Advertisement

உறுதிக்கு கிடைத்த, 'தம்ஸ் அப்!'

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்று, நிதிப் பற்றாக்குறை. பல்வேறு செலவினங்கள் ஏற்படவுள்ள நிலையில், நிதிப் பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கும் என்பதே முக்கியமான முன்னேற்றம். ஏன் நிதிப் பற்றாக்குறை பற்றி இவ்வளவு கவலைப்பட வேண்டும்?
ஒவ்வொரு ஆண்டும் அரசின் மொத்த வரவை விட, மொத்த செலவுகள் அதிகமாகும்போது, நிதிப் பற்றாக்குறை ஏற்படும். வரவுக்குள் செலவு செய்ய வேண்டும் என்பதுதான் வீட்டுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் நல்லது.
ஏராளமான நலத்திட்டங்கள், சலுகைகள், மானியங்கள் ஆகியவற்றை அறிவிக்கும்போது, அதற்குத் தேவையான நிதி ஆதாரம் வேண்டும். போதிய நிதி திரட்டப்பட முடியாத நிலையில், பட்ஜெட்டில் துண்டு விழும்.
பற்றாக்குறை ஏற்படும். ஒவ்வொரு ஆண்டும், இந்த நிலை ஏற்படுவதுண்டு. இந்தியாவில் இது ஒரு தொடர்கதை. ஆனால், அதனைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்; கைமீறிப் போகக்கூடாது.
அந்தப் பாதையில் தான், நரேந்திர மோடி அரசு நடைபோடுகிறது. 2014 - -15ல், 4.1 சதவீதமாக இருந்த நிதிப் பற்றாக்குறை, 2015 - 16ல், 3.9 சதவீதமாகவும், 2016 - -17ல், 3.5 சதவீதமாகவும் குறைந்தது.
நடப்பு நிதியாண்டில், பற்றாக்குறை, 3.2 சதவீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிதி அமைச்சர், அது, 3.5 சதவீத அளவுக்கே இருக்கும் என கூறியுள்ளார்.
அடுத்த நிதியாண்டில், பற்றாக்குறை 3.3 சதவீதமாக கட்டுப்படுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருப்பதே முக்கிய முன்னேற்றம்.
பற்றாக்குறை எனும் பாம்பு
நிதிப் பற்றாக்குறை கைமீறிப் போகக் கூடாது என மேலே தெரிவித்தேன். ஏன் அப்படி? கைமீறினால் என்னாகும்? இரண்டு, மூன்று விஷயங்கள் நடக்கும். இதையும் நம் வீட்டிலிருந்தே புரிந்துகொள்வோம். வரவுக்கு மேல் செலவு இருக்குமானால், என்ன செய்வோம்; கடன் வாங்குவோம். வட்டி செலுத்துவோம்.
வட்டி செலுத்த முடியாமல் போனால், அவமானப்படுவோம். முதலை அடைக்கச் சிரமப்படுவோம். எல்லாவற்றுக்கும் மேல், கடன் வாங்கிய தனிநபர் மீது இருக்கும் நம்பிக்கை, மரியாதை ஆகியவை சிதைந்து போகும்.
நாடு கடன் வாங்கினாலும் இதேபோன்ற நிலைமைதான். நிதிப் பற்றாக்குறை ஏற்படும்போது, மத்திய ரிசர்வ் வங்கி மூலமாக, அரசாங்கம், சந்தையில் கடன் வாங்கும். அதற்கு முன்தேதியிட்ட கடன் பத்திரங்கள் என பெயர்.
அதில், எப்போது பணம் திரும்ப வழங்கப்படும் என்ற தேதியோடு, வட்டி விகிதமும் குறிப்பிடப்படும்.
இதேபோல் கருவூல பில்களும் வெளியிடப்படும்; இதற்கு வட்டி கிடையாது. ஆனால், இவற்றைத் தள்ளுபடி விலையில் வாங்க முடியும்.
உதாரணமாக, 100 ரூபாய் கருவூல பில்லை, 97.5 ரூபாய்க்கு வாங்கி, முதிர்வு தேதியில், 100 ரூபாயைப் பெற்றுக்கொள்ளலாம். இதில்லாமல் சிறுசேமிப்பு முதலீடுகள் மூலமும், நிதி திரட்டப்படும்.
இவையெல்லாம் அரசின் மீது விழும் பெரும் சுமைகள். அதாவது அடுத்த ஆண்டு, போதிய அளவு வளர்ச்சி ஏற்பட்டு, நிதிப் பற்றாக்குறை முழுமையாகச் சரியானால், பிரச்னை இல்லை. ஆனால், பற்றாக்குறை தொடருமானால், கடன் வாங்குவது தொடரும்.
எந்தவிதமான புதிய முயற்சியையும், புதிய திட்டங்களையும் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்த முடியாது. கடன் சுமை அழுத்திக்கொண்டே இருக்கும். இதன் இன்னொரு முகம் தான், வருந்தத்தக்கது.
சர்வதேச அளவில் இயக்கும் பல்வேறு தர நிர்ணய அமைப்புகள், ஒரு நாட்டின் கடன் சுமையை கணக்கில் வைத்தே, அதன் மதிப்பீட்டை வழங்கும்.
இதன் அடிப்படையிலேயே சர்வதேச முதலீட்டாளர்கள், இந்திய சந்தையில் முதலீடு செய்ய முன்வருவர்; இது ஒரு விஷச் சுழல். கழுத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் பாம்பு.
சறுக்கலுக்குக் காரணம்
இந்தப் பின்னணியில் தான், ஜெட்லியின் பட்ஜெட் நம்பிக்கையைப் பார்க்க வேண்டும்.
நடப்பு நிதியாண்டிலேயே, 3.2 சதவீத அளவுக்கு நிதிப்பற்றாக்குறை கட்டுப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அது 3.5 சதவீதமாக தற்போது உயர்ந்துள்ளது. அதாவது, போதிய அளவு நிதி ஆதாரங்கள் திரட்டப்படாததே இந்தச் சறுக்கலுக்குக் காரணம்.
இந்நிலையில், அடுத்த நிதியாண்டில், 3.3 சதவீதமாக நிதிப் பற்றாக்குறை கட்டுப்படுத்தப்படும் என்கிறாரே நிதி அமைச்சர்; அது எப்படி சாத்தியம்?
ஜி.எஸ்.டி., அமலுக்குப் பின், வரி செலுத்துவோரின் எண்ணிக்கை, 50 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால், அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில், மறைமுக வரி வருவாய் அளவு உயரும்.
மற்றொரு பக்கம், பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் நடவடிக்கை, கூடுதல் முனைப்போடு மேற்கொள்ளப்படும். ஏர் - இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்வது துவங்கி, வேறு பல நிறுவனங்களில் இருக்கும் அரசின் பங்குகளை விலக்கிக் கொள்ள அரசு வேகம் காட்டும்.
பங்கு விலக்கலின் மூலம், 80 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டுவதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளார் ஜெட்லி. வருவாயை உயர்த்துவது ஒருபுறம் என்றால், செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது.
அரசாங்கத்தின் பல்வேறு மானியங்கள், சலுகைகளில் கூடுதல் நெறிமுறைகளைக் கொண்டுவருவதன் மூலம், அரசின் செலவினங்களைக் குறைக்க முடியும்.
இந்த நிதியாண்டிலேயே நிதிப் பற்றாக்குறை இலக்கை அரசாங்கத்தால் எட்ட முடியவில்லை, இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிக அதிகம் என்று பொருள்படும்படி, முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் கவலை தெரிவித்திருப்பது முக்கியமானது.
நிதிப் பற்றாக்குறை
விவசாயம், சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் முன்னேற்றம் ஏற்படுவதற்குச் செய்யப்படவேண்டிய பல்வேறு முதலீடுகளைப் பார்க்கும்போது, நிதிப் பற்றாக்குறை சற்று அதிகமாக, 4 சதவீத அளவு வரை இருந்தாலும் பரவாயில்லை என்ற கருத்தை பல நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஆனால், நிதி அமைச்சர், அதனை, 3.3 சதவீத அளவிலேயே கட்டுப்படுத்துவதாக உறுதியளித்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது.
இதனால் தானோ என்னவோ, பட்ஜெட் உரை வாசிக்கப்படும்போது, படபடவென சரிந்த பங்குச் சந்தைகள், விரைவில் நிமிர்ந்துவிட்டன. அரசின் உறுதிக்குக் கிடைத்த 'தம்ஸ் - அப்' அது.

ஆர். வெங்கடேஷ்

பத்திரிகையாளர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement