Advertisement

உள்ளாட்சி தேர்தல் உடனே வேண்டும்!

தமிழகத்தின் தற்போதைய, 'மில்லியன் டாலர்' கேள்வி, உள்ளாட்சி தேர்தல் எப்போது நடக்கும் என்பது தான்! அந்த அளவுக்கு, கடந்த ஓராண்டிற்கும் மேலாக, எதிர்பார்ப்பை ஏற்படுத்திஉள்ளது, இந்த விவகாரம்.நீதிமன்றம் உத்தரவிட்டும், தேர்தலை நடத்த தயாராக இல்லாத மாநில தேர்தல் கமிஷனின் போக்கு, உள்ளாட்சியில் வசிக்கும் மக்களுக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்திஉள்ளது.தங்களின் உள்ளாட்சிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால் தான், சுகாதார பணிகள் சரிவர நடக்கும்; நோய், நொடிகளில் இருந்து தப்பிக்க முடியும் என்பது,
அவர்களின் எண்ணம்.நீண்ட காலமாக நடக்காமல் முடங்கிய உள்ளாட்சி தேர்தல், 1996க்கு பின் தான், சரிவர நடந்தது. 15 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் ஏற்பட்டுள்ள குளறுபடி, உள்ளாட்சி நிர்வாகத்தை தடம்புரளச் செய்துள்ளது.குறிப்பிட்ட இடைவெளியில் உள்ளாட்சி தேர்தல் நடக்காததற்கு பல காரணங்களை கூறினாலும், இந்த உயரிய தேர்தல் மீது, ஆளும் தரப்பினருக்கு அக்கறையின்மை தான் முக்கிய காரணம்!கீழ்நிலை அதிகார அமைப்பு என, மேல் நிலையில் உள்ள ஆளும் வர்க்கத்தினரால் கருதப்படும் உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரம் செய்து, நிர்வாகம்
செய்வதை ஆளுங்கட்சிகள் பெரும்பாலும் விரும்புவது இல்லை.

தலைநகரில் இருந்து சாதாரண கிராமங்கள் வரை, தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்ற, 'நல்ல' எண்ணம் தான், ஆளும் தரப்பினரின் இந்த நிலைப்பாட்டிற்கு காரணம்.உள்ளாட்சி அமைப்புகள் வலுப்பெற்றால் தான் ஜனநாயகம் அடித்தளத்திலிருந்து தழைத்தோங்கும் என்ற கருத்திற்கு, ஆளும் கட்சிகள் மதிப்பளிப்பது இல்லை. இது போன்ற பல காரணங்களால், 10 ஆண்டுகளை கடந்தும் கூட, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்காமல் இருந்துள்ளது.சில நேரங்களில், உள்ளாட்சித் தேர்தல் நடத்த, தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து அறிவிக்கை வெளியாகி இருக்கும். இன்ன தேதியில் தேர்தல் என, அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும்.அப்போது, யாராவது ஒருவர், நீதிமன்றத்தை நாடி, ஏதாவது ஒரு காரணத்தை சுட்டிக்காட்டி, வழக்குத் தொடர்வார்;தேர்தலை நடத்த தடை விதித்து, கோர்ட் தீர்ப்பளித்து விடும்.சில சமயங்களில், தப்பித்தவறி, குறிப்பிட்ட இடைவெளியில் தேர்தல் நடந்து விடும். அந்த
தேர்தலில், ஆளுங்கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்காது.அத்தகைய சூழலில், ஆளும் அரசு, உள்ளாட்சி அமைப்பு நிர்வாகம் மீது வெறுப்பையும், எதிர்ப்பையும் காட்டத் தொடங்கும்.இதனால் அடி மட்டத்திலிருந்து, ஆளும் அரசுக்கு எதிர்ப்பு கிளம்பும். இதை தவிர்க்கவே, அப்போதைய சில ஆளும் அரசுகள், உள்ளாட்சி தேர்தலை ஒரு பொருட்டாகவே கருதாமல்,
காலம் கடத்த முயற்சித்தன.பதவி காலத்தில்உள்ளாட்சிப் பிரதிநிதிகள், இறந்து விட்டால், கேட்கவே வேண்டாம்...

இடைத் தேர்தல், உடனடியாக நடக்கவே நடக்காது. அடுத்து நடைபெறும் பொதுத் தேர்தல் வரை, காலியிடமாகவே இருக்கும்!காரணம், தேர்தல் நடைபெறுவதற்கான கால வரையறை அல்லது வரன்முறை ஏதுமில்லை; இருந்தாலும் அதை கேட்பாரில்லை.'ஒரு கிராமம் நன்றாக இருந்தால் தான் நாடு நன்றாக இருக்கும். சுதந்திரம் என்பது, அடித்தளத்திலிருந்து திளைக்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியும், தன்னிச்சையுடன் செயல்படும் அதிகாரம் பெற்றிருக்க வேண்டும்.'ஒவ்வொன்றும் சுய சார்புடனும் தன் தேவைகளை பூர்த்தி செய்யும் திறனுடனும், தேவைப்பட்டால் தன் நலத்தைப் பாதுகாக்க, உலகையே எதிர்த்து நிற்கும் அளவிற்கு மேம்பட வேண்டும்' என, மஹாத்மா காந்தியடிகள் விரும்பினார்.ஆனால், அவர் விரும்பிய படி நிலைமை இல்லை. கை, கால்கள் கட்டுப்பட்டது போல, பெயரளவுக்கு தான் உள்ளாட்சி நிர்வாகங்கள் நடைபெற்றன. அனைத்து அதிகாரங்களும், அரசு அதிகாரிகளின் கையில் தான் இருந்தன.உள்ளாட்சி பிரதிநிதிகள், கவுரவ பிரதிநிதிகளாக மட்டுமே செயல்பட்டு வந்தனர். அதனால் உள்ளாட்சி அமைப்புகள், சவலை பிள்ளை போல காட்சியளித்தன.இந்த கோளாறுகளுக்கு, 1990க்குப் பின், முடிவு கட்டினார், அப்போதைய பிரதமர், காங்கிரசை சேர்ந்த, நரசிம்ம ராவ்.ஆனால், அப்போதைய தமிழக அரசு, இதை முழுமையாக ஏற்காமல், சில மாற்றங்களை செய்து, 1994ல், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை உருவாக்கியது.அதில், பெண்களுக்கு, 3ல் 1 பங்கு இட ஒதுக்கீடுக்கு வழிவகை செய்யப்பட்டது. அது தற்போது, 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அது போல, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, மக்கள்தொகை அடிப்படையில் உரிய ஒதுக்கீடு; பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய கிராம சபை உருவாக்கம்; மாநிலத் தேர்தல் கமிஷன்; மாநில நிதிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன.
மேலும், மாநில தேர்தல் கமிஷனுக்கு பல அதிகாரங்கள் கிடைத்தன.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலை நடத்த வேண்டும்; ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, காலிப்பணியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும்... விசாரணை என்ற பெயரில், 'சம்மன்' அளித்து, யாரையும் விசாரணை செய்யலாம் என்பது உள்ளிட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டன.மாநிலத் தேர்தல் ஆணையம், தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக செயல்பட்டதால், ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடந்தது.அதன் படி, 1996, 2001, 2006, 2011 என, தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல்கள் நடந்தன. கடந்த, 2016 அக்டோபரில் தேர்தல் நடத்த, வேட்பு மனு தாக்கல் முடிந்து, பரிசீலனை செய்யும் தருணத்தில், பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீடு சரி வர பின்பற்றப்படவில்லை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி, உயர் நீதி
மன்றத்தில், தி.மு.க., வழக்கு தொடர்ந்தது.தேர்தல் நடத்த இடைக்காலத்தடை விதித்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஓராண்டுக்கு மேலாகியும் வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது; முடிவுக்கு வரவில்லை.உள்ளாட்சி தேர்தல், முறையாக, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற வேண்டும் என்பதற்காகத் தான், தனி அலுவலர் நியமனம் செய்வதற்கு, தமிழ்நாடு ஊராட்சிகள்
சட்டம் - 1994ல் வழி வகை செய்யப்படவில்லை.ஆனால், 2016ல், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதற்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டதைத் தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் வரை, உள்ளாட்சி பணிகளைக் கவனிக்க, ஆறு மாதத்திற்கு, தனி அலுவலர்கள் நியமனம் செய்வதற்கான சட்டம், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.அடுத்தடுத்து, ஆறு மாதங்களுக்கு, மசோதா நிறைவேற்றப்பட்டு, கால நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. தற்போது, தனி அலுவலர்களின் நிர்வாகத்தில் தான் உள்ளாட்சி
நிர்வாகங்கள் உள்ளன.தனி அலுவலர்கள் சரி வர செயல்படாததால், அடிமட்ட மக்களுடன் நெருங்கிய தொடர்பு இல்லாததால், உள்ளாட்சிகளில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு, பன்றிக் காய்ச்சல், சிக்குன் குனியா போன்ற வியாதிகளின் தாக்கம் அதிகரித்துள்ளன.முன் எப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு, மர்ம காய்ச்சலால் உயிர் சேத எண்ணிக்கை, அதிகமாகி இருக்கிறது.கிராமப்புறங்களில் துாய்மைப் பணிகள் மேற்கொள்ள, எத்தனை துறை அலுவலர்கள் இருந்தாலும், இறங்கி வேலை செய்ய, உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால், உள்ளாட்சிகளில் துாய்மை இல்லை.ஊராட்சி மன்றத்தலைவர், வார்டு உறுப்பினர்கள்
என, ஒரு ஊராட்சியில் குறைந்த பட்சம் பத்து நபர்களாவது இருப்பர்.அவர்கள் இல்லாத நிலையில், ஒரே ஒரு ஊராட்சி செயலரையும், சுகாதார பணியாளர்கள் ஓரிருவரையும் வைத்து, எத்தனை நாளுக்கு, எவ்வளவு வேலைகளை செய்ய முடியும்?ஊராட்சி ஒன்றிய ஆணையரான தனி அலுவலர், ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளின் தேவைகளையும், பணிகளையும் மேற்கொள்ள முடியுமா... அது, இயலாத காரியம்!
கடந்த ஆண்டுகளில், உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் இருந்ததால், சுத்தம், சுகாதாரம் பேணப்பட்டு, நோய்களால் உயிர் இ ழப்புகள் அதிக அளவில் ஏற்படாமல் பார்த்து கொள்ளப்பட்டது.மேலும், ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியும், ஊராட்சி மன்றத்தலைவர்கள் இல்லாததால், போதுமான அளவில் வரவில்லை எனவும் கூறப்படுகிறது. அந்த நிதியை, வேறு திட்டங்களுக்கு அனுப்பி விடுவதாகத் தெரிகிறது.
'தண்ணீர் வரவில்லை; தெரு விளக்கு எரியவில்லை; சாக்கடை சரியாகப் போகவில்லை' என, அன்றாடப் பிரச்னைகளுக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் அல்லது வார்டு உறுப்பினர்களிடம் பொதுமக்கள் கூறினால், ஓரிரு நாட்களில் சரி செய்யப்படும்.ஆனால், இப்போது எந்தப் பிரச்னையாக இருந்தாலும், தனி அலுவலர் என்ற முறையில், ஊராட்சி ஒன்றியத்தின் ஆணையரைத் தான் போய் பார்க்க வேண்டியுள்ளது. அதனால், கால விரயமும்
பணச்செலவும், அலைச்சலும் தான் ஏற்படுகிறது.இதற்குத் தீர்வு,உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தான்! மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்நோக்கி தான் உள்ளது.பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடுக்கவும், இரு சக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், பொது நல நோக்கில்
உத்தரவிடும் நீதிமன்றங்கள், 'உள்ளாட்சி தேர்தலை கண்டிப்பாக நடத்தியே ஆக வேண்டும்' எனவும், கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.அதன் மூலம், அடித்தள ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என்பது தான், அனைத்து சமூக நல விரும்பிகள் கோருவது!இ - மெயில்: ranimaran1955gmail.com - சி.சுகுமாறன்சமூக ஆர்வலர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement