Advertisement

மனிதர்களைப் பார்த்தால்தான் எனக்கு பயம்...


மனிதர்களைப் பார்த்தால்தான் எனக்கு பயம்...

கோவை சொக்கம் புதுார் மயானத்தில் இரவு நேரம் ஒரு பிணம் தீ தின்னக்காத்திருக்கிறது.

பிணத்திற்கு கொள்ளி வைத்தவர்கள், திரும்பிப்பார்க்காமல் செல்லவேண்டும் என்ற சம்பிரதாயப்படி ஒட்டமும் நடையுமாக அங்கிருந்து அகன்று விடுகின்றனர்.

டீசலில் துவங்கி விறகுக்கு மாறிய தீ பின் விறகாய் மாறி விறைப்பாய் இருந்த பிணத்திற்கு பரவுகிறது,கொஞ்ச நேரத்தில் திகு திகுவென்று எரிகிறது.

பிணத்தின் எல்லாபக்கமும் நன்றாக எரிய வேண்டும் என்பதற்காக பக்கத்திலேயே இருந்தபடி ஒரு ஜீவன் பார்த்துக்கொண்டிருக்கிறது,பிணத்தின் எரியாத பகுதிகளுக்கு தீயை பரவச்செய்கிறது,இப்படி பிணம் முழுமையாக எரியும் நான்கு மணி நேரமும் கவனித்து தன் கடமையைச் செய்த பின் அந்த ஜீவன் திருப்தியாக செல்கிறது.

அந்த இருபத்தியொரு வயது ஜீவனுக்கு பெயர் அட்சயா

அட்சயா ஆணுமற்ற பெண்ணுமற்ற ஒரு அரவாணி, சமூகம் கவுரமாக கொடுத்த பெயர் திருநங்கை.

திருநங்கை என்ற பெயரை மட்டும் கவுரவமாக கொடுத்த சமூகம் அட்சயாவை ஒரு பொழுதும் கவுரமாக வாழவிடவில்லை.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வரை அனில் கார்த்தியாக இருந்த அட்சயா அதன்பிறகு தனக்குள் ஒரு மாற்றம் உண்டானதை உணர்ந்தார் பின் விவரம் சேகரித்து தான் அரவாணியானதை உறுதிப்படுத்திக் கொண்டார்.

பள்ளியில் உடன் படிக்கும் மாணவர்கள் கேலி செய்ததைதக் கூட தாங்கிக்கொள்ள முடிந்தது ஆனால் பாடம் சொல்லிக்கொடுத்த மாதா பிதாவிற்கு அடுத்த இடத்தில் குருவாக இருந்த ஆசிரியரும் கேலி செய்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லை, படிப்பிற்கு விடை கொடுத்தார்.

வீட்டில் முடங்கிக்கிடந்த அட்சயாவை அண்ணன்கள் நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லி ஆறுதல் தரவேண்டிய சகோதரர்கள் தங்கள் கவுரவம் பாதிக்கப்படுவதாக குறைப்பட்டுக் கொண்டார்கள், அட்சயாவை தனிமைப்படுத்தி துாங்கவைத்தார்கள்,துக்கம் நிறைந்த மனதிற்கு துாக்கம் எங்கிருந்து வரும் கண்ணீர் மட்டுமே வந்தது.

ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லட்டும் அம்மா நான் இருக்கிறேன் என்று சொல்லி என்னை மடியில் போட்டு தேற்றவேண்டிய தாயார்க்கு என்னை விட குடும்ப கவுரம் முக்கியமாகப் பட்டது.

எனக்குள் ஏற்பட்ட மாற்றம் என்னால் ஏற்ப்பட்டதல்ல என்பதை ஏனோ எல்லோரும் மறந்தார்கள் என் வேதனையை மன உளைச்சலை யாருமே புரிந்து கொள்ளவில்லை நான் இருப்பதை விட இறப்பதே மேல் என என் காதுபடவே பேசினார்கள்.

அவர்கள் விருப்பம் அதுவானால் அப்படியே நடக்கட்டும் என்று தற்கொலைக்கும் முயன்றேன் ஆனால் என் வாழ்க்கையில் அதுவும் தோல்வியில் முடிந்தது.

இனியும் குடும்பத்திற்கு சுமையாக இருக்கவேண்டாம் என்று முடிவு செய்து வீட்டைவிட்டு வெளியேறினேன்.வயிற்று பசிக்காக வேலை தேடினேன் ஆனால் வேலை தருவதாகச் சொன்னவர்களோ முதலில் தங்கள் உடல் பசி தீர்க்கும்படி கேட்டனர்.

எனக்கு ஆதார்கார்டு இல்லை வோட்டர் ஐடி இல்லை ரேஷன் கார்டு இல்லை பான் கார்டு இல்லை பாங்க் கணக்கு இல்லை விலாசம் இல்லை இதெல்லாம் இல்லாததால் நான் வாழ வழியும் இல்லை என்றாகிவிட்டது.

என்னை ஒரு உயிருள்ள ஜீவனாக பார்க்காமல் ரத்தமும் சதையுமாக பார்த்து துரத்திய மனித மிருகங்களிடம் தப்ப சுடுகாட்டிற்குள் தஞ்சமடைந்தேன் அங்கேயும் குடித்துவிட்டு சிலர் என்னை நாசப்படுத்த முயன்றனர்.அப்போதுதான் என்னை தெய்வம் போல வந்து வைரமணி அக்கா காப்பாற்றினார்.

சுடுகாட்டிற்கு வரும் பிணங்களை எரிப்பதும்,புதைப்பதுமான வேலை செய்துவந்த வைரமணி அக்காவுடன் இருந்தபடி அவருக்கு உதவியாக நானும் பிணங்களை எரிக்கவும் புதைக்கவும் செய்தேன்.இரண்டு வருட அனுபவத்திற்கு பிறகு இப்போது நானே தனியாக சுடுகாட்டிற்கு வரக்கூடிய பிணங்களை எரிக்கவும் புதைக்கவும் செய்கிறேன்.இதில் வரும் வருமானத்தில் யாருக்கும் பாரமாக இல்லாமல் கவுரமாக தனியாக வாழ்ந்து வருகிறேன்.மேலும் அனாதை பிணம் என்று சொல்லக்கூடிய ஆதரவற்ற பிணங்கள் கொண்டு வருபவர்களிடம் பணம் வாங்காமல் புதைக்கவும் செய்கிறேன்.

எந்த நேரத்தில் பிணம் வந்தாலும் எரிப்பதற்கு தயராக இருப்பேன்.பிணத்தைக் கண்டு நான் எப்போதுமே பயந்தது இல்லை, எனது பயமே என்னை வேட்டையாட துடிக்கும் மனிதர்களைப் பார்த்துதான்...என்று சொல்லும் அட்சயாவை தற்போது ஈரநெஞ்சம் அமைப்பு தனது உறுப்பினராக்கி கவுரவித்துள்ளது, அவருக்கு வேண்டிய உதவிகளையும் செய்துவருகிறது, உறவாகவும் நட்பாகவும் இருந்து அன்பு பேணிவருகிறது,அவருடன் பேசுவதற்கான எண்(நேரடி எண் கிடையாது):9080131500.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

 • s.rajagopalan - chennai ,இந்தியா

  சிறந்த கவுரவமான வாழ்க்கை. எரிந்தோரின் ஆத்மா உங்களை வாழ்த்தும். அதுவே உங்களுக்கு புண்யத்தை அளிக்கும். என்ன உலகமடா இது

 • Bhaskaran - Chennai,இந்தியா

  உனக்கு எதிராக நிற்பவர்களை மோதி மிதித்து காரி உமிழ்ந்துவிட்டு உன் பணிகளை தடையினரிசெய் உலகம் ஒருநாள் உன்னை போற்றவே செய்யும்

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  எனது பயமே என்னை வேட்டையாட துடிக்கும் மனிதர்களைப் பார்த்துதான் அட்சயா இது உனக்கு மாத்திரம் அல்ல கண்ணே , எனக்கும் இப்போது அதிகம் வர ஆரம்பித்துள்ளது, அதுவும் இங்கே சிறுபான்மை என்ற பெயரில் வேலையற்று திரியும் இளைஞர்கள் விகாரமாய் பார்க்கும் பார்வை அந்த மதத்தின் மீதிருந்து கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் குலைக்கிறது

 • Rajalakshmi - Kuwait City,குவைத்

  வாழ்த்துக்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement