Advertisement

தரமான மருந்து; குறைந்த விலையில்!

நாம் அனைவரும் சந்திக்கும் மிகப்பெரிய சவால், நோய். இது வந்து விட்டால், நம்மில் அநேகர், மருத்துவமனைக்குச் செல்லாமலே, மருந்துகள் வாங்கி சாப்பிட்டு, குணமாவதையே விரும்புகிறோம்.

படித்தவர்கள், மருத்துவர்கள் மூலம், நாம் அறிந்த மருந்துகளை பயன்படுத்துகிறோம். ஏழைகள், 'மெடிக்கல் ஷாப்'பில் உடல்நிலையை கூறி, மருந்து வாங்கி சாப்பிடுகின்றனர்.இதற்கு காரணம், மருத்துவமனைக்கு வெறும் தலைவலிக்கு போனாலே, 'ஸ்கேன் எடு, அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட்...' எனச் சொல்லி, நம் மீது, பெரும் சுமையையே ஏற்றி விடுகின்றனர். இதற்கெல்லாம் மருத்துவத் துறையில் நடக்கும் தில்லுமுல்லுகள் தான் காரணம் என்பது, நாம் அறிந்த ஒன்று.
என்றாலும், சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த, இரண்டு மருத்துவர்களான, அருண் காத்ரே, அபய் சுக்லா, அங்கு நடக்கும் அவலங்களை மனம் பொறுக்காமல், 'டிசென்டிங் டயக்னாசிஸ்' என்ற தலைப்பில், புத்தகத்தை எழுதி உள்ளனர்; அதில் உள்ள தகவல்கள், மிகவும் பரபரப்பாக பேசப்பட்டன.

உண்மையிலேயே, மக்கள் மீது அக்கறையுடன், தங்களது உன்னதமான, உயிர் காக்கும் துறையில் நடக்கும் அவலங்களை, துணிவுடன் வெளிப்படுத்திய இவர்களுக்கு ஒரு, 'சல்யூட்!'
இவர்களை போன்று, மனசாட்சி உடைய மருத்துவர்களால் தான், நாமெல்லாம் பிழைத்துக் கொண்டிருக்கிறோம்.அந்த புத்தகத்தில், அவர்கள் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு, பெரும் மருத்துவமனைகள், லாப இலக்கு நிர்ணயித்து வேலை செய்கின்றன. அவர்களுக்கு, அப்பாவி நோயாளிகளின் நலன் முக்கியமே இல்லை. லாபம்... லாபம்... லாபம்... லாபம்... மேலும் லாபமடைவது எப்படி என்பது தான், இவர்களது நோக்கம்!

பரிசோதனைக் கூடங்கள், நோயாளிகளிடமிருந்து சேகரிக்கும் ரத்த மாதிரிகளை, உண்மையாக பரிசோதிப்பதே இல்லை; மருத்துவர்கள் என்ன மாதிரியான அறிக்கையை விரும்புகின்றனரோ, அதை தான், அந்த கூடங்கள் தயார் செய்து தருகின்றன.இந்தியாவில், சர்க்கரை நோயாளி கள் அதிகம் உள்ளதாக, மருத்துவ அறிக்கைகள் சொல்கின்றன. உண்மை என்னவென்றால், மருத்துவமனைகளால் சர்க்கரை நோயாளிகள் ஆக்கப்பட்டவர்கள் தான் அதிகம் என்பது, பல மருத்துவர்களின் கருத்து.

நோயாளிகளை தக்க வைத்து கொள்வதற்கும், விலை உயர்ந்த சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளை நம் தலையில் கட்டவும், இவர்கள் செய்த சதியில் தான், இன்று, நம் நாட்டில் அநேகர் சர்க்கரை நோயாளிகளாக உள்ளனர் என்பது புரிகிறது; எத்தனை கொடுமை!ஒரு பிரபலமான மருத்துவமனை, தங்களிடம் வேலை பார்த்த, சிறந்த சிறுநீரக சிறப்பு மருத்துவரை பணிநீக்கம் செய்தது. அதற்கான காரணம், ஒரு நோயாளிக்கு அதிகம் லாபம் தரும், அறுவை சிகிச்சையை செய்யாமல், சாதாரண சிகிச்சை மூலம் குணப்படுத்தி விட்டார் என்பதே.

இதனால், மருத்துவமனையின் லாபம் பாதிக்கப்பட்டு விட்டதாம்... எப்படி இருக்குது பாருங்கள்; எவ்வளவு வக்கிர மனநிலையில் கார்ப்பரேட் மருத்துவமனைகள் செயல்படுகின்றன என்பதற்கான சான்று இது!லாபத்தை முதன்மையான நோக்க மாக கொண்ட மருத்துவமனைகள் அனைத்தும், இப்படி தான் செயல்படுகின்றன. தங்களிடம் பணியாற்றும் மருத்துவர்களுக்கு, இவர்கள் கொடுக்கும் ஆலோசனையே இது தான். இதற்கு உடன்படும் மருத்துவர்கள் மட்டுமே பணிபுரிய முடியும்; மனசாட்சியுடன் செயல்படுபவர்களை நிர்வாகம் துரத்தி விடும்.

டாக்டர் சுக்லா மிகவும் வேதனையுடன் கூறுகிறார், 'எனக்கு தெரிந்த ஒருவர், சொந்த வீட்டை விற்று, மனைவிக்கு, 42 லட்சம் ரூபாயை மருத்துவ கட்டணமாக கட்டினார். உண்மையில், அந்த சிகிச்சைக்கு, அவ்வளவு கட்டணம் தேவை இல்லை. இப்படிப்பட்ட, மனசாட்சியற்ற செயல்கள் தான் நடக்கின்றன!'இதை தாண்டி, இந்த மருத்துவர்கள் வைக்கும் இன்னொரு குற்றச்சாட்டு, பகீரென்று இருக்கிறது; சில மருத்துவமனைகள், அறுவை சிகிச்சையே செய்யாமல், வெறும் மயக்க மருந்தை கொடுத்து, அறுவை சிகிச்சை செய்து விட்டோமென்று பணம் பறிக்கிறதாம்!

கோல்கட்டாவைச் சேர்ந்த, புண்ய பிரதாகூன் என்ற டாக்டர் கூறுகிறார்... 'எங்கள் பகுதியில், மருத்துவம் பார்த்து ஈட்டும் தொகையை விட, ஆய்வு மையங்கள் அளிக்கும் பங்கு தொகை அதிகம். 'எக்ஸ் - ரே' எடுக்க பரிந்துரைத்தால், 25 சதவீதம், எம்.ஆர்.ஐ., - சி.டி., ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தால், 33 சதவீதம் கமிஷன் தருகின்றனர்...' என, தன் அனுபவத்தை, இந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

தங்களிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை, தங்களது தொடர் வாடிக்கையாளர்களாக வைத்துக் கொள்ள தான், பல மருத்துவமனைகள் விரும்புகின்றன. அதாவது, தேவையற்ற அறுவை சிகிச்சைகள், மருந்துகளை பரிந்துரைத்து, நோயாளிகளை மீண்டும் மீண்டும் வரவழைக்க வேண்டும். அதை மருத்துவர்கள் செய்ய தவறும் பட்சத்தில், அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என, குறிப்பிட்டு உள்ளார்.

இதை, நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது; இவ்வளவு அக்கிரமங்கள் நடந்து கொண்டிருக்கும் போது, இந்திய மருத்துவ கவுன்சில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்விக்கு, இந்த மருத்துவர்களின் பதில், 'பெரும் மருத்துவமனைகள் திட்டமிட்டு, மருத்துவத் துறையை கொலை செய்து கொண்டிருக்கின்றன.

'ஆனால், இந்திய மருத்துவ கவுன்சில், மவுனமாக, இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. உடனடி யாக, மருத்துவ கவுன்சில், தன்னை புதுப்பித்துக் கொண்டு, இந்த அநியாயங்களை தடுத்து நிறுத்த வேண்டும்' என, வலியுறுத்துகின்றனர், இந்த இரு மருத்துவர்களும்.
மருத்துவ சுற்றுலாவில், இந்தியா குறிப்பாக, சென்னை மிகப்பிரபலமாக உள்ளது என, இங்குள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகள் பீற்றிக் கொள்வதன் ரகசியம் புரிகிறதா... இப்போ!

இந்திய மருத்துவத் துறையின் இன்றைய வணிக மதிப்பு, 10 ஆயிரம் கோடி ரூபாய். இது, 2020ல், 30 ஆயிரம் கோடி ரூபாயாக போகிறது என்ற விபரங்களே, இதில் உள்ள அரசியலையும், அக்கிரமங்களையும் நமக்கு உணர்த்துகின்றன.இவர்களின் குற்றச்சாட்டுகளின் மீது, என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது இந்திய சுகாதாரத் துறை!என்ன அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டீர்களா... அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டு உள்ளவற்றின் ஒரு பகுதி தான் இது. நம் நாட்டில், அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதில் நடக்கும் அவலங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல... எல்லாவற்றிலும், லஞ்சம் லஞ்சம் தான்.

காலாவதியான மருந்துகளை அழிக்காமல் அப்படியே, பொதுமக்களின் தலையில் கட்டுவது, மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கு தகுதியான, மருத்துவ பேராசிரியர் மூலம் வகுப்பு நடத்தாமல், சீனியர் மாணவர்களை கொண்டு வகுப்புகள் நடத்துவது, அதிலும், அரசியல் மற்றும் சுயநலம் தான் காரணம்.அப்பாவி மக்களின் உயிரில் விளையாடி, பணம் சேர்க்கின்றனர்; அப்படி சேர்த்த பணத்தை, நிம்மதியாக அனுபவிக்க முடிகிறதா...

இந்த செய்திகளை எல்லாம் கேட்டு கேட்டு மனம் நொந்து போன நமக்கு, ஒரு சின்ன ஆறுதல் செய்தி தான் இது... அநேகருக்கு தெரிந்தது தான்; தெரியாதவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.'ஜெனரிக் மெடிசன்' பற்றி படித்திருப்பீர்கள்; அப்படின்னா என்ன தெரியுமா... அதாவது, அந்த மருந்துக்குள் இருக்கும், மருத்துவ உப்பின் பெயர் தான் ஜெனரிக்; 'கெமிக்கல் நேம்' எனச் சொல்லலாம்.

ஜெனரிக் மெடிக்கல் ஸ்டோர், மக்கள் மருந்தகம் என்ற பெயரில், மத்திய அரசின் உதவியுடன், பல மாவட்டங்களில், சில கடைகள் திறக்கப்பட்டு உள்ளதை பார்த்திருப்பீர்கள். அதன் வரலாறு இது தான்...முதன்முதலில், ராஜஸ்தானில், டாக்டர் சமீத் ஷர்மா ஐ.ஏ.எஸ்., என்பவர், குறைந்த விலையில் மருந்து வாங்கும் இத்திட்டத்தை ஆரம்பித்தார்.

அவர் வீட்டில், வேலை செய்த பெண்ணின் மகன், 500 ரூபாய்க்கு மருந்து வாங்க, பணமில்லாததால் இறந்து போன நிகழ்ச்சி, இவர் மனதை மிகவும் பாதிக்கவே, ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பித்தது தான், இந்த குறைந்த விலை மருந்துகள் திட்டம்.உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகில், 40 கோடிக்கும் மேற்பட்ட மக்கள், மருந்து வாங்க பணம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர்.

ஒரு சர்க்கரை நோயாளி, 'பிராண்டட் மெடிசன்' வாங்கினால், அதன் விலை, 117 ரூபாய் என்றால்,'ஜெனரிக்' மருந்தகத்தில் வாங்கினால், 10 மாத்திரையின் விலையே வெறும், 1.95 காசு தான். அப்படியென்றால், இதன் தரம் மட்டமாக இருக்கும் என்று தானே நினைக்கிறீர்கள்... இல்லவே இல்லை; இரண்டும் ஒரே தரத்தில் தயாரிக்கப்பட்டவை தான்; ஒரு வித்தியாசமும் கிடையாது. அப்புறம் ஏன் இவ்வளவு விலை வித்தியாசம்?

ஒவ்வொரு கம்பெனியும், 5, 10, 50 சதவீதம் கமிஷன் என்ற பெயரில், விலை ஏற்றம் செய்கின்றனர்; வேறு வழியில்லாமல், நாமும் வாங்குகிறோம்.'பிளட் கேன்சர்' மருந்தின் விலை, 'பிராண்டட் கம்பெனி'யில் ஒன்றரை லட்சம் ரூபாய் என்றால், ஜெனரிக் மருந்து தயாரிக்கும் கம்பெனிகளில் வாங்கினால், ஒரு கம்பெனி, 10 ஆயிரம் ரூபாய்க்கு தருகின்றனர்; இன்னொரு கம்பெனி, 8,000 ரூபாய்க்கு தருகின்றனர்.

இதன் தயாரிப்பு, செலவு, பேக்கிங் சார்ஜ், ஏற்றுமதி செலவு எல்லாம் சேர்த்தே, இந்த விலைக்கு தாராளமாக கொடுக்கலாம் என்கின்றனர்; என்ன பயங்கரம் பாருங்கள்.ஒவ்வொரு மருந்து கம்பெனிகளின், 'மெடிக்கல் ரெப்கள்' மருத்துவர்களை சந்தித்து, தங்களது கம்பெனி தயாரிப்பு மருந்துகள் தான் சிறந்தது; இதை வாங்கும்படி பரிந்துரை செய்யுங்கள் எனச் சொல்லி, டாக்டர்களை, 'டெம்ட்' செய்வர்; 'பிரஷர்' கொடுப்பர். இதனால் தான், இந்த மருந்துகளின் விலை இவ்வளவு உயர்வாக இருக்கிறது.இதன் பின்னணியில், 'டிரக் மாபியா'க்களும் உள்ளனர்.

இந்தியாவிலும், சில நல்ல மருந்து கம்பெனிகள், மக்கள் நலம் கருதி, 70 ரூபாய் மாத்திரைகளை, இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்கின்றன.இவ்வளவு குறைந்த விலையில், மருந்துகளை, இந்தியாவில் தயாரித்து, 45 ஆயிரம் கோடிக்கு மேலான மருந்துகளை உலகம் முழுவதிற்கும் அனுப்புகிறோம். ஆனால், நமக்கு இவை கிடைப்பதில்லை. இதை கேட்கும் போது, நம் வயிறு எரிகிறது தானே!

குறைந்த விலை மருந்துகள் அனைவருக்கும் கிடைக்கும்படி, முதன்முதலில், ராஜஸ்தானில், பல எதிர்ப்புகளுக்கு மத்தியில், இத்திட்டத்தை அறிமுகம் செய்தார் டாக்டர் சமீத். தற்போது, மத்திய அரசே, 'ஜன் ஆஷாத்' என்ற பெயரில், மக்கள் மருந்தகத்தை அறிமுகம் செய்துள்ளது.
முதன்முதலில், சிவகாசி மாவட்டத்தில், மத்திய அரசின் உதவியுடன், சகாயம், ஐ.ஏ.எஸ்., வழிகாட்டுதலின்படி, மக்கள் பாதை நண்பர்கள் இணைந்து, தமிழக மக்களுக்கு உதவும் நோக்குடன், இந்த, 'ஆஷாதி' மருந்தகத்தை திறந்துள்ளனர்.

மாதம், 1,500 ரூபாய்க்கு மருந்து வாங்கும் இதய நோயாளி, இம்மருந்து கடையில் வாங்கினால், 150 ரூபாயில் வாங்கலாம். எல்லா வகையான, ஆங்கில மருந்துகளும் மிக மிக குறைந்த விலையில் கிடைக்கும். மருந்து பெயருடன், இந்த, 97880 52839 'வாட்ஸ் ஆப்' எண்ணிற்கு, தொடர்பு கொள்ளுங்கள் அல்லது svgjanaushadhigmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால், உங்கள் வீட்டு முகவரிக்கு மருந்துகளை அனுப்பி வைப்பர்.

இந்த மக்கள் மருத்துவ திட்டத்தில், நிதி உதவி செய்ய விரும்புவோர், மற்ற மாவட்டங்களில் ஆரம்பிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: உமர் முக்தார்
- 93677 -77700.
ஒரே வீட்டில், மூன்று நபர்களுக்கு சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் இருந்தால், மருந்து வாங்குவதற்கே சம்பளத்தில் பெரும் பகுதி செலவானால், குடும்பத்தை எப்படி ஓட்டுவது என நினைத்து, அநேகர் மருந்து சாப்பிடாமலே இறக்கும் துயர சம்பவங்களை நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்; இந்த அரிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நலமுடன் வாழுங்கள்!

ஜெனிபர் பிரேம்
பத்திரிகையாளர்
இ - மெயில்:
jjaneepremkumargmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Krishnamoorthy Venkataraman - Madurai,இந்தியா

    இதை போன்ற மருந்தகங்கள் வேறு எங்கு எங்கு உள்ளது போன்ற விவரங்களை கொடுத்தால் உதவியாக இருக்கும்.

  • Sabarinathan - salem,இந்தியா

    நல்லது அண்ணா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement