Advertisement

மருத்துவர்கள் மகத்துவ மனிதர்கள்!

கிட்டார், கீ போர்டு போன்ற வாத்தியங்கள் பயின்றுகொண்டிருக்கும் மாணவர்களின் இன்னிசைக் கச்சேரியை காணச் சென்றிருந்தேன். மொத்தம் ஐம்பது மாணவர்களில் பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் மதுரையின் புகழ்பெற்ற மருத்துவர்கள். அதில் குழந்தைகள் நலம், நரம்பியல்,
மயக்கவியல், கண் அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சையில் நிபுணர் எனப் பலதுறை
மருத்துவர்கள் அடக்கம். அந்த கச்சேரியில் நான் கண்ட இந்த காட்சிகள் என்னை வியப்பில்
ஆழ்த்தியது.விழாவின் முடிவில் பேசிய நரம்பியல் சிகிச்சை நிபுணர், 'வயது முதிர்ந்த காலத்தில் வரக்கூடிய மறதி நோய் இந்த இசையைக் கற்றால் வராது,' என்றார். மேலும், பல மருத்துவர்களிடம் உரையாடும் போது தங்களின் தொழிலால் வரக்கூடிய வேலைப்பளு, அதனால் வரும் மனஅழுத்தம் காரணமாகவே தாங்கள் இசை கற்க வந்ததாக கூறினார்கள். எனக்கு இந்த நிகழ்ச்சி மருத்துவர்களின் இன்னொரு பக்கத்தை 'என் பார்வை' பகுதியில் எழுதத் துாண்டியது.

மருத்துவர்களின் வாழ்நாள் : இந்திய மருத்துவர்களின் வாழ்நாள் காலம் சுருங்கி கொண்டே வருகிறதாம். தற்போது உள்ள மருத்துவச் சூழ்நிலைக் காரணமாக மருத்துவர்களின் சராசரி வாழ்நாள் காலம் 59ஆக சுருங்கிவிட்டது.நுாறு வயதைத் தாண்டியவர்கள் தங்கள் வயதின் முதிர்ச்சியால் உயிருக்கு போராடும் போது, தங்களின் திறமையான வைத்தியத்தால் அவர்களை காப்பாற்றும் மருத்துவர்களுக்கு இந்த நிலைமையா? இதில் பெரும்பாலான மருத்துவர்கள் மாரடைப்பு நோயால் இறக்கிறார்கள். இந்தச் செய்தியை இந்தியன் மெடிக்கல் அசோசி யேஷன் தலைவர் டாக்டர் திலீப் சார்தா வெளியிட்டுள்ளார். இதில் டாக்டர்களின் சராசரி ஆயுட்காலம் 55- -59 ஆகவும், அவர்களின் நோயாளிகளின் ஆயுட்காலம் 69- -72 ஆகவும் உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.மருத்துவர் என்றால் உறவினர்களும் சரி, நண்பர்களும் சரி என்ன சொல்லுவோம், அவர் பெரிய டாக்டர் நம்மோடு சகஜமாக பேச மாட்டார், மருத்துவர் என்ற
தலைக்கனம், எப்போதும் முகத்தை சீரியசாக வைத்துக் கொள்பவர்கள், உறவுகளோடு ஒட்டாமல்ஒதுங்கியே இருப்பார்கள் எனப் பல குற்றச்சாட்டுகள்.ஒரு மருத்துவர் விசேஷ வீடுகளில் கலகலவென பேசி சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்துதான் வருகிறார்.ஆனால் உறவினர்களும், நட்புகளும் என்ன செய்கிறோம். அவர்களை அந்த விழாவை அனுபவிக்க விடுகிறோமா? அங்கேயும் நம்முடைய நோய்களின் வரலாறுகளையும், எடுத்துக் கொண்ட மருந்துகளையும், தமக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர்களின் நடவடிக்கைகளையும் அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பேசிக் கொண்டேயிருக்கிறோம்.சிலர் இதற்கு மேல் ஒருபடிச் சென்று கையில் பேப்பர், பேனாவுடன் தனது நோய்க்கான மருந்தை எழுதித்தரச் சொல்கிறோம். துக்கவீடாக இருந்தாலும், விசேஷவீடாக இருந்தாலும் அவரை உறவினராக, நண்பராக பார்க்காமல் மருத்துவராகவே பார்க்கிறோம். கலகலவென சிரித்து பேசும் குணம் உடையவராக இருக்கும் மருத்துவர்கள் கூட, இந்த மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு பிறகு தாங்களாக ஒதுங்கிகொண்டு, தங்களது முகத்தை சீரியசாக வைத்துக்கொள்ள பழகிக் கொள்கிறார்கள்.

குடும்பச் சூழ்நிலை : தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல மகப்பேறு பெண் மருத்துவர் தன்னுடைய அனுபவத்தை என்னுடன் பகிர்ந்துக் கொண்டார்.''உங்கள் குடும்பத்தில் சகோதரிகளுக்கு, மகள், மருமகள்களுக்கு வாழ்நாளில் ஒருமுறையோ அல்லது இரண்டுமுறையே தான் பிரசவவலி எடுத்து குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் மகப்பேறு மருத்துவர்களாகிய எங்களுக்கு இங்கு வரும் ஒவ்வொரு பெண்ணின் பிரசவத்தின் போதும் நாங்களும் அதே வலியை மனதால் அனுபவிக்கின்றோம். ஒருபெண்ணுக்கு பிரசவம் என்பது மறுஜென்மம் என்றால் எங்களுக்கு ஒவ்வொரு பெண்ணின் பிரசவமும் மறுபிறப்பு. இரண்டு உயிரிகளை காப்பாற்றும் மிகப்பொரிய பொறுப்பு எங்களிடம் உள்ளது.பிரசவங்கள் காலம், நேரம் பார்த்து வராது. பத்து மாதங்கள் தொடர்ந்து நம்மிடம் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் பெண்ணிற்கு நாமே பிரசவம் பார்க்க வேண்டியகட்டாயம். இதன் காரணமாக கோயில்களுக்கோ, விசேஷவீடுகளுக்கோ, ஏன்
நெருங்கிய உறவினாரின் துக்கநிகழ்ச்சிக்கோ கலந்துகொள்ள முடியாத நிலைமை. இதில்
குடும்பத்தில் கணவருடனும், குழந்தைகளுடனும் எங்களுடைய அன்பை பகிர்ந்துகொள்ள எங்கே நேரம் இருக்கிறது.குடும்பத்துடன் ஏதாவது ஒரு இடத்துக்கு சுற்றுலா செல்லலாம் என முடிவெடுத்து அதற்குரிய ஏற்பாடெல்லாம் செய்து கிளம்பும் தருவாயில் பத்து மாதமாக
வைத்தியம் பார்த்த பெண்ணிற்கு திடீரென்று பிரசவவலி எடுத்து மருத்துவமனைக்கு கொண்டு
வருவார்கள். மருத்துவராக செயல்படுவதா? குடும்பத் தலைவியாக முடிவெடுப்பதா? குடும்ப உறுப்பினர்களைச் சமாளிப்பதற்குள் போதும், போதும் என்றாகிவிடுகிறது.

சிறந்த தாய் : வீட்டில் குழந்தைகள் எங்களை சிறந்த மருத்துவ சிகிச்சை நிபுணர்களாக பார்ப்பதே இல்லை. அவர்களுக்கு ஒரு சிறந்த தாய் தான் வேண்டும். அக்கம் பக்கத்து வீட்டு தாய்மார்கள் விதவிதமான உணவுகளை எப்படி சுவையாக சமைக்கிறார்கள். குழந்தைகளுடன் பலமணி நேரங்கள் செலவழித்து தோழி போல பேசுகிறார்கள். பல இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். நீ மட்டும் ஏன் இப்படி மருத்துவமனையை இருபத்திநாலு மணிநேரமும் கட்டிக்கொண்டு அழுகிறாய் என்று கேட்கும்போது நம்மால் சிறந்த மனைவியாகவும், தாயாகவும் செயல்பட முடியவேயில்லையே என்று பல இரவுகள் தனிமையில் அழுது, ஒரு வகையான தாழ்வு மனப்பான்மையுடனேயே வாழ்கிறோம்.''இவ்வாறு கூறினார்.இதில் தாய், தந்தை இருவரும் மருத்துவர் என்றால் நிலைமை இதைவிட கடினம். சமையல்காரர்களையும், வேலைக்காரர்களையும் நம்பியே குடும்ப வாழ்க்கை நடக்கிறது.

இன்றைய மருத்துவச் சூழ்நிலை : முந்திய காலங்களில் நோயுற்றவர் இறந்து போனால் அவருடைய ஆயுட்காலம் முடிந்துவிட்டது. அவருடைய விதி அவ்வளவுதான் என நினைக்கும் காலம் போய், தற்போது மருத்துவமனையில் ஓர் உயிர் போனால் அது பெரும்பாலும் மருத்துவர்களின் கவனக்குறைவே என்ற நிலைக்கு இன்றைய சூழ்நிலை மாறிவிட்டது. இதன் காரணமாக மருத்துவர்கள் ஒவ்வொரு சிகிச்சையின்போதும் ஒருவிதமான அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். மருத்துவத்துறையில் மிகவும் அனுபவமிக்க சிறப்பு சிகிச்சை நிபுணர்கள், தாங்கள் சம்
பாதித்தது போதும் என்றும் தங்களின் உடல்நிலையும், குடும்பமும்தான் முக்கியம் என்றும், முடிவெடுத்து தங்களுடைய வேலைநேரத்தை, காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணிவரை என ஒதுக்கிவிட்டால், நாம் எங்கே செல்வோம். வரும் மாரடைப்புகளும், விபத்துகளும், பிரசவங்களும் காலம் நேரம் பார்த்தா வருகிறது.நுாறு மருத்துவர்களில் பத்துபேர் மருத்துவத்தை ஒரு சேவையாக செய்யாமல் தொழிலாகத்தான் செய்கிறார்கள். அவர்களை புறம்தள்ளிவிட்டு மீதி இருக்கும் 90 பேர் செய்யும் சேவையை நாம் பாராட்ட வேண்டும்.டாக்டர்கள் உயிரை காப்பாற்றிக் கொடுத்தால் தெய்வம் என்கிறோம். உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனால் அவர்களை குறை கூறுகிறோம். இவை எல்லாம் வேண்டாம்... மருத்துவர்களை சாமிக்கு நிகராக உயர்த்தாமல், சக மனிதர்களாக மதித்தாலே போதுமானது.

- சு.அமுதா
தன்னம்பிக்கை பயிற்றுனர்
மதுரை
r_amudhayahoo.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement