி ஏகம்ப நாதனே!'என வேண்டுவதிலிருந்து உணர்ந்து கொள்ளலாம்.இன்பம், துன்பம் ஏன் இந்த உண்மையை நாம்உணர்ந்தால் மேலே கூறிய 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற பாடல் வரிக்குப் பொருள்புரியும். உறவினர்களுக்குள்ளும் பகை இருந்து கொண்டுதானே இருக்கிறது என்று கேட்கலாம். பகையில்லாமல் வாழ்வது தானே மனித மாண்பு. வாழ்க்கையில் நம் ஒவ்வொருவருக்கும் இன்ப துன்பங்கள் மாறி மாறி வருகின்றன. அவை எதனால் வருகின்றன என்பதை நாம்சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதாவது முற்பிறவிகளில் நாம் செய்த நல்வினை, தீவினைகளே அவற்றிற்குக் காரணமாக அமைகின்றன. இன்பம் வரும்போது மட்டும், 'எல்லாம் என் திறமை; என்னைப் போல் யாரால் சாதித்து விடமுடியும்?' என்கிறோம். அதே நேரத்தில் துன்பம் வந்து விட்டால் அதற்கு, 'அவன் தான் காரணம்; இவன் தான் காரணம்' என்று மற்றவர்கள் மீது பழி சுமத்தி பகையை வளர்த்துக் கொண்டு வாழ்கின்றோம்.பகை உருவாகக் காரணமாக விளங்குவன நமக்குள் தோன்றும் பேராசை, பொறாமை, கோபம் போன்ற குணங்களாகும். இந்த இழிகுணங்களால் நாம் தீமைகள் செய்கின்றோம். அதனால் நமக்குத் துன்பங்கள் வருகின்றன. நமக்கு வரும் இன்ப துன்பங்களுக்கு நாம் தான் காரணம்; வேறு யாருமில்லை என்ற நினைப்பு நமக்கு வலுப்பெற வேண்டும். அதனால் நாம் யாரையும் எதிரியாகக் கருத மாட்டோம். இவ்வாறு நாம் எண்ணும் எண்ணத்தால் நம்மைப் பகைவராக நினைப்பவர் கூட காலப்போக்கில் நண்பர்களாக ஆகிவிடுவர். கடுஞ்சொல் வேண்டாம் : மனமே எல்லா துன்பங்களுக்கு காரணமாக இருக்கின்றது. மனத்தால் ஒரு தீங்கு நினைத்தால் தீவினை நமக்கு வந்து சேர்கிறது. பிறருக்கு ஒரு நன்மை செய்வதால் நல்வினை நமக்கு வரும். அவரவர் செய்த வினைகளுக்கேற்பவே வாழ்க்கையும் சுற்றமும் அமைகின்றன. ஏன்? நம் உடற்கூறுகளும் நாம் செய்த வினைகளுக்கேற்பவே அமைகின்றன. இந்த உண்மையைப் புரிந்து கொண்டு உடற்குறைபாடு உடையவர்களை இழிவாகப் பேசக்கூடாது. நாம் எப்படிப்பட்ட வறுமையான சூழ்நிலையில் இருந்தாலும் தன்னை நாடி வருகின்ற வறிய வரிடம் கடுஞ்சொல் கூறுதல் கூடாது. உதவி செய்ய முடியாத நிலையில் இனிய சொற்களால் ஆறுதல் கூற வேண்டும். இதனை, 'யாவார்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே' என்ற திருமூலரின் திருவாக்கால் அறிதல் வேண்டும்.யாரையும் இகழ்தல்கொஞ்சமும் கூடாது. இகழ்தல் என்னும் சொல் இகழ்ந்து பேசுதல் என்று மட்டும் குறிக்காமல், பிறரை இழிவாக நினைத்தலையும் நடத்துதலையும் குறிக்கும். பகை தோன்றினால் உடனுக்குடன் பேசித் தீர்த்து விடவேண்டும். இல்லையேல் அது அடுத்தடுத்த பிறவிகளிலும் தொடரும். அதனால்தான் கம்பரும், வசிஷ்டர் வாயிலாக,'யாரொடும் பகை கொள்ளலின் என்றபின் போரொடுங்கும் புகழ் ஒடுங்காது' எனக் குறிப்பிட்டார்.
வாழ்க்கை கடல் : வாழ்க்கை எனும் கடல் பயணத்தில் மனம் ஒரு வலிமையான தோணி. அதில் மதி எனும் அறிவு கோலை ஊன்றி பயணம் செய்யவேண்டும். ஒரு சிலர் அறியாமையின் காரணமாக இழிந்தசெயல்களைச் செய்யலாம். அதற்காக அவர்களை இழிவாகப் பேசுதல் கூடாது; காரணம் அது அவர்கள் செய்த முன்வினைப் பயன் காரணமாகப் பெற்ற அறிவு, அவ்வளவுதான் என்று அமைதி கொள்ளவேண்டும். எனவே, 'பெரியோரைவியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே' என்ற மெய்மொழியின்படி நாம் நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் இன்பமே எந்நாளும் துன்பமில்லை. இக்கருத்துகள் ஜாதி, சமயம், இனம், மொழி என அனைத்துத் தடைகளுக்கும் அப்பாற்பட்டது என்பதை உணரும்போது கணியன் பூங்குன்றனார் அருளிய இப்பாடல், நாம் அனைவருக்கும் நல்வழியைக் காட்டும் பாடல் என்பது புரிகின்றது.
-முனைவர் தி.சுரேஷ்சிவன்செம்மொழி இசைத்தமிழ் அறிஞர், மதுரை94439 30540

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement