Advertisement

அருமை நண்பன் தன்னம்பிக்கை!

தன்னம்பிக்கை! உச்சரிக்கும் போதே நம் மனதை தட்டி எழுப்பும் சொல். வெற்றி மேல் வெற்றிகளை குவிக்கவும், துவண்ட நிலைக்கு தள்ளும் தோல்விகளில் இருந்து மீட்டெடுக்கவும் உதவும் மந்திரம்தான் தன்னம்பிக்கை. இந்த தன்னம்பிக்கை ஒவ்வொருவருக்கும் தாய் வயிற்றில் இருக்கும் நாட்களில் இருந்தே இணைந்திருக்கிறது.
நாம் மதித்து, போற்றி, பாராட்டும் தாயின் பிரசவ போராட்டத்தில் தாயின் வேதனையைத்தான் வெளியில் இருந்து காண முடிகிறது. உள்ளேயும் போராடி குழந்தை வெளியே வரும் அந்த கணம், ஒவ்வொரு குழந்தையின் தன்னம்பிக்கையையும் இந்த உலகம் முதன்முதலில் காண்கின்ற கணம்! தன்னம்பிக்கை என்பது நம் அனைவரின் கூடவே பிறப்பது! குழந்தை பருவம் முதல் நாம் வளர வளர நம்மோடு சேர்ந்து தன்னம்பிக்கையும் வளர்கிறது. ஒரு சில நேரங்களிலும், சூழல்களிலும் நம் கூடவே வரும் தன்னம்பிக்கை நம்மை விட்டுச் சென்றாலும், எந்த ஒரு இக்கட்டான சூழலிலும் நாம் மனதார அழைத்தால் நமக்காக ஓடோடி வரும் அருமை நண்பன்தான் இந்த தன்னம்பிக்கை.

தன்னம்பிக்கை இழந்தால் : நாற்பது வயதை அடைந்த ஒருவர், தன் வாழ்வில் தமிழைத் தவிர வேறு மொழியை கற்றுக்கொள்ளவில்லை என்பதை உணர்ந்து ஆங்கிலம் கற்கத் தொடங்கினார். துவக்கத்தில் ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் சிரமப்பட்டார். தடுமாற்றத்தைக் கண்டு ஆங்கிலம் தெரிந்த அவரின் நண்பர்கள் அவரை ஏளனம் செய்ய துவங்கினர்.
'இத்தனை நாட்களாக ஆங்கிலம் கற்காமல் இப்போது உனக்கு இது தேவையா' என்று சிரித்தார்கள். மனமுடைந்த அவர் கற்றுத் தரும் ஆசிரியரிடமே என்ன செய்வது என்று அறிவுரை கேட்டார். '40 வயதில் நான் ஆங்கிலம் கற்பது தவறா அய்யா' என கேட்டவரிடம் அந்த ஆசிரியர் 'எந்த தவறுமில்லை; ஆனால் அதை தவறு என்று சிரிப்பவர்களை நண்பர்களாக வைத்திருப்பதே தவறு' என்றார்.

நல்ல நண்பர்கள் : ஆசிரியரின் பேச்சின் மூலம் தன் நிலையை உணர்ந்த அவர், ஏளனம் செய்த நண்பர்கள் அனைவரிடமும் பேசுவதைத் தவிர்த்து விட்டு ஆங்கில கல்வியை தொடர்ந்தார். நாட்கள் நகர்ந்தன. ஆங்கிலத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் அவரின் ஆங்கில ஆற்றல் வளர்ந்தது, அதோடு சேர்ந்து தன்னம்பிக்கையும் வளர்ந்தது. பின் நாட்களில் ஆங்கிலத்தில் ஆற்றல் மிக்கவராக உருவெடுத்தார். தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தை மற்றவர்களுக்கும் சொல்லித்தர வேண்டும் என்ற உன்னத நோக்குடன் வகுப்புகளையும் எடுக்கத் தொடங்கினார். எளிமையாகவும் யதார்த்தமாகவும் அமைந்த இவரின் வகுப்புகளுக்கு மாணவர்களின் கூட்டம் குவிந்தது.
ஒரு நாள் ஏளனம் செய்த நண்பர் மகனை அழைத்துக்கொண்டு இவரிடம் வந்தார். 'பையனுக்கு ஆங்கிலம் சொல்லித்தரணும். இந்த ஏரியாவிலேயே நீங்கள் தான் கைதேர்ந்தவர் என சொல்கிறார்கள். அதற்காகத்தான் இங்கு வந்துள்ளோம்' என்றார்.
'ஆங்கிலம் ஈசி தம்பி. நீயெல்லாம் ரொம்ப சுலபமாக புரிஞ்சுக்குவ. கவலைப்படாதே' என தன்னம்பிக்கையூட்டி அந்த சிறுவனை தன் வகுப்பில் சேர்த்துக் கொண்டார்.
கதையில் வந்தவரைப்போல எத்தனை முறை நாம் நம் தன்னம்பிக்கையை சின்ன சின்ன விஷயங்களுக்காக இழந்திருப்போம்? இப்படி இழந்த தன்னம்பிக்கையை
மீட்டெடுக்க நமக்கான முதல் மற்றும் மிக சுலபமான வழி -நம்மைச் சுற்றி எப்போதும் நல்ல மனிதர்களையும் நல்ல நண்பர்களையும் வைத்துக்கொள்வது தான்.

தொழிலதிபரின் கதை : தொழிலதிபர் ஒருவர் சோகத்துடன் மருத்துவமனையில் அமர்ந்திருந்தார். ஒரு புறம் வாகன விபத்திற்கு உள்ளான தந்தை சிகிச்சை பெற்று வந்தார். இன்னொரு புறம் வியாபாரம் முற்றிலும் வீழ்ச்சியினை சந்தித்து வந்தது.'உங்கள் தந்தை உயிர் தப்பிவிட்டார். ஆனால் பேச்சு எப்போது வரும் என சொல்ல முடியாது. எழுந்து நடப்பதும் சந்தேகமே' என கூறினார் மருத்துவர். 'இப்படி எல்லா பக்கமும் பிரச்னையாக உள்ளதே, என்ன தான் செய்வது' என யோசித்தபடி அமர்ந்திருந்தார் அந்த தொழிலதிபர். அப்போது, 'என்ன தம்பி உனக்கு பிரச்னை?' என்றது ஒரு குரல். நிமிர்ந்து பார்த்தால் 'டிப்டாப்' உடை அணிந்த பெரியவர் அவரின் அருகில் உட்கார்ந்திருந்தார். பார்க்க பெரிய மனிதர் போல் இருக்கிறார், நமக்கு எதாவது உதவியோ அல்லது சற்று ஆறுதலாவது கிடைக்கிறதா என பார்ப்போம் என்று நினைத்த தொழிலதிபர், பிரச்னைகள் அனைத்தையும் பெரியவரிடம் கொட்டி தீர்த்தார். 'இவ்வளவு தானா! இதோ எடுத்துக்கொள்' என தன் பாக்கெட்டில் இருந்த காசோலை ஒன்றை எடுத்து அதில் 'ரூபாய் 5 கோடி மட்டும்' என எழுதி கையெழுத்திட்டு கொடுத்தார். தொழிலதிபருக்கோ அதிர்ச்சி.
'உங்களுக்கு நான் எப்படி கைமாறு செய்யப்போகிறேன் அய்யா?' என கேட்டார். அதற்கு அந்த பெரியவர் 'இது கடன் தான் தம்பி. அடுத்த வருடம் இதே நாள் பணத்தை என் அலுவலகத்தில் வந்து திருப்பிக்கொடு' என்றபடி விசிட்டிங் கார்டை கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டார். விசிட்டிங் கார்டை எடுத்து பார்த்தால், இந்த பகுதியின் மிகப்பெரிய செல்வந்தரின் பெயர் அதில் இருந்தது. தொழிலதிபருக்கோ தன் அதிர்ஷ்டத்தை நம்ப முடியவில்லை. தன் பண பிரச்னை முழுவதையும் எளிதாக இந்த பணத்தின் மூலம் தீர்த்து விடலாம் என்ற தெம்பு அவருக்கு வந்தது.
பணம்தான் கையில் உள்ளதே இதை அவசர நிலைமையில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நினைத்து அந்த காசோலையை தன் வீட்டில் பூட்டி வைத்துவிட்டு தெம்பாக வேலை செய்தார். கையில் பணம் இருப்பதால் அதிகம் 'ரிஸ்க்' எடுத்து முழு வீச்சுடன் தன் வேலைகளை முடுக்கிவிட்டார்.

லாபகரமான தொழில் : இன்னொரு பக்கம் தந்தையிடம் எப்போதும் இல்லாத வகையில் தைரியம் கொடுத்து தந்தையின் தன்னம்பிக்கையையும் வளர்த்தார். சில நாட்களில் தந்தைக்கு பேச்சு வர துவங்கியது. குணமடைந்து வீடு திரும்பியிருந்தார். ஓராண்டு முடிந்தது. தொழிலதிபரின்
வியாபாரம், பெரியவர் கொடுத்த காசோலையை பயன்படுத்தாமலேயே லாபகரமாக நடந்து
கொண்டிருந்தது. மகிழ்ச்சியுடன் அந்த பெரியவரை காண விசிட்டிங் கார்டில் குறிப்பிட்டிருந்த விலாசத்திற்கு சென்றார். அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரின் அறையில் வேறு பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.உள்ளே சென்று விசாரித்த போது 'அவர் என் தந்தை தான். இரண்டு
ஆண்டுகளாக மனநலம் குன்றிய காரணத்தால் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பார்த்து வருகிறோம்' என்றார். தொழிலதிபர் காசோலையை நீட்டி திருப்பி கொடுப்பதாக கூறியவுடன், 'அது அவர் நிர்வாகத்தில் இருந்த போது இருந்த கணக்கு. இப்ப செல்லாது. இப்படி தான்தோன்றித் தனமாக செயல்படுகிறார் என்பதற்காகத்தான் மருத்துவமனையிலேயே சேர்த்தோம்' என்றார்
சிரித்தபடி.ஆக இல்லாத 5 கோடி ரூபாய் பணத்தை வைத்து தன் வியாபாரத்தையும், அதே 'ஜோரில்' தந்தையின் உடல்நிலையையும் தொழிலதிபர் மீட்டெடுத்தது தன்னம்பிக்கை
என்னும் ஒற்றை சொல்லால் மட்டுமே. நம்முடைய சொல்லுக்கும் செயலுக்கும் மதிப்பும் சிறப்பும் சேர்ப்பது நம் தன்னம்பிக்கை. நம்மை வெளியுலகுக்கு
அடையாளப்படுத்திக் காட்டும் தன்னம்பிக்கையை சரியான விதத்தில் சரியான நேரத்தில் பயன்படுத்தும் விதமே பல நேரங்களில் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கிறது.
என்னதான் கடவுள் பக்தி இருந்தாலும், கஷ்டமான சூழல் வரும் போதுதான் கடவுளைத் தேடி ஓடுவோம். தன்னம்பிக்கையும் அதே போலத்தான். கூடவே இருந்தாலும் நாம் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டு பிரச்னைகளும் சவால்களும் வரும் போது தன்னம்பிக்கையை தேடி ஓடுகிறோம். நம் அன்றாட செயல்களை விருப்பத்தோடும், ஆற்றலோடும் நிறைவேற்றினால் மனம் முழுவதும் நிறைந்திருக்க போவது கடவுளும் தன்னம்பிக்கையும்தான்!

-டாக்டர் கே.விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.,
ஆணையாளர், கோவை மாநகராட்சி.
kvijai007yahoo.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement