Advertisement

நாவுக்கரசர் ஊட்டும் நம்பிக்கை

இலக்கிய வரலாற்றில் ஏழு, எட்டாம் நுாற்றாண்டுகளில் சிறப்பிடம் பெறுவன திருமுறைகள். இலக்கியச் செழுமை முழுவதும் நிரம்பி அதற்கு மேலும் இறையுணர்வைப் போற்றி
வாழ்வியலை வளமுறச் செய்த பெருமை திருமுறைகளுக்கு உண்டு. திருமுறை ஆசிரியர்களில் முதலிடம் பெறுகின்றவர்கள் சம்பந்தரும், அப்பரும். அவர்களுள் அப்பரடி
களைத் தமிழ் மொழித் தலைவர் என்று போற்றுவார் சேக்கிழார். சம்பந்தரின் இசைத்திறம் கருதி இயலிசைத் தலைவனார் என்பார்.தமிழோடு இசைப் பாடல்; மறந்தறியேன் என பாடிய
அப்பரடிகளின் திருவாக்கில் இசைத்திறம் பொருந்திய பதிகங்கள் சிலவே. ஏனைய பகுதிகள் திருக்குறுந்தொகையும் திருநேரிசையும், திருவிருத்தமும், திருத்தாண்டகமுமாக யாப்பியல் வகையால் பெயர் பெற்றவை. சொற்குறுதிக்கு அப்பர் என சொல்லும் அளவுக்கு உறுதி கூறும் உண்மை உரைகளால் நிரம்பியவை. பல்துறை ஆய்வுகளுக்கும் இடந்தரவல்ல பல்சுவைக் களஞ்சியமாகத் திகழ்பவை.

எந்நாளும் இன்பமே : பல்துறைக் களஞ்சியமாக விளங்கும் நாவுக்கரசர் பாடல்களில் நம்பிக்கை ஊட்டும் துணிவுரைகளாக அமைந்துள்ளவற்றை எண்ணிப் பார்ப்பது நமக்கு எழுச்சி ஊட்டும். ஏற்றம், துணிவை தரும். நிறைமொழி மாந்தராகிய திருநாவுக்கரசரின் மறைமொழிகளில் ஒன்றுதான், 'இன்பமே எந்நாளும் துன்பமும் இல்லை'. அடிகளின் துணிவுரைகளில் இதுவே முதன்மை வாய்ந்தது என்றும் கூறலாம். இவ்வுலக வாழ்க்கையில் மக்கள் இன்ப துன்பங்களுக்கு இடைநின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்பத்தைத் தேடிச் செல்பவர்
களுக்கு அது எட்டுவதில்லை. துன்பத்தைக் கண்டு ஓடுகின்றவர்களையோ அது துரத்துகின்றது. இதுவே இருவெறு உலகத்து இயற்கை என்று கூடக் கூறலாம். இந்த இன்ப -துன்பப் போராட்டங்களுக்கு இடையிலேதான் இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்ற அப்பரின் திருவாக்கு நமக்குத் துணிவைத் தருகிறது, துணையாய் வருகின்றது.

துன்பம் தந்த துணிவு : அப்பர் வாழ்விலும் துன்பங்கள் பல தொடர்ந்தன. இளமையிலேயே தந்தை, தாயை இழந்தார். இளமைப் பருவத்திலேயே இடர்ப்பாடுகளைக் கண்ட அப்பர் சமண சமயம் புகுந்து துறவு மேற்கொண்டார். அங்கேயும் துன்பம் தொடர்ந்தது, வயிற்றுவலியாக
வந்தது. மீளவும் சைவரானார். தங்கள் சமயத்துக்கு வந்தபோது மகிழ்ந்தவர்கள் திரும்பிச் சென்ற போது சீற்றங்கொண்டனர், சிறுமைகள் செய்யத் தொடங்கினர்.அப்போதுதான் 'நாமார்க்கும்
குடியல்லோம்' என்னும் உரிமைக் குரல் எழுந்தது. ஆன்மநேயம் தோன்ற சொல்லக்கூடிய ஒரு
தன்னம்பிக்கை வாசகம் - இன்பமே எந்நாளும் துன்பமில்லை - துணிவுரையும் தோன்றியது. ஆள்வினை உடைமை கூறிய வள்ளுவர் அதனை அடுத்து மறவாமல் இடுக்கண் அழியாமையும் கூறுகின்றார். துன்பம் வருவது இயல்பு, ஆதலின் இடுக்கண் வருங்கால் நகுக, இன்னாமையையே இன்பம் எனக் கொள்க என்றெல்லாம் கூறுகின்றார். துன்பத்தைக் கண்டு துயரங்கொள்ளாமல் இருந்தால் துன்பத்துக்கே துன்பம் தரலாம் என்று கூறுகின்றார்.
நாவுக்கரசர் கூறும் துணிவுரைகள் எல்லாம் அவருடைய வாழ்வியல் பின்னணியும் உடையவை. அந்த வகையில் துன்பத்திற்கு ஆட்படாமல் இருக்க அவர் எடுத்துரைக்கும் திருக்குறுந்தொகைப்பாடல் ஒன்றும் இங்கே ஏற்றதாக உள்ளது.

'மலையே வந்து வீழினும் மனிதர்காள்
நிலையின் நின்று கலங்கப் பெறுதிரேல்
தலைவ னாகிய ஈசன் தமர்களைக்
கொலைசெய் யானைதான் கொன்றிடுகிற்குமே'
என கூறுகின்றார்.

நிலையாக நிற்பது மலை. அதுவே புரண்டு விழுந்தாலும் நீங்கள் உங்கள் நிலையிலிருந்து கலங்காதீர்கள் என்று கூறுகின்றார். நிலையில் திரியாது நிற்பவர்கள் தோற்றம், மலையினும் பெரிதன்றோ!அஞ்ச வருவதும் இல்லை அப்பர் வாழ்வில் எதிர்ப்பட்ட ஓர் இடர்ப்பாடு இங்கே நினைப்பதற்கு உரியது. சிவநெறிக்கு மீண்டதனால் சீற்றங் கொண்டவர்கள் அவர் தலையை இடறுவதற்காக மதயானையை ஏவினார்கள். மலை புரண்டு வருவது போலவே அந்த மதயானை வந்தது. ஆயினும் அப்பர் தம் நிலையிலிருந்து கலங்கவில்லை. அஞ்சாதிருந்தது மட்டுமன்று,
அவருடைய அஞ்சாமை உணர்வு அருட்பாடலாகவும் மலர்ந்தது.
'திண்ணென் கெடிலப் புனலும்
உடையார் ஒருவர் தமர்நாம்
அஞ்சுவது யாதுஒன்றும் இல்லை
அஞ்ச வருவதும் இல்லை'
என பாடினார். வந்த யானை
வணங்கியது.
ஒரே ஒரு முறை வேண்டிக் கொள்வதால், இறைவன் அருள் செய்வதில்லை. பலமுறையும் பணிந்து இரந்தவர்க்கே அருள் செய்வான். ஆதலின் தொடர்ந்து முயற்சிக்கும் தொண்டராக இருக்க வேண்டும். இறைவன் அருள் செய்ய
வில்லை என்று கருதி வழிபாட்டினை, தொண்டினை, விட்டு விடாதவர்களாக இருக்க வேண்டும்.
'படைக்கலமாக உன்நாமத்து எழுத்து
அஞ்சும்என் நாவிற்கொண்டேன்,
இடைக்கலம் அல்லேன் எழுபிறப்பும்
உனக்குஆட்செய்கின்றேன்,
துடைக்கினும் போகேன், தொழுது
வணங்கித் துாநீறு அணிந்துஉன்
அடைக்கலம் கண்டாய்
அணிதில்லைச்
சிற்றம்பலத்து அரனே.
பவன்எனும் நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள்
அழைத்தால் 'இவன்எனைப் பன்னாள்
அழைப்பொழியான்' என்று எதிர்ப்படுமே'
என்றும் கூறுகின்றார்.

நற்றுணை : எங்கும் நிறைந்த இறைவன், உணரமாட்டாமையால் சிலருக்கு எட்டாத் தொலைவில் இருப்பினும், அவன் பெயரையேனும் சொல்லலாம் அல்லவா? அந்த ஐந்தெழுத்தின் ஆற்றலைச் சொல்லும் போது, 'கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணை யாவது
நமச்சி வாயவே' என்று கூறுகின்றார்.தொடர்ந்து முயற்சிக்கும் தொண்டராக இருந்தால் மட்டும் போதுமா. ஒழுக்கம் உள்ளவராக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஒழுக்க நலங்கள்
இல்லாதவராயினும் அவர், திருநாம எழுத்து ஐந்தும் சொல்லத்தொடங்குவரானால் அதுவே
ஒழுக்கத்தை கொண்டு வந்து சேர்க்கும். எந்த குலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு அருள்பவர் இறைவன் என்பதையே,
'குலம் இலராகிலும் குலத்துக்கு
ஏற்பதோர் நலம்மிகக் கொடுப்பது
நமச்சி வாயவே' என கூறினார்.

நற்றுணையாகிய நமச்சிவாய மந்திரத்தைச் சொன்னால்; தீமைகளும் நன்மையாயச் சிறக்கும் என்றால் இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்பதற்கு ஒரு சந்தேகமும் இல்லை. உடல் உழைப்பால் பிறருக்கு தொண்டு செய்து தேவார இசைப் பாடல்கள் பாடி இறைவனை அடைந்த
நாவுக்கரசர் வாக்கு, நமக்கு நம்பிக்கை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

- முனைவர் தி.சுரேஷ்சிவன்
செம்மொழிஇசைத்தமிழ் அறிஞர், மதுரை 94439 30540

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement