Advertisement

உலகம் சமநிலை பெறவேண்டும்!

இப்போது, நாடுகளுக்கிடையே அப்படியொன்றும் இணக்கமான சூழல் நிலவுவதாகச் சொல்வதற்குஇல்லை. 'இணக்கமில்லாத சூழலானது ஆபத்துக்கான அறிகுறி' என்பதை ஐ.நா., மன்றம் வலியுறுத்தி வருகிறது. சர்வதேச சமூக ஒருமைப்பாடு குறித்து கவலையும் கொண்டுள்ளது.சர்வதேச சமூக ஒருமைப்பாடு என்பதற்கு, 'வளரும் நாடுகளில் வறுமையை ஒழிப்பது, வேற்றுமையில் ஒற்றுமை காண்பது, மனித ஒருமைப்பாடு குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவது மற்றும் மனித சமூக மேம்பாட்டுக்கு உதவுவது' என விரிவான வரையறையை வகுத்திருக்கிறது ஐ.நா., நம்மைப் போன்ற வளரும் நாடுகள் இது குறித்து சிந்திக்க வேண்டிய தருணமிது. நம் நிலையிலிருந்து இதனை யோசிப்போம்.
வறுமை : வரலாற்று ஆசிரியரும் அரசியல்வாதியுமான மெக்காலே 1835ல் ஆங்கில நாடாளுமன்றத்தில் பேசுகையில், 'நான் இந்தியாவின் நீள அகலங்களின் குறுக்கே பயணம் செய்துள்ளேன். ஆயினும் அங்கே ஒரு பிச்சைக்காரனையோ, திருடனையோ நான் காணவில்லை. அத்தனை அதிக அளவிலான செல்வச் செழிப்பும் உயர்ந்த அறப் பண்புகளும், உயரிய திறமிக்க மக்களையும் கண்டேன்' என்றார். ஆனால் இன்றைய நிலை? வளரும் நாடுகளில் வறுமைமிக்க நாடுகளில் ஒன்றாக இருக்கிறோம்.வறுமை என்பதனை எப்படி அளவீடு செய்கிறார்கள்? நாட்டு மக்களின் உடல்நலன், கல்வி, வாழ்கின்ற சூழல் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து மதிப்பீடு செய்யப்படுகிறது. இதில், உடல்நலன் என்பதில் உணவு,குழந்தைகள் இறப்பு விகிதம், எரிபொருள், சுகாதாரமான சூழல், பாதுகாப்பான குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவைகள் அடங்கும்.இந்தியா வளர்ந்து வரும் நாடாக இருந்தாலும், வறுமையில் வாழும் மக்களை அதிகம் கொண்ட நாடாக உள்ளது. அடிப்படை வசதிகள் கூட இன்னும் அனைத்து மக்களுக்கும் கிட்டவில்லை. உலகிலுள்ள ஏழை மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் வசிக்கின்றனர்.இந்தியர்களில் ஐந்தில் ஒருவர் ஏழை. அந்த ஐந்து பேரில் 4 பேர் கிராமப்புறத்தில் வசிக்கிறார்கள்.'ஏழை குழந்தைகளுக்குஉதவுவதில் உலக நாடுகள் அக்கறையும் கவனமும் செலுத்தவேண்டும்' என ஐ.நா.வின்அங்கமான 'யுனிசெப்' கடந்தாண்டு அறிவித்திருந்தது. இந்தியாவில் 6 முதல் 23 மாதங்களில் உள்ள குழந்தைகளில் பத்தில் ஒருவருக்கு மட்டுமே போதிய உணவு கிடைக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால், இந்த எண்ணிக்கையானது சஹாரா பாலைவனத்தை ஒட்டியுள்ள நாடுகளின் குழந்தைகளைவிட அதிகம். மேலும், 'இந்தியாவில் 31 சதவிகிதக் குழந்தைகள் ஏழ்மையில் வாடுகிறார்கள். இதை மாற்றுவதற்கு சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என்கிறது ஆக்ஸ்போர்ட் மனிதவள மேம்பாட்டுத்துறை.'நம்நாட்டில்தான் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறதே அப்படியிருக்கையில் என்ன வறுமை' என நீங்கள் கேட்கலாம். நம்நாட்டில், ஏழை - பணக்காரர்கள் இடையேயான இடைவெளி அதிகரித்து வருகிறது. இது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என உலகவங்கி எச்சரித்துள்ளது.
கல்வி மிக மோசமான கல்வி நிலை உள்ள 12 நாடுகளின் பட்டியலில் இந்தியா உள்ளதாக அதிர்ச்சி தகவலை சொல்கிறது உலக வங்கி அறிக்கை. 'இந்தியாவில் படிக்கும் 2ம் வகுப்பு மாணவனுக்கு ஒரு சிறு பத்தியினைக் கூட தவறில்லாமல் படிக்க தெரியவில்லை' என்கிறது அந்த அறிக்கை.'பள்ளிக்கு செல்வோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் மட்டும் பயனில்லை. அவர்களுக்கு அங்கு கற்றுத்தரப்படுகிறதா என்பதும் முக்கியம். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பியும் கல்வியை கற்றுத்தராமல் இருப்பது குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதி. இதனால்தான் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் கோடிக்கணக்கான குழந்தைகள் பின்னாட்களில் வேலைவாய்ப்பு பெற முடியாமல், மிகக்குறைந்த கூலிக்கு வேலை செய்யும் நிலை ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு கல்வியை கற்றுத்தராமல் வறுமையை ஒழிப்பது என்பது சாத்தியமில்லை' என்கிறது அந்த அறிக்கை. 'இப்பிரச்னையை தீர்க்க இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் கல்விக்கொள்கையில் மாற்றங்களை கொண்டுவரவேண்டும்' என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.நல்ல, ஆரோக்கியமான உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உலகளாவிய லட்சியம் ஒருபுறம் இருக்க, இந்தியாவில், 194.6 மில்லியன் மக்கள் போதிய உணவு இன்றி வாடுகின்றனர் என்கிறது ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு. அதாவது இந்திய மக்கள் தொகையில் 15 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்கள் போதிய உணவின்றி தவிக்கின்றனர்.
வேற்றுமையில் ஒற்றுமை : நம் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பேசப்படும் வெவ்வேறான மொழியும், கலாசாரமும், பழக்கவழக்கங்களும், பண்பாடும், விழாக்களும், இந்தியா என்னும் ஒற்றைச் சொல்லின் கீழ் நாட்டை அழகுபடுத்துகின்றன. உலக நாடுகளின் மத்தியில் நம் நாட்டினைத் தனித்துக் காட்டும் அடையாளமே இங்கு நிலவும் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பண்புதான்.இந்தியாவில் பல்வேறு மொழி, இன, ஜாதி, மதங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்தாலும் அனைவரும் சமம் என்ற நிலைபாடுதான் இந்தியாவுடையது. மதசார்பின்மையும் சகிப்புத்தன்மையும் இந்த தேசத்தின் அடிநாதம். ஆனால், தற்போது இதில் அவ்வப்போது ஏற்படும் சிக்கல்கள் வளர்ச்சிக்குத் தடையாகவும் அமைதிக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் வறுமைக்கு அடிகோலுவதாகவும் அமைந்துவிடுகிறது.
சமூக மேம்பாடு : 'மக்கள் தங்களது வாழ்வை வளமிக்கதாக மாற்றிக்கொள்ளும் பொருட்டு சுதந்திரம் வழங்குவதே மனித மேம்பாடு' என்கிறார் நோபல் பரிசுபெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென். 'ஆனால் நாம் தற்போது வாழும் உலகில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. 19ம்நுாற்றாண்டிலிருந்து பார்த்தால், ஒருவரின் தனிநபர் வருமானம் பல மடங்குகள் கூடியுள்ளது. அதேசமயம், மீண்டும் மீண்டும் ஏழைகளாகவே ஆகிக் கொண்டிருக்கும் மக்கள் அதிகமாகவே உள்ளனர்' என்கிறார். வறுமையில் வாடும் மக்களுக்கு ஆதரவு குரல் கொடுப்பதும் சமூக மேம்பாட்டின் அங்கம்தான்.உலகம் அமைதியை நோக்கிப் பயணிக்கிறதா, அழிவை நோக்கிப் பயணிக்கிறதா? என்ற கேள்வி நம்முள் எழுகிறது. போட்டி மனப்பான்மையும், அபிப்பிராயபேதமுமே அமைதியை நோக்கிச் செல்லும் முயற்சிக்கு குறுக்கீடுகளாக உள்ளன. மதங்களும் அதற்கு விதிவிலக்கல்ல.'மக்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தும் எதுவும் பகைமைக்கு வித்திடலாம்; அவ்வாறு பிரிவினையை ஏற்படுத்தும் வலிமைவாய்ந்த காரணிகளில் ஒன்றுதான் மதம்' என்பது எழுத்தாளர் ஜேம்ஸ் ஏ. ஹாட் கருத்து.சர்வதேச அளவில் தற்போது நடந்து வரும் ஒரு சில சம்பவங்களை 'ரீவைண்ட்' செய்து பாருங்கள். ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். பிரச்னை கொளுந்துவிட்டெரிகிறது. இதற்கு 22 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட அரபு லீக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் அகமது அப்துல், கெய்ரோவில் கூறியபோது, 'அமெரிக்காவின் நடவடிக்கையால் மத்திய கிழக்கில் ஸ்திரமற்ற தன்மை ஏற்படும். அமைதி முயற்சிகள் பாதிக்கப்படும்' என்று பதற்றமானார்.
வடகொரியாவின் நிலை இன்னும் மோசம். அடுத்தடுத்து அணு ஆயுதம், ஏவுகணை சோதனைகளை நடத்தி பீதியை ஏற்படுத்தி வருகிறது. 'அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும்' என அமெரிக்கா எச்சரித்தது. இதற்குப் பதிலடியாக அணு ஆயுத போருக்கு தயார் என்று வடகொரியா சவால் விடுத்துள்ளது. தற்போது அமெரிக்கா, தென்கொரிய விமானப்படைகள் இணைந்து போர் ஒத்திகையையும் நடத்தியுள்ளன. ஈரான், லிபியா, சிரியா, யேமன், சோமாலியா, சாட் என ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வருவதைத் தடை செய்யும் அதிபர் டிரம்ப்பின் உத்தரவை முழு வீச்சில் செயல்படுத்த அந்த நாட்டு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.உணவு, கல்வி, வேற்றுமையில் ஒற்றுமை, சமூக மேம்பாடு, ஆகியவற்றில் உலகநாடுகளிடையே சமநிலை இல்லை. நம்முள்ளும் அந்த இணக்கமில்லை. உலகம் சமநிலை பெறவேண்டும் என்பதே நல்லவர்களின் விருப்பம்.
- ப. திருமலைபத்திரிகையாளர், மதுரை84281 15522

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement