Advertisement

வாக்காளர்களே மாறுங்கள்!

சமூக வலைதளங்களான, 'வாட்ஸ் ஆப், டுவிட்டர், பேஸ்புக்' போன்றவற்றைப் பார்த்தால், அதில் பதிவிடும் பெரும்பாலானோரின் ஆதங்கம், காமராஜர் மாதிரி, கக்கன் மாதிரி இன்னொரு தலைவர் தமிழகத்திற்கு கிடைப்பாரா என்பதாகத்தான் இருக்கும்.
ஆனால், இன்றைய தமிழக வாக்காளர்களின் நிலை என்ன... காசுக்கு விலை போகிறவர்களாக இருக்கின்றனர்.இவர்களை பற்றி நினைக்கையில், சின்ன வயதில் படித்த கதை ஞாபகத்திற்கு வருகிறது...ஒரு முனிவர் தன் சீடரிடம், பளபளப்பான ஒரு கல்லைக் கொடுத்து, 'இதன் மதிப்பு என்ன என, ஒவ்வொருவரிடமும் கேள். ஆனால் யாரிடமும் விற்று விட்டாதே!' என, சொல்லி அனுப்புவார்.
அந்த சீடன் முதலில் ஒரு காய்கறி வியாபாரியிடம் போய், 'இதை வைத்துக் கொண்டு நீ என்ன தருவாய்?' என, கேட்பான்.உடனே அந்த காய்கறி வியாபாரி, 'இந்தக்கல் நல்ல பளபளப்பாக இருக்கிறது. இதை வைத்து நான் செய்ய முடியும். பிள்ளைகளுக்கு விளையாட வேண்டுமானால் கொடுக்கலாம். இதற்குப் பதிலாக, அரை கிலோ கத்திரிக்காய் தருகிறேன்' என்பான்.
அதற்கடுத்து, மளிகைக்கடைக்கு சீடன் போவான். ஒவ்வொருவரும் அவர்களுக்கு தெரிந்த மதிப்பை நிர்ணயித்து, அதற்கு தகுந்த மாதிரி பொருட்களை தருவதாக சொல்வர்.இறுதியாக வைரங்களை விற்பனை செய்யும் வைர வியாபாரியிடம் சீடன் செல்வான். அந்தக் கல்லை சோதித்து பார்த்த வியாபாரி, 'இந்த கல் மிகவும் விலை உயர்ந்த அரிதான வைரக்கல். இதை வாங்கும் பண வசதி, நம் ராஜாவிடம் கூட கிடையாது' என்பார்.
அந்த சீடனிடம் உள்ள விலை மதிப்பிட முடியாத வைரக்கல் தான் நம் கையில் உள்ள ஓட்டுச்சீட்டு. அதன் மதிப்பு, நம்மை யார் ஆள வேண்டும் என்பதை நிர்ணயிக்கக் கூடியது.அதன் மூலம் தான், ஒரு காமராஜரையோ, கக்கனையோ நாம் தேர்ந்தெடுக்க முடியும்.வைரக்கல்லை சாதாரண கண்ணாடிக் கல் என, நினைக்கும் காய்கறி வியாபாரியின் நிலையில் தான், இன்றைய தமிழக வாக்காளர்கள் இருக்கின்றனர்.
எனக்கு தெரிந்த ஒரு பெண்ணிடம், 'நீங்கள் ஓட்டுப் போட பணம் வாங்குவீர்களா?' என, கேட்டேன்.'ஆமாம். நாங்கள் பணம் வாங்குவோம்' என்றார்.மேலும், 'அவன் என்ன தன் கைக் காசையா நமக்குத் தரப்போகிறான்... கொள்ளையடிச்ச காசுல கொஞ்சம் தானே தரப் போகிறான்... நமக்கு தருவதால் அவன் என்ன குறைஞ்சுட போறான். நான் ஒருத்தி பணம் வாங்க மாட்டேன்னு சொல்லிட்டா, நாடே திருந்தவா போகுது... நான் வாங்காட்டா, எனக்கு கொடுத்த மாதிரி கணக்கு காட்டிட்டு, அவன் அமுக்கிக் கொள்வான்' என, நீண்ட விளக்கம் கொடுத்தார்.
அது ஒரு தனிநபரின் குரலாக தெரியவில்லை. இன்றைய தமிழக வாக்காளர்களின் மன நிலையை பிரதிபலிப்பதாக இருக்கிறது. தேர்தல் அறிவிப்பு வந்து விட்டாலே, ஏதோ திருவிழா வரப்போகிற மன நிலைக்கு, சில வாக்காளர்கள் வந்து விடுகின்றனர்.
திருவிழா என்றதும், அங்கு விற்கப்படும் பொருட்களை வாங்குவதற்கு வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு, வீட்டுப் பெரியவர்கள் பணம் கொடுப்பர். அதே மன நிலை தான், தேர்தல் அறிவித்து விட்டால், சில வாக்காளர்களுக்கும் வந்து விடுகிறது.நம் வீட்டில் எவ்வளவு ஓட்டு இருக்கிறது... ஓர் ஓட்டுக்கு எந்தந்த கட்சிக்காரன் மூலம் எவ்வளவு பணம் வசூலாகும்... அதை வைத்து என்ன செய்யலாம் என, கணக்கிட துவங்கி விடுகின்றனர்.
அது தப்பான செயலாகவே அவர்களுக்கு படவில்லை. விலை மதிப்பில்லாத தங்கள் ஓட்டுகளை அரை கிலோ கத்திரிக்காய் தான், வைரத்தின் மதிப்பு என நினைத்த, காய்கறி வியாபாரியின் மன நிலையில் விற்க துணிகின்றனர்.எந்தவொரு வியாபாரிகளும் இலவசமாக எந்த பொருட்களையும் தர மாட்டார்கள். அப்படியிருக்க அரசியல் வியாபாரிகள் மட்டும் இலவசமாக மக்களுக்கு பணத்தை வாரி இறைத்து விடுவரா என்ன?
ஒரு தேர்தலுக்கு இரண்டு கோடி ரூபாய் செலவு செய்தால், அதை லட்ச மடங்குகளாக திருப்பி எடுப்பதற்கு என்ன வழி என்று தான் பார்ப்பர்.காசு வாங்கி ஓட்டுப் போடும் மக்களின் நலன்களைப் பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.இவ்வளவும் ஏன்... நமக்கு மூன்று வேளையும் சோறு போட்டு வாழ வைத்து விட்டு, தான் வாழ வழியில்லாத விவசாயிகள் தற்கொலை செய்தாலும், நம் அரசியல்வாதிகள் அதைப் பற்றியும் கவலைப் பட மாட்டார்கள்.
ஏனென்றால், அவர்கள் சும்மா பதவிக்கு வரவில்லை. காசு கொடுத்து ஓட்டை வாங்கி தான் வந்திருக்கின்றனர். ஒரு பொருளை காசு வாங்கி விற்று விட்டால், அதை திரும்ப கேட்பதற்கு விற்றவருக்கு உரிமை இல்லை. இன்றைய வாக்காளர்களின் நிலையும் அது தான்!விலை மதிப்பில்லாத தங்கள் ஓட்டுகளை அற்பமான காசுக்கு விற்று விட்டனர். இதனால் சிலுவை சுமக்கப் போவது யார்... நம் வாரிசுகள் தான்!
நாற்பது வெள்ளி வாங்கிக் கொண்டு, ஏசுவை காட்டிக் கொடுத்து, அவரை சிலுவை சுமக்க வைத்த யூதாசுக்கும், ஓட்டுக்கு காசு வாங்கிக் கொண்டு, நம் வாரிசுகளை சிலுவை சுமக்க வைக்கப் போகும் இன்றைய வாக்காளர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.நீங்கள் காசு வாங்கி, தப்பான தலைவனை தேர்ந்தெடுத்ததன் பயனை நாங்கள் அல்லவா அனுபவித்து கொண்டு இருக்கிறோம் என, நம்மை திட்டிக் கொண்டே தான் இருப்பர்.அதனால், இன்றைய நம் தமிழகத்திற்கு தேவை நல்ல வாக்காளர்களே!
காசுக்கு விலை போகாத வாக்காளர்கள் தான் வேண்டும். நல்ல விதைகள் தான் நல்ல கனி தரும் மரங்களை உருவாக்கும் என்பது போல, நல்ல வாக்காளர்கள் தான், நல்ல தலைவர்களை உருவாக்குவர்.இன்றும் நம்மிடையே காமராஜர்கள் வாழவே செய்கின்றனர். வானத்தில் இருந்தாலும் பகலில் நம் கண்களுக்கு தெரியாத நட்சத்திரங்கள் மாதிரி, பணம் விளையாடும் அரசியலால், அவர்கள் மங்கி மறைந்து போயுள்ளனர்.
ஓட்டுக்கு பணம் வாங்குவதை தவிர்த்து, நல்ல தலைவனை தேட ஆரம்பித்தாலே, இரவு வந்ததும் வெளிப்படும் நட்சத்திரங்கள் மாதிரி, அவர்கள் வெளிப்பட ஆரம்பித்து விடுவர். அவர்களில் நமக்கு வழிகாட்டக் கூடிய துருவ நட்சத்திரத்தை கண்டுபிடியுங்கள்.நல்ல வாக்காளர்களாக நாம் மாறினால் தான் நல்ல தலைவர்களும் உருவாகுவர். நல்ல வாக்காளர்களாக மாறுவீர்கள் தானே!
எஸ்.செல்வசுந்தரி
சமூக ஆர்வலர்
இ - மெயில்: selvasundari152gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement