Advertisement

வாக்கு என்னும் ஆயுதம் இன்று வாக்காளர் தினம்

இன்று தேசிய வாக்காளர் தினம்

'கண்ணியமாக வாக்களியுங்கள்' என்ற கோஷத்துடன் கடைபிடிக்கப்படுகிறது. சுதந்திர
இந்தியாவில் முதல் லோக்சபா தேர்தல் ஐந்து மாதங்கள்தொடர்ச்சியாக நடந்தன. 1951 முதல் 2014 வரை 16 முறை லோக்சபாவிற்கான தேர்தல் நடந்துள்ளது. உலகின் மிகப்பெரிய தேர்தலாக 81.45 கோடி வாக்காளர்களுடன் நடந்த 2014 லோக்சபா தேர்தலில் 66.38 சதவீதத்தினர் வாக்களித்து
உள்ளனர்.

மாண்டெஸ்க்யூ என்ற அறிஞர் 'சட்டங்களின் ஆன்மா' என்ற நுாலில் குடியரசு அல்லது குடியாட்சி ஆகியவற்றில் தேர்தல்கள் நடக்கும் போது வாக்காளர்கள் தாம் நாட்டின் ஆட்சியாளர்களாக இருப்பதா அல்லது அரசாங்கத்தின் குடிமக்களாக இருப்பதா என்றஇரண்டில் ஒன்றை முடிவுசெய்கிறார்கள் என்றும், தன்னுடைய அரசை தானே தீர்மானிக்கும் எஜமானர்கள் வாக்காளர்களே என்றும் குறிப்பிடுகிறார்.


உத்தரமேரூர் கல்வெட்டுகள்


தற்போதைய நவீன தேர்தல் முறை 20ம் நுாற்றாண்டில்உருவானது. ஆனால் பழந்தமிழர்கள்
ஆயிரத்து நுாறு ஆண்டுகளுக்கு முன்னரே உலகத் தேர்தல் முறைக்கு முன்னோடியாக இருந்ததை காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள உத்தரமேரூர் கல்வெட்டுகள் விளக்குகின்றன. இன்று இந்திய தேர்தல் விதிமுறைகள் குறித்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் குறிப்பிடுவது போல, அப்போதைய ஊர்க்குழுவில் போட்டியிடுபவருக்குரிய தகுதிகள் மற்றும் தேர்தல் முறைகளை
பற்றி இக்கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.


தடுப்புக்காவல் கைதிகளுக்கு ஓட்டுரிமை


இன்று இந்தியாவில் 18 வயது நிரம்பிய அனைவரும் ஓட்டளிக்கலாம் என சட்டம் கூறுகிறது.
திருநங்கைகள், திருநம்பிகளும் மூன்றாம் பாலினத்தவர் என்ற முறையில் ஓட்டளிக்கலாம். கடந்த தேர்தலில் முதன் முறையாக இதுகுறித்து அறிவிக்கப்பட்டதும் 26,314 பேர் மூன்றாம் பாலின வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டனர். சிறையில் இருக்கும் தண்டனை, விசாரணை சிறைவாசிகள் ஓட்டளிக்க முடியாதெனினும் தடுப்புக்காவல் சிறையில் உள்ளவர்களுக்கு ஓட்டளிக்க உரிமை உண்டு. வெளிநாட்டினரும், மனநிலை பாதிப்படைந்தவரும் தேர்தல் தொடர்பான குற்றங்களிலும், நேர்மைக்கு புறம்பான தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டவர்களும் தேர்தலில் ஓட்டளிக்க முடியாது.


ஓட்டுரிமைக்காகபோராடிய பெண்கள்


இன்று அனைவருக்கும்ஓட்டளிக்கும் உரிமை உண்டு. இந்நிலையை அடைவதற்காக உலகம் முழுவதும் உள்ள பெண்கள் நீண்ட நெடிய போராட்டங்கள் நடத்தினர். நாகரிகத்தின் தொட்டிலான பண்டைய கிரேக்க நாட்டிலிருந்த ஏதென்சு நகரில் கி.மு., ஐந்தாம் நுாற்றாண்டில் நடந்த தேர்தல்களில் பெண்கள், அடிமைகள் மற்றும் வெளிநாட்டினர் ஓட்டளிக்க முடியாது என்ற விதியிருந்தது. 1837 ஆண்டு விக்டோரியா மகாராணியாக தன் 18 வயதில் பொறுப்பேற்று 64 ஆண்டு காலம் பல நாடுகளில் ஆட்சி செய்தாலும், உலகம் முழுவதும் ஆண்களுக்கு சமமாக ஓட்டளிக்கும் உரிமை பெண்களுக்கு மறுக்கப்பட்டே வந்தது. இங்கிலாந்து நாட்டில் பெண்கள் ஓட்டளிக்க அனுமதி வழங்கும் மசோதா 1870ம் ஆண்டு தாக்கலானது.


48 ஆண்டுகளுக்கு பிறகு 1918 ஆண்டில் தான் சொத்துக்கள் உள்ள 30 வயதிற்குட்பட்ட பெண்கள்
மட்டும் ஓட்டளிக்க உரிமையளிக்கப்பட்டது. பின் 21 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் ஓட்டளிக்கும் உரிமை 1928 ஆண்டில் வழங்கப்பட்டது.இந்தியாவில் அன்னிபெசன்ட் அம்மையார் போன்றோர் 1917 ஆண்டில் பெண்களின் ஓட்டுரிமைக் காக போராடிய போது, இந்திய பெண்கள் ஓட்டளிக்க தயாராக இல்லை என ஆட்சியாளர்கள் மறுப்பு தெரிவித்தனர். எனினும் 1920--21 ஆண்டுகளில் திருவாங்கூர், கொச்சின், சென்னை, மும்பையில் பெண்களுக்கு ஓட்டளிக்கும் உரிமை கிடைத்தது. 1926 ஆண்டு இந்தியாவிலேயே முதன் முறையாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முதல் எம்.எல்.ஏ., ஆக தேர்ந்தேடுக்கப்பட்டார்.


பல வகையான தேர்தல் முறைகள்


உலகில் பல வகையான தேர்தல் முறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு தொகுதியிலும் பதிவாகும் ஓட்டுகளில் அதிக ஓட்டுக்கள் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவர்
என அறிவிக்கப்படுவார். ஆனால் உலகின் பெரும்பான்மையான நாடுகளில் பிரதிநிதித்துவ தேர்தல் முறை பின்பற்றப்படுகிறது. பதிவாகும் ஓட்டுக்களின் சதவீதத்தின் படி கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதத்தின்படி அந்த கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் படுவர். எந்த தொகுதியில் யார் போட்டியிடுகிறார்கள் என அறிவிக்காமல் ஒரு கட்சி தன் மொத்த வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்கும். பின்அக்கட்சி பெற்ற ஓட்டு சதவீதத்தின்படி பிரதிநிதித்தும் கிடைக்கும். சில நாடுகளில் வேட்பாளர்கள் போட்டியிடாமல் கட்சிகளாக போட்டியிடுவார்கள். வாக்காளர்கள் கட்சிக்கு தங்கள் ஓட்டுக்களை அளிப்பர். தலைமையை கட்சி மக்களுக்கு அறிவிக்கும். பிற வேட்பாளர்களை கட்சி தீர்மானிக்கும். இம்முறையை பின்பற்றும் நாடுகளில் இடைத்தேர்தல்கள் கிடையாது.


வாக்காளர்களுக்கான உரிமைகள்


இந்திய வாக்காளர்களுக்கு பல்வேறு உரிமைகள் உள்ளன. வேட்பாளர்களின் குற்ற வழக்குகள், சொத்துக்கள், தேர்தல் அறிக்கைகள் அறிந்து கொள்ள உரிமையுண்டு. எவர் ஒருவரும் பணம் கொடுத்தோ அல்லது வேறு எந்த முறையில் குறிப்பிட்ட ஒருவருக்கு ஓட்டளிக்கும் மாறோ அல்லது ஓட்டளிக்க கூடாது என்றோ கட்டாயப்படுத்த முடியாது. ஒருவர் யாருக்கு ஓட்டளித்தார் என்பதை யாரும் தெரிந்து கொள்ளவும் முடியாது. தற்போது நோட்டா ஓட்டு மக்களிடம் பிர
பலமாகி வருகிறது. வாக்காளர்கள் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் ஓட்டளிக்க விருப்பம் இல்லாததை பதிவு செய்யும் வகையில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கடைசி பட்டனாக இளஞ்சிவப்பு நிறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் நோட்டாவிற்கு அளிக்கும் ஓட்டுக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
1967 நடந்த லோக்சபாதேர்தலில் 33 சதவீத வாக்காளர்களே ஓட்டளித்தனர். அப்போது நோட்டோ கிடையாது. 2014 தேர்தலில் இந்தியாவில் 59 லட்சத்து 97 ஆயிரத்து 054 வாக்காளர்களும், தமிழகத்தில் 1.4 சதவீத வாக்காளர்களும் நோட்டோவிற்கு ஓட்டளித்தனர்.


வாக்காளர்களின் சக்தி


வாக்காளர்களின் சக்தி அளவிட முடியாதது. மக்கள் சக்தியால் சக்தி வாய்ந்த அரசுகளும், தலைவர்களும் தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளனர். புதிய சட்டங்கள் பிறந்திருக்கின்றன. பல சட்டங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. அடுத்த முறை மக்களிடம் போய் ஓட்டு கேட்க வேண்டும்.
அவர்களை சந்திக்க வேண்டும் என்ற கட்டாயத்தால் தான் பலநன்மைகள் நடக்கின்றன. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட அதிகாரம் பொருந்திய அமைப்பாக தேர்தல் கமிஷன் உள்ளது.


விழிப்புடன் செயல்பட வேண்டும்


இன்று பணத்தை செலவழித்தால் தேர்தலில் மட்டுமல்ல வாக்காளர்களையும் வெற்றி பெற்று விடலாம் என்ற மனநிலையும், பின் செலவழித்த பணத்தை திரும்ப பெற பல மடங்கு ஊழல் செய்யும் நிலையும் உள்ளது. உத்திரமேரூர் கல்வெட்டுகளின் அடிப்படையில் தகுதிகளை நிர்ணயித்து வாக்காளர்கள் விழிப்புடன் இருந்து இந்நிலையை மாறச் செய்ய வேண்டும். 18 வயது
நிரம்பிய இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்தவே தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தற்போது 60 லட்சம் புதிய வாக்காளர்கள், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகள் புதிய இந்தியாவை உருவாக்க காத்திருக்கின்றன.

வாக்காளர்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் பணம், இதர சலுகைகளை எதிர்பாராமல் தங்கள் கையிலுள்ள வாக்கு என்ற மாபெரும் ஆயுதத்தை கொண்டு ஜாதி, மதம், இனம் பாராமல்
இந்தியா என்ற மாபெரும் ஜனநாயக நாட்டை கட்டமைக்க உறுதி கொள்வோம்.

-முனைவர் ஆர்.அழகுமணி

வழக்கறிஞர், மதுரை

98421 77806

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement