Advertisement

கரகாட்டமாடுகிறார், பேராசிரியர் மலைச்சாமி

கரகாட்டமாடுகிறார், பேராசிரியர் மலைச்சாமி M.E.,Phd

உருமிகள் உரும, தவுல் முழங்க, நாதஸ்வரம் இசைக்க மேடையில் ஒரு கரகாட்டக்கலைஞர் மிக அழகாக திறமையாக கரகமாடிக் கொண்டு இருக்கிறார்.
பொங்கலன்று சென்னை ஆவடியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பொதுநலச் சங்கம் தமிழர் பண்பாட்டை முன்னெடுக்கும் வகையில் நடத்திக் கொண்டிருந்த கரகாட்ட கலை நிகழ்வது.

காவடி,இரட்டை கரகம், கண் இமையில் ரூபாய் நோட்டு எடுத்தல் இவற்றுடன் கோடங்கி கட்டை ஏறி தீ கரகம் தலையில் சுமந்து ஆடிய போது மொத்த கூட்டமும் வைத்தகண் வாங்காது பார்த்தது பின் நீண்ட நேரம் கைதட்டி பாராட்டியது.
ஒரு கரகாட்டக்கலைஞன் தனது கலையில் இப்படி சாகசம் செய்வதும் மக்கள் பாரட்டுவதும் எங்கு நடக்கக்கூடியதுதானே என்றுதானே நினைப்பீர்.

போதிய படிப்பறிவு இல்லாமல் கரகாட்டமாடிவரும் கலைஞர்களுக்கு மத்தியில் இவர் கொஞ்சம் வித்தியாசமானவர்.
எம்.இ.,படித்துவிட்டு மதுரை சேது பொறியியல் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றிவருகிறார் ,சூரியசக்தி குறித்த தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்விலும் ஈடுபட்டுள்ளார்.பாடங்களை எளிதில் புரியவைப்பதால் பேராசிரியர் மலைச்சாமி என்றால் மாணவர்களுக்கு வெல்லம்.எப்போதும் தனது துறையில் நுாறு சதவீதம் தேர்ச்சியை காட்டக்கூடியவர் என்பதால் கல்லுாரி நிர்வாகத்தி இவர் செல்லம்.

இவ்வளவு படித்தவர் இன்னமும் படித்துக் கொண்டு இருப்பவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம் எது என்று யார் கேள்வி கேட்டாலும் இவர் பல ஆண்டுகளாக சொல்லிவரும் ஒரே பதில் கரகமாடுவதுதான்.அந்த அளவிற்கு கரகக்கலையை மனதார நேசிக்கிறார்.
பள்ளியில் படிக்கும் போது விழா ஒன்றிற்காக இவரது தலை கரகத்திற்கு அறிமுகமானது அன்று தலையில் ஏறிய கரகம் இன்று சுழன்று சுழன்று அரபு நாடுகள் வரை போய் ஆடி, கரகக்கலைக்கும் பெயர் வாங்கித் தந்து கொண்டு இருக்கிறது.

பிளஸ் டூ முடித்து பி.இ.,எம்.இ.,என்று படிப்பு ஒரு பக்கம் போனாலும் முறையாக கரகம் கற்றுக்கொள்ள இந்த கலையின் வல்லுனர்களான லுார்துசாமி,வேலு,விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்,தேன்மொழி போன்றோரிடம் கரகம் கற்றுக்கொண்டு அதன் அடவுகளையும் நெளிவு சுழிவுகளையும் இன்னோரு பக்கம் நீக்கமற கற்றுக்கொண்டார்.
கடந்த பதினநை்து வருடமாக பேராசிரியர் பணியை சிறப்பாக செய்வது போல கடந்த பதினைந்து வருடமாக தொழில் முறை கரகாட்டக்கலைஞராக நாடு முழுவதும் ஆடிவருகிறார்.ஒன்றுக்கு ஒன்று இடையூறு இல்லாமல் இரண்டையும் இரண்டு கண்களாக பார்த்துக் கொள்கிறார்.

இவரது கரகாட்டக் கலையை சிறப்பிக்கும் வகையில் அரசு இவருக்கு கலைச்சுடர் என்ற விருதினை வழங்கி கவுரவித்துள்ளது.அப்பா சுப்பிரமணியன்,அம்மா அழகம்மாள் துவங்கி மனைவி கவிதா வரை இவரது கரகாட்டத்திற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளனர் அதிலும் மனைவி கவிதா ஒருபடி மேலே போய் கரகாட்டக்கலைக்கு கவுரமான பெயர் பெற்றுத்தரும் வகையில் உங்கள் செயல்பாடு இருக்கட்டும் என்று வாழ்த்தியுள்ளார்.அப்படித்தான் மலைச்சாமியும் ஆரம்பம் முதல் ஆடிவருகிறார்.
பேராசிரியர் மலைச்சாமி தனது மாணவர்கள்,நண்பர்களுடன் சேர்ந்து 'படிக்கட்டுகள்' என்ற சமூக நல அமைப்பினை நடத்திவருகிறார்.இந்த அமைப்பின் பிரதான நோக்கம் பணமில்லை என்ற காரணத்திற்காக எந்த குழந்தையின் படிப்பும் தடைபட்டுவிடக்கூடாது என்பதாகும்.தனது கரகாட்டத்தின் மூலம் வருமானத்தை இந்த அமைப்பிற்கு இவர் செலவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பேராசிரியர் மலைச்சாமியிடம் பேசுவற்கான எண்:9865427756.
-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • Kaliyan Pillai - Chennai,இந்தியா

  கலைஞர்கள் பெரும்பாலும் இளகிய மனம் படைத்தவர்களாகவும் சமூக அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அதை இவர் நிரூபித்து வருகிறார். சுயநலம் மிகுந்த இந்த காலத்தில் இவரைப்போன்ற மனிதர்களைக் காண்பது மிக அபூர்வம் வாழ்க தங்கள் கலைத்தொண்டு. வாழ்க நீடூழி

 • deekshi - chennai,இந்தியா

  தலைவணங்குகிறேன் ஐயா

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  பாராட்டுக்கள் . நாட்டு புற கலைகளை அழியா வண்ணம் நிறைய பேருக்கு பேராசிரியர் கற்று தர வாழ்த்துக்கள் .

 • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

  பேராசிரியர் என்ற சொல்லுக்கு இலக்கணமாக உள்ளார்....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement