Advertisement

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டில் பிற மாநிலத்தவர்: வீடுதோறும் ஆய்வு செய்ய உத்தரவு

கூடுதல் அரிசி பெறுவதற்காக, பலர் தங்களின், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டில், பிற மாநில கூலி தொழிலாளர்களையும், குடும்ப உறுப்பினர்களாக சேர்த்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து, வீடுதோறும் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கும்படி, கலெக்டர்களுக்கு உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும்; சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவை குறைந்த விலையிலும் விற்கப்படுகின்றன. அவற்றை வாங்க, ரேஷன் கார்டு அவசியம். இதனால், ஒருவரே பல முகவரிகளில், மூன்று - நான்கு ரேஷன் கார்டு கள் வைத்திருந்தனர். 2016 ஜூன் நிலவரப்படி, தமிழகத்தில், 2.03 கோடி ரேஷன் கார்டுகள் இருந்தன. அவற்றில் இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை, எட்டு கோடியை தாண்டியது.


ரேஷன் முறைகேட்டை தடுக்க, 2017 ஏப்ரல் முதல், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது.

இதற்காக, 2016ல், ஏற்கனவே உள்ள கார்டுதாரர்களிடம் இருந்து, மத்திய அரசு வழங்கிய, 'ஆதார்' விபரங்கள், ரேஷன் கடையில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவி வாயிலாக பெறப்பட்டன.


அந்தக் கருவியில், தற்போதைய நிலவரப்படி, 1.94 கோடி கார்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அவற்றில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, 6.64 கோடிஆகும். இந்நிலையில், பிற மாநிலத்தை சேர்ந்தவர்களும், ஸ்மார்ட் கார்டில் சேர்க்கப்பட்டு உள்ளதாக, புகார் எழுந்துள்ளது.


இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே, ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. ஆதார் அடிப்படையில், ஸ்மார்ட் கார்டு வழங்குவதால், ஒரு இடத்தில் பெயரை சேர்த்தவர், மற்றொரு இடத்தில் சேர்க்க முடியாது.


சேர்க்க முயற்சித்தாலும், கம்ப்யூட்டர் மென்பொருள் வாயிலாக, கண்டுபிடித்து நீக்க முடியும். உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்ததால், நான்கு உறுப்பினர் உள்ள ரேஷன் கார்டுக்கு, 20 கிலோ அரிசியும்; அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும், கூடுதலாக, ஐந்து கிலோ அரிசியும் இலவசமாக தரப்படுகிறது.


அதனால், போலி ரேஷன் கார்டு வைத்திருந்தோர், பிற மாநிலங்களில் இருந்து கட்டுமானம், ஓட்டல் போன்ற வேலைகளுக்காக வந்து தங்கியுள்ளோரின் ஆதார் கார்டுகளை வாங்கி, தங்கள் ரேஷன் கார்டில், தன் குடும்ப உறுப்பினர்கள் போல, சேர்த்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன.
இதனால், அரசுக்கு, கூடுதல் செலவு ஏற்படும்.இன்னும், 1.80 லட்சம் பேருக்கு மட்டுமே, ஸ்மார்ட் கார்டு தர வேண்டியுள்ளது.


அதனால், ஒவ்வொரு வீட்டிற்கும் கூட்டுறவு, உணவு வழங்கல் உள்ளிட்ட அரசு ஊழியர்களை அனுப்பி, ஸ்மார்ட் கார்டில், அந்த குடும்பத்தினரை சேர்ந்தவர்கள் மட்டும் தான் உள்ளனரா. பிற மாநிலத்தினர் யாரும் சேர்க்கப்பட்டுள்ளனரா என, கள ஆய்வு நடத்தி, அறிக்கையை அனுப்பும்படி, கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Rajesh - Chennai,இந்தியா

    இப்போ சொல்லுங்க ஆதார் நல்லதா கெட்டதா ?

  • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா

    இதற்காகப் பயன்படுத்தப்படும் சாஃப்ட்வேர்கள் தரமானதாக இல்லை.... யார் கமிஷன் அதிகம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கே ஆர்டர் கொடுத்திருப்பார்கள்.... காஸ் க்கான சாஃப்ட்வேர் மாதிரி இருக்க வேண்டும்.... ஒரே ஆதார் கார்டை வெவ்வேறு இடங்களில் இணைக்கும்போது..... அந்த ஆதார் கார்டு ஏற்கெனவே இணைக்கப்பட்டுவிட்டது... என்ற விபரம் தெரிவிக்க வேண்டும்.... அப்படி இருந்தால் மட்டுமே முறைகேட்டைத் தடுக்கமுடியும்....

  • VOICE - CHENNAI,இந்தியா

    ஸ்மார்ட் ரேஷன் வாங்குவதற்கு பெயர் திருத்த நீக்குதல் சேர்த்தால், புகைப்படம் மொபைல் நம்பர் சேர்த்தல் போன்று கம்ப்யூட்டர் சென்டர்களில் கார்டுக்கு 100 ரூபாய் என்று கொள்ளையிடத்து கொண்டிருந்த சமயம் அது. ஒரு 50 வடமாநில தொழிலார்கள் கூட்டமாக DTP சென்டரில் ரேஷன் ஸ்மார்ட் கார்டிற்கு விண்ணப்பித்து கொண்டு இருந்தனர். இவர்கள் எப்படி ரேஷன் கார்டு என்று சந்தேகபட்டதற்கு இன்று புரிகிறது விஷயம். தமிழ்நாட்டில் இப்படி பட்ட கோல்மால் லட்சத்தை தாண்டும். தங்கள் ரேஷன் கார்டு உறுப்பினர்களில் வடமாநில நபர்களை சேர்த்த குடும்ப கார்டையும் சேர்த்து ரத்து செய்திடவேண்டும். ஹோட்டல் வைத்திருக்கும் நபர்கள் இது போன்ற செயலில் ஈடுபட அதிக வாய்ப்பு உள்ளது. இந்திய சட்டம் அனைத்தும் காலாவதியான சட்டங்கள். இன்றிய சூழ்நிலை ஏற்ப அப்டேட் செய்யாவிட்டால் முழுவதும் ஓட்டை ஆகிவிடும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement