Advertisement

விருதுகளை வாரி குவிக்கும் கிளை நூலகம்...சாதனை! அறக்கட்டளை, புரவலர்களால் தரம் உயர்கிறது முன்னுதாரணமாக திகழும் திருவொற்றியூர்

திருவொற்றியூர்:திருவொற்றியூர் கிளை நுாலகம், வாசகர் வட்டத்தின் முயற்சியால், உலக தரத்தில் மிளிர்வதுடன், விருதுகளை வாரி குவித்து வருகிறது.

தமிழக அரசின் பொது நுாலகத் துறை, திருவள்ளூர் மாவட்ட நுாலக ஆணைக் குழுவின் கீழ், சென்னை, திருவொற்றியூர், சண்முகனார் பூங்கா அருகே, 1958ல் இருந்து, கிளை நுாலகம் செயல்பட்டு வருகிறது.திருவொற்றியூர் நகராட்சியாக இருந்த போது, இடநெருக்கடியால், 2003ல், நான்கு லட்சம் ரூபாய் செலவில், 760 சதுர அடியில், இந்த நுாலகம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

புதிய கட்டடம்

நுாலகத்தின் வளர்ச்சிக்கு இந்த இடமும், கட்டடமும் போதாது என்பதால், வாசகர் வட்டத்தினரால், அப்போதைய, எம்.எல்.ஏ., - கே.குப்பனிடம், நுாலகத்தை விரிவாக்கம் செய்ய நிதி கோரப்
பட்டது.பழைய கட்டடத்தை முழுமையாக இடித்து, நான்கு தளங்கள் கொண்ட நுாலகம் கட்ட, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 82 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அது மட்டுமின்றி, பொதுநுாலகத் துறை நிதியில் இருந்து, 9.90 லட்சம் ரூபாய் நிதியும் சேர்த்து, 91.90 லட்சம் ரூபாய் செலவில், 5,336 சதுர அடியில், நான்கு தளங்களாக, நுாலகம் விரிவுபடுத்தப்பட்டது.மேலும், பல நவீன வசதிகளுடன், டிஜிட்டல் நுாலகமாக மாற்றப்பட்டு, 2015ல் இந்த நுாலகம் திறக்கப்பட்டது.இங்கு, நுாலக உறுப்பினர் சேர்க்கை கட்டணமாக, 30 ரூபாயும்; ஆண்டு சந்தா புதுப்பிப்பிற்கு, 10 ரூபாயும் பெறப்படுகிறது.

இதில், மாற்றுத்திறனாளி, நாளிதழ் மற்றும் பருவ இதழ்கள், மகளிர் என, பல்வேறு பிரிவுகளில் நுாலகம் உள்ளது. முதல் தளத்தில், நுால் இரவல் வழங்கும் பிரிவு, குறிப்பெடுக்கும் பிரிவு, சிறுவர் பிரிவு போன்றவை அமைந்துள்ளன. இரண்டாவது தளத்தில், குடிமைப்பணி பயில் முனையம், டிஜிட்டல் நுாலகம் அமைந்துள்ளன.மூன்றாவது மாடியில், வாசகர்கள் தங்கள் சொந்த நுால்களை எடுத்து வந்து வாசிப்பதற்கான, படிப்பகம் அமைக்கப்பட்டு உள்ளது.

நுாலகத்தின் முன்புறத்தில் வாகனம் நிறுத்துமிடமும், பின்புறம் பூங்கா, மணற்பரப்பு என, உலக தரத்தில் மிளிர்கிறது, இந்த நுாலகம்.பார்வையற்றோர், மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர் பயன்படுத்தும் வகையில், மூன்று கணினிகள், தரைத்தளத்தில் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், பார்வையற்றோர், நுால்களை ஒலி வடிவில் கேட்டு பயன்பெறும் வசதியும் இங்கு உள்ளது.

இந்த நுாலகத்தில், அரசு வேலை வாய்ப்பு பெறுவதற்கான போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், அதிகளவில் வந்து படிக்கின்றனர். சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், இங்கு வாசகர்களாக உள்ளனர்.நவீன வசதிகளுடன் அமைந்துள்ள இந்த நுாலகம், திருவொற்றியூர் சுற்றுவட்டார, மாணவ - மாணவியருக்கு மட்டுமன்றி வாசகர்கள், பொதுமக்களுக்கான அறிவுக் கோவிலாக அமைந்துஉள்ளது.

நிகழ்வுகள்

மாதந்தோறும், நுாலக வாசகர் வட்டம் சார்பில், மாதத்தில், 2வது சனிக்கிழமை, 'சிந்தனை சாரல்' என்ற தலைப்பில், கருத்தரங்க கூட்டம் நடைபெற்று வருகிறது. இதுவரை, 29 கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன. மூன்று மாத இடைவெளியில், சிந்தனை சாரலின் கருத்தரங்க கூட்டம்,
தனியார் பள்ளி வளாகத்தில், 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில், பெரிய
அளவில் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிகழ்வில், பர்வீன் சுல்தானா, தமிழருவி மணியன், கலியமூர்த்தி, பா.ரம்யா உள்ளிட்ட பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

உலக புத்தக தினத்தை முன்னிட்டு, விளையாட்டு போட்டிகள், மகளிர் திறன் மேம்பாட்டு பயிற்சி, யோகா, பேரணி போன்ற நிகழ்வுகளும் இந்நுாலகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன.
கொடையாளர், புரவலர்களால் வழங்கப்பட்ட, 15.29 லட்சம் ரூபாய், 'அசோக் லேலண்டு' சமூக வளர்ச்சித் திட்டம் சார்பில், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான தளவாடப் பொருட்கள் கிடைத்துள்ளன.

எச்.சி.எல்., அறக்கட்டளை சார்பில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 28 கணினிகள், ஜி.வரதராஜன் உள்ளிட்ட நால்வரால், 6.19 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 16 கண்காணிப்பு கேமராக்கள், 16 ஒலிப்
பெருக்கிகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்து உள்ளன.ஐ.டி.சி., லிமிடெட் நிறுவனம் வழங்கிய, 1.64 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'டிவி' மற்றும் நாற்காலிகள், நன்கொடையாக கிடைத்துள்ளது.
ஐம்பது லட்சம் ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள புத்தகங்கள் என, ஒட்டுமொத்தமாக, 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டுடன், பீடுநடை போடும் இந்நுாலகம், உலகத் தரத்திற்கு உயர்ந்துள்ளது.

இலக்கு

நுாலகத்தில் உள்ள கணினி மூலம், தற்போது வரை, 172 எளிய மாணவ - மாணவியருக்கு, இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி, எச்.சி.எல்., நிறுவனம் மற்றும் வாசகர் வட்டத்தால் வழங்கப்பட்டு, வேலைவாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது.இங்கு, 2,500க்கும் மேற்பட்ட, மாணவ - மாணவியர், 740 மகளிருக்கு, இலவச கணினி பயிற்சி கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரலில் வரும் உலக புத்தகத் தினத்தை முன்னிட்டு, வாசகர் வட்டத்தின் இலக்கு, ஒரு லட்சம் உறுப்பினர்கள் மற்றும், 3,000 புரவலர்களை இந்நுாலகத்தில் சேர்த்தல், இலக்காக கொள்ளப்பட்டு உள்ளது. இதற்காக, ஊர் நலச் சங்கங்களை கூட்டி, நுாலகர் மற்றும் வாசகர் வட்டத்தினர், புத்தக வாசிப்பு மற்றும் நுாலகத்தின் அவசியம் பற்றி, பேசி வருகின்றனர்.

மாநில அளவில் அதிக புரவலர் சேர்த்தல், அதிக உறுப்பினர்கள் சேர்த்தல், அதிக நன்கொடைகள் சேர்த்தல் ஆகிய பிரிவுகளில், 2013ல் இருந்து, தொடர்ந்து, தமிழக அரசின் விருதுகளை, இந்நுாலகம் பெற்று வருகிறது.

பயன்படுத்த வேண்டும்

திருவொற்றியூர் நுாலகத்திற்கு, இன்னும் பல தரமான இலக்கிய நுால்களை, நுாலகத்துறை வழங்க வேண்டும். நுாலகத்திற்காக நிதி உதவி கேட்டால், மக்கள் வாரி வழங்குகின்றனர். ஆனால், மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் இந்த நுாலகத்தை பயன்படுத்த வேண்டும்.

குரு.சுப்பிரமணி, 61,

வாசகர் வட்டம், துணைத் தலைவர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    மைலாப்பூரில் ஒரு நூலகத்துக்கு புரவலராக சேர்த்து ஆண்டு ஒன்றாகியும் பெயரைக்கூட இன்னும் ஒட்டவில்லை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement