Advertisement

முதுமையும் வசந்தமாகும்!

முதுமையை இன்னொருபால்யம்' என்பார்கள். உடலாலும் உள்ளத்தாலும் குழந்தையாகவே மாறிவிடும் பருவம் இது. குழந்தையைக் கவனிக்கும் அதே அக்கறை முதியவர்களுக்கும் தேவைப்படும். ஆனால் இன்றைய தனிக்குடும்ப வாழ்க்கைமுறையில் அக்கறை மிகுந்த கவனிப்பு பெரும்பாலான குடும்பங்களில் குறைந்துவிடுவதால், முதியவர்களுக்கு உடல் அளவிலும், மனதளவிலும் தளர்ச்சி உண்டாகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து ஆரோக்கியம் குறைகிறது; நோய்கள் அணிஅணியாய் படையெடுத்து குறைந்துவிட்ட ஆரோக்கியத்தை இன்னும் அதிகமாக அசைத்துப் பார்க்கிறது. அப்போது அவர்கள் உண்ணும் உணவு சரியாக அமைந்தால் நோய்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
பசி குறைவது ஏன் : முதுமையில் நாக்கின் சுவை அரும்புகள் இயல்பாகவே குறைந்துவிடுகின்றன. இதனால் உணவைச் சுவைத்து உண்ண முடிவதில்லை. உணவின் ருசி குறைவதால் பசியும் குறைந்து உணவின் அளவும் குறைந்து விடுகிறது. முதுமையில் இரைப்பைபுண், நீரிழிவு, காசநோய் இதயநோய் புற்றுநோய் சிறுநீரக நோய் என சகல நோய்களையும் சுமந்திருப்பவர்கள் அதிகம். இதனாலும் பசி குறைந்து சாப்பிடப் பிடிக்காமல் இருப்பார்கள்.வீட்டில் தனிமை உணர்வுடன் முடங்கிக் கிடப்பவர்களுக்கு மனச்சோர்வு அதிகரித்து பசி குறைவதுண்டு. உடற்பயிற்சிகள் குறைவதாலும் பசி குறையும். மேலும் அவர்கள் வழக்கமாகச் சாப்பிட்டு வரும் சில மருந்து மாத்திரைகளாலும் பசி குறைய வாய்ப்புகள் அதிகம்.சத்துள்ள உணவைக் குறைவாகச் சாப்பிடுவதால், உடலில் வலி களைப்பு உறக்கமின்மை கைகால்களில் எரிச்சல் குடைச்சல் குறுமயக்கம் போன்ற பலதொல்லைகள் வரிசைகட்டி வந்து சேரும். வயதான காலத்தில் உணவின் அளவு குறைவது குறித்துகூடக் கவலைப்படத் தேவையில்லை; அதில் நிறைவான சத்துகள் இருக்கும்படி பார்த்துக்கொண்டால் ஆரோக்கியம் கெடுவதில்லை. யார் என்ன உணவை உண்பது என அறிந்து சாப்பிட்டால் முதுமையும் வசந்தமாகும்!எந்த உணவைஎவ்வளவு சாப்பிடுவதுஆண்களுக்குத் தினமும் 60 கிராம், பெண்களுக்கு 50 கிராம் புரதச்சத்து முதுமையில் தேவைப்படுகிறது. பருப்பு, பயறு, முளைகட்டிய தானியங்கள், பச்சைப் பட்டாணி, கொத்துக்கடலை, காளான், அவரை, துவரை, பட்டர் பீன்ஸ் ஆகியவற்றில் புரதம் அதிகம். ஓட்ஸ் முதியவர்களுக்குச் சிறந்த உணவு. இதில் புரதமும் நார்ச்சத்தும் உள்ளதால் அதிக சக்தி தருவதோடு, மலச்சிக்கலையும் தவிர்க்கும். சோயாவையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் புரதச் சத்துடன் கால்சியம் சத்தும் உள்ளது. எலும்புகளின் வலிமைக்கு இது உதவும்.முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தினமும்கூட சாப்பிடலாம். இதில் புரதச் சத்தின் அளவு அதிகம். கொழுப்பு இல்லை. ஆண்களுக்குத் தினமும் தேவையான கொழுப்பின் அளவு 50 கிராம்; பெண்களுக்கு 40 கிராம். அதற்கு மீன் இறைச்சிபோன்றவற்றை வாரம் இரண்டு நாட்களுக்குச் சாப்பிடலாம். மீன் மிகவும் நல்லது. இதில் ஒமேகா - 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது இதயத்துக்கு நல்லது. மாரடைப்பைதடுக்கும் தன்மையுள்ளது. எண்ணெயில் வறுத்த பொரித்த மீன் மற்றும் இறைச்சிகளைவிட குழம்புகள்தான் நல்லது.
சிறுதானிய உணவு : பொதுவாக முதுமையில் மூன்று வேளைகளிலும் வெள்ளை அரிசி உணவுகளைத்தான் அதிகமாகச் சாப்பிடுவார்கள். இது தவறு. உடற்பருமனுக்கும் சர்க்கரை நோய் வருவதற்கும் அரிசி உணவுகள்தான் முக்கியக் காரணம். எனவே அரிசி உணவைக் குறைத்துக்கொண்டு கேழ்வரகு, கம்பு, சோளம், தினை, சாமை, கொள்ளு போன்ற சிறுதானிய உணவுகளை அதிகப்படுத்தவேண்டும். முக்கியமாக கேழ்வரகில்கால்சியமும் நார்ச்சத்தும் அதிகம். எளிதில் செரிக்கும் உணவு இது. பல்லுக்கும் எலும்புக்கும் வலிமை தரும்; மலச்சிக்கலையும் போக்கும்.வயதானவர்கள் கிழங்குகளையும், எண்ணெய், நெய், வெண்ணைய் போன்ற கொழுப்புள்ள உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும். வயது ஆக ஆக ரத்தசோகை ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு கீரைகளை நிறைய சேர்த்துகொள்ள வேண்டும். ஈரல் நல்லது. பச்சைக் காய்கறிகள், பேரீச்சை, திராட்சை, ஆரஞ்சு, நெல்லி, எலுமிச்சை போன்றவற்றையும் தேன், வெல்லம் கலந்த உணவுகளையும் சேர்த்துக் கொண்டால் ரத்தசோகை வராது.
கால்சியம் முக்கியம் : முதுமையில் எலும்புகள் இயற்கையாகவே வலுவிழக்கும் என்பதால் இவர்கள் லேசாகத் தடுக்கி விழுந்தாலும் எலும்பு முறிவுக்கு ஆளாகிறார்கள்.எலும்புகள் வலுவிழக்காமல் இருக்க தினமும் 1500 மி.கி. கால்சியம் தேவை. இதற்குத் தினமும் ஒரு கப் பால் அவசியம் அருந்த வேண்டும். உணவில் தயிரைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மோரும் அருந்தலாம். மீன், இறால், நண்டு, எலும்பு சூப், வெந்தயம், வெள்ளைப்பூண்டு, வெந்தயக்கீரை, அகத்திக்கீரை, கறிவேப்பிலை ஆகியவற்றில் கால்சியம் அதிகமுள்ளது.வயதான காலத்தில் நோய்களே இல்லை என்றாலும் சமையல் உப்பின் அளவு தினமும் 5 கிராமுக்குக் குறைவாகத்தான் இருக்க வேண்டும். இதற்கு உப்பு அதிகமுள்ள ஊறுகாய், அப்பளம், வடகம், கருவாடு, சிப்ஸ், பாப்கார்ன், சீஸ், உப்பு, பிஸ்கட் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்ற கேரட், பூசணி, புடலை, பீர்க்கை, புரோக்கோலி, காலிபிளவர், முட்டைக்கோஸ், பப்பாளி, மாதுளை மற்றும் முந்திரி போன்ற கொட்டை வகைகள் சாப்பிடலாம். நாளொன்றுக்குக் குறைந்தது 500 கிராம் பழம் சாப்பிட வேண்டும். தினமும் ஒரு கிலோ உடல் எடைக்கு 30 மில்லி என்ற அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். இதயநோய் சிறுநீரக நோய் உள்ளவர்கள் மருத்துவர் கூற்றுப்படி தண்ணீர் அருந்த வேண்டும்.மாலை வேளைகளில் நொறுக்குத்தீனிகளை மறந்துவிட்டு கம்பு, தினை லட்டு, சோளப்பொறி, காய்கனி சாலட் சாப்பிடலாம். பழச்சாறு அருந்தலாம். ருசியாக இருக்க விரும்பினால் பழ போளி, பயறு உப்புமா, கீரை குழிப்பணியாரம், சிறுதானியக் கொழுக்கட்டை, காய்கறி ரொட்டி, பாகற்காய் சூப், தேன்- திராட்சை- பீட்ரூட் ஜூஸ் ஆகிய ரெசிப்பிகளில் ஒன்று மாற்றி ஒன்றாகச் சேர்த்துக்கொள்ளலாம்.வயதானவர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல் சிறிது நேரம் வெளியிலும் வர வேண்டும்; தினமும் காலையிலும் மாலையிலும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டியதும் முக்கியம்.
-டாக்டர் கு.கணேசன்மருத்துவ இதழியலாளர்ராஜபாளையம்gganesan95gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement