Advertisement

வலுவான உறவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்

நல்லுறவுகளை வளர்க்கும் முயற்சியில் நாளும்ஈடுபடுங்கள். உறவுகளுக்கு வாழ்வில் முன்னுரிமைஅளியுங்கள்' என்கிறார் ஜான் சி. மாக்ஸ்வல். இவர் தலைமை பண்பு வல்லுனர். அமெரிக்க பிசினஸ் வீக், நியூயார்க் டைம்சின் ஆசிரியர்.'நீங்கள் மனிதர்களிடம் அக்கறை காட்டாமல் நல்லுறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாது' என்கிறார் அவர்.'நீங்கள் மனதில் முக்கியத்துவம்
அளிக்காத ஒருவருக்கு நேரில் முக்கியத்துவம் உணர்வை அளிக்க முடியாது' என்கிறார் லெகிப்ளின் (அமெரிக்காவின் புகழ்பெற்ற விற்பனையாளர்).மக்களை உயர்வாக மதிக்க வேண்டும். எல்லோரிடமிருந்தும் மிகச்சிறந்ததை எதிர்பாருங்கள். தங்களிடமுள்ள சிறப்புகளை அவர்கள் வெளிப்படுத்துவதாகவே நம்புங்கள். அவர்களுடைய செயல் நோக்கம் தகுதியானது என்று நிரூபணம் இல்லாமலே ஏற்று கொள்ளுங்கள். அவர்களுடைய மிகச்சிறந்த தருணங்களை வைத்து அவர்களை மதிப்பிடுங்கள்.

புரிந்துணர்வு : உங்களுடைய புரிந்துக் கொள்ளும் திறனை நீங்கள் மேம்படுத்திக் கொண்டால், நல்ல உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும். விலங்குகளிடம் இருந்து நம்மை மேம்படுத்துவது இந்த உறவுமுறைகள்தான். அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி, மாமா, அத்தை, தாத்தா, பாட்டி
இதெல்லாம் விலங்குகளிடம் இல்லை. ஆனால், ஏன் நாம் இந்த உன்னத உறவுகளை சிதைக்கிறோம்? 'என்அண்ணனிடம் பேச்சு நின்று போயி ஆறு வருஷமாச்சு' என்று சொல்லிக் கொள்வது பெருமையா? உறவுகளுக்குள் ஒருவரையொருவர் பழி வாங்கத் துடிப்பதும் பெருமையா?உறவுகளை புரிந்துக்கொள்வது அவசியம். அவர்கள் சொல்வதை கவனமாக கேளுங்கள். அவர்களுடைய தேவைகளை கருத்திற்கொள்ளுங்கள். அதுபற்றி அவர்களிடம் கேளுங்கள்.
மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புவீர்களோ, அப்படியே அவர்களை நடத்துங்கள். அவர்கள் மீதுஉங்களுக்குள்ள அக்கறையை பொறுத்தே உங்களிடம் அவர்கள் கவனம் செலுத்துவது. ெஹலன்கெல்லர் வெகு அருமையாக சொன்னார், 'வாழ்க்கை எழுச்சிமிக்கது, அது மற்றவர்களுக்காக வாழுகிற போது மேலும் எழுச்சியூட்டுவதாகவே இருக்கும்' என்று. உண்மை. நாம் வாழ்வில் செய்யக்கூடிய மிகச்சிறந்த காரியம் மற்றவர்களுக்கு பயன்படும் விதத்தில் வாழ்வதுதான்.

நட்பு வட்டத்தில்...: நல்ல நண்பர் கிடைத்தால் ஒருவருடைய அறிவு இரட்டிப்பாகிறது என்கிறார் ஒரு அறிஞர். நீங்கள் அவருடைய குறைபாட்டை சுட்டிக்காட்டலாம். நீங்கள் அப்படி செய்வது, அவரிடம் உள்ள பிரச்னையை தாக்குவதாக இருக்குமேயன்றி அவரை தாக்குவதாகி விடாது. அந்த பிரச்னைக்கு ஒரு தீர்வை உங்களால் வழங்க முடியாதபட்சத்தில், அவரை விமர்சிக்க
முற்படாதீர்கள். நட்பின் ஒரு பகுதி நண்பர்களை அவர்களுடைய குறைகளோடு ஏற்றுக்கொள்வது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.டேவிட்டன் என்ற எழுத்தாளர் தனது நுாலில் இப்படிக் குறிப்பிடுகிறார்.'உங்களுடைய அன்றாட நடவடிக்கைகளின் இடையேகொஞ்சம் அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள். நட்பார்ந்த முறையில் நடந்து கொள்வதற்கான வாய்ப்புகளை கண்டுபிடியுங்கள். மற்றவர்களுடைய பிரச்னைகளையும், நம்பிக்கைகளையும் காதுகொடுத்து கேளுங்கள். அப்போதுதான் அவர்களுடைய வெற்றிக்கும், மகிழ்ச்சிக்கும் உங்களால் ஆனதை நீங்கள் செய்ய முடியும்.வாழ்க்கை பல இடர்பாடுகளை, நிச்சயமற்ற தன்மைகளை
கொண்டிருந்த போதும், அந்த வாழ்க்கையை நாம் மகிழ்ச்சியோடு வாழ முடியும். வாழ்க்கையை
அனுபவித்து மகிழ்வதற்கு அவகாசம் தேவைப்படும்.நல்ல நட்பு என்பது,கொடுத்ததை மறப்பது. பெற்றதை நினைப்பது.

இல்லறத்தில்...: உலகின் மிக உன்னதமான உறவு, கணவன் - மனைவி உறவு. முன்பின் அறிமுகம் இல்லாத, ரத்த உறவாக பிறந்திடாத இரண்டு பேருக்கு இடையே அறிமுகம் முளைத்து, அது நட்பாக வளர்ந்து, இனிய அன்பாக பிரவாகம் எடுத்து, இரண்டு உடல்களில் ஓர் உயிர்
இருப்பது போல நெருக்கமாகி ஆயுள்முழுவதும் இணைந்திருக்கும் இனிய உறவு! அந்த உறவு அழகாக இருக்க சில உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வது அவசியம்.கணவனுக்கும், மனைவிக்கும் நடக்கும் விவாதங்களில்ஜெயிப்பதற்கு ஆர்வம் காட்டாதீர்கள்.
யார் ஜெயித்தாலும், தோற்றவர் வாழ்க்கை துணைத்தானே! உங்கள் வாழ்க்கை துணை தோல்வி விரக்தியில் இருக்கும்போது, நீங்கள் வெற்றியை கொண்டாட முடியுமா? விட்டுக்கொடுங்கள். விட்டுக்கொடுப்பது வீழ்வதல்ல;விதைப்பது.அன்பை வெளிப்படுத்தவும், ஆறுதல் சொல்லவும் அவ்வப்போது அரவணைப்பையும் அன்பான வார்த்தைகளையும் பயன்படுத்துங்கள். நெடுநாள் இனிமையாக உறவு நீடிக்க இந்த மந்திரச்செயல் அவசியம். பணம்தான் பல குடும்பங்களில் உறவை உடைக்கும் கருவியாக இருக்கிறது. வருமானம், கடன், செலவுகள், வீடு வாங்குவது போன்ற உங்கள் பொருளாதார இலக்குகள் என எதையும் வாழ்க்கை துணையிடம் மறைக்காதீர்கள். வாழ்க்கையில் யாராவது ஒருவரிடமாவது ஒளிவுமறைவின்றி உண்மையாக நடந்துக்கொள்ள வேண்டும். அது உங்களது வாழ்க்கை துணையாக இருக்க வேண்டும்.
எந்த உறவிலும் பாசமும், பரிவும், அன்பும் ஒருவழிப்பாதை அல்ல! நீங்கள் என்ன கொடுக்
கிறீர்களோ, அதையே பெறுவீர்கள். நிறைய அன்பைக் கொடுங்கள்.
உங்கள் வாழ்க்கை துணை கச்சிதமான நபரான, எல்லாவற்றையும் ஒழுங்காக செய்பவராக, நுாறு சதவீதம் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்பவராக இருக்க வேண்டும் என நினைக்காதீர்கள். பலங்களும், பலவீனங்களும் இணைந்தவர்களே ஒவ்வொருவரும்! நீங்களும் அப்படித்தானே! உங்கள் வாழ்க்கை துணையிடம் மட்டும் நுாறு சதவீத கச்சிதத்தை எதிர்பார்ப்பதுநியாயமா?

ஒப்பிட வேண்டாம் : யாரோடும் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். அந்த நிமிடத்தில் இருந்து நிம்மதியை தொலைத்து விடுவீர்கள். ஒவ்வொரு தனிநபரும் தனிப்பட்ட குணங்களின், திறமைகளின் விருப்பங்களின் கலவை. யாரும், யாருக்கும் தனித்திறமையை கண்டறிந்து, அதை வளர்த்துக்கொள்ளுங்கள். வாழ்க்கை துணை மீது கோபமோ, வருத்தமோ ஏற்படும்போது என்ன செய்யலாம்? எதுவுமே செய்யாமல் அமைதியாக இருப்பதுதான் நல்ல வழி. கோபத்தில் திட்டுவதோ, போனில் கத்துவதோ பிரச்னைகளை தீர்க்காது. அவசரத்தில் உதிர்க்கும் வார்த்தைகள் இன்னொரு புது பிரச்னையை உருவாக்கிவிடும். உணர்ச்சிவசப்பட்ட மனதால் முடிவெடுக்காதீர்கள். நிதானமாக யோசித்து அறிவால் முடிவெடுங்கள். இன்றைய கோபத்தை இன்றே மறந்துவிடுங்கள். அதை மனதில் சுமந்து கொண்டு படுக்கைக்கு போகாதீர்கள். அதை மனதில் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்காதீர்கள். கோபத்தில் வரும் யோசனைகள், பலுான் மாதிரி பிரச்னைகளை ஊதிப் பெரிதாக்கிவிடும். அன்பு எனும் ஊசியால் அந்த கோப பலுானை உடைத்து விடுங்கள். கருத்து வேறுபாடுகளும், விவாதங்களும் பிரச்னைகளை பெரிதாக்காமல் பிரச்னையை தீர்க்கும்
போக்கில் அமைய வேண்டும். தம்பதிகள் தங்களுக்கு இடையேயான பிரச்னைகளை தாங்களே தீர்த்துக்கொள்வது நல்லது. பிறரது ஆலோசனைகள் சில நேரங்களில் பிரச்னையை பெரிதாக்கிவிடலாம். புதியதாக திருமணமான தம்பதி, வீட்டில் குடியேறினர். எதிர்வீட்டு கிழவி, புதுப்பெண்ணை தனியே அழைத்து ஆலோசனை சொன்னார். 'கணவனை கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். யார் யாரோட எல்லாம் தொடர்பு வைத்திருக்கிறார் என்று விசாரித்து கொண்டே இருக்க வேண்டும்' இப்படி அவர் சொல்லிக்கொண்டே போக குறுக்கிட்ட புதுப்பெண், 'சரி. உங்கள் வீட்டுக்காரர் எப்படி இருக்கிறார்' என்று கேட்டபோது, கிழவி சொன்ன பதில் என்ன
தெரியுமா? 'அவர் ஓடிப்போய் 40 வருஷமாச்சு'. பின்னே இந்த பாடுபடுத்தினா எவன் வீட்டில் இருப்பான்?

- முனைவர். இளசை சுந்தரம்
எழுத்தாளர், மதுரை
98430 62817

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement