Advertisement

சுய தொழில் செய்வது கேவலமா?


ன்று, வாட்ஸ் ஆப், பேஸ்புக், டுவிட்டர் என, எதை எடுத்துக் கொண்டாலும், அதில் பக்கோடா செய்வதைப் பற்றி தான் செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. 'பக்கோடா விற்றுக் கூட பிழைக்கலாம்; பக்கோடா விக்கிறவன் கூட சந்தோஷமாக இருக்கிறான்' என, சொன்னதை வைத்து தான் இத்தனை செய்திகள்.

அதாவது, சுயமாக தொழில் செய்து பிழைக்கலாம்; சுயதொழில் செய்கிறவர்கள் சந்தோஷமாக இருக்கின்றனர் என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டதை தவறாக புரிந்துக் கொண்டதன் விளைவு தான் இது.நமது மக்களுக்கு யாராவது ஒருவர் சொன்னால், அது என்ன வென்று கூட யோசிக்காமல் அப்படியே மற்றவர்களுக்கு பரப்புவது தான் இயல்பே! சமீபத்தில், வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தி. அனேகமாக எல்லாருக்கும் வந்திருக்கும்.அது, 'பிப்ரவரி மாதத்தில் நான்கு ஞாயிறு, நான்கு திங்கள், நான்கு சனி' என, எல்லா நாட்களும் நான்கு முறை வருகிறது. இது, 825 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரக்கூடிய அபூர்வ நிகழ்வு தான்.அதைப் படித்தவுடன் எனக்கு சிரிப்பு தான் வந்தது. ஏனென்றால், 'லீப்' ஆண்டை தவிர, ஏனைய ஆண்டுகளில் வரும் அனைத்து பிப்ரவரி மாதங்களுக்கும், 28 நாட்கள். அப்ப, 4x7=28. வாரத்தின் அனைத்து நாட்களும் நான்கு முறை மட்டுமே வரும்.இது, அபூர்வமும் கிடையாது; அதிசயமும் இல்லை. ஆனால், இந்த சின்ன உண்மைக் கூட தெரியாமல் தனக்கு வந்த செய்திகளை அப்படியே, 'பார்வர்டு' பண்ணுகிறவர்கள் தான் பக்கோடா செய்தியையும் பார்வர்டு
பண்ணிக் கொண்டு இருக்கின்றனர்.ஒரு தொழிலதிபரிடம் நேர்காணல் செய்த பத்திரிகை நிருபர், அவரிடம் உங்களுக்கு என்ன பழம் பிடிக்குமென கேட்க, அதற்கு அவர், 'எனக்கு ஆப்பிள் ரொம்ப பிடிக்கும்' என சொன்னார்.
மறுநாள் அந்த நிருபர், 'தொழிலதிபருக்கு ஆப்பிள் தான் பிடிக்குமாம்; மாம்பழம் பிடிக்காதாம்' என, செய்தி போட்டு விட்டார்.

இதே நிகழ்வு தான் இன்று, பக்கோடாவிற்கும்!அண்மையில் படித்த ஒரு செய்தி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் நிறைய பேர், இன்ஜினியரிங் பட்டதாரிகள்!
வேலையில்லாமல் இவ்வளவு இன்ஜினியர்கள் பெருத்ததற்கு, நம் மக்களின் ஆட்டு மந்தை சிந்தனை தான் காரணம். ஒருவர், இன்ஜினியரிங் படித்து, நல்ல வேலைக்கு போய், கை நிறைய சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால், உடனே அனைவரும் தங்கள் பிள்ளைகளை இன்ஜினியரிங் படிக்க அனுப்பி விடுகின்றனர்.
அதுவும் எப்படி... முதலில் வேலைக்கு சென்ற நபர், எந்த குரூப் எடுத்தாரோ, அதே குரூப்பில் தன் பிள்ளையையும் சேர்த்து விடுவர். வேறு குரூப்பில் கூட சேர்க்க மாட்டார்கள். முன், ஊருக்கு ஒரு இன்ஜினியரிங் பட்டதாரி இருந்தார். இன்று, வீட்டுக்கு இரண்டு பேர் இருக்கின்றனர்.


இவ்வளவு பேருக்கும் வேலை எவ்வாறு கொடுக்க முடியும்?எனவே, குறுக்கு வழியில் வேலைத் தேட முயற்சி செய்ய ஆரம்பித்து விட்டனர். தங்கள் திறமையின் மீது உள்ள நம்பிக்கையை, பணத்தின் மீது வைக்க ஆரம்பித்து விட்டனர். அதனால், எத்தனை லட்சம் வேண்டுமானாலும் லஞ்சமாக கொடுத்து, வேலை வாங்க முடிவு செய்து விட்டனர்.'பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில்...' என்பது போல, விரைவில் இவர்கள் குட்டு வெளிச்சத்திற்கு வந்து விடுகிறது. அதன் பின், லஞ்சம் வாங்கியவர்களும், கொடுத்தவர்களும் மாட்டிக்
கொள்கின்றனர். இரண்டு பேருக்குமே அவமானம், மன உளைச்சல், தேவையில்லாத பிரச்னைகள்.லஞ்சமாக கொடுக்கும் பணத்தை வைத்து, சுயதொழில் துவங்கி, நான்கு பேருக்கு வேலை கொடுக்கலாம் என்ற எண்ணம் யாருக்கும் வரவில்லை.நான் சிறுமியாக இருக்கும் போது, எங்கள் வீட்டிற்கு சைக்கிளில் வந்து ஒருவர் பால் ஊற்றுவார். ஒரு தடவை அவரிடம், 'என்ன படித்திருக்கிறாய்' என, என் தந்தை கேட்ட போது, 'பி.காம்., படித்திருக்கிறேன்' என, அவர் சொன்னார்.
உடன் என் தந்தை, 'என்னப்பா... பி.காம்., படிச்சிட்டு, பால் ஊத்திட்டு இருக்கியே... வேற நல்ல வேலைக்கு போகக்கூடாதா?' என. கேட்டார்.அப்போது, 'நான் படித்தது என் அறிவை வளர்க்கத் தான்... எங்க வீட்டுல நிறைய மாடு வளர்கிறோம். நிறைய இடங்களுக்கு பால் ஊத்துறோம். எல்லா கணக்கு, வழக்குகளையும் நானே பாத்துக்கிறேன்.
ஒரு ஆளுக்கு பதிலா, நான் வந்து பால் ஊத்துவதால், ஒருத்தருக்கு கொடுக்க வேண்டிய கூலி மிச்சம். எனக்கும், நாலு பேரோட பழக வாய்ப்பு கிடைச்ச மாதிரி இருக்குது'ன்னு
சொன்னார்.

அதே மாதிரி, எங்கள் ஊர் பஸ் ஸ்டாண்டில், ஒரு பெரியவர் சுண்டல் விற்றுக் கொண்டிருப்பார். அவரிடம் நான் வாடிக்கையாக சுண்டல் வாங்குவேன்; அவரது குடும்ப விபரம் ஒரளவிற்கு எனக்கு தெரியும். சமீபத்தில் அவரை காணவில்லை.அவருக்கு பதிலாக, மகன் சுண்டல் விற்றுக் கொண்டிருந்தான். அவன், சிங்கப்பூரில் கனரக வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தது எனக்கு தெரியும். பெரியவருக்கு உடல் நலம் சரியில்லை போலிருக்குது; அவருக்குப் பதிலாக மகன் சுண்டல் விற்றுக் கொண்டிருக்கிறான் என நினைத்து, அவனிடம் கேட்டேன்.
'அப்பாவிற்கு என்ன தம்பி... அவர் ஏன் வரவில்லை?' என்று விசாரித்த போது, 'அப்பா இறந்து விட்டார்; அவருக்குப் பதிலாக தொழிலை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்' என்றான்.'அப்ப, சிங்கப்பூர் வேலை...' என, நான் இழுத்ததும், 'அந்த வேலையை விட்டுட்டேன் அக்கா. இதில ஒரு நாளைக்கு, எல்லா செலவும் போக, 3,000 ரூபாய் கிடைக்குது.
பொண்டாட்டி பிள்ளைகளையும், பக்கத்திலே இருந்து பாத்துக்க முடியுது; நிம்மதியாக இருக்கிறேன்' என்றான்.அவன் பேசியது,


கீதை சொன்ன கண்ணனாக, புத்தனுக்கு ஞானம் தந்த போதி மரமாக தோன்றியது. அடுத்தவரிடம் கை கட்டி வேலை பார்த்து, 'டார்கெட்' முடிக்க வேண்டும்' என, எந்நேரமும் பரபரப்புடனும், 'எப்போ வேலையை விட்டு துாக்குவரோ' என்ற பதைபதைப்புடன் இருப்பதை
விட, சுயதொழில் எவ்வளவோ சிறந்தது.மேலும், அரசு வேலையில் சேர்ந்து, லஞ்சம் வாங்குவது, ஊழல் செய்வதை விட, சுயதொழில் செய்வது ஒன்றும் கேவலமல்ல. நம் நாட்டு செல்வ சீமான்கள் பிள்ளைகள் கூட, வெளிநாட்டுக்கு படிக்கப் போனால், ஏதாவது ஒரு ஓட்டலில் வேலை பார்த்துக் கொண்டு தான் படிக்க வேண்டும்.
'பெப்சிகோ' நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள, இந்திரா நுாயி, வெளிநாட்டில் படிக்கும் போது, அவர் படித்த கல்லுாரியில் வரவேற்பாளராக பணி புரிந்துள்ளார். அதனால், எந்த தொழிலும் கேவலம் அல்ல.அன்பானவர்களே... வதந்திகளிலும், வாட்ஸ் ஆப்களிலும் வரும் செய்திகளை விவாதிப்பதும், 'மீம்ஸ்' எனப்படும் பகடிகளை சிரித்துக் கொண்டாடுவதும், சில நேரங்களில்
இனிக்கும். அதனால், கொஞ்சி கொஞ்சி பேசி, மதி மயக்கக் கூடிய வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு தொங்காதீர்கள். வாழ்க்கை அதுவல்ல.


'கற்றதினால் ஆய பயன் என்கொல்...' எனும் திருக்குறள் வரி நமக்கானது. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு.ஈடில்லா சுதந்திரம். பாதுகாப்பான வாழ்க்கை. தேசத்தில் எவரையும் கேள்வி கேட்கும் அல்லது விமர்சிக்கும் உரிமை. இவை, இந்தியா நமக்கு தந்திருக்கும் வரங்கள். அயல் நாடுகளில் வேலைப் பார்ப்போரை கேட்டுப் பாருங்கள். அரபு நாடுகளில் நோன்பு காலங்களில், யாரும் பொதுவெளியில் தண்ணீர் கூட அருந்த முடியாது.
இப்படி பல கட்டுப்பாடுகள் உள்ளது தான் வெளி உலகம்.இறுதியாக, நாம் பூமியின் சொர்க்கத்தில் இருக்கிறோம். ஆதாம்கள் வாழும் நாட்டில், சாத்தான்கள் நடமாடத் தான் செய்யும்; ஆப்பிளை நீட்ட தான் செய்யும். நல்லவைகளையே பேசி, நல்லவைகளையே சிந்தித்து, இலவசமாய் கிடைக்கிறது என்பதற்காக, ஆப்பிளுக்கு வாயை திறக்காமல், மூடி இருப்பது நமக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் நல்லது.யாரிடமும் கைக்கட்டி வேலைப் பார்ப்பதை விட, நமக்கு நாமே முதலாளியாய் இருக்க, சுயதொழில் செய்வது ஒன்றும் இழிவானது அல்ல!இ -- மெயில்: selvasundari152gmail.comஎஸ்.செல்வசுந்தரி
சமூக ஆர்வலர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா

    நல்ல சிந்தனை இதை யாரு படித்து மனத்துல வாங்கப்போற

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement