Advertisement

'முடிந்தால் அடக்கிப் பார்' : சீறுகிறார் சசிகுமார்

சசிகுமார் மதுரை தமிழில் மக்களின் மனம் கவர்ந்த நாயகன், மண்மணம் வீசும் படங்களில் நடித்து தனக்கென்று ரசிகர்களை வளைத்து போட்டுள்ளார். சுப்ரமணியபுரத்தில் துவங்கி, நாடோடிகள், கொடிவீரன் என பல வெற்றி படங்களில் வெண் நிலவாய் பிரதிபலித்த சசிகுமார் அளித்த பேட்டி
* பொங்கல் நினைவுகள்...தமிழர் விழாக்களிலேயே, ஜாதி, மதம் கடந்து ஆறறிவு மக்களை மட்டுமின்றி, ஐந்தறிவு மாக்களையும் அரவணைத்து கொண்டாடுவது பொங்கல் எனும் தமிழர் திருநாள். பழையவற்றை கழிக்க போகி பொங்கல், வீடு செழிக்க மனைப்பொங்கல், வயலில் உழைக்கும் மாடுகளுக்கு மாட்டுப் பொங்கல், பொழுதைப் போக்க காணும் பொங்கல் என வகுத்துள்ளனர். இது நம் பாரம்பரியத்தில் பின்னிப் பிணைந்தது.

எனது ஊர் மதுரை மாவட்டம் புதுதாமரைப்பட்டி. எங்கள் வீட்டில் ஏராளமான மாடுகள் உண்டு. பொங்கல் நாளில் அவற்றை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு பெயின்ட் அடித்து, குங்கும பொட்டு வைத்து அலங்கரிப்போம். எனது தாத்தா, பாட்டி, பெற்றோர், எங்கள் வயல்களில் வேலை பார்ப்போர் என புத்தாடை அணிந்து பொங்கல் வைப்போம். அந்த மகிழ்ச்சியெல்லாம் இனி வாழ்நாளில் ஒருபோதும் வராது.
* ஜல்லிக்கட்டில் காளை பிடித்தது?அலங்காநல்லுார், பாலமேடு ஜல்லிக்கட்டில் பார்வையாளராகத்தான் பங்கேற்றுள்ளேன். டிராக்டரின் மேலே ஏறி நின்று, சீறிப்பாயும் காளைகளை, சினந்து அடக்கும் வீரர்களை கைதட்டி உற்சாகப்படுத்துவேன். உண்மையில் வீர விளையாட்டு என்றால் அது ஜல்லிக்கட்டாகத்தான் இருக்க முடியும்.
* ஜல்லிக்கட்டு காளை வளர்க்கிறீர்களா? மாடுகளை தெய்வமாக போற்றுவதே பொங்கல் திருநாள். அதனால் தான் அது உழவர் திருநாள். இந்நாட்களில் மாடுகளுக்கு சிறப்பு செய்கிறோம். நான் இப்போது ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்க்கிறேன். அது இந்தாண்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்க வாய்ப்பில்லை. அடுத்தாண்டு நிச்சயம் சிறுத்தையாய் சீறிப்பாயும். முடிந்தால் அடக்கி பாருங்கள்.
* பிரத்யேக பயிற்சிகள் அளிக்கிறீர்களா?ஆமாம். ஜல்லிக்கட்டில் பங்கேற்க தேவையான அனைத்து பயிற்சியையும் வழங்குகிறேன். நீச்சல், ஓட்டம், மண்மேட்டில் கொம்பால் முட்டிக் கோதி துாக்குவது என ஏற்பாடு செய்கிறோம். அடுத்தாண்டு ஜல்லிக்கட்டில் காளையர்களுடன் துள்ளி விளையாடும்.
* கரும்பு விரும்புவீங்களா?பொங்கலின் அடையாளமே கரும்பு தானே. கரும்பு இருந்தால் தான் அது பொங்கல். இன்று கரும்பு விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர். இதனை மீட்க வேண்டும். இயற்கை உரத்தை இட்டு, கரும்பை வளருங்கள். அது இன்னும் பலமடங்கு இனிக்கும். விவசாயத்தை காப்பாற்ற கம்பு, தினை, கேழ்வரகு என பாரம்பரிய உணவுகளை பயன்படுத்துங்கள். மாடுகளை பிள்ளைகளை போல பராமரியுங்கள்.

* திண்டுக்கல்லில் துாய்மை துாதுவராக பதவி கிடைத்துள்ளதே?திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில்தான் நான் படித்தேன். இங்குதான் எனது முதல் படமான சுப்ரமணியபுரம் சூட்டிங்கும் நடந்தது. இப்போது இந்த ஊரிலேயே சேவை செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜாதி, மதம், அரசியல் கடந்து, நாம் வீட்டையும், தெருவையும், சுத்தமாக வைத்தால் நாடு சுத்தமாகும்.
வெளிநாடுகளில் மக்கள் எவ்வளவு சுத்தமாக உள்ளனர் தெரியுமா? நம் மக்களும் அதை கடைபிடித்தால் நாடே ஆரோக்கியமாக இருக்கும். அதுவே எனது ஆசையும்கூட.
* உங்கள் பொங்கல் மெசேஜ்நாம் மட்டுமல்ல, நம்மைச் சுற்றியும் சுகாதாரம் பேண வேண்டும். சுத்தம் நமக்கு தெரியாதது அல்ல. குப்பையை தொட்டியில் தான் போட வேண்டும். மக்கும், மக்காத குப்பை என பிரித்து வழங்க வேண்டும். இதை சோம்பலின்றி செய்ய வேண்டும் அவ்வளவு தான். இதை வலியுறுத்துவதே இந்தாண்டு எனது பொங்கல் முழக்கம்.
இவரை 99526-99526ல் தொடர்பு கொள்ளலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • anand - Chennai,இந்தியா

    மற்ற மதத்தினர் பொங்கல் கொண்டாட மாட்டார்கள்..இது தான் உண்மை..அதே போல் கேரளாவில் மற்ற மதத்தினர் ஓணம் கொண்டாட மாட்டார்கள்..ஓரிரு இடங்களில் சிலர் மட்டும் கொண்டாடி இருக்கலாம். சிலர் நாம் கொடுக்கும் பொங்கலை கையால் கூட வாங்க கூட மாட்டார்கள்...

  • Thalapathy - devakottai,இந்தியா

    நண்பர் சசிகுமார் உங்கள் பொங்கல் பற்றிய செய்தி படித்தேன். நன்றாக இருந்தது. ஒரு விஷயம் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மாட்டு கொம்புகளுக்கு வர்ணம் பூசாதீர்கள் ஏனென்றால் கொம்புகள் மூலமாகத்தான் சில சத்துக்களை சூரிய ஒளியிலிருந்து பெற்று கொள்கிறது என்பது உண்மை. விசாரித்துவிட்டு கடை பிடிக்கவும். நானும் விவசாயிதான்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement