Advertisement

காந்தி நினைவு நாள் இன்று; ஆன்ம சுத்தி தினம்!

இன்று, மஹாத்மா காந்தி நினைவு தினம். ஆன்ம சுத்தி தினம் இது!
உலகப்போர் அல்லது சுற்றுச்சூழல் மாசால் உலகம் அழியப்போகிறது என, அஞ்சுவோர் அனைவருமே, காந்தியின் இயற்கையோடு இயைந்த, எளிய வாழ்வையே தீர்வாக முன் வைக்கின்றனர். பலன் கருதாப் பணியை, பிறர் நலன் கருதி செய்யும் போது, தவமாகவும், இறை வழிபாடாகவும் மாறுவதை, உப்புச் சத்தியாகிரகம் உணர்த்துகிறது.
ஆனால் இன்று, கருத்துகளை மட்டுமே மறைந்து நின்று வழங்கி, நம்மைக் குழப்பத்திலும் வன்முறையிலும் ஆழ்த்தும் தலைவர்களே நமக்குக் கிடைத்துஉள்ளனர்.
காந்தியடிகள் போன்ற, நடத்திக்காட்டிய தலைவர்களை எள்ளி நகையாடி ஓரங்கட்டினோம். அதன் விளைவு... இன்று நடித்து, ஆர்ப்பரித்து, திரையின் பின் ஓடி ஒளியும் நிழல் தலைவர்களிடம் நம்மை அடகு வைத்து விட்டோம்.
முப்பது கோடி பேருக்கு உடுத்த துணியை, ஆங்கிலேயரின் இயந்திரங்கள் தான் தர முடியும் என, கருத்து ஜீவிகள் வாதிட்ட போது, காந்தி மவுனமாக ராட்டையில் தினமும் ஒரு மணி நேரம் நுால் நுாற்றார். என்னை போல, முப்பது கோடி பேரும் தங்களுடைய அறுபது கோடி கைகளால் ஒரு மணி நேரம் நுாற்றால், தேவையான துணி கிடைத்து விடும் என, செய்து காட்டினார்.
ஆனால் நாமோ, சோம்பேறிகளாய் இருந்தோம். உடலுழைப்பை உதாசீனம் செய்தோம். அதன் விளைவு, மில் துணிகளுடன் இயந்திரமயமாயிற்று, நம் வாழ்வு.
அடிப்படை தேவைகளுக்கே நுாற்றுக்கணக்கானவர்களை அடிமைச் சேவகம் செய்ய வைப்பவர்கள் தான், இன்று நம் ஆன்மிகத் தலைவர்களாகப் பரிணமித்துள்ளனர்.
'சமுதாய உணர்வுடனும், படைப்பாற்றல் அறிவுடனும், தன் உடலுழைப்பு மூலம் பயனுள்ள பொருளை உற்பத்தி செய்யும் போதே, உண்மையான கல்வி கிடைத்து விடும்' என்றார் காந்தி. அதை, புறக்கணித்தோம்.
போட்டி, முந்துதல், வீழ்த்தி வெற்றி பெறுதல் போன்றவற்றிற்கு வித்திடும் கல்விமுறையை ஏற்றோம். ஏன்... நமக்கு பிறர் நலன் முக்கியமில்லை.
வலியவன் மட்டுமே வாழ வேண்டும் என, மந்திரம் ஓதுகிறோம். விளைவு... இளைஞர்களின் வாழ்வையே வன்முறையாக்கி விட்டோம். பள்ளி கல்லுாரிகளில் ஆயுதமேந்திய காவலரின் துணையுடன் தான் இனி ஆசிரியர் பாடம் நடத்த முடியும் என்ற நிலை வந்து விட்டது.
இது கல்வியா என, நாம் சுய ஆய்வு செய்ய முன் வர வேண்டும்.
'எத்தனை கோடி மனிதர்கள் இருக்கின்றனரோ அத்தனை மதங்கள் இருந்து தான் தீரும்' என கூறி, 'துாய உள்ளத்தில் ஒலிக்கும் சத்தியமே அவர வருடைய கடவுள்' என்ற விளக்கத்தையும் தந்தார், காந்தி. எல்லா சமயத்தினரையும் ஒருங்கிணைத்து கூடி வழிபட வைத்தார்.
இன்று என்ன நிலைமை... சமய அடிப்படை வாத முடக்குவாதம், நம் வாழ்வை வன்முறையிலும், பயத்திலும் முடங்கிப் போட்டிருக்கிறது.
அறநெறி சார்ந்த, அனைவருக்கும் நலம் பயக்கும் வாழ்வே, உண்மையான சமய வாழ்வு என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்?
'ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை அடைவதே, தனி மனிதன் ஆன்ம விடுதலை அடைவதற்கான வழி' என்றார், காந்தி. அதற்கு அவர் தந்த செயல் திட்டம், 18 நிர்மாணத்திட்டங்கள்.
'கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் உரிமைகளை நிலை நாட்டும் வல்லமை பெற முடியும்' என்ற கருத்தை, தன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், தன் கடமைகளை நிறைவேற்றி, விளக்கம் தந்தார் காந்தி. பல்வேறு கால கட்டங்களில் அவருடைய உடை மாற்றமே அதற்குச் சான்று.
'ஒரு மனிதனின் உண்மையான ஆதாரம், அவனுள் உறையும் சத்திய சக்தியே' என, அறிவுறுத்திய காந்தி, 'அதை மதித்து அந்தப் பாமரனையும் கவுரவமாக, சமத்துவமாக நடத்தும் ஒரு அரசு வேண்டும்' என்றார்.
ஆனால், நாம் நம் சத்திய சக்தியையும், சுய சிந்தனையையும் விட நமக்கு எறியப்படும் இலவசங்களை நாடி ஓடினோம்.
விளைவு... நம் அங்க அடையாளங்களை ஒப்படைப்பதன் மூலம் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்து விடலாம் என்ற குழப்பத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். மீண்டு வந்து, மனித அடிப்படை சுதந்திரம், உரிமைகளைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் தலையிட்டு, முடிவு செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளோம்.
நிச்சயமாக, காந்திக்கு, 'ஆதார் கார்டு' தேவையிருக்காது. ஏனெனில், ஒளிவுமறைவற்றது அவருடைய வாழ்க்கை. ஆதார் அட்டை கட்டாயம் எனில், அவரும் அதை ஏற்காமல், சத்தியாகிரகம் செய்வார்.
ஆனால், சுதந்திரம் பறிபோகிறது என்ற நொண்டிச்சாக்குக் கூறி தவறிழைப்பவர்களைக் கடுமையாகத் தண்டிக்க, புத்திசாலித்தனமான மாற்றுச்சட்டங்களையும் இயற்றுவார்.
இன்று நம் எல்லாருடைய நலன் கருதி செயல்படும், காந்தி போன்ற தலைவர்கள் இல்லை. ஏன் தெரியுமா?
உன்னதங்களை உதறி எறிந்தோம்; உடலுழைப்பைக் கேவலப்படுத்தினோம்; சுய சிந்தனையை எள்ளி நகையாடினோம்; சேவையை மிதித்து தியாகிகளை ஓரங்கட்டினோம்.
விளைவு... இன்று நாம் ஒருவரை ஒருவர் குற்றம் கூறி, புறம் பேசி, கேவலப்படுத்தி, அதில் நாம் காணும் அற்ப இன்பம், நம்மை ஆளுமையற்றவர்களாக்கி வருகிறது. நம் குழந்தைகளை கையறு நிலையில் வீழ்த்துகிறது. வாழ்வையே சூன்யமாக்கும் ஒரு ஆபத்தான சூழல் இது!
இன்றைய, காந்தி நினைவு தினத்திலாவது ஒரு நிமிடம் ஒதுக்கி, நம்மையே நாம் முழுமையாகக் கவனிப்போம்; நம் ஆன்ம சக்தியை உணருவோம்.
சுயத்தைப் போற்றி, இலவசங்களை மறுப்போம்; எளிய வாழ்வை ஏற்று, அனைவர் நலன் கருதி, ஒரு சிறிய செயலை யாவது செய்வோம்; கடமைகளை நிறைவேற்றி உரிமைகளை நிலைநாட்டுவோம்!

- சூ. குழந்தைசாமி,
செயலர், காந்தி அமைதி நிறுவனம், ஆழ்வார்பேட்டை, சென்னை.
இ - மெயில்: kulandhaisamy.gpfgmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement